Monday, April 8, 2013

Kandhar alangaram

Courtesy: Sri.RV.Ramani
அடல் அருணைத் திருக் கோபுரத்தே அதன் வாயிலுக்கு
வட அருகிற் சென்று கண்டு கொண்டேன்; வருவார் தலையில்
தட-பட எனப் படு குட்டுடன், சர்க்கரை மொக்கிய கை
கட-தட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே!

இதாங்க எளிமையான பொருள்: வருபவர்கள் எல்லம் தடக்-படக் என்று தலையில் குட்டிக் கொள்கிறார்கள்!
அவர்கள் படைக்கும் சர்க்கரைப் பொங்கலைத் தும்பிக்கையால் கடக்-தடக் என மொக்கிக் கொள்கிறார் நம்ம குட்டிப் பிள்ளையார்!
அந்தக் கும்பக் களிற்றான் கணபதிக்கு ஒரு இளைய களிற்றான் இருக்கான்! அவன் பேரு கந்தன்!
அடல் அருணைக் கோபுரத்துக்கு, அதன் வாயிலுக்கு வடக்கே இருக்கிறார்கள் இருவரும்! அவர்களை அருகில் சென்று அடியேன் கண்டு கொண்டேன்!
________________________________

இப்போ கொஞ்சம் பிரிச்சி மேயலாம்!

அருணன்=சூரியனின் தேரோட்டி! அவன் சூரியனுக்கு முன்னரே உதயம் ஆவான்! அதான் அருணோதயம்-ன்னு பேரு! அவன் உதிக்கும் வேளையில் வானம் வெளிச்சமா இல்லாம, செக்கச் செவேர் என்று இருக்கும்! சிற்றஞ் சிறு காலை என்னும் பிரம்ம முகூர்த்தம் அது!
அதே போல் சிவபிரான் ஜோதிப் பிழம்பாய்ச், செக்கச் செவேர் என்று இருக்கும் தலம் = அருணை! அருண கிரி! அருணாச்சலம்!

அடல்-ன்னா வலிமை! அடல் அருணை-ன்னா வலிமை பொருந்திய அருணை மலை! மலைக்கு என்னாங்க பெருசா வலிமை?
நினைத்தாலே முக்தி தர வல்ல வலிமை இருக்கு அருணை மலைக்கு! அதான் அடல் அருணை!

அந்த அடல் அருணைத் திருக் கோபுரத்தே, அதன் வாயிலுக்கு வடக்கே சென்று, கண்டு கொண்டேன்! யாரை? பிள்ளையாரையும், முருகனையும்!
வடக்குக் கோபுரத்துக்கு அருகில் உள்ள முருகன், கோபுரத்து இளையனார்! கோபுரத்து இளையனார் சன்னிதி அருணகிரி மண்டபத்தின் உள்ளே இருக்கிறது!
அதற்குப் பக்கத்திலேயே வன்னி மர விநாயகர் சன்னிதி! அண்ணனும் தம்பியும் அருகருகே!
அந்த விநாயகர் எப்படி இருக்காரு-ங்கிறீங்க?�- சர்க்கரை மொக்கிய கை, கட தட-ன்னு இருக்காரு!
நண்பர்கள் கன்னா பின்னா-ன்னு சாப்பாட்டை வச்சிக் கட்டினா, என்ன சொல்லுவோம்? மவனே நல்லா மொக்குறியா-ன்னு கேட்போம் இல்லையா?
அப்படிச் சீனிப்பண்டங்களை மொக்குறாரு கணபதி! கடக், தடக்-ன்னு தும்பிக்கையால மொக்குறாரு! யானைக்குப் பழம் ஊட்டி விட்டுப் பாருங்க! இதே கடக்-தடக் சவுண்டு வரும்! :)

கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே = கும்பம் போல் வயிறு! பானை வயிற்றுப் பிள்ளையார்! அவர் களிறு! ஆண் யானை!
அப்படின்னா அவரு தம்பியும் களிறு தானே! அதான் முருகனையும் இளைய களிறுன்னு சொல்லிட்டாரு அருணகிரி!
இப்படி அண்ணனும், தம்பியும் ஒன்னாச் சேர்ந்து இருக்கும் அழகான முதல் பாட்டு!

சரி....இவிங்கள பார்க்க வரவங்க மட்டும் என்னமோ, தலையில ஒரு தினுசா...வித்தியாசமாக் குட்டிக்கறாங்களே!
புத்தி, கித்தி கெட்டுப் போச்சா இவிங்களுக்கு? யாராச்சும் தன்னைத் தானே குட்டிப்பாங்களா?:)
________________________________

வருவார் தலையில், தட-பட எனப் படு குட்டுடன்
அருணகிரி கந்தக் கவி மட்டுமா? சந்தக் கவியும் அல்லவா?
அதான் தலையில் குட்டிக் கொள்ளும் சத்தத்தைப் பாட்டிலேயே வச்சிட்டார்! மக்கள் எப்படிக் குட்டிக்கிறாங்கன்னு நினைக்கறீங்க? தடக், படக் என்று குட்டிக்கறாங்க! சரி, ஏன் குட்டிக்கணும்?

காவிரியின் ஆணவத்தை அடக்குகிறேன் பேர்வழி-ன்னு அகத்தியர் அவளை அடக்கி வைத்து விட்டார்!
ஊருக்குப் பொதுவான காவிரி ஆற்றை ஒருவர் மட்டும் அடக்கி ஆளலாமா?

என்ன தான் காவிரிப் பெண் ஆணவம் பிடித்துப் பேசி இருந்தாலும், ஊர் பாதிக்காதவாறு அல்லவா அவளுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்?
ஆனால் அகத்தியர் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மட்டுமே பார்த்தாரே அன்றி, ஊருக்கு ஏற்படும் தீங்கைப் பார்க்க மறந்து போனார்!

அப்போது நாரதர் சொல்லி வந்தார் விநாயகர்! காவிரியை விரித்து விட்டார்!!
சிறு பிள்ளையாய் அகத்தியர் முன் தோன்றி ஒரே சிரிப்பாய்ச் சிரித்தார்!
பிள்ளையின் தலையில் நச்-னு ஒரே கொட்டு...
கோபம் மேலும் வீங்க வீங்க,
குறுமுனி கையை ஓங்க ஓங்க... அச்சோ.....
ஓங்க ஓங்க நிற்பது ஓங்காரப் பொருள் விநாயகன் அல்லவா!

அகத்தியர் அஞ்சி நடுங்குகிறார்! அவனைக் குட்டத் தூக்கிய கையைத், தன் தலையிலேயே வைத்துத் தானே குட்டிக் கொண்டார்!
* அடுத்தவனைக் குட்ட எண்ணும் முன்னர், தன் தவற்றை முதலில் உணர வேண்டும்!
* ஊரைத் திருத்த எண்ணும் முன்னர், தன் தவற்றைத் தானே திருத்திக் கொள்ள முயல வேண்டும்!
அதான் தன்னைத் தானே குட்டிக் கொண்டார் அகத்தியர்! - தோன்றியது பிள்ளையார் குட்டு!

இனி மேல் பிள்ளையார் முன் குட்டிக் கொள்ளும் போது, இதை நினைவில் வையுங்கள்!
முதலில் தன்னைக் குட்டிக் கொண்ட பின், அடுத்தவரைக் குட்ட நினைக்கலாம்! :)
ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற், பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு!
தட-பட எனப் படு குட்டுடன், முதலில் நம் தலையில் குட்டிக் கொள்வோம்!
அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை, கந்தனின் அலங்காரச் செய்யுளைத் துவக்குவோம்!

அருணகிரி முருகனுக்கு அரோகரா!!

No comments:

Post a Comment