Wednesday, May 4, 2011

காஞ்சிப் பெரியவரை தரிசனம் செய்து பலனடைந்த சிலர் பற்றி...

Courtesy: Sri.Mayavaram Gurumoorthy
============================



காஞ்சிப் பெரியவரை வந்து தரிசனம் செய்து பலனடைந்த சிலர் பற்றி நினைவு கூர்கிறார் மாங்காடு லக்ஷ்மி நாராயணன்…

"பெரியவா கும்பகோணம் பக்கத்தில் திருவிடைமருதூரில் வேத ரட்சண சமிதி சதஸ் நடத்திவிட்டு, திருவண்ணாமலை வழியாக, காஞ்சிபுரம் போகலாம் என்று அபிப்ராயப்பட்டார்.

திருவண்ணாமலைக்கு வந்துவிட்டு, கிரி பிரதட்சிணம் பண்ணாமல் போவதா என்று, காலையிலேயே தயாராகிக் கிளம்பிவிட்டார். மத்தியானம் மூன்று மணி ஆயிற்று கிரிவலம் வந்து முடிக்க.

வழியில் சில செடிகளைக் கிள்ளி, "பாரு, இதில் ஏலக்காய் வாசனை வரதா?" என்று கேட்பார். இன்னொரு செடியைக் கிள்ளி இலையை எடுத்து, "இதில் பார், பச்சைக் கற்பூர வாசனை வரும்!" என்று நீட்டுவார். இது மாதிரி அங்கங்கே நின்று சில குறிப்பிட்ட செடிகளின் இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துக் காண்பிப்பார். "இங்கே அந்தக் காலத்திலே நிறைய சித்தர்கள் இருந்திருக்கா. அவாளுக்குத் தங்கம் எல்லாம் பண்ற ரசவாத வித்தை தெரிஞ்சிருந்துது. ஆனா, அந்த வித்தையை எல்லாம் அந்தச் சித்தர்கள் யாருக்கும் சொல்லிவிட்டுப் போகலே!" என்று சிரித்தார் பெரியவா.

அப்புறம், திருக்கோவிலூர் வழியாக யாத்திரை பண்ணி, காஞ்சிபுரம் வந்துவிட்டோம். காஞ்சிபுரத்திலும் அதிக நாள் தங்கவில்லை. அங்கே இருந்து கலவைக்கு வந்துவிட்டோம். அங்கேதான் பெரியவாளோட பரம குருவின் அதிஷ்டானம் இருக்கிறது.

கலவை முகாம்ல ஒரு விசேஷம். இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர். போன்ற வி.ஐ.பி-க்கள் எல்லாரும் கலவையில்தான் வந்து பெரியவாளை தரிசனம் பண்ணிவிட்டுப் போனார்கள். மதுரையில் ஒரு மீட்டிங்குக்குப் போய்விட்டு, சென்னைக்கு வந்தார் இந்திராகாந்தி. ரொம்பவும் படபடப்பாக இருந்தார். 'பெரியவாளைப் பார்த்து தரிசனம் பண்ணிவிட்டுத் தான் போவேன்' என்று உறுதியாக இருந்தார். 'அவர் மௌன விரதத்தில் இருக்கிறார். அவர்கிட்டே நீங்க எதுவும் பேச முடியாது. அவரும் பதில் எதுவும் சொல்ல மாட்டார்' என்று அவரிடம் சொன்னோம்.

'பரவாயில்லை. என் வேண்டுகோளை நான் மனதில் நினைத்துக் கொள்கிறேன். அப்படி, அவர் முன்னிலையில் நான் நினைத்துக் கொள்வதே போதும். அவர் பதில் ஏதும் சொல்ல வேண்டாம்!' என்று கூறிவிட்டார் இந்திராகாந்தி.

அதே மாதிரிதான் நடந்தது.

ஒரு கிணற்றடியில் பெரியவா உட்கார்ந்து ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். அவரைப் பார்க்கிற மாதிரி இந்திராகாந்தி வந்து எதிரே உட்கார்ந்து கொண்டார். எதுவுமே பேசவில்லை!

இந்திராகாந்தி உத்தரவு வாங்கிக்கொள்ள எழுந்தபோது, பெரியவா ஒரு ருத்ராக்ஷ மாலையை எடுத்துக் கொடுத்தார். அதை ஒரு தட்டில் வைத்து இந்திரா காந்தியிடம் கொடுத்தோம். அந்த க்ஷணத்திலிருந்தே அதை அவர் அணிந்துகொள்ளத் தொடங்கி விட்டார்.

கர்நாடகாவில் அப்போது தேர்தல் நேரம். காங்கிரஸ் மந்திரி குண்டுராவ் அடிக்கடி பெரியவாளைப் பார்க்க வருவார். தேவகௌடா, நாகண்ண கௌடா என எல்லாருக்குமே பெரியவா மேல் பக்தி உண்டு.

குண்டுராவ் வந்து, 'பெரியவா என்னை அனுக்கிரகம் பண்ணணும்' என்று கேட்டுக் கொண்டார். 'என்னோட அனுக்கிரகம் எதுக்கு? காமாட்சி அம்மனை வேண்டிக்கோ. உன் பிரார்த்தனை பலிக்கும்!' என்றார் பெரியவா. அதே மாதிரி, அடுத்த ஒரு மாதத்தில் எலெக்ஷனில் குண்டுராவ் ஜெயித்து, கர்நாடகாவில் முதல் மந்திரி ஆகிவிட்டார். அவர் எப்போதும் வியாழக்கிழமை அஞ்சு மணிக்குத்தான் வருவார். வந்தால் அதிகம் பேச மாட்டார். அன்றைக்கு அவர் வருகிறபோது ஒரு மூட்டை அரிசியும், ஒரு மூட்டை சர்க்கரையும் கொண்டு வந்து, பிரசாதத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

77-ல் எலெக்ஷனில் தோற்றுப் போனார் இந்திராகாந்தி. அதற்கு அடுத்த வருஷம் கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரில் நின்றார். அப்போது காங்கிர ஸூக்குப் பசுமாடு – கன்று சின்னம் இருந்தது. ஆனால், அது வேண்டாம்; வேறு சின்னம் வேண்டும் என்று நினைத்தார் இந்திரா.

கலவையில் அவர் பெரியவாளைச் சந்தித்தபோது, பெரியவா கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்தார் அல்லவா? அது அப்போது மனசில் வர, கையையே காங்கிரஸ் சின்னமாகத் தீர்மானித்துவிட்டார் இந்திரா. காங்கிரஸூக்குத் கை சின்னம் முத்திரையாகக் கிடைத்தது இப்படித்தான். சிக்மகளூரில் இந்திரா ஜெயித்துவிட்டார்.

ஒரு விசேஷத்துக்காக அகோபிலத்துக்குப் போகணும் என்று பெரியவா புறப்பட்டார். பெரியவா நடந்து வந்தாலும், மடத்துச் சிப்பந்திகள் ஒரு ஜீப்பில் சாமான்களை எல்லாம் கொண்டு வந்தார்கள்.

அகோபிலம் ஆந்திராவில் இருக்கிறது. அங்கே ஒன்பது நரசிம்ம க்ஷேத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்தில் இருக்கும். போவதே கஷ்டம். ஒரே மூங்கில் காடாக இருக்கும். அப்படியே மூங்கிலால் பந்தல் போட்டதுபோல இருக்கும். அதில் சர்ப்பங்கள் தொங்கும். தாண்டிப் போகவே பயமாக இருக்கும். அந்தப் பக்கத்தில் துஷ்ட மிருகங்கள் எல்லாம் நிறைய நடமாடும். ஆதி சங்கர பகவத் பாதரே, தன்னைக் கொல்ல வந்த காபாலிகளை, அங்கே இருந்த நரசிம்ம சுவாமியை வேண்டிக்கொண்டு, வதம் பண்ணிய இடம் அது.

உக்ர நரசிம்மர் சந்நிதியை 6 மணிக்குக் கதவடைத்து விடுவார்கள். அதற்கப்புறம் அங்கே யாரும் வர முடியாது. பெரியவாளுக்கு அகோபிலம் போகணும் என்று தோன்றிவிட்டது. ஆனால், போகிற வழியை உத்தேசித்து எங்களுக்கெல்லாம் எப்படிப் போவது என்று பயம் வந்துவிட்டது. பெரியவாளுக்கு அந்த பயம் எல்லாம் கிடையாது. அவருடைய தபஸ் அப்படி. அவருக்கு மட்டுமல்ல, அவரோடு வருகிறவர்களுக்கும் எந்த ஆபத்தும் நேராமல் பார்த்துக்கொள்ளும் மகா சக்தி அவரிடம் இருந்தது!" என்கிறார் லக்ஷ்மி நாராயணன்.


knr

--
If God brings you to it, He will bring you through it.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.

  Every moment, thank God

No comments:

Post a Comment