பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டது திரு நடராஜ சாஸ்த்ரிகள் குடும்பம். அவர் தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில் டிரஸ்டியாக இருந்த சமயம். பெரியவா தஞ்சாவூரில் முகாம். பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜா மாலையை அணிவிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை! பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்து ரொம்ப அழகான குண்டு குண்டு பன்னீர் ரோஜாக்களை பொறுக்கி எடுத்து கட்டச் சொல்லி, பெரியவாளை தர்சனம் பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு போனார். ஆனால், இவர் போய் சேருவதற்குள் தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார். நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப வருத்தம்! மாலையோடு வீடு திரும்பினார். அவருடைய மனைவி "எல்லாமே பெரியவாதானே? இந்த மாலையை அம்பாளுக்கே போட்டுடுங்கோ. பெரியவாளும் அம்பாளும் வேறவேறயா என்ன?" என்றாள். "இல்லே, இல்லே, அம்பாளும் பெரியவாளும் வேற வேற இல்லேதான். ஆனாலும், இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற பெரியவாளுக்குத்தான்! ஆமா. இது அவருக்கு மட்டுந்தான்!" என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு, அதை பூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார். மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும், பெரியவா மேலவீதி சங்கரமடத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரம் வந்து, நடராஜ சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் தர்சனம் பண்ண வருவதாக தெருவே திமிலோகப்பட்டது! சாஸ்த்ரிகள் வீட்டிலும் ஒரே பரபரப்பு! "பெரியவா வரா! பெரியவா வரா! தர்சனம் பண்ணிக்கோங்கோ!" மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில் சொல்லிக் கொண்டே போனார்.உடனே வீடுகளுக்குள் இருந்தவர்கள் நண்டு சிண்டுவிலிருந்து தாத்தா, பாட்டி வரை அவசர அவசரமாக பூர்ணகும்பம், குத்துவிளக்கு, புஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர்! பெரியவாளுடைய வேகம் அப்படி இருக்கும்! குள்ள உருவமாக இருந்தாலும், அவர் என்னவோ சாதாரணமாக நடப்பது போல் இருக்கும். ஆனால், கூட வரும் நெட்டை மனிதர்கள் கூட குதிகால் பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும். அந்த வேகம், உண்மையான மஹான்களுக்கே உரித்தான லக்ஷணம்! பெரியவா நேராக பிள்ளையாரை தர்சனம் பண்ணிவிட்டு, சற்றும் எதிர்பாராமல், "டக்"கென்று சாஸ்த்ரிகள் வீட்டுக்குள் நுழைந்து, ரொம்ப ஸ்வாதீனமாக பூஜை ரூமுக்குள் போய், முன்தினம் "பெரியவாளுக்குத்தான்!" என்று முத்ரை குத்தப்பட்டு, ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையை அப்படி லாவகமாக, யானை தும்பிக்கையால் தூக்குவது போல், அருட்கரத்தால் தூக்கி, தானே தன் தலையில் சூடிக் கொண்டார்!சாஸ்த்ரிகளும் குடும்பத்தாரும் கண்களில் தாரை தாரையாக நீர் வழிய, விக்கித்து நின்றனர்! ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம்! இப்படி ஒரு பரமகருணையா? என்று சொல்லமுடியாத ஆனந்தம்! திக்கு முக்காடினார்கள். எல்லாரும் நமஸ்கரித்ததும், விடுவிடென்று வாசல்பக்கம் நடந்தார். சற்று நின்று திரும்பி, "எங்கே வெள்ளிக்கிண்ணம்?" என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார். அவ்வளவுதான்! ஆடிப் போய்விட்டார் சாஸ்த்ரிகள்! நேற்று மனைவியிடம் பெரியவாளுக்கு ஒரு வெள்ளிக் கிண்ணம் குடுக்கணும் என்று சொல்லி, ஒரு புது கிண்ணத்தையும் எடுத்து வைத்திருந்தார். இதோ! அவர்கள் நேற்று பேசியதை ஏதோ பக்கத்திலிருந்து கேட்டதுபோல் அல்லவா'வெள்ளிக்கிண்ணம் எங்கே?' என்று கேட்கிறார்! ஓடிப் போய் பீரோவிலிருந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டு வந்து சமர்ப்பித்தார். பகவான் ஸர்வவ்யாபி! என்பதை அன்று எல்லாரும் ப்ரத்யக்ஷமாக கண்டார்கள், உணர்ந்தார்கள்! |
No comments:
Post a Comment