Monday, March 1, 2010

Koorathaazhwan. . . .!! !! !!

ஜகத்குரு-அணுக்க சீடர், சேர்த்தி சேவை!


திருவரங்கம், வட காவிரிக் கரையில் அன்று பலத்த வாக்குவாதம்!
பல வைணவர்கள், சில பொதுமக்கள், சில அறிஞர்கள், சில புலவர்கள் - போதாதா வாக்குவாதம் தோன்ற? :) இருப்பினும் அரணிக் கட்டையைக் கடைந்தால் தானே, வேள்விப் பொறி பறக்கும்! அதனால் தவறில்லை!

அத்வைதம், விசிஷ்டாத்வைதம், இன்னும் பல கருத்துக்கள் குறித்த சூடு பறக்கும் விவாதம்,
கடைசியில் ஒரு இடத்தில் வந்து நின்று விட்டது! - யார் ஜகத்குரு?
அவரவர் அவர்களுக்குப் பிடித்தமான பேர்களைச் சொல்கிறார்கள்! சரி வம்பே வேணாம்! ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா - கீதாசார்யன் - அவனே ஜகத்குரு என்று ஒரு முடிவுக்கு வர...

கூரத்தாழ்வார் அலறி அடித்துக் கொண்டு, காவிரியை நோக்கி ஓடுகிறார்! கைகளை உரக்கத் தூக்கி அலறுகிறார்!
என்னமோ ஏதோ-ன்னு சகலரும் பதற...கூரேசர் பெருங் குரலெடுத்து கத்துகிறார்! சுலோகமாய் வர்ஷிக்கிறார்!
சத்யம் சத்யம் புன:சத்யம்! யதிராஜோ ஜகத்குரு!
ச ஏவா சர்வ லோகானாம்! உத்தார்த்தன சம்ஸயா!!


"மக்களே, இந்தப் பேச்சும் தேவையோ? கீதாசார்யனா ஜகத்குரு? அத்தனை அத்தியாயம் சொல்லியும், சரணம் வ்ரஜ என்று சொல்லியும் பார்த்தனும் சரணம் அடைந்தானோ?
போரில் வென்று, ராஜ்ஜியம் ஆண்டு, போகங்களில் இருந்தானே அன்றி, சரணாகதி செய்யவில்லையே! கீதையே நேரில் கேட்டவனுக்கே இந்தக் கதி!

ஆனால் நம் இராமானுசர், நம் அத்தனை பேரையும், கீதையை நேரில் கேட்காமலேயே உத்தாரணஞ் செய்யவில்லையா? இத்தனை பேர்கள் சரணாகதி செய்துள்ளோமே!
அரங்கனின் இரண்டு விபூதிகளான லீலா விபூதியும், நித்ய விபூதியும் அவரிடம் அல்லவோ கொடுத்து வைத்துள்ளான்! கண்ணனிடமா அவை இருக்கின்றன?

இதில் இருந்தே தெரியவில்லையா? யார் ஜகத்குரு என்று கேள்வியும் எழுவதா? அதைக் கேட்டு அடியேன் அழுவதா?
இராமானுஜ சம்பந்தத்தால் சம்சார ஜலத்தை ஸ்தம்பம் செய்தவன், காவேரி ஜலத்தை ஸ்தம்பம் செய்யேனோ?
சத்யம் சத்யம் புன:சத்யம்! யதிராஜோ ஜகத்குரு! யதிராஜோ ஜகத்குரு!"

அனைவரும் பாய்ந்து சென்று, கூரேசனை நீரில் மீட்டு, கரைக்கு எடுத்து வருகிறார்கள்! இவர் காவிரியில் நடக்கத் துணிந்த கதை அப்படியே பத்ம்பாதர் கதை போலவே இருக்கல்லவா?
கரையில் வந்தவுடன் அனைவரும் கூரேசனிடம் மன்னிப்பு கேட்க, "ஆசார்யரை ஒருநாளும் மறுதலிக்காமல், இராமானுஜ சம்பந்தம் உடையவர்கள் ஆவீர்" என்று கூரத்தாழ்வார் மொழிஞ்சருளினார்!

"* நம் இராமானுசருக்கு முன் வந்த ஆசார்யர்கள் அனைவரும் = அனுவிருத்தி பிரசன்னாச்சார்யர்கள்!
* நம் இராமானுசன் என்னும் ஆச்சார்யனோ = க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யர்!

அதாவது, அடிப்படை ஞானம், அனுஷ்டானம், இதில் தேறியவர்களுக்கு மட்டுமே உபதேசம் காட்டி அருளியவர்கள், அனுவிருத்தி பிரசன்ன ஆச்சார்யர்கள்!
ஆனால் நம் உடையவர் அன்றோ, இந்த ஓராண்வழி என்னும் சங்கிலியை அறுத்து, ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதிச்சருளினார்கள்? = ஆசை வையும்! அது போதும்!
அதனால் அன்றோ, அடியோங்கள் உய்ந்தோம்! அதனால் அன்றோ, அரங்கன் உய்ந்தான்! "

இப்படிக் கூரேசன் கூற, கூட்டம் முழுதும், யதிராஜோ ஜகத்குரு! யதிராஜோ ஜகத்குரு! என்று கூவிக் குளிர்ந்தது!
ஓராண் வழியாய் உபதேசித்தார்! முன்னோர்
ஏரார் எதிராசர் இன் அருளால் - பாருலகில்
ஆசை உடையோர்க்கு எல்லாம், ஆரியர்காள், கூறும்! என்று
பேசி வரம்பு அறுத்தார் பின்!


இப்படியான ஆசார்ய அத்யந்த பக்தி கொண்டவர் கூரேசன்! ஆசார்யரை விட வயதில் மூத்தவாராய் இருப்பினும், ஆசார்யரை நொடிப்பொழுதும் சிந்தையில் கீழ் இறக்காத இந்தப் பேருள்ளத்தை என்ன என்பது?
கூரேசரை அணுக்க மாணவராய்ப் பெற்ற உடையவர் நற்பேறா?
இராமானுசரை அணுக்க ஆசார்யனாய்ப் பெற்ற கூரேசன் நற்பேறா??

கூரத்தாழ்வார்-இராமானுச முனிகள் திருவடிகளே சரணம்!
 

கூரத்தாழ்வாரை அறிவோம்...1000ஆம் ஆண்டு ஜெயந்தி சிறப்புப் பதிவு-4வதும் இறுதியுமான பதிவு

ஆழ்வார், அரங்கனிடம் திருநாட்டிற்கு உத்தரவாதம் பெறுதல்.

எம்பெருமானாரின் விளக்கம் கூரேசருக்கு நன்மையாகவும், ஆன்மீக உலகத்திற்கு உடனடி இழப்பாகவும் மாறியது.எப்படியெனில்,எம்பெருமானார் கூறிய விளக்கத்தில் "முறைமுறை எதிர்கொள்ள" என்றால் பரமபதத்தில் முதலில் வந்தடைந்தவர்கள், பின்பு வருவோரை எதிர்கொண்டழைக்க வேண்டும்.அப்படியானால் தாம் பின்னாலே பரமபதித்து, யதிவரனார் முன்பே பரமபதித்தால், அவ்வுலக நியமப்படி, எம்பெருமானாரும் தம்மை எதிர்கொண்டு உபசரிக்க வேண்டும்.அது ஒரு முறையற்ற செயல் என்று எண்ணினார்.தமக்கு குருவாக விளங்கியவர் தம்மை எதிர்கொண்டு உபசரித்தல் தாம், தாமதமாகப் பரமபதித்தால், அதனால் விளையக்கூடிய அபச்சாரம் என்று எண்ணினார்.

உடனே அரங்கனை அடைந்தார்.மனம் உருக அவனைத் தொழுதார்.அரங்கன் உள்ளம் உவந்து, நம்மீதும் இராமானுஜர் மீதும் ஆணை.வேண்டியது கேளும் என்றார். "கூரேசரும் தமது அழுக்குடம்பைத் துறந்து நித்ய விபூதி அனுபவம் (பரமபத வசிப்பு) வேண்டும்" என்று வேண்டினார்.அரங்கன் திகைத்து, "வேறு எதுவும் கேளும்"என்றார்.உடனெ கூரேசர், "ஆணையிட்டளித்த உறுதியை மறுக்கலாகுமோ?" என்றார். வேறு வழியின்றி அரங்கனும் தாம் அளித்த உறுதிப்படி உமக்கும், உமது நாமம் சொல்வோர்க்கும், உமது தொடர்புடையோர்க்கும் மேல் வீடு அளிப்போம் என்றார்.

செய்தி அறிந்து திகைத்தார் எம்பெருமானார்.ஒரு புறம் தமது அன்பிற்குரிய ஆழ்வானைப் பிரிவது தாங்கொணாத்துயர். மறுபுறம் ஆழ்வான் வேண்டுதலால், தமர்கள் கூட்டத்திற்கே பரமபதம் உறுதி என்ற மகிழ்ச்சி.ஆயினும் ஆழ்வானை எப்படிப் பிரிக்கலாம் என்று வினவுவதற்காக அரங்கனை நோக்கி எம்பெருமானார் விரைகிறார். ஆனால் ஆரிய படாள் வாசல் வரை வந்த பின் சிந்தனை செய்து "தற்போது கூரேசருக்குப் பரமபதம் வேண்டாமென்றால் அரங்கன் செவி மடுப்பான்;ஆயினும் கூரேசருக்கு அரங்கன் அளித்த வாக்கு பொய்ப்படுமே என எண்ணி, தமது எண்ணத்தை மாற்றிக்கொண்டு கூரேசர் திருமாளிகைக்கு விரைகிறார்.

கூரேசரைச் சந்தித்த எம்பெருமானார், "எமது உயிர் நிலையாகிய ஆழ்வானே! உம்மை இழந்து யாம் எப்படி இருப்போம்?உமக்கு யாம் குரு என்றால் உமக்கு முன்பு யாமல்லவோ பரமபதிக்க வேண்டும்?எம்மையும் உடன் கொண்டு போகலாகாதோ? பரமபதத்தில் உள்ளோர் என்ன நோன்பு நோற்றார்களோ?

"இச் சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே" எனும் பாசுரம் மறந்தீரோ ? என்று கேட்கிறார்.
அவரது திருவடிகளை வணங்கிய கூரேசர், "தேவரீர் முன்னரே பரமபதம் எழுந்தருளினால் அடியேனை தேவரீர் எதிர்கொள்ள நேரும். சீடனை ஆசான் எதிர் கொள்ளல் முறையன்று.எனெவே தேவரீருக்கு முன்னமே சென்று தேவரீரை எதிர்கொள்ளவே தங்களுக்கு முன்னமே பரமபதம் செல்ல வரம் பெற்றேன் என்றார்.முறை வேண்டா நகரிலும் (பரமபதத்தில்)முறைதேடும் ஆழ்வானின் குணனலனைப்போற்றினார். "த்வயம்" இல்லாத போது நெஞ்சு வறளும் ஆழ்வானின் திருமுதுகைத் தடவிக்கொடுத்து, மீண்டும் த்வயம் உபதேசித்தார் உடையவர்.உடையவரின் திருவடிகளைத் தம் திருவடியிலும் திருமார்பிலும் பதித்து மகிழ்ந்த கூரேசர், எம்பெருமானாரின் "ஸ்ரீபாத தீர்த்தம்" பெற்று மகிழ்ந்தார்.பின் எம்பெருமனார், தமது திருமடத்திற்கேகினார்.

கூரேசர் திருநாடலங்கரித்தல்

பின் கூரேசர், தமது பரமபத விருப்பம் பற்றி, தமது துணைவியாரிடம் கேட்டபோது அவர் "தேவரீர் திருவுள்ளம் பற்றுவது தவிர அடியேனுக்கு வேறு நினைவுண்டோ? என்று கூறி கூரேசரை வணங்கினார்.பின்னர் கூரேசர் தமது மைந்தர்களை அழைத்து, பெருமாளும் தாயாரும் இருக்க ஒரு குறையும் இல்லை. எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கள்.அன்னையின் சொல்படி வாழுங்கள்.பாகவதர்களை உவந்து ஏத்துங்கள் என்று அருளிச் செய்தார். தந்தை பிரியப்போவதை எண்ணி அவர்கள் கண்ணீர் விட்டுக் கலங்கினர்.உடனே கூரேசர், "பிறவி சம்பந்தத்தை நினைத்து வருந்துவீர்களாயின் நீங்கள் எம்பெருமானாரின் திருவடி சம்பந்தத்தை இகழ்ந்து இழந்தவர்கள் ஆவீர்கள்" என்று கூ றி அவர்களைத்தேற்றினார்.

பின்னர் கூரேசர் தமது சீடர்களில் ஒருவரான "பிள்ளைப் பிள்ளையாழ்வான்" மடியில் திருமுடியும் தமது தேவிகள் ஆண்டாள் மடியில் திருவடிகளும் வைத்துக் கொண்டு உடையவரின் திருவடிகளையே நினைத்துக்கொண்டு எவரொருவர் அச்சுதனுடைய திருவடித்தாமரையிணையாகிய பொன்னில் பேராசையாலே, மற்ற பொருட்களைப் புல்லென மதித்தாரோ, என்னுடைய ஆசார்யராய், ஞானாதி குண பூர்ணராய், கருணைக்கோர் கடலான அத்தகைய இராமானுஜருடைய திருவடிகளைச் சரணடைகிறேன்" என்ற பொருள் கொண்ட தமது தனியனைப் பாடிக் கொண்டே, திருநாட்டிற்கு எழுந்தருளினார்.
அப்போது அவருக்கு வயது 124(கி.பி 1133)
அவரது பிரிவாற்றாமையைத் தாங்காத அவதார புருஷரான இராமானுஜர் சோகத்தின் எல்லைக்கே சென்று மீண்டார். பின்னர் பட்டரைக்கொண்டு, கூரேசரின் கைங்கர்யங்களான ப்ரம்ம மேத ஸம்ஸ்காரங்களை சிரப்பாக முடித்தார்.

கூரேசர் திருநாட்டிற்கெழுந்தருளிய 6 மாதங்களில் முதலியாண்டான் திருநாடலங்கரித்தார். அவருக்கு அப்போது வயது 106. (கி.பி 1133ம் ஆண்டு).
அதே வருடம் முதலியாண்டான் இறந்த சில நாட்களில் வில்லிதாசரும் பொன்னாச்சியும் பரமபதித்தனர்(கி.பி.1133ம் ஆண்டு)

கலி 4239ம் ஆண்டு (கி.பி. 1137)பிங்கள வருடம் மாசித்திருவாதிரை வளர்பிறை தசமி திதி சனிக்கிழமை நண்பகலில் எம்பெருமானார் திருநாடலங்கரித்தார்.

கலி 4242 ம் ஆண்டு தமது 115ம் வயதில் எம்பார் திருநாடாலங்கரித்தார்.(கி.பி 1140)

சில பின் குறிப்புகள்:

இங்கு குறிப்பிடப்படும் சில செய்திகள் ஊகங்களின் அடிப்படையிலும், ஆராய்ச்சி அடிப்படையில் சில அறிஞர்பெருமக்கள் எழுதியுள்ள கருத்துகளின் அடிப்படையிலும் உள்ளன.

ஸகஸ்ரநாமத்திற்கு பட்டர் எழுதிய விளக்கத்தில்(வ்யாக்யானத்தில்) "அவிஜ்ஞாதா" எனும் பதத்திற்கு விளக்கம் கூறும் போது "ஸர்வஜ்ஞதாம் ஏவமுபாலபாமஹே த்வம்ஹ்யஜ்ஞ ஏவ ஆஸ்ரித தோஷ ஜோஷண: என்ற ஸ்லோகத்தைக் கூறி அது தமது தந்தை கூரேசர் எழுதியது என்று கூறியுள்ளார்.இந்த வரிகள் கூரத்தாழ்வான் எழுதிய 5 "ஸ்தவங்களிலில் இல்லை". எனவே கூரத்தாழ்வார் வேறுவடமொழி நூல்களையும் எழுதியது தெரிகிறது.அல்லது இந்த ஸ்லோகம் முன்பே குறிப்பிட்ட சில நூல்களான அபிகமனஸாரம்,புருஷ ஸூக்த பாஷ்யம்,ஸாரிரக ஸாரம் இவற்றில் ஏதேனும் ஒரு நூலில் இருக்கலாம்.

மேலும் ஸ்ரீமந் நிஹமாந்த மஹா தேசிகர் அருளிய ரஹஸ்யத்ரய ஸாரம் எனும் நூலின் 29வது அதிகாரமான சரமஸ்லோக அதிகாரத்திலே "பட்டரும், ஆழவானும் தந்தாங்கருளிச் செய்த நித்ய க்ரந்தங்களிலே" என்ற குறிப்பு இருப்பதால், கூரேசர் வேறு ஒரு நித்ய க்ரந்த நூலையும் அருளிச்செய்திருக்கலாம் என்று எண்ன இடம் உள்ளது.

மேலும் ஓரிடத்தில் பின்வரும் வார்த்தை உள்ளது.
"ஆழ்வானுடைய சரமஸ்லோக வ்யாக்யானத்திலும் இவ்விதமே விவக்ஷிதமாகையால் ஒரு விரோதமுமில்லை"

இதனால் சரமஸ்லோக வ்யாக்யான ரூபமாக கூரேசர் ஒரு க்ரந்தம் அருளிச்செய்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.ஆனால் அந்நூல் கிடைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இவை தவிர "யமக ரத்நாகரம்" என்றொரு நூலும் உள்ளது. க்ருஷ்ணாவதாரத்தைப் பற்றிய நூல்.இந்த நூல் கூரேசரால் எழுதப்பட்டது எனவும் அது தவறு எனவும் சிலர் கூறுகின்றனர்.நூலில் உள்ள ஆசார்ய வணக்கங்களில் நம்மாழ்வார், ஆளவந்தார், இராமானுஜர் ஆகியோர் 3 ஸ்லோகங்களில் புகழப்பட்டுள்ளனர்.இராமானுஜரின் நேரடிச்சீடர் ஒருவரே இதை எழுதி இருக்க வேண்டும் என்றும் (ஏனெனில் இராமானுஜருக்குப் பின் வந்த ஆசார்யர்கள் பற்றிய குறிப்பு இல்லை.)எனவே இந்நூலை, கூரேசர் இயற்றி இருக்கலாம் என்று ஒரு சாரார் கருதுகின்றனர்.

ஆனால் இதை மறுப்போர் கூறும் காரணம்,இந்நூலின் 2ம் பகுதி 15ம் ஸ்லோகத்தின் விளக்கத்தில் எம்பெருமானாருடைய தஹராதி கரணத்திலுள்ள ஒரு வாக்கியத்தைக் குறித்து, கண்டனம் செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்நூலை கூரேசர் எழுதியிருக்க வாய்ப்பு இல்லை என்று மறுக்கின்றனர்.

ஆனால் குரு வணக்கத்தில் இராமானுஜரைப் புகழ்ந்திருப்பதால் விளக்கவுரையில் இருப்பது இடங்கொண்ட எழுத்துப்பிழையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

இது தவிர "கூரேச விஜயம்" என்ற நூல் உள்ளது.இந்நூல் சோழ ராஜ சபையில் கூரேசர் செய்த வாதங்கள்,மற்றும் நிரூபணங்கள் உள்ளன.ஆனால் இதை எழுதியவர் கூரேசருக்குப்பின் வந்த ஒருவர் தான், என்று ஆய்வு செய்துள்ளனர்.

கூரேசர் செய்த த்யாகங்கள் மற்றும் துறவுகளின் சுருக்கம்

1.வாழ்வின் ஆரம்பம் முதலே தமது செல்வத்தின் பெரும்பகுதியை, திருமாலடியார்க்கு அன்ன தானம் செய்வதன் மூலம் "த்யாகம் செய்தார்"

2.யதிராஜரின் சீடராகச் சேர்ந்தவுடன் தமது பொன் பொருள் பலவற்றைத் "த்யாகம்" செய்தார்

3யதிராஜர், வரதனை நீங்கி அரங்கம் சென்றபோது, தாமும் வரதனைத் துறந்து, அரங்கம் சென்றார்.

4.யதிராஜர் கச்சிநகர் நீங்கி அரங்கம் சென்றபோது, தமது இல்வாழ்வையும் துறக்க முடிவு செய்து, தமது இல் வாழ்க்கை இன்பத்தைத் துறந்து, தமது இல்லாளை கூரேசத்தில் இருக்கச் செய்து தாம் மட்டும் யதிராஜருடன் அரங்கம் சென்றார்.பின்னர் யதிராஜரின் வற்புறுத்தலின் பேரிலேயே தமது இல்லாள் ஆண்டாளை தம்முடன் அரங்கத்திற்கு வரவழைத்தார்.

5.தமது இல்லாளை அழைத்து வரும்போது, மிகுந்திருந்த மற்றைய செல்வங்களையும் துறந்து, தம் மனைவி கொணர்ந்த ஒரெ ஒரு பொன்வட்டிலையும் துறந்தார்.

6. அரங்கத்தில் இருந்த போது, சோழ அரசனின் நெருக்கடி காரணமாகத் தமது குருவின் உயிரைக் காக்க எண்ணி, குருவையும் அரங்கனையும் துறந்தார்.

7. சோழனின் அவைக்குச் செல்லும்போது தமது உயிருக்கும் ஆபத்து வரும் என்று உணர்ந்து, தமது உயிரையும் துறக்கத் தயாராகச் சென்றார்.

8. சோழனின் அவையில் தமது கண்களைத் "த்யாகம்" செய்து தரிசனத்திற்கே தரிசனம் தந்தவர் என்ற பெயர் கொண்டார்.

9.பின் அரங்கம் திரும்பியபோது, எம்பெருமானார் தொடர்புடையோர் அரங்கன் கோயிலுக்குள் செல்வது தடை செய்யப்பட்ட போது, எம்பெருமானாருக்காக அரங்கனையும் துறந்து, அரங்கத்தையும் துறந்தார்.

10.பின் எம்பெருமானார் அரங்கம் மீண்டபோது, மதுரை அழகரைத்துறந்து அரங்கம் ஏகினார்.

11.மீண்டும் கச்சி நகர் சென்று வரதனை வேண்டியபோது, தமக்குக் கிடைக்கவிருந்த புறக்கண்ணையும் துறந்தார்.

12.தமக்கு முன்பாக எம்பெருமானார் பரமபதித்தால், தாம் பரமபதிக்கும் போது தம்மை, எம்பெருமானார் பரமபதத்தில் வரவேற்க வேண்டி வரும் என்று கருதி, தமது குருவுக்கும் முன்பாக பரமபதிக்க எண்ணி, உயிர்த் தியாகம் செய்தார். இதை விடப் பெரிய த்யாகம் வேறு என்ன இருக்க முடியும்?

13.இங்கு வரிசைப்படுத்தப்பட்ட த்யாகங்கள் சில.சொல்லாதவை பல.

இறுதியுரை:

கூரத்தாழ்வானது 1000ம் ஆண்டிலே,பெரியோர் வழங்கிய கூரத்தாழ்வான் திவ்ய சரிதையை, சிறியேனாகிய அடியேனை அழைத்து, தொகுத்து எழுத, ஆணையிட்ட மௌலி அவர்கட்கு அடியேனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இதனை ஆசார்ய ஹ்ருதயத்தில் பதிவிட அனுமதி அளித்தமைக்கு அடியேனது இதய பூர்வமான நன்றிகள்.இந்தப் பதிவில் கலந்து கொண்டு, தமது கருத்துகளையும், அறிவுரைகளையும், நிறை குறைகளையும் எடுத்துரைத்த அனவருக்கும் நன்றி.

இச்சிறிய முயற்சி கைகூடிட அருள் புரிந்த ஆசார்யர்களுக்கு, அடியேனது தலையல்லால் கைம்மாறிலனே.

அடியேனது தொகுப்பில் உள்ள சொற்பிழை, பொருட் பிழை, ஆகியவற்றை அருள் கூர்ந்து பொருத்தருளுமாறும், வேண்டுகிறேன்.


இத்துடன் கூரத்தாழ்வான் வைபவம் எனும் திவ்ய சரிதம் முற்றும்.

ஆழ்வார், எம்பெருமானார், கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம்.
 
கூரத்தாழ்வானும், இரண்டாம் குலோத்துங்க சோழனும்(கிருமி கண்ட சோழனும்)
கூரத்தாழ்வான்வாழ்வில்இது மிகவும்பெரிய,கொடிய, முக்கியமான சம்பவம். இதை ஒரு தனிப்பதிவாகவே இடலாம். அடியேன் படித்தவரையில்/தெரிந்த வரையில் எழுதுகிறேன்.தவறு இருந்தால் மன்னித்து அருளவும். ஏதேனும் செய்தி விடுபட்டு விட்டால், அதைத் தெரிவிக்கவும்.
கி.பி.1070-1116 ல் சோழ தேசத்தை ஆண்ட இரண்டாம் குலோத்துங்க சோழன் சிவ நெறிச் செல்வன். அதே நேரத்தில், மற்ற கடவுள் வழிபாடுகளை அறவே வெறுத்தான்.வைணவத் திருத்தலங்களுக்கு இடையூறு செய்தான்.இது பற்றி உடையவர் பெரிய நம்பிகளிடம் விண்ணப்பிக்க , அவர் உடனே தாம் அதற்கு இரட்சையாக "த்வயம்" அனுசந்தித்துக்கொண்டே திருவரங்கம் திருக்கோயிலைத் திருப்ரதட்சணை வர விரும்புவதாகவும் , அதற்குத் தம்முடன் மிகவும் அடக்கமான , சற்றும் செருக்கற்ற "வ்ரக்தர்" ஒருவரை அனுப்புமாறும் உடையவரிடம் கூறினார்.உடனே உடையவர் கூரத்தாழ்வானைப் பெரிய நம்பிகளுடன் அனுப்பி வைத்தார்.சோழனின் இடையூறுகளும் சற்று குறைந்தன.

ஆனால் மீண்டும் சோழன் துர்ப்புத்தி கொண்டான்.தமக்கு வேண்டியவர்களிடம் ஆலோசனை செய்து எல்லாரிடமும் ஒரு ஓலையில் கையொப்பம் வாங்கினான்.எதற்கு?தமது கொள்கையில் ஒப்புதல் இல்லாதவரை தண்டிப்பதற்காக,வன்முறைப் பேச்சும் செயலும்.என்ன எழுதப்பட்டது?
"சிவாத் பரதரம் நாஸ்தி"என்பதே.என்ன அர்த்தம்? சிவனுக்கு மேலான பொருள் இல்லை என்பதே அது.
எல்லாரிடமும் கை எழுத்து வாங்கியதாக அரசன் பெருமை கொண்ட வேளையிலே மன்னனின் அமைச்சர் நாலூரான் என்னும் வைணவன், அரசே, நீங்கள் எது சொன்னாலும் ஆடு, மாடு போல மண்டையாட்டும் இம்மானிடப்பதர்களிடம் கையொப்பம் வாங்கி என்ன பயன்? வைணவம்என்றாலே அது இராமானுஜரால் தான் வளமும் பெறுமையும் பெற்றது.அவர் சம்மதம் இல்லாவிடில் உமது விருப்பம் நிறைவேறியதாகக் கொள்ள முடையாது என்று கூறுகிறான்.(தமிழனுக்கு தமிழனே எதிரி.கூரத்தாழ்வான் என்னும் மெய்யான வைணவரின் கண் போகக்காரணம்ஒருபொய்யானவைணவரின்துர்போதனை. தமிழகத்தின் முதல் எட்டப்பனோ?)

உடனே அரங்கத்திற்கு ஆள் அனுப்பி, உடையவரை உடனே அழைத்து வர, மன்னன் உத்தரவிட்டான்.இராமானுஜர் கையெழுத்திடா விட்டால், அவ்ரை கொன்று விடவும் முடிவெடுத்தான் அரசன்.கூரத்தாழ்வான் சோழனின் அரசவைக்குப் புறப்படுதல்
அரசனின் ஆட்கள் வந்த நேரம்.எம்பெருமானார்,நீராடச் சென்றிருந்தார். திருமடத்தில் அப்போது இருந்தவர் நடாதூர் ஆழ்வான் என்னும் சீடர்.(இவர் எம்பெருமானாரின் சகோதரியின் புதல்வர்.)அரசனின் ஆட்களிடம் வார்த்தையாடி ,அவர்கள் வந்த காரணத்தை அறிந்தார். அறிந்தவர்,உடனே கூரேசரிடம் மட்டும் கூறினார்.அவரின் சமயோஜித புத்தியைப் பாராட்டிய கூரேசர், அவரை மிகவும் மகிழ்ந்து இளையாழ்வாரின் சகோதரி மகனான அவரை ,"நீரன்றோ ப்ரிய பாகிநேயர்!(பிரியமான மருமகன்) என்று பாராட்டி, நொடிப்பொழுதில் ஒரு முடிவு எடுக்கிறார். கூரேசர் மிகவும் புத்திசாலி.ஒரு நொடியில் அரசனின் தீய எண்ணத்தை உணர்ந்தார்.தாமே எம்பெருமானார் போல் வேடமிட்டு, எம்பெருமானாரின், முக்கோலையும் அவரது காவி உடையையும் தாமே தரித்து, பெரிய நம்பிகள் மற்றும் அத்துழாய் ஆகியவர்களுடன் சோழனின் அவைக்குப் புறப்பட்டு விட்டார்

எம்பெருமானார் வருந்துதல்
நீராடித்திரும்பிய உடையவர், நடந்தவைகளை அறிந்து மிகவும் வருந்தினார். தமது குரு, தமது, முதன்மைச் சீடர் இருவரும் ஆபத்தை நோக்கிச் சென்றதை அறிந்து , அனலாய்த்துடித்தார். மற்ற சீடர்கள் அவரைத்தேற்றி, பின் வரும் சமாதானத்தைக் கூறினர்."அரசவைக்குவந்தது,எம்பெருமானார்அல்ல"என்று தெரிந்தால், அரசன்,கூரத்தாழ்வானை விட்டுவிடுவான் என்பதே அந்த எண்ணம்.

ஆனால்அவ்வாறு நிகழவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக வடமொழியில் எழுதப்பட்ட ஒரு நூலில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள்
எம்பெருமானார் காலத்தில் வாழ்ந்த கருட வாஹன பண்டிதர் எழுதிய திவ்யஸூரிசரிதம் என்னும் நூலின் 18ம் சர்க்கம் 74வது பாடலில்
சோளஸ்ய ச்ருதிகடு சேஷ்டிதம் யதீந்த்ர:
ச்ருத்வாத ச்ருத விமலாம்பரஸ் ஸ ரங்காத்
ஸ்ரீரங்கிந் அவ தவ தாம தர்சநஞ்ச
இத்யுக்த்வா ப்ராஸ்தித விநிவேச்ய கூரநாதம்
(பொருள்: சோழனுடைய கடினமான செய்கையை எம்பெருமானார் கேள்விப்பட்டு,வெள்ளைத் திருப்பரிவட்டம் சாத்திக் கொண்டு,"அழகிய மணவாளா, உன் கோயிலையும் தர்சநத்தையும் காத்தருள்" என்று ப்ரார்த்தித்து, ஆழ்வானை நிறுத்திவிட்டு, தாம் கோயிலினின்றும் ,புறப்பட்டருளினார்.)
மற்றொரு ச்லோகத்தில்
ஆநைஷீத் ந்ருபஸவிதம் மஹார்ஹ பூர்ணம்
ஸ்ரீரங்காத் ஸஹ யதிவேஷ கூரபர்த்ரா

யதிராஜவேஷம்பூண்டகூரத்தாழ்வானையும்,பெரிய நம்பியையும், சோழனின்சபையில்,ராஜ ஸைன்யம் கொண்டு போய் சேர்த்தது.)


எம்பெருமானார் , நீலகிரி, கொங்கு நாடுகள், கொள்ளே காலம் வழியாக மேல்கோட்டை(திருநாராயணபுரம்) நோக்கி பயணம் செய்தார்.அங்கு இறைச்சேவை செய்து கொண்டிருந்த போது திருவரங்கத்திலிருந்து வந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவரிடம், இராமானுஜர், திருவரங்கக் கோயில் பற்றியும் கூரத்தாழ்வான் பற்றியும் விசாரிக்கிறார்.
அவ்வன்பர் அளித்த செய்திகள்.

காவியில் வந்த கூரேசரை, மன்னனும் எதிராசர் என நினைத்து, அவரிடம் , "சிவாத் பரதரம் நாஸ்தி(சிவனுக்கு மேலான பொருள் இல்லை) என்ற ஓலையை அளித்து அதில் கையொப்பமிடச் சொன்னான். அப்போது அங்கு வந்த நாலூரான் எனும் வைணவன்(மன்னனின் அமைச்சர்), வந்த மனிதர், யதிவரனார் அல்ல,கூரேசர் எனக் கூறவும் மன்னன் கோபம் கொண்டு தனது வீரர்களைக் கடிந்து, இராமானுஜரைத் தேடிப் பிடித்து வரச் சொன்னான். உடனே நாலூரான் , இவர் இராமானுஜரின் இன்னொரு உரு. இவர் கையெழுத்திட்டால் இராமானுஜரின் கையெழுத்துக்குச் சமம் என்றான். இதற்கிடையே எம்பெருமானார் அரங்கத்தைவிட்டு வெளியேறிய செய்தி அறிந்து, அவ்வீரர்கள் இராமானுஜர் சென்ற வழியில் அவரைபிடிக்கத்தொடர்ந்தனர்.அதனை அறிந்த இராமானுஜர், வழியில் உள்ள மணலைக் கையில் எடுத்து,

"கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப்பெறா
தடவரைத்தோள் சக்ரபாணி !சார்ங்கவிற் சேவகனே!"
என்ற பெரியாழ்வாரின்"சென்னியோங்கு"எனத்தொடங்கும் பாசுரம் ஸேவித்து, அம்மணலைத்தமது சீடர்களிடம் தந்து அவ்வீரர்கள் வரும் வழியில் இடச்சொன்னார். சீடர்களும் அவ்வாறே செய்தனர்.அதன் பலனாக, வீரர்கள் அவர்களைத்தொடர முடியவில்லை.

பின்னர் கூரேசர் அரசனிடம் "நிர்மல பரப்ப்ரம்மம் ஓலையளவில் நிற்குமோ? அனைத்திற்கும் மேலான பரம்பொருளை நாமாக நிர்ணயம் செய்ய முடியுமோ?இவ்வுலகைக் காண, கண்கள் எவ்வளவு முக்கியமோ, அது போல, பரம்பொருளைக் காண, வேதங்களும், சாஸ்திரங்களும் முக்கியம்.அவற்றை அறிந்த பெறியோர்களை வாதத்திற்கு வரச் சொல்லுங்கள்.அதன் மூலம் , அவை யாரைப் பரம்பொருள் எனக் கூறுகின்றன எனத் தெளிவு கொள்ளலாம்,என்று அவர்களுடன் வாதப் பொருது நடாத்தினார்.மோட்சத்தை அளிப்பவர் நாராயணனே.அன்று பாண்டியனின் அவையிலே பெரியாழ்வார், வேதங்கள் விரைந்து கிழியறுத்து, மாலே பரம்பொருள் என பரதத்துவ நிர்ணயம் செய்தார்.ஆதி மூலமே எனும் மாமத யானையை அருள வந்த நாமம் எது? வேதங்களை அசுரன் அபஹரித்த போது, அதை மீட்டவர் மாலே!ஆலிலையின் மேலொரு பாலகனாய் அருள் பாலித்த கண்ணன் , தனது வாயிலே உலகனைத்தும் காட்டினான்.என்பது போன்ற வாதங்களை அளித்து, சோழனின் அறிஞர்களை வாதில் வென்றார்.

அதை ஏற்காத மன்னன் , கூரேசர் புலமையால் வென்றதை ஏற்க முடியாது,யாமே மன்னன்.குடியின் கடமை அரசாணைக்கு அடிபணிவது. எனவே ஆணையை ஏற்று , கையெழுத்திடவும் என்று சீறினான்.உடனே கூரேசர் ஓலையை வாங்கி, அரச ஓலையின் வாசகத்தைக் கேள்வியாக்கி,

அதற்குப் பதில் எழுதுமுகமாக "த்ரோணம் அஸ்தி தத:பரம்" என்று எழுதினார். அதை வாங்கிய மன்னன் தமது அறிஞர்களிடம் அதன் பொருள் கேட்டான். அவர்கள் அதன் பொருளை இவ்வாறு கூறினர்.சிவம் என்பதற்குக் குருணி என்ற பொருள் உண்டு. அதை விட த்ரோணம்(பதக்கு),அளவில் பெரியது. என்ற ஒரு பொருளும், சிவனாரின் தலையில் சூடப்படும் தும்பைப்பூ என்ற பொருளும் உண்டு என்று கூறினர்.அது கேட்டுக் கொதித்த மன்னன், கூரேசரின் கண்களைப் பிடுங்குமாறு ஆணையிட்டான்.

தரிசனத்திற்கு தரிசனம் தந்தவர்

உடனே கூரேசர், உன் போல் கொடுங்கோலர்களின் கைபட்டு எமது கண்ணொளியை இழப்பதை விட,யாமே எமது கண்களை எடுத்து விடுகிறோம் என்று தமது கையாலேயே, தனது கண்களைப் பிடுங்கிக் கொண்டார்.தமது விழிகளை இழந்தாலும் எம்பெருமானாரைக் காக்கும் கடமையை நிறைவெற்றினோம் என்று தமது அகக்கண்ணால் மகிழ்ந்தார். இச்சம்பவத்தால் "தரிசனத்திற்கே தரிசனம் தந்தவர்" என அழைக்கப்பட்டார்.

உடனிருந்த பெரிய நம்பிகளின் கண்களும் பிடுங்கப்பட்டன.உடனே அவர் வேதனை தாளாமல் கதறினார்.அவரின் வேதனையைப் பொறாத அத்துழாய், தங்களுக்கு உதவுவோர் யாரும் இல்லையா என்று வேதயுடன் அதற்றினாள்.மெய்ப்பொருள் விஷயமாக அவர்கட்கிருந்த உறுதியைப் பார்த்த 'நாவல் கொடி அம்மாள்' எனும் பணிப்பெண் தன் வாளை எறிந்து விட்டு பெரியநம்பிக்கு உதவுகிறாள்.பின்பு ஸ்ரீபராந்தகபுரத்தைச் சேர்ந்த சில ஸ்ரீவைஷ்ணவர்களின் உதவியுடன் ஒரு சுமைப் பல்லக்கின் மூலம் கூரேசரையும் பெரிய நம்பிகளையும் எழுந்தருளப் பண்ணி ஸ்ரீபராந்தகபுரம் வந்து சேர்ந்தனர்.கண் இழந்ததால் உடலில் ஏற்பட்ட தீராத வேதனையால் , பெரிய நம்பிகள் பரமபதிக்கும் நிலை வந்துவிட்டது. அப்போது அவருக்கு வயது 105.(101 என்றும் கூறுவர்.)(1997 ம் வருடம் பெரிய நம்பிகளின் 1000வது வருடம்) அப்போது பெரிய நம்பிகள் கூரேசரின் மீது தலை வைத்தும், அத்துழாய் மீது திருப்பாதங்களை வைத்தும் கண் வளர்த்து, பரமபதிக்கிறார். பின்னர், அங்கிருந்த உத்தமர்கள் உதவியுடன் ஒரு டோலையில் கூரேசர், அரங்கம் வந்தடைந்தார்.


(பெரிய நம்பிகள்)
ஸ்ரீபராந்தகபுரம் எனப்படும் காளையார் கோவில்(பசுபதி கோவில்) என்று வழங்கப்படுகிறது.(தஞ்சை –குடந்தை வழியில், அய்யம்பேட்டையில் இருந்து 2 கி.மீ .தூரத்தில் இவ்விடம் உள்ளது.பின்னர் இங்கு இராமானுஜர், பெரிய நம்பிகளுக்கு ஒரு திருவரசு எழுப்பினார்.



சில நூல்கள், "ஆழ்வான் தன்னிச்சையாகக் காவி வேடம் தரித்து, சோழன் அவைக்கு நீங்கினான் என்றும் , சில நூல்கள் , எம்பெருமானார் உட்பட அனைவரும் கலந்து ஆலோசித்து, கூரேசரை, அவ்வாறு அனுப்பினர் என்றும் கூறுகின்றன.இரு சிந்தனைகளும் சாத்தியமே!
ஆனால் ஆழ்வான் , தாமே சிந்தித்துக் காவியுடை தரித்தார் என்று எண்ணவே வாய்ப்பு அதிகம்)

அரங்கனைத் தரிசிக்கத் தடைவிதித்த சோழ வீரர்கள்:

திருவரங்கம் திரும்பிய கூரேசர், அரங்கன் ஆலயம் சென்று பெரிய ஸ்ரீபலிபீடத்தருகே நின்று, அரங்கனே! பெரிய நம்பிகளுக்கருளிய பரமபதம் தமக்கு இல்லையா? என்று வேண்ட முனைகிறார்.அப்போது அரசனின் ஆட்கள், "இராமனுஜரின் சம்பந்தம் உள்ளவர்கள் சன்னதிக்குச் செல்லத்தடை விதித்தனர்.ஆனால் ஆத்ம குணம் உள்ளவராதலின் கூரேசர் உள்ளே செல்லலாம் என்று கூறவும், கூரேசர், தமது ஆத்ம குணம் , குருவை அடைவதற்கே வழியாக இருக்க வேண்டும். ஆனால் இங்கோ நமது ஆத்ம குணம் ஆசார்ய சம்பந்தத்தை அறுப்பதாக உள்ளது. எனவே அப்படிப்பட்ட குணம் வேண்டாம். ஆசார்யனே மேல். எமக்கு அரங்கனின் தரிசனம் வேண்டாம் என்று கூறித் திரும்பிவிட்டார். இதை இராமானுஜ வைபவம் -1141ம் பாடலில் வடிவழகிய தாஸர்

"தடையற ஒருவன் கையைத்தாங்கிட ஏகும்காலை
அடைவிலா மன்னன் ஆட்கள் அரங்கனார் கோயில் காப்போர்
உடையவர் சம்பந்தத்தார் உட்புகத்தாகாதிங்(கு) என்றார்
நடையினின் றாழ்வான் மீண்டான் நான் அவன் அடிமை என்ன"
என்று விளக்குகிறார்



அரசனின் ஆட்கள் மூலம் பல விஷ்ணு கோவில்கள் இடிக்கப்பட்டன. திருக்கண்ணபுரக்கோவிலின் நெடுமதில்கள் உடைக்கப்பட்டன.தில்லைத் திருச்சித்திரகூடக் கோவிலின் மூலவரை சக்தி இழக்கச்செய்து கடலில் வீசினர்.இருப்பினும் அங்கிருந்த உற்சவ மூர்த்தியை, சிலர் பாதுகாத்து திருப்பதிக்கு எழுந்தருளச் செய்தனர்.

கூரெசர் திருமாலிருஞ்சோலைக்குச் செல்லுதல்

தமது திருமாளிகைக்கேகிய கூரேசர், தமது துணைவியார், புதல்வர் குடும்ப பரிவாரஙகளுடன் திருமாலிருஞ்சோலை சென்றார்.செல்லும் வழியில் 100 ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்ரீவைகுண்டஸ்த்வம்(பரவாசுதேவனுடைய லீலாவிபூதிகளைப் பற்றியது) எனும் நூலையும் அதிமானுஷஸ்தவம் எனும் நூலையும்(ந்ருஸிம்ஹ, இராம, க்ருஷ்ண அவதாரங்களைப் பற்றியது) எழுதினார்.

இவ்வாறு சோழனின் அவை(வ)ச் செய்திகளை,அந்த வைணவர் மூலம் அறிந்த யதிவரனார் பெருந்துயரடைந்தார்.இருந்தாலும் கூரத்தாழ்வானையாவது திருமேனியுடன் இருக்கப் பெற்றோமே என ஆறுதலடைந்தார்.தமது குருபெரிய நம்பிகளுக்கு "ஞானபுத்திரன் எனும் முறையில்" செய்ய வேண்டிய "ஸ்ரீசூர்ண பரிபாலாதிகள்" செய்தார்.இதற்கிடையில் திருக்கோட்டியூர் நம்பிகள், திருமாலையாண்டான்,திருவரங்கப்பெருமாளரையர், திருக்கச்சி நம்பிகள் ஆகியோர் பரமபதித்து விட்ட செய்திகளை அறிந்து, பதறி மனம் வருந்தி, அவர்களுக்கும் ஸ்ரீசூர்ண பரிபாலாதிகளைச்செய்து முடித்தார்.
(உடையவர் கர்மானுஷ்டானங்களைக் கைவிடவே இல்லை என்பதற்கு, மீண்டும் மீண்டும் பல சான்றுகள்)


திருமாலிருஞ்சோலையில் கூரேசர்


எம்பெருமானார் தமது மடைப்பள்ளிக் கைங்கர்யசீடர்களில் ஒருவரான 'மாருதிச்சிறியண்டானை' அழைத்து திருமாலிருஞ்சோலை செல்லுமாறும் அங்கு கூரத்தாழ்வானைச் சந்தித்து ஆழ்வானின் உடல் நலத்தையும் , இன்ன பிற விஷேசங்களையும் அறிந்து வருமாறு பணித்தார். திருநாராயணபுரத்தில் எம்பெருமானார் செய்து வந்த திருப்பணிகளை , மாருதிச் சிறியாண்டான் மூலம் அறிந்த கூரேசர் மிகுந்த மகிழ்ச்சி கொண்டார். அப்போது, கூரேசர் நிலையை எண்ணி எம்பெருமானார் அடைந்த வேதனையை , சிறியாண்டான் எடுத்துரைத்தார்.அதன் பின்னர் அவரின் படைப்புகளையும் எடுத்துரைத்தார்.
ஆழ்வான், 132 பாசுரங்கள் அடங்கிய "ஸ்ரீ ஸுந்தர பாஹுஸ்தவம்" எனும் வடமொழி க்ரந்தத்தை அருளினார்.அதில் 129-132 வது பாசுரங்களில்
"விஞ்ஞாபனம்வநகிரீஸ்வர!ஸத்யரூபாம்
அங்கீகுருஷ்வ கருணார்ணவ! மாமகீநாம்!
ஸ்ரீரங்கதாமநி யதாபுர மேஹதோஹம்
ராமானுஜார்ய வசக:பரிவர்த்திஷீய!!"
ஸ்ரீரங்க ஸ்ரியமனந்வஹம் ப்ருகுணயந்
த்வத்பக்த போக்தாம் குரு
காருண்யாம்ருதவாரிதே வ்ருஷபதே ஹேசத்ய சங்கல்பந!
ஸ்ரீமத் ஸுந்தர யோக்யதாவிரஹிதான் உத்ஸார்ய ஸத்வத்ஸல!
க்ஷாம்யந் ஸாதுஜனை:க்ருதாம்ஸ்து நிகிலாநேவாபசராந்க்ஷணாத்!
தத்போக்யாமநிசம் குருஷ்வ பகவந் ஸ்ரீரங்கநாமச்ரியம்!

அழகிய காட்டுப் பகுதியில் எழுந்தருளியிருக்கும் இறைவனே!சுந்தரனே!எமது விண்ணப்பம்.திருவரங்கத்தில் உள்ள அரசுப்பூண்டுகள் ஒழிந்து, புனித இடமாக வேண்டும்.எம்பெருமானாரின் திருவடி நிழலிலே தாம் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அழகர் அதை அங்கீகரித்தருளினார்.(அழகர் கோயில் பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரை எழுதிய பரமசிவன் என்னும் ஆராய்ச்சியாளர், கூரத்தாழ்வார், பற்றிய எந்தச் செய்தியையும் குறிப்பிடவில்லை.)

பின்னர்,சிறியாண்டான் அழகர் கோயிலில் இருந்து புறப்படும்பொழுது, அருளாளப்பெருமாள் எம்பெருமானாரின் சீடர் அம்மங்கி அம்மாள் என்பவர் "சோழ மன்னன் கழுத்தில் புழு வந்து இறந்தான்" என்ற செய்தியைக்கேட்டு அதை மாருதியாண்டானிடம் கூறினார்.இருவரும் அதைஉறுதிப்படுத்த, கங்கை கொண்ட சோழபுரம் சென்றனர்.(கி.பி.1116 ம் ஆண்டு).பின்னர் அங்கிருந்து, திருநாராயணபுரம் சென்று எம்பெருமானார்க்கு அச்செய்தியைத் தெரிவித்தனர்.அதற்கு மகிழ்ச்சிப் பரிசாக, "சிறியாண்டான்" "த்வய உபதேசம் பெற்றார்.பின்னர் அவரை அடைந்த நடாதூர் ஆழ்வான், "கிருமி கண்ட சோழனின் மறைவையும் அவனது மகன் விக்ரம சோழன் பதவியேற்ற பின், தமது தந்தையின் செயலுக்காக வருந்தியதையும் எடுத்துரைத்தார். எம்பெருமானார், அவரையும் குளிர நோக்கி "த்வய" மந்திரத்தை உபதேசித்தருளினார்.எம்பெருமானார், முதலியாண்டானைக் கொண்டு 1117 ம் ஆண்டு சித்திரை மாதம் வளர் பிறை த்ரயோதசி திதி சனிக்கிழமை , ஹஸ்த நட்சத்திரத்தில் ஒரே முஹூர்த்தத்தில் கீர்த்தி நாராயணன்,ஸ்ரீமன்நாராயணன், வீர நாராயணன், விஜய நராயணன்,கேசவ நாராயணன் என்ற 5 நாராயணர்களின் கோவில்களிலும் விக்கிரகப் ப்ரதிஷ்டை செய்தார்.அதனால்,முதலியாண்டானுக்கு"பஞ்சநாராயண, ப்ரதிஷ்டாபனாசார்யர்" என்ற பெயர் வந்தது.

எம்பெருமானாரும் கூரேசரும் அரங்கம் வருதல்

எம்பெருமானார் அரங்கம் நோக்கிக் கிளம்பிய செய்தி கேட்டு ஆழ்வானும், மாலிஞ்சோலை அழகரிடம் விடை பெற்றுத், திருவரங்கம் விரைந்தார்.அரங்கத்தில் எம்பெருமானார் பெரிய நம்பிகள் திருமாளிகையடைந்து, அத்துழாய்க்கு ஆறுதல் கூறி, பின் கூரேசரின் இல்லம் நோக்கிச் செல்லும் போது, கூரேசரே எம்பெருமானாரை எதிர் கொண்டு வணங்க, எம்பெருமானாரும் கூரேசரின் நலன் விசாரித்து, அவரின் கண் போனதை எண்ணி மிகவும் கலங்கினார்.

இதற்கிடையில் புதிதாக சோழ அரசை ஏற்ற விக்கிரம சோழன்,(1116-1134 வரை சோழ தேசத்தை ஆண்ட அரசன்) தனது தந்தை கிருமி கண்ட சோழனின் அவச்செயலுக்கு மன்னிப்பு வேண்டி, திருவரங்கக் கோயிலை யதிவரனார், முன்பு போலவே,சிறப்பாக நடத்த வேண்டும் என்று கூறி, கோயில் பொறுப்பை ஒப்படைத்தான்.தனது தந்தை செய்த தவறுக்குப் பரிஹாரமாகத் திருச்சித்திர கூடத்தில் மீண்டும் கோவிந்த ராஜனுக்குத் திருக்கோவில் அமைக்க உதவினான்.எம்பெருமானார், அங்கு சித்திரகூடத்தெம்பெருமானை மீண்டும் ப்ரதிஷ்டை செய்து, வழிபாடு உற்சவங்கள் செய்து மகிழ்ந்தார்.

(விக்கிரம சோழன் தன் தந்தை செய்த தவற்றுக்கு வருந்தி, ப்ராயச்சித்தமாக செய்த செயல்கள், செய்திகளாக அதிகம் வரவில்லை.அதாவது, தந்தை செய்த அட்டூழியங்கள் பெரிய செய்திகளாக மக்களை அடைந்தன. மகன் செய்த நிவர்த்தி அவ்வளவு அடையவில்லையோ?)

மற்றோர் நாள் கூரேசர் இயற்றிய 3 நூல்களையும் அவரே கூறக்கேட்டு இன்புற்ற எம்பெருமானார்,அவரது கண் மீண்டும் பெற கச்சி வரதனைக் குறித்து வேண்டி, ஒரு க்ரந்தம் எழுதுமாறு வற்புறுத்தினார்.முதலில் மறுத்த கூரேசர், பின்னர் எம்பெருமானாரின் ஆணைப்படி, வரதராஜஸ்தவம் எனும் அற்புத நூலை எழுதுகிறார்.அதில் ஒரு ஸ்லோகத்தில்

"நீலமேகநிபம் அங்ஜந புஞ்ஜஸ்யாமகுந்தளம் அநந்தசயம்த்வாம்
அப்ஜபாணிபதம் அம்புஜநேத்ரம் நேத்ரஸாத் குரு கரீச ஸதா மே"


என்று, எப்போதும் அவனைச் சேவித்துக் களித்திருப்பதற்கான அகக் கண் வேண்டும் எனும் ஒரு பாடலையும் பாடுகிறார். அன்றிரவு கனவில் வந்த வரதன் அக்கோரிக்கையை அங்கீகரித்தான்.அதனால் அகமகிழ்ந்த கூரத்தாழ்வான், மறுநாள் எழுந்து நித்ய கர்மானுஷ்டாங்களை முடித்து, மிகுதிப்பாடல்களையும் எழுதி முடித்து,எம்பெருமானாரிடம் பாடிக்காண்பிக்கிறார். அது கேட்டு மகிழ்ந்த எம்பெருமானார், ஆழ்வானிடம் , உடனே கச்சி நகர் சென்று வரதனிடம் இதைப் ப்ரார்த்திப்போம் என்று கூறுகிரார்.எம்பெருமானாரின் வற்புறுத்தலுக்கிணங்க இருவரும் அரங்கம் நீங்கி, காஞ்சி நோக்கிப் புறப்பட்டனர்.

காஞ்சிக்குச் சென்று திரும்பிய எம்பெருமானாரும் , கூரத்தாழ்வானும்

உடையவர் நியமனப்படி, பேரருளாளன் சன்னிதி முன்பு கூரத்தாழ்வான் , தாம் இயற்றிய வரதராஜஸ்தவத்தை விண்ணப்பிக்கிறார்.அப்போது எம்பெருமானார், ப்ராகார வலம் வரச்செல்கிறார்.அச்சமயம், கூரேசரின் ஸ்தவம் நிறைவு பெறுகிறது. அதனால் மகிழ்ந்த வரதன் , எம்பெருமானார் வருமுன்னே, அர்ச்சகமுகமாக ஆழ்வானிடம் , வேண்டுவது என்ன என வினவ, ஆழ்வான் , எம்பெருமானார் நியமனப்படி வேண்டாமல்," யாம் பெற்ற பேறு, நாலூரானும் பெறவேண்டும் என்று வேண்டி நின்றார்.அவ்வாறே அளிப்பதாக வரம் அளித்து, உமக்கும் நாலூரானுக்கு மட்டுமல்ல உம்மோடு தொடர்பு பெற்ற அனைவர்க்கும் மோட்சம் அளிப்போம். அத்தோடு அரங்கனின் நியமனப்படி உமக்கு, "எம்மையும், எம்பெருமானாரையும் மட்டும் காணும் திவ்ய கண்களைத் தந்தோம் என்று வரதன் வரம் தந்து அருளினான்.

கூரேசருக்குத் தெரியும் ,நாலூரானுக்கு நரகம் உறுதி என்று.பெரிய நம்பிகள், எம்பெருமானார்,கூரேசர் மற்றும் வைணவத்திற்கே தீங்குரைத்த சிறு மதியாளனாக இருந்தாலும் ஒரு வைணவன் நரகம் புகல் ஆகாது என்ற கருணையினால், கூரேசர், த்ரோஹியான நாலூரானுக்கும் இரங்கினார்.தம்முடைய ப்ரார்த்தனை தான் அவனைக் காக்கும் என நாலூரானுக்கும் சேர்த்து வேண்டினார்.இதையே வடிவழகிய தாஸர் தமது இராமானுஜ வைபவம் எனும் நூலில் 1138 ம் பாடலில்

"நான் பெற்ற பெருஞ்செல்வம் நாலூரான் பெறும் வரம் வேண்டும்-இந்த
ஊன் பெற்றுக்கிடைத்த பலம் அடியேனுக்குறுதி நின்னைத்
தான் பெற்றேன் இனிப்பேறு வேறுண்டோ தனிமுதலே
தேன் பெற்ற துழாய் மாலை வேண்டி விரும்பி அணிபவனே திருமாலே"
என்று குறிப்பிடுகிறார்

செய்தி அறிந்து ஓடி வந்த எம்பெருமானார், தாம் நியமித்தபடி வேண்டாமல் வேறுவிதமாக வேண்டிய ஆழ்வான் மீது வருத்தம் கொண்டார்.இருப்பினும் , இடர் விளைத்த நாலூரானுக்கும் இரக்கம் காட்டிய கூரேசர் காட்டிய அளவற்ற கருணையை எண்ணி வியந்தார்.கூரேசர் உடனே வரதன் அருளிய அகக் கண்பற்றியும் கூறி, பேரருளாளனையும் எம்பெருமானாரையும் மட்டும் காணும் கண்கள் தாம் பெற்றதாகவும் , அத்ற்கு ஆதாரமாக, வரதனின் அன்றைய திவ்ய அலங்காரங்களையும், எம்பெருமானாரின் தேகக் குறிப்புகளையும் கூரேசர் கூறினார்.

மேலும் கூரேசரின் தொடர்பு பெற்ற எல்லார்க்கும் மோட்சம் உண்டு என்று வரதன் அருளியபடியால், எம்பெருமானார்க்குத் திருக்கோட்டியூர் நம்பிகள் மூலம் முன்பு கிடைத்த சாபம் நீங்கியதால் எம்பெருமானார் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
பின்னர் எம்பெருமானார், அக்கோயிலில் ஆழ்வார்களைப் ப்ரதிஷ்டை செய்து, கூரேசருடன் அரங்கம் திரும்பினார்.அரங்கம் வந்த பின்னர், கூரேசர் "ஸ்ரீஸ்தவம்" எனும் நூலை எழுதினார்.அவர் அருளிய 5 நூல்களும் "பஞ்சஸ்தவங்கள்" எனப்புகழ் பெற்றன.அவை வேதமாதாவின் திருமாங்கல்யம் எனவும் போற்றப்பட்டன.இவை தவிர கூரேசர் ' 'அபிகமனஸாரம்,புருஷ ஸூக்த பாஷ்யம்,ஸாரிக ஸாரம் என்னும் நூல்களையும் அருளினார்.

அரங்கத்தில் கூரேசரைச் சந்தித்தோர் ,"போலி வைணவன் , நாலூரான் செய்கை உமக்கும் வைணவத்துக்குமே பேரிழப்பு.எனவே அவனுக்கு ஏன் கரிவரதனின் கருணை கிட்டச் செய்தீர் என்று கேட்க அவர் "அப்படிபட்ட பாவிகளுக்குத்தான் இரங்க வேண்டும்.மீனுக்கு நீர் வார்த்து என்ன பயன் என்றார். அவரது கருணையை எண்ணி அனைவரும் வியந்தனர்.

பிள்ளைப்பிள்ளையாழ்வனுக்குரைத்த அறிவுரை

கூரேசரின் சீடர்கள் பலரிலே பிள்ளைப்பிள்ளையாழ்வானும் ஒருவர்.அவர் தமது முக்குறும்பாலே(கல்வி செல்வம் குலம்)சிறிது கர்வத்துடன், பிற பாகவதர்களை நன்கு நடத்தவில்லை.தமது கல்வி குலம் செல்வம் மற்றும் பக்திச்செருக்கால் பிறரை நிந்தித்தார் இதறிந்த கூரேசர் ஒரு நல்ல நாளில் அவரிடம் ஒரு யாசகம் கேட்டார். அதற்கு, பிள்ளைப்பிள்ளையாழ்வான் "எமது செல்வம் பொன் பொருள் எல்லாம் உம்முடையது"என்று சொன்னார். ஆனால் கூரேசர் , தாம் கேட்டது, "முக்குரும்பாலே வரும் அஹங்காரத்தால் வரும் செறிவை அழித்து, பிறரை வருத்தாமல், பாகவத அபசாரப்படாமல் இருப்பேன் எனும் சத்தியம் செய்து , அதைத் தமக்கு அளிக்கச் சொன்னார். பிள்ளையாழ்வான் இவ்வாறு உறுதிகொடுத்தார். ஆயினும் பின்னோர் நாள், பழைய எண்ண வெளிப்பாடாக , ஒரு பாகவதரை , அபசாரப்படுத்திவிட்டார்.

(பிற இறைஅடியார்களை நிந்தித்தல்,பெரிய பாவம்) அது மனதில் உறுத்த, ஆசார்யனுக்கு அளித்த வாக்கை மீறிவிட்டோம் என மனம் வருந்தி தமது வீட்டிலேயே இருந்துவிட்டார். பிள்ளைப்பிள்ளை வராததால் வருத்தம் கொண்ட கூரேசர் , பிள்ளையின் திருமாளிகை சென்றார்.அப்போது அவரைக் கண்ட , பிள்ளைப்பிள்ளை, தாம் செய்த சத்திய மீறல் குறித்து அழுதார். இவ்வளவு அனுதாபப்பட்டதாலே, பிள்ளைப்பிள்ளையாழ்வானின் பிழை பொருத்த கூரேசர், நாவினாலும் , செயலாலும் பிள்ளைசெய்த தவறைக் கழித்தார்.

நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் ஆழ்வான், திளைத்திருந்த வைபவங்கள்

கூரேசர் , அமுதனை, திருத்திப் பணிகொண்டு அவருக்கு உரிய ஞானம் பெறச் செய்தார். பின்னர் எம்பெருமானாரின் கருணையால் ஆட்கொள்ளப் பட்டு , அவருடைய நெருங்கிய சீடராகும் வாய்ப்பு, பெற்றார். அந்தக் கருணையின் வெளிப்பாடாக,
"ப்ரபந்த காயத்ரி"(வேத மந்திரங்களுள் சிறந்தது எனப்போற்றப்படுவது காயத்ரி மந்திரம்).எனப்படும் இராமனுஜ நூற்றந்தாதியை, அமுதன் எழுதினார். இராமானுஜரால் ஆட்கொள்ளப்பட்ட பின், அமுதன் என அழைக்கப்பட்ட பூசலர் கோன் அமுதன், "திருவரங்கத்தமுதனார்" என்று அழைக்கப்பட்டார். இத்தகைய திருவரஙகத்தமுதனார்,தமதுநூற்றந்தாதியில்,கூரத்தாழ்வாரைப் போற்றும்போது
"மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக்கடக்கும் , கூரத்தாழ்வான் சரண் கூடியபின்"
என்று பெருமையாகச் சொல்கிறார்.
நாவால் சொல்ல அடங்காத பெருமை உடையவர், மற்றும் கல்வி குலம் , செல்வம் ஆகிய முக்குணங்களைத் துறந்து, சரணாகதி ஒன்றே, மெய் என்று வாழ்ந்தவர் கூரேசர் என்று அமுதனார் கூரேசரைப்புகழ்கிறார்.

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிக்கு, கூரேசர் ஒரு சிறப்பான முகப்புப் பாடல்(தனியன்)எழுதியுள்ளார்.

"நெஞ்சுக்கிருள் கடி தீபம் அடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல்ல வமுதம் தமிழ் நன்னூல் துறைகள்
அஞ்சுகிலக்கியம் ஆரண சாரம், பரசமயப்
பஞ்சுக் கனலின் பொறி பரகாலன் பனுவல்களே."

மேலும் குருபரம்பரையிலே ஒரு முகப்புப் பாடலும் எழுதினார்.

யோநித்யம் அச்சுத பாதம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹத:ததி தராணி த்ருணாய மேநே!
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ
ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரப்த்யே //"

ஒரு சமயம் கூரேசரது வாயால் திருவாய்மொழி விளக்கம் கேட்க,இராமானுஜர், விரும்பினார்.ஆனால் ஒரு பெரிய மஹானும், முக்கோல் பிடித்த முனியும் ஆன உடையவரின் முன் , தாம் எப்படி உரை ஆற்றுவது என்று தவித்தார்.அதனை அறிந்த பிற சீடர்கள், கூரேசரைத்தேற்றும் விதமாக,
"மஹான்கள் கேட்க, குறைந்த அறிவுடையோரும் விளக்கம் கூறுவது, வழக்கம் தான்" என்று கூரேசரை ஆற்றுப்படுத்தி, திருவாய்மொழி விளக்கம் கூற வைத்தனர்.
அதன்படி "உயர்வற உயர் நலம் உடையவன்" எனும் முதல் பாசுர விளக்கம் கொடுக்கும் போது, பிற சமய வாதிகள் பரப்ரம்மத்திற்குக் குணம் இல்லை என்று கூறுவர்.அதை மறுக்கும் விதமாக,"உயர்வற உயர் நலம்"எனும் குணம் உடையவன் என்று கூறியது என்னே! என்று , மோஹித்து மூர்ச்சையாகி விழுந்து விட்டார்.இதை அறிந்த உடையவர் அங்கு வந்து கூரேசரை , சுய நினைவு தெளிவிக்கிறார். அப்போது "திருவாய்மொழி அருளும்போது பகவத் குணத்தில் 6 மாதம் மோஹித்துக் கிடந்த நம்மாழ்வாரை நாம் சேவிக்க இயலாத குறை நீங்கிற்று" என்று மகிழ்ச்சி கொண்டார். இதன் பின் கூரத்தாழ்வானுக்கு , நம்மாழ்வாருக்கு ஒப்ப "ஆழ்வான்" என்ற சிறப்புத் திருநாமம் அமைந்தது.

சிறுமாமனிசர்:
முற்காலத்தில், குழந்தைகளின் மிகச்சிறிய வயது முதலே பாசுரங்களைச் சொல்லித் தருவர் அல்லது அவர்கள் கேட்கும்படி பண்ணுடன் பாடுவர். ஒரு முறை திருவாய்மொழியின் ஒரு பாசுரத்தை, பராசர பட்டர் கேட்கும்படி கூரேசர் பாட, அதில் கையாளப்பட்ட ஒரு வார்த்தையின் கட்டமைப்பின் மீதே சந்தேகம் வந்தது பட்டருக்கு.

உறுமோ பாவியேனுக்கு என்று நம்மாழ்வார் வழங்கும் பாசுரத்தில், (8ம் பத்து-10ம் திருவாய்மொழி-3ம் பாடல்,8-10-3) "சிறுமாமனிசராய் என்னையாண்டார் இங்கேதிரியவே" என்னும் சொல்லில் "சிறுமானிசர்" எனும் பதம் முரண்பாடான இரு கருத்துக்களைக் கொண்டுள்ளது. ஒன்றுக்கொன்று எதிர்மறையான சிறுமை, பெறுமை எனும் இரண்டு குணங்கள் எப்படி ஓரிடத்தில் சேர முடியும் என்று தம் தந்தையிடத்தில் பராசரர் வினவுகிறார்.இதன் விளக்கத்தை, வேண்டிய வேதங்களைக் கொண்டு தான் விளக்க முடியும். ஆனால் பட்டருக்கோ உபநயனம்(பூணூல் தரித்தல்) ஆகவில்லை.7 வயதிற்குள் பூணூல் அணிவித்தல் வேதவிதி.ஆனால் பட்டருக்கு இன்னும் 7 வயது நிரம்பவில்லை. சாத்திர விதிமுறைகளில்(பூணூல் அணிவிக்குமுன்னால் வேத சாத்திரங்களை கற்பிக்கக் கூடாது.) வழுவாத நம்பிக்கை கொண்டவர் கூரேசர்.

இந்த வயதிற்குள் இப்படிப்பட்ட ஒருஆற்றல் மிக்க சொல்லின் நிர்ணயத்தையே கேள்விக்கணை தொடுத்தார் பட்டர்.(ஆண்டாளைப் போல பிஞ்சிலே பழுத்தாரோ?)எனவே பூணூல் அணியாத தம் குழந்தை பட்டருக்கு, வேதங்களை மேற்கோள் காட்டாமல் இயல்பு வாழ்க்கை மூலம் விளக்குகிறார் கூரேசர்.எம்பெருமானாரின் முக்கியச் சீடர்களில் ஒருவர் அருளாளப்பெருமாள் எம்பெருமானார்(முன்பு யஞ்க்ய மூர்த்தி).உறுவில் சிறுத்தவர்.ஆயின், வைணவ ஞானத்தில் பெறியவர்.மேலும் முதலியாண்டான் , எம்பார் போன்றவர்கள், உலகத்தார் வாழ்வது போல் உணவு உண்டு, வாழ்ந்தாலும்,(சிறுமைக்குணம்) எம்பெருமானிடம் ஈடுபாடு கொள்ளும்போது, நித்ய ஸூரிகளாயிருக்கிறார்கள். (பெருமைக் குணம்). இதன் மூலம் சிறுமை, பெறுமை எனும் குணங்களை நம்மாழ்வார் ஒரே சொல்லில் கையாண்டது சரியே என கூரேசர் விளக்கினார்.

கூரேசரே பட்டருக்கு ஞான விளக்கம் அருளுதல்

பட்டரின் குருவாகத் திகழ்ந்தவர் எம்பார்.ஆயினும் தமது இல்லத்தில் இருக்கும்போது,தமது மகனுக்கு(பட்டருக்கு)த்திருவாய்மொழி விளக்கம் அருளுவது கூரேசரின் விளக்கம்.அப்போது, ஒரு பாசுரத்திற்கு விளக்கம் சொல்லாமல், "உனது குருவாகிய எம்பாரிடம் உபதேசம் கொள்" என்று கூறிவிட்டார். என்ன பாசுரம் அது?என்ன அர்த்தம்? "எண்பெருக்கநலத்து, ஒண் பொருளீறில, வன்புகழ் நாரணன் தின் கழல் சேரே"(1-2-10).இது திருமந்திர அர்த்தத்தை விவரிக்கிற பாசுரம்.எனவே குருவிடம் தான் இதற்கு அர்த்தமும், உபதேசமும் பெற வேண்டும் என்ற எண்ணத்தால், குருவிடம் தெரிந்து கொள் என்கிறார்.

உடனே பட்டர், தமது குருவை நோக்கி விரைய முயல்கிறார். அப்போது கூரேசருக்கு, வேறொரு திருவாய்மொழிப்பாடல் நினைவுக்கு வருகிறது."மின்னின் நிலையில மன்னுயிராக்கைகள்".அதாவது, இந்த நொடியில்,யார் உயிரோடிருப்பார், இருக்க மாட்டார் எனத்தெரியாது.எனவே கால தாமதம் கூடாது என்றெண்ணி, தமது மகனான பட்டரைத் தடுத்து நிறுத்தி, தாமே திருமந்திர அர்த்தத்தைச் சொல்லி இப்பாடலிம் பொருளையும் சொல்லி உபதேசிக்கிறார்.இதன் காரணமாக தமது தந்தை கூரேசரும் தமக்கு ஒருகுரு என்பதை ஒரு பாடலில் பட்டர் விளக்குகிறார்.

ஸகஸ்ரநாம உரை அருளிச்செய்ததில், குரு வணக்கம் எனும் முதல் பாடலில்
"வந்தே கோவிந்த தாதௌ" என்று அருளும்போது கோவிந்த பட்டராகிய எம்பாரையும் எமது தந்தையையும் தொழுகின்றேன் என்று சொல்கிறார்.இதன் மூலம் கூரேசர், தமது மகன் பட்டருக்கு ஒரு குருவாகவும் விளங்கியது தெரிகிறது.

தலைவி, தலைவனைத் தலையால் வணங்கலாமா? வணங்கலாம்
5ம்பத்து, 3ஆம் திருவாழ்மொழியில்,(மாசறு சோதி), நம்மாழ்வார், தம்மை நாயகியாக பாவனைசெய்து பேசுகிறார்.இத்திருவாய்மொழியை அர்த்தத்தோடு உபதேசிக்கும்போது, ஒரு அறிஞர் எழுந்து , (100 வயதைத் தாண்டிய"ஆமருவி நிரை மேய்த்தான் நம்பியார்") 7ம் பாசுரத்தில் ,"தலையில் வணங்கவுமாங்கொலோ தையாலார் முன்பே" என்று உள்ளது.அப்படியானால் தலைவி, தலைவனைத் தலையால் வணங்குவது என்பதும் உண்டோ எனக் கேட்கிறார்.இதற்கு அற்புதமாக இராமயண விளக்கம் கொடுத்தார் கூரேசர். என்ன அது?

"கௌஸல்யா லோகபர்த்தாரம் ஸுஷுவே யம் மநஸ்விநி
தம் மமார்த்தே ஸுகம் ப்ருச்ச சிரஸசாபிவாதய"


என்று அனுமனிடத்தில் சீதை சொல்கிறாள். மமார்த்தே...சிரஸசாபிவாதய என்பதற்கு, "எனக்காக அவரைத் தலையால் வணங்கு, நான் வணங்கினாற்போலே". என்பது விளக்கம், இதன் மூலம் நம்மாழ்வார் எழுதிய நாயகி பாவத்தை, அழகாக நிர்வாஹம் செய்து, அப்பெரியவரை, மகிழ்ச்சி கொள்ளச் செய்தார் கூரேசர்.இது போன்ற ஒரு திருவாய் மொழி விளக்கம் தான் அவர் பரமபதம் அடைய உடனே முயற்சி செய்ய வேண்டும் என்று தூண்டியது? என்ன அது? எந்தப்பாசுரம்? அதன் அர்த்தம் என்ன?

நம்மாழ்வாரின் "சூழ் விசும்பணிமுகில்"(10-9-1) என்று துவங்கும் திருவாழ்மொழியில் "முடியுடை வானவர் முறை முறை எதிர்கொள்ள" என்ற திருவாய்மொழிப்பாசுரம். எம்பெருமானார் இப்பாடலை விளக்கும் போது, பரமபதத்திலே முற்பட்டவர்கள்,பிற்பாடு எழுந்தருளுபவர்களை எதிர்கொண்டு உபசரிப்பர் என்று கூறினார்.


கூரத்தாழ்வாரைத் தொடர்வோம், குருவருளைப் பெறுவோம்
 


உடையவரிடம் கூரேசர் த்யானக்கருப்பொருள் பெறுதல்
திருக்கோட்டியூர் நம்பி மறுபடியும் வேறு வேறு நாட்களில் இராமானுஜரை வரச்சொல்லி, அவருக்கு த்வயம், சரமச்லோகம் ஆகிய ரகஸ்ய மந்த்ரங்களின் ஆழ் பொருளை அளித்தார். எல்லாம் கிடைத்த பின் , முக்கோல் பிடித்த முனியான இராமானுஜர் , நம்பிகளிடம் தாம் பெற்ற உபதேசங்களைத் தமது அந்தரங்க சீடர்களுக்கு உபதேசிக்க அனுமதி வேண்டுகிறார்.நம்பிகள் வழக்கம் போல் அனுமதி மறுக்கிறார்.இராமானுஜர் மனம் தளராமல் நம்பிகளிடம் கூரத்தாழ்வானுக்கு மட்டுமாவது உபதேசம் செய்ய அனுமதி வேண்டுகிறார். அதை செவிமடுத்த நம்பிகள் , கூரத்தாழ்வானுக்கு மட்டும் ஒரு வருடம் கழித்து உபதேசம் செய்யலாம் என்று அருள் பாலிக்கிறார்.

நம்பிகளின் வாக்கை அறிந்த கூரேசர், தம்மால் ஒரு வருடம் காத்திருக்க இயலாது என்று கூறி அதற்கு ஈடாக, சாத்திர நியமனப்படி குருவின் திருமாளிகை முன்பு 30 நாட்கள் உபவாசம் இருந்து , திரு மந்திரக்கருப்பொருளின் உபதேசத்தைப் பெற்றார்.
ரகஸ்யப் பொருளை எம்பருமானாரிடம் முதலியாண்டான் அறிதல்:
முன்பு கூறியபடி, கூரேசருக்கு எல்லா, ஞான மார்க்க உபதேசங்களுடன் கிடைத்தன. ஆனால், முதலியாண்டனுக்குக் கிடைக்கவில்லை. மிகுந்த வருத்தத்துடன், எம்பெருமானாரிடம் முறையிட்ட போது, எம்பெருமானார், "குழந்தாய், நீ என் உறவினன். எனவே உன்னிடம் இருக்கும் குறைகள் மற்றும் குற்றங்கள் எனக்குப் புலப்படாது. எனவே திருக்கோட்டியூர் சென்று, நம்பிகளிடம் உபதேசம் பெற்றுக்கொள் என்று அனுப்பி விட்டார்.

(எம்பெருமானாரிடம் சிலர் ஒரு குறை காண்கின்றனர். சோழன் அரசவைக்கு, தன் உறவினன் ஆன முதலியாண்டான் சென்றிருந்தால் அனுமதி அளித்திருப்பாரா என்று?. அது தவறான எண்ணம்.மெய்ப்பொருள் உபதேசத்தை அருளும் போது கூட, அதை, தம் உறவினர் என்பதால் , முதலியாண்டானுக்கு வழங்கவில்லை, தமது முக்கியச் சீடரான கூரேசருக்கே, வழங்கினார்.எனவே எந்தச் சூழ்நிலையிலும்,தம் உறவினன் என்பதால் முதலியாண்டானுக்கு எம்பெருமானார், சலுகை வழங்கவில்லை. மாறாக, கடுமையான ஒரு பணியை, பின்பு கொடுத்தார்.சோழனை எதிர்கொள்ள, கூரேசரே தகுதி உள்ள நபர், என்பதால் தான் கூரேசர் செல்வதை ஒரு நிலையில் ஏற்றுக்கொண்டார்)...

இங்கு மஹாபாரதத்தில் தர்மபுத்திரர் செய்த ஒரு அறம் வழுவா நிகழ்வு எண்ணத்தில் நிழலாடுகிறது. தண்ணீர் கொணர்வதற்காகச் சென்ற தம்பிகள் இறந்து பட்டனர். அப்போது அண்ணன் தருமனுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. யாராவது ஒரு , தம்பியை உயிர்ப்பித்துக் கொள்ள. அப்போது, தருமன் வேண்டிய தம்பி, நகுலன் தான்.(பீமனையோ, அர்ச்சுனனையோ வேண்டவில்லை.)ஏனெனில், அவர்கள், தம் தாய் குந்தி வழி வந்தவர்கள்.நகுல, சக தேவர்கள் வேறு தாய் மூலம் வந்தவர்கள். எனவே, அந்தத் தாய்க்கு ஒரு மகன் வேண்டும் என்னும் சம நோக்கு தருமனிடம் இருந்ததைப் பாராட்டி, தரும தேவதை மற்ற தம்பிகளையும் உயிர்ப்பித்து அருளியதாக நாம் அறிகிறோம்.
இங்கு இராமானுஜரும் தர்ம நோக்கோடு தான் செயல் பட்டு உள்ளார். எனவே கூரேசர் சோழன் அவைக்குச் சென்றதை, இராமானுஜர் இறுதியாக அங்கீகரித்ததில் உள் நோக்கு இல்லை என்பது தெரிகிறது.)


முதலியாண்டான், திருக்கோட்டியூர் நம்பிகளை அடைந்து, 6 மாதம் பணிசெய்தபின், நம்பிகள் , முதலியாண்டானை, யார் எனக்கேட்க, அவர் தமது அறிமுகம் அளித்து, எம்பெருமானாரின் நியமனம் பற்றிச் சொல்கிறார்.ஆனால் நம்பிகள், ஞானப்பொருளை உபதேசிக்காமல், எம்பெருமானாரிடமே , உபதேசம் பெறும் , என்று கூறி, முதலியாண்டானை , திருப்பி அனுப்பி விட்டார். சுவற்றில் அடிபட்ட பந்து போல மீண்டும் எம்பெருமானாரை, முதலியாண்டான் சரண் அடைகிறார்.மீண்டும் விதி விளையாடுகிறது.
பெரிய நம்பிகளின் புதல்வி அத்துழாய், தமது மாமியாரிடம் மன வருத்தம் கொண்டு, பிறந்தகம் வந்தார். எம்பெருமானாரிடம் , தமது குறையை, அத்துழாய் தெரிவிக்கிறார்.உடனே, எம்பெருமானார், முதலியாண்டானை அத்துழாயின் வீட்டு ஏவல் வேலையாளாக நியமிக்கிறார்.

முதலியாண்டான் சற்றும் மன வருத்தம் இல்லாமல் , தண்ணீர்எடுப்பது முதல், சுத்தம் செய்யும் பணி, தோட்டப் பணி எல்லாவற்றையும் 6 மாதம் செய்கிறார்.(நாமாக இருந்தால் , நமது வறட்டு கௌரவம் இடம் கொடுக்குமா?)
பின்னர், ஒரு சந்தர்ப்பத்தில் முதலியாண்டான் கொடுத்த இராமாயண விளக்கத்தால், அத்துழாயின் மாமனார், மாமியார் எல்லாரும் முதலியாண்டானின் உண்மை நிலைஅறிந்து, எல்லாரிடமும் மன்னிப்புக் கேட்டு, பின் அத்துழாயிடமே மன்னிப்புக் கேட்டு, முதலியாண்டானை சகல மரியாதைகளுடன் திருமடத்திற்கு அனுப்பினர்.
இவ்வாறு சகல ஆத்ம பரிசோதனைகள் நடந்த பின்னரே, எம்பெருமானார், முதலியாண்டானுக்கு, ரகஸ்யப் பொருளை உபதேசிக்கிறார்.(இரத்த சொந்தம் என்பதால்,முதலியாண்டானுக்கு அதிக சோதனைகள்!!!!)

இதற்குப் பின்னர் எம்பெருமானார் "இப்போதன்றோ நமக்கு, தண்டும்,பவித்ரமும் கை புகுந்தன!" என மகிழ்ந்தார். அதோடு மட்டும் அல்ல, முதலியாண்டானைத் தவிர மற்ற உறவுகளைத் துறந்தோம் என்றார்.இப்பெருமை மற்றையோர்க்குக் கிட்டவில்லை.பின்னாளில் முதலியாண்டான் அவர்கள், பொய்கையாரின் முதல் திருவந்தாதிக்கு ஒரு தனியனும்,ரகஸ்யத்ரய வ்யாக்யானங்களும் அருளிச்செய்தார்



கூரத்தாழ்வானின் குணநலன்கள்
வித்தையிலும், வித்வத்திலும் வினயத்திலும், விசிஷ்டாத்வைத வ்யாக்யானம் செய்வதிலும் உடையவரின் மறு உருவாகவே கூரேசர் திகழ்ந்தார்.சாஸ்திரங்களைப் பார்த்து, சரணாகதி என்ன என்பதைத் தெளியாதவர்கள் கூரத்தாழ்வானைப் பார்த்தால் அவற்றைத் தெளிய முடியும் என்று கூறும் அளவிற்கு ஆசார்ய மற்றும்,எம்பெருமான் சரணாகதியை நடைமுறையில் வாழ்ந்து காட்டினார்.

ஒரு நாள் பாகவத ததீயாராதனத்திற்காக(உணவு உபசரிப்பு) வாழை மரத்தில் இலை அறுத்த போது, அது உகுத்த நீரைக் கண்டு அதற்கும் அதிகமாக இவரது கண்களில் இருந்து நீர் பெருகியது எனில், அந்த அளவு ஜீவ காருண்யம் கொண்டிருந்தார்(புலால் உணவு அன்பர்களே, சற்றே சிந்தியுங்கள், புலால் உணவின் மீது உள்ள ஆசையை விடுங்கள், ஜீவ காருண்யத்தைக் கடைப்பிடியுங்கள்)

ஒரு ஆச்சாரமான குடும்பத்துப்பிள்ளை , குடுமியோ, திருமண்ணோ இல்லாதது கண்டு, அவனது தந்தை மிகவும் வருத்தப்பட்டார்.திடீரென்று ஒரு நாள் அவன் குடுமிவைத்துக் கொண்டு திருமண் எட்டுக்கொண்டு வந்து தனது தந்தையைச் சேவிக்க, அதற்கு அவனது தந்தை "கூரத்தாழ்வானைப் பார்த்தாயோ?"எனக் கேட்க, எப்படி அறிந்தீர்? என மகன் வினவுகிறான்."உன் சொரூபத்தாலே தெரிகிறது" என்றார்,தந்தை.இது கூரத்தாழ்வானின் குண நலன்களுக்கு ஒரு சான்று.(நித்ய கர்மானுஷ்டானங்களில் கூரேசர் வைத்த நம்பிக்கை).

ஒரு நாள் ஒரு ஊமைச் சீடனுக்குத் தனிமையில் எம்பெருமானார் அருள் பாலித்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ணுற்ற கூரேசர் நாமும் ஊமையாய்ப் பிறந்து இருந்தால் உடையவரின் அருள் கடாட்சம் நமக்கு வெள்ளம் எனக் கிடைக்குமே. அதற்கு நாம் பெற்ற ஞானமும் வாயும் தடையாக அமைந்து விட்டதே என வருந்தினார்.ஆசார்ய அருள் வேண்டும் என எண்ணும் மனப்போக்கு நன்கு இருந்தது.

திருவரங்கக் கோவில் நிர்வாகத்தை (பொன்உபசாரஅளிப்பு) ஸம்பாவனையாகப் பெற்று, உடையவரிடம் சமர்ப்பித்தல்
மூங்கில் குடியமுதன் என அழைக்கப்பட்ட பெரிய கோவில் நம்பி தமது பரம்பரைத் தகுதியினால் கோவில் நிர்வாகத்தைத் தம்மிடம் வைத்து இருந்தார்.ஆனால் கோவில் மீது கவனம் இல்லாமல், கணிகையரின் மீது கவனம் கொண்டிருந்தார்.இதனால் வருந்திய உடையவர், கூரத்தாழ்வானிடம் சொல்லி விட்டு காஞ்சி செல்ல விழைந்தார். அப்போது கூரேசர்,எம்பெருமானாருக்கு ஆறுதல் சொல்லி, அரங்கன் அருளால் அமுதன் திருந்துவார், என்றார்.அதற்கு ஒரு சூழ்நிலை உதவியது.

அமுதனின் தாயார்,காலமான போது அவரது ஆன்மா சாந்தி அடைய ஏகாஹம் எனப்படும் 11ம் நாள் காரியத்திற்கு போக்தாவாக(உணவருந்தி, இறந்தோர் சடங்கில் பங்குபெறுனர்) யாரும் வருவதற்கு முன்வரவில்லை. அதை அறிந்த எம்பெருமானார், கூரத்தாழ்வானை அழைத்து,இறை பக்தி உள்ள அவ்வம்மையாரின் ச்ராத்த கைங்கரியத்தில் கலந்து கொண்டு,விதிப்படி உணவு அருந்தி, ஸம்பாவனையாக அமுதனிடம் இருந்து கோவில் திறவு கோலைப் பெற்று வாரும் என்று பணிக்கிறார்.

(முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய ச்ராத்த கைங்கர்யங்கள் எவவளவு முக்கியம் என்பதை உலகுக்கு உணர்த்திய மிக முக்கிய சம்பவம்..நித்ய கர்மனுஷ்டாங்களின் முக்கியத்துவத்தை இராமனுஜர் உணர்த்திய நிகழ்வு.)இது மட்டும் அல்ல, உண்ணும் உணவிலும் கூட, எதைச் சேர்க்க வேண்டும், எதை விடுக்க வேண்டும் என்பதை இராமானுஜர் செய்திருந்த வறையறையை ஒட்டி, ஆகார நியமம் எனும் நூலின் மூலம், தேசிகர் விளக்கியுள்ளார்.

கூரத்தாழ்வானும் சென்று உணவருந்தினார். அதனால் மகிழ்வுற்ற அமுதன், சம்பாவனையாக, பொன் பொருள் கொடுக்கிறார். இருப்பினும் கூரத்தாழ்வார் பரம த்ருப்தி(அப்படிக்கூறினால் தான் இறந்த ஆன்மா அமைதியடையும் என்பது நம்பிக்கை) என்று கூறவில்லை. அதனால் தன் தாயார் ஆன்மா அமைதி பெறாது என வருந்திய அமுதன், கூரேசரிடம், எதை வழங்கினால் , நீர் மன நிறைவு பெறுவீர் என வினவ, கூரேசர், "திருவரங்கத் திருக்கோவில் திறவு கோல் வேண்டும்" எனக் கேட்டார்.உடனே அதை அமுதன் வழங்க, கூரேசரும்,"த்ருப்தி" என மகிழ்வுடன் கூறினார். அதைக்கேட்ட பின் அமுதன் தன் தாயார் ஆன்மா சாந்தி அடையும் என மகிழ்வு கொள்கிறார்.

இப்போது கூரத்தாழ்வார் அமுதனிடம் பெற்ற நிலையற்ற செல்வங்களாம் பொன் பொருள் முதலியவற்றைத் தெருவில் எறிந்தார்(நாம் ஒரு குந்து மணியையாவது கீழே போடுவோமா?)
பின்னர் காவிரியில் நீராடி, திருமண் தரித்து,திருவாராதனம் முதலிய நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்த பின் உடையவரிடம் சென்று, அரங்கனின் கோவில் திறவு கோலைச் சமர்ப்பிக்கிறார்.
அமுதன் கொடுத்த மற்ற தானங்களைப்பற்றி உடையவர் கேட்ட போது, அவரது மனம் அறிந்த கூரத்தாழ்வான "வாந்தி வந்தால் அதை நிர்பந்தித்து நிறுத்த முடியுமோ?அது தேவரீரின் திவ்ய ஆணையைப் பின்பற்றி நிற்குமோ?என வினவி, "அழியும் செல்வங்களான பொன் பொருள் அனைத்தையும் தெருவில் எறிந்து வந்தேன்" என்றார்.அது கேட்ட உடையவர், கூரேசனின், மன உருதியை எண்ணி மிகவும் மகிழ்ந்தார்.




கூரத்தாழ்வாரின் தேவிகள் பெற்ற அரவணைப் ப்ரசாதம்
தமது ஆசார அனுஷ்டான க்ரமத்தால் "பஞ்சகால பராயணர்" என்று அழைக்கப்பட்டார் கூரேசர். அவ்வாறு ஒரு முறை மிகுந்த ஆர்வத்துடன் க்ரந்த சேவை பண்ணியதால், நேரம் கடந்து உச்சிப்பொழுதாயிற்று.அடை மழை பொழிந்தது. பிட்சைக்குச் (உபதானம்)செல்ல முடியவில்லை.மீண்டும் இராமாயண க்ரந்த சேவையில் ஈடுபட்டார். இரவுப் பொழுதாயிற்று.பட்டினியுடன் உறங்கச் சென்றார்.அவரது தேவிஉண்ணாமல் இருந்துவிட்டார். தேவி தாம் உண்ணாமல் இருந்தது பற்றிக் கவலைப்படவில்லை. பொன்வட்டிலில் உணவருந்திய தமது கணவர், தற்போது உணவு இல்லாமல், வெறும் தரையில் படுத்து இருக்கிறாரே, என்ற கழிவிரக்கத்தின் மிகுதியால் கண்ணீர் விடுத்தார்.

அப்போது அரங்கனின் கோவிலில் அரவணைத்தளிகை மணியோசை கேட்டது.அதைக்கேட்ட தேவி "உமது பக்தன் இங்கே பசியால் வாடுகிறான்.நீரோஅங்கே(கோதுகலமாய்) குதூகலமாய் அரவணை கொள்கிறீரே?" என்று வருந்திய மனத்தளாய், தளர் நடை கொண்டு, எண்ணியிருந்தாள்.அதை உடனே உணர்ந்த அரங்கன், அர்ச்சகர் மூலம் ஆவேசித்து, குடை,ஸாமர வாத்யங்களுடன் தமது அரவணைப் ப்ரஸாதத்தைக் கூரத்தாழ்வான் திருமாளிகையில் சேர்க்கச்சொன்னான்.

உடனே , உத்தம நம்பி என்னும் கோவில் மேற்பார்வையாளர் சகல மரியாதைகளுடன் ப்ரஸாதங்களை எடுத்துக்கொண்டு கூரத்தாழ்வானின் திருமாளிகைக்கு வந்தார்.தமது இல்லத்தின் அருகே வாத்யச் சத்தங்கள் கேட்டு திடுக்கிட்டு எழுந்த கூரேசர்,"பெருமாள் புறப்பாடு என நினைத்து வேகமாக வெளியில் வருகிறார்.ஆனால் அங்கே உத்தம நம்பி, அரவணைப் ப்ரஸாதத்துடன் வந்து, கூரத்தாழ்வானிடம் கொடுத்தருளி "நம்பெருமாள் நியமனம்" என்றார். அதில் தனக்கும் பத்தினிக்குமாய் 2 திரள்கள் மட்டும் பய பக்தியுடன் பெற்றுக்கொள்கிறார்.

உத்தம நம்பிகள் சென்றபின் கூரேசர் தமது பத்தினியிடம் "அரங்கனின் அருள் இன்று கிடைக்கக் காரணம் என்ன?நீ ஏதும் வேண்டினாயோ என்று வினவ, தேவியும் தான் எண்ணியதைச் சொல்ல,ஆழ்வான் வருந்தி, "என்னைக்காப்பாற்று என்று குழந்தைகள் தாயாரிடம் வேண்டலாமா? கருணைக் கடலான பகவான் எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். உலகத்திற்கே படியளக்கும் ப்ரபு, தனது அடியார்களை மறந்து விடுவானா?எனவே எதையும் அரங்கனின் திருவுள்ளம் என்றிருக்க வேண்டும் என்று கூறி, ப்ரஸாதத்தின் ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு,மிகுதியை தம் தேவிகளுக்கு அளித்தார்.முன்பு இராமாவதாரத்தில் புத்ர காமேஷ்டி யாகத்தில் கிடைத்த பாயாஸக் கூறுகளே, இராம சகோதரர்களாகப் பிறந்த்து போல,ஆண்டாள் அமுதுசெய்த அந்த அரவணைப் ப்ரஸாதங்களே அவருக்கு 2 திருக்குமாரர்களாக அவதரித்தன.

பட்டர் அவதாரம்
அரங்கனின் அமுதினை உண்ட ஆண்டாள் தேவிகள் உடனே கர்ப்பவதியானார்.எம்பெருமானார் அக்குழந்தைகளின் பிறப்பை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தார்.
கலியுகம் 4189ம் வருடம் (கி.பி.1087 ம் ஆண்டு)வைகாசி மாதம் பௌர்ணமி திதியும் அனுஷ நக்ஷத்திரமும் கூடிய நன்னாளில் கூரேசருக்கு இரட்டை மகவுகள் பிறந்தன. 12ம் நாள் எம்பெருமானார், அக்குழந்தைகளுக்கு, "பராஸர பட்டர்" என்றும் , "வேதவ்யாஸ பட்டர்" என்றும் திருநாமங்கள் இட்டு ஆளவந்தாரின் மனக்குறைகளில் ஒன்றை நீங்கச் செய்தார். எம்பாரை அக்குழந்தைகளுக்கு குருவாக நியமித்து அருளினார் உடையவர். அதில் பராஸர பட்டர், மஹா ஞானியாகப் பரிமளித்தார்.அவரை"மஞ்சள்நீர்" குடிப்பித்து நம்பெருமாள் புத்ர ஸ்வீஹாரம் செய்து கொள்ள, பராஸர பட்டர், நம்பெருமாளின் ஸ்வீஹார புத்ரராக மாறினார்.பராஸர பட்டரும் ,வேதவ்யாஸ பட்டரும் முறையே "பட்டர் என்றும், சீராமப்பிள்ளை என்றும் அழைக்கப்பட்டனர்.கூரேசரின் , புதல்வர் அரங்கனின் புதல்வராக மாறினார். இதை விடப் பெரிய பாக்கியம் வேரு எவருக்கும் கிட்டுமோ?.

இராமானுஜர் "போதாயன க்ரந்தத்திற்கு விளக்கம் எழுத கூரேசர் உதவுதல்
இராமானுஜரின் 70ம் வயதில் காஷ்மீரம் சென்று அதன் மன்னரைச் சந்தித்து,போதாயன க்ரந்தத்தைப் பார்க்க அனுமதி வேண்டுகிறார்.மன்னரோ, அதை எடுத்துப்போகவும் அனுமதி கொடுக்கிறார்.அதைப் பொறாத சிலர், இராமானுஜர், மீண்டும் அரங்கம் திரும்பச் செல்லும் வழியில் போதாயன க்ரந்தத்தைக் கொள்ளை அடித்தனர்.மிகுந்த வருத்தத்துடன் கலங்கிய யதிராஜர், தம் குரு ஆளவந்தாருக்கு அளித்த உறுதியை நிறைவேற்ற முடியாமல் போனதே என்று கண்ணீர் விட்டார். உடனே கூரேசர், இராமானுஜரிடம் "தேவரீர் களைத்து உறங்கும்போது எல்லாம் முழுமையாகப் படித்து, மனனம் செய்துவிட்டேன். அதனை உடனே சொல்லவா? அரங்கம் சென்று சொல்லவா? என்று பய பக்தியுடன் வினவினார்

ஆத்மாவிற்குச் சுதந்திரம் உண்டா? இல்லை.
அரங்கம் வந்த உடன் கூரேசர் மூலம் போதாயன க்ரந்தத்தைக் கேட்டறிந்த இராமானுஜர், அதற்கு விளக்கம் எழுத முற்பட்டார்.அப்போது அவர்,கூரேசரிடம்"யாம் வ்ருத்தி க்ரந்தத்தை முழுமையாகப் படிக்காததால் சிற்சில இடங்களில் எம்முடைய பாஷ்யம் அந்த க்ரந்தத்தோடு முரண்படலாம். அச்சமயங்களில் வ்ருத்திக்ரந்தத்தை மேற்கோள் காட்டி, க்ரந்தம் இங்கு இப்படி இருக்கிறது" என்று உணர்த்த வேண்டும்" என்றார்.ஆனால் கூரேசர் அதற்கு இசையவில்லை. உடனே இராமானுஜர்,"நாம் பாஷ்யம் சொல்லச் சொல்ல நீர் எழுதிக்கொண்டு வாரும்.உமது திரு உள்ளத்திற்கு ஒத்திருந்தால் எழுதவும். இல்லாவிடில், எழுதுவதை நிறுத்தும்" என்றார்.

அவ்வாறு உடையவர் சொல்ல கூரேசர் எழுதும் பொழுது, ஒரு இடத்தில் "ஆத்மாவுக்குச் சுதந்திரம் உண்டு" என்ற பொருள் கொண்ட வாக்கியம் வந்த போது கூரேசரின் எழுத்தாணி நின்றுவிட்டது. அது கண்ட எம்பெருமானார் கோபம் கொண்டு, "ஆழ்வானே! நாம் சொல்வதை எழுத உமக்கு மனமில்லையாகில், நீரே பாஷ்யம் செய்து கொள்ளும்" என்று சென்றுவிட்டார்.அதனை அறிந்த மற்றையோர், கூரேசரிடம்,"நீர் எம்பெருமானார் நியமனத்தைத் தாண்டி அவரது கோபத்திற்கு ஆளானது ஏற்புடையதோ?என வினவ, அதற்குக் கூரேசர், "அடியேன் உடையவரின் சொத்து.அதனை அவர் என்னவாகிலும் செய்து கொள்ளலாம்.அடியேனுக்கென்று நினைப்பொன்றுமில்லை .நாளைய தினமே ஆசார்யனின் அருளுக்குப் பாத்திரமாவேன்" என்றார்.

அன்றிரவு, தனிமையில் சிந்தித்த எம்பெருமானார் "தாம் சொன்ன பொருளில் பிழை இருப்பதை உணர்ந்து மறுநாள் காலையில் கூரேசரிடம் திரும்பி வந்து தாம் கூறியது பிழை தான் என்று வருந்திவிட்டு,முன்பு கூறிய வாக்கியத்தை மாற்றி,"ஆத்மாவுக்குச் சுதந்திரம்இல்லை.ஆண்டவனைச் சார்ந்து இருப்பதே ஆத்மாவுக்கு உரிய நிலை என்ற பொருள்பட அருளினார். கூரேசரும் அதனை மகிழ்வுடன் ஏற்று, தொடர்ந்து, பாஷ்யத்தைப் பட்டோலைப் படுத்தினார்.தொடர்ந்து தமக்கு எழும் ஐயப்பாடுகளை ,உடையவர் கூரேசரிடம் உரையாடி, தெளிவு படுத்திக்கொண்டு, அவரிடம் "நீர் இங்கு எழுந்தருளியிருக்க, ஆளவந்தார், திருநாட்டுக்கு எழுந்தருளியதாக, யாம் எண்ணவில்லை, என்று கூரேசரைக் கொண்டாடுகிறார்.

கூரேசர் இது குறித்து, திருக்கோட்டியூர் நம்பியிடம் உபதேசம் பெற்றதாகவும் குறிப்புகள் உண்டு.

கூரத்தாழ்வானின் குடும்பப் பொறுப்பு யாரிடம் இருந்தது?
ஆழ்வாரிடமா?அவரது துணைவி ஆண்டாள் தேவிகளிடத்தா? உடையவரிடமா? அவரது வாரிசுகளிடமா? பொதுமக்களிடமா?அரசனிடமா?இல்லை பின் யாரிடத்தில் இருந்தது?
சாட்சாத் அரங்கனிடம் தான்!!! கூரத்தாழ்வான் குமாரர்களுக்கு மணம் பேசி முடித்தவன் அரங்கனே.
ஆழ்வார், எதைச் செய்தாலும் தமது குரு எம்பெருமானாரைக் கேட்காமல் எதுவும் செய்ய மாட்டார்.இப்போது ஆழ்வாரின் துணைவியார் ஆண்டாள் கூரேசரிடம் தங்கள் தவப்புதல்வர்களின் திருமணம் பற்றி எடுத்துச் சொல்லி,பெண் தேடச் சொல்கிறார்.ஆழ்வார் உடனே யதிராஜரிடம், இது பற்றிக் கேட்கிறார்.உடனே எம்பெருமானார் தமது ஆசார்யரான பெரிய நம்பிகளின் உறவினர், உத்தம நம்பியின் பெண்களை, கூரத்தாழ்வானின் குமாரர்களுக்குப் பெண் கேட்க நியமனம் சொல்கிறார்.குருவின் வாக்குப் படி, ஆழ்வான் உத்தம நம்பியிடம் பெண் கேட்க, அவர் புதிய சம்பந்தம் கொள்வதில்லை என்று மறுதளிக்கிறார். யார் இந்த உத்தம நம்பி?முன்பு ஒரு முறை அரங்கன் கட்டளையால், ஆழ்வானின் திருமாளிகை தேடி, அரவணைத் தளிகை ப்ரசாதத்தை ஆழ்வானுக்கு அளித்தவர்.

பெண் தேடும் படலம் நின்றது.ஆண்டாள் தேவியார் பொறுக்கவில்லை. மீண்டும் கூரேசரிடத்தில் வேண்டுகோள்.ஆழ்வார் உடனே "ஈஸ்வர குடும்பத்திற்கு அடியேனை இருந்து கரையச் சொல்கிறாயோ? என்றார்.இருந்தாலும் அவர் மனத்திலும் கவலையின் சுவடுகள்.மறுநாள் அரங்கனின் தரிசனம் பெறச் செல்கிறார்.அப்போது அரங்கனே கேட்கிறார் என்ன மனவருத்தம் என்று?(ஆழ்வான் எப்போதும் எதையும் அரங்கனிடத்தில் கேட்கக் கூடாது என்ற எண்ணம் உள்ளவர்.)ஏனென்றால், அரங்கன் அனைத்தும் அறிவான்.நமது தேவைகளை அவனே பூர்த்தி செய்வான் என்ற எண்ணம்.அரங்கனே கேட்டவுடன் ஆழ்வான் எல்லாவற்றையும் சொல்கிறார்.இதற்கு நீர் ஏன் கவலைப்படுகிறீர்,இதை எம்மிடம் விடும்;நாமன்றோகடமைப்பட்டோம் என்றார்.

அன்று இரவே,உத்தம நம்பியின் கனவில் அரங்கன் ஆணையிடுகிறார். எவ்வாறு? எம்முடைய புத்திரரான பட்டருக்கு உமது பெண்ணைக் கொடும் என்று.மறு நாளே உத்தம நம்பி ஓடி வருகிறார்.அன்று அரங்கனின் ஆணையால் அரவணைப் ப்ரசாதத்துடன் ஓடி வந்தவர், இன்று அரங்கனின் ஆணையால், தமது பெண்களான அக்கச்சி, மன்னி ஆகிய இரு கண்களை, கூரத்தாழ்வான் குமாரர்களான பட்டர்,மற்றும் சீராமப் பிள்ளை ஆகியோர்க்கு முறையே மணமுடித்துக் கொடுக்கிறார்.
கூரத்தாழ்வானின் குடும்பப் பொறுப்பு சாட்சாத் அரங்கனிடம் தான் இருந்தது.
 
knr
--
If God brings you to it, He will bring you through it.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.

 Every moment, thank God

No comments:

Post a Comment