கம்பர் தமது ராமாயணத்தின் தொடக்கத்தில் திருவடிக்கு (ஆஞ்சநேயருக்கு) காப்புச் செய்யுள் ஒன்று இயற்றியுள்ளார்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்-
என்பது அந்தச் செய்யுள். இதில், அஞ்சிலே ஒன்று என்ற சொல்தொடர் ஐந்து முறை வருகின்றது. நிலம், நீர், தீ, வாயு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களை உத்தேசித்தே அஞ்சிலே என்ற சொல்லை ஐந்து முறை பிரயோகித்திருக்கிறார் கம்பர்.
வாயு புத்திரனான அனுமான் கடலைத் தாவி, ஆகாய மார்க்கமாகச் சென்று, பூமிதேவியின் மகளான சீதாபிராட்டியைக் கண்டு, இலங்கையில் தீயை வைத்து வந்தனன். அன்னவன் நமக்குத் தஞ்சம் என்பதே இந்தச் செய்யுளில் காணும் பொருள்.
பஞ்சபூதங்களில் ஒன்றாகிய வாயு பெற்ற பிள்ளை ஆதலால், அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றது அனுமானைக் குறிக்கிறது. அவன் கடந்து சென்ற கடல், பஞ்ச பூதங்களுள் ஒன்று ஆதலால், அஞ்சிலே ஒன்றைத் தாவி எனப்பட்டது. அவன் பறந்து சென்ற மார்க்கமாகிய ஆகாயம் பஞ்ச பூதங்களுள் ஒன்று. ஆதலால் அஞ்சிலே ஒன்று ஆறாக எனப்பட்டது. அவனால் காணப்பட்ட சீதையின் தாயாகிய பூமி, பஞ்ச பூதங்களுள் ஒன்றாதலால், அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு எனப்பட்டது. அவன் இலங்கையில் வைத்த தீயானது பஞ்ச பூதங்களில் ஒன்று ஆதலால், அயலாரூரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் எனப்பட்டது.விளக்கம்:
No comments:
Post a Comment