Friday, May 7, 2010

Intelligent

 
அந்தக்காலத்தில் ஒரு சிறந்த வீரன் என்றால் அவன் அனைத்து ஊர்களுக்கும் சென்று அங்கிருக்கும் சிறந்த வீரர்களை வெற்றி கொள்ள வேண்டும். இதுபோல் சிறந்த அறிவாளி என்று சொல்பவர்களும் அனைத்து ஊர்களுக்கும் சென்று அங்கிருக்கும் சிறந்த அறிவாளிகளை வெற்றி கொள்ள வேண்டும் என்கிற ஒரு நியதி இருந்தது.

இப்படித்தான் ஒரு அறிவாளி 99 ஊர்களில் இருந்த அறிவாளிகளிடம் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டார். கடைசியாக ஒரு ஊரில் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ஊருக்குச் சென்ற அவர், "என்னைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை, உங்கள் அனைவருக்கும் தெரியும். என்னை எதிர்த்துப் போட்டியிட வந்திருப்பவர் அவரைப்பற்றி அறிமுகம் செய்யலாம்." என்றார்.

எதிர்த்துப் போட்டியிட வந்தவன் அவனைப்பற்றி அறிமுகம் செய்து விட்டு, "தங்களுக்கு எதிராகப் போட்டியிடுவதற்காக எங்கள் நாட்டில் ஒரு போட்டி நடத்தினார்கள். அந்தப் போட்டியில் கடைசியாக வரும் மடையனை உங்களுடன் போட்டியிடச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி மடையனான என்னைப் போட்டிக்கு அனுப்பியிருக்கிறார்கள்." என்றான்.
அறிவாளியான அவருக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. இருந்தாலும் நாம் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்துக் கொண்டார்.
அறிவாளியான அவர், "உலகின் நடுப்பகுதி எது?" என்று கேட்டார்.
உடனே அவன்," அதோ அந்த மரத்தின் அருகில் இருக்கும் என் கார்தான் உலகின் நடுப்பகுதி" என்று அங்கிருந்த கழுதையைக் காட்டினான்.
"கார் எங்கே இருக்கிறது? அங்கே கழுதைதானே நிற்கிறது." என்றார் அவர்.
"ஆம். அதுதான் நான் வந்த கார். அது நிற்கும் இடம்தான் உலகின் நடுப்பகுதி" என்றான்.
அந்த அறிவாளிக்கு கோபம் வந்தது. உடனே, "அதுதான் உலகின் நடுப்பகுதி என்று நிரூபித்துக்காட்ட முடியுமா?" என்று கத்தினார்.
"என்னால் நிரூபித்துக்காட்ட முடியும். ஆனால், அதற்கு முன்பு அது உலகத்தின் நடுப்பகுதி இல்லை என்று நீங்கள் நிரூபித்துக்காட்ட வேண்டும்." என்றான் அவன்.
அறிவாளியான அவருக்கு இவன் பேச்சே வேறுவிதமாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு
 
அடுத்த கேள்வியைக் கேட்டார்.
" இந்த வானத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கிறது என்று உன்னால் சொல்ல முடியுமா?"
உடனே அவன், " என்னுடைய கழுதையின் உடம்பில் எவ்வளவு முடி இருக்கிறதோ, அவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றன." என்றான்.
"இதை நிரூபித்துக்காட்ட முடியுமா?" என்றார் அவர்.
"உங்களுக்கு சந்தேகமிருந்தால் நீங்கள் எண்ணிப்பார்த்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்." என்றான்.
இவனை நாம் போட்டியில் வெற்றிகொள்ள முடியாது என்று நினத்த அறிவாளி "நான்
 
தோற்றுவிட்டேன். இன்று முதல் நீதான் அறிவாளிகளில் முதலாவது ஆள்" என்றார்.
அவன்,
 
 
"இந்த உலகில் பதில் சொல்லத் தெரிந்தவர்களெல்லாம் அறிவாளிகளுமில்லை. பதில் தெரியாதவர்களெல்லாம் முட்டாள்களுமில்லை. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்புமில்லை. தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும். தான் மட்டும்தான் அறிவாளி என்கிற எண்ணம் வந்தாலே அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். "என்றான்.
அறிவாளிக்கு யாரோ தலையில் ஓங்கிக் குட்டியது போலிருந்தது.
 
knr

--
If God brings you to it, He will bring you through it.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.

 Every moment, thank God

No comments:

Post a Comment