1. விச்வம்
ஆயர்பாடியில் நற்செல்வன் என்றோர் ஆயன் வாழ்ந்து வந்தான். பெயருக்கேற்றபடி செல்வச் செழிப்புடன் திகழ்ந்தான்.
அவன் கண்ணபிரானுக்கு மிகவும் நெருங்கிய நண்பன். கண்ணன் எங்கே சென்றாலும் இவனும் உடன் சென்று அவனுக்கு
அனைத்து விதத் தொண்டுகளும் செய்துவந்தான். ராமனுக்கு இலக்குவன் போலக் கண்ணனுக்கு நற்செல்வன் என்று சொல்லும்படியாக
இருந்தது இவன் செய்த தொண்டு. ராமன்கூட தன் ராஜ்யத்தைப் பதினான்கு ஆண்டுகள் இழந்தான்.
ஆனால், இலக்குவன் ஒரு நொடிகூட தன் கைங்கர்ய சாம்ராஜ்யத்தை இழக்காமல்
'ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்தான'ன்றோ? அப்படிப்பட்டவன் தான் இந்த நற்செல்வனும்!
ஆனால், அப்படி கண்ணபிரானுக்குத் தொண்டு செய்துகொண்டே இருப்பதால், தன் வீட்டிலுள்ள எருமைகளைக் கறக்க வேண்டும்
என்பதையே மறந்து விடுவான். அவன் வீட்டில் ஒரு மூலையில் கட்டப்பட்ட எருமைக்கன்று பசியால் தவித்துக் கொண்டிருக்கும்.
மற்றொரு மூலையில் கட்டப்பட்ட தாய் எருமை தன் கன்றுக்குப் பால்கொடுக்கத் துடித்துக் கொண்டிருக்கும்.
ஆனால், நற்செல்வன் வந்து கன்றை அவிழ்த்து விட்டால்தானே அது தாயிடம் சென்று பால் குடிக்க முடியும்?
கண்ணனுக்குத் தொண்டு செய்யப்போன நற்செல்வனோ திரும்பி வருவதற்கான அறிகுறியே தெரியாது.
அப்போது அந்த எருமை என்ன செய்யும் தெரியுமா? திருப்பாவையில் நாச்சியார் அதை அழகாகக் கூறுகிறாள்:
"கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்"
கன்று தன் மடியில் வாய் வைத்ததாகத் தாய் எருமை தானே பாவித்துக்கொண்டு பால்சுரக்கத் தொடங்கிடும்.
பால் ஆறாக ஓடி கன்று கட்டப்பட்டுள்ள இடம் நோக்கிச் செல்லும். அவ்வாறு வழிந்தோடி வந்த பாலைக் கன்று நக்கியபடி அருந்தும்.
இது நற்செல்வனின் வீட்டில் தினமும் வாடிக்கையாக நடக்கும் செயல். இதைக் கண்ட சிலர் ஆயர்பாடியில் எழுந்தருளியிருந்த
கர்காசார்யாரிடம் இது குறித்து வினா எழுப்பினர். "அடுப்பிலிருந்து பால் வழியக் கூடாது என்று பெரியோர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
வீட்டில் பால் வழிந்தால் நம் செல்வம் அனைத்தும் நம்மை விட்டுப் போய்விடும் என்கிறார்கள்.
ஆனால், இந்த நற்செல்வன் வீட்டிலோ தினமும் பால் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனாலும் அவன் குறைவில்லாத செல்வச் செழிப்புடன் இருக்கிறானே! என்ன காரணம்?"
கர்காசார்யார், "அவன் சோம்பேறித்தனத்தால் எருமையைக் கறக்காமல் விடவில்லை. அவன் கண்ணனுக்குத் தொண்டு
செய்யப் போனதால்தான் எருமையைக் கறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. கண்ணபிரான் "விச்வம்" என்று அழைக்கப்படுகிறான்.
விச்வம் என்றால் ஸ்வபாவம், வடிவம், குணங்கள், பெருமை என அனைத்திலும் முழுமையானவன், பரிபூர்ணமானவன் என்று பொருள்.
அப்படிப்பட்ட பரிபூர்ணனான கண்ணனிடம் உள்ளத்தைச் செலுத்தியதால், அனைத்துச் செல்வங்களும் –
சாமானியச் செல்வமான காசு பணம் மட்டுமின்றி உயர்ந்த செல்வமான பக்தியும் ஞானமும் –
நற்செல்வனிடம் பரிபூர்ணமாக நிறைந்துள்ளன!" என விளக்கம் கூறினார்.
விச்வம் என்ற இத்திருநாமமே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் முதல் திருநாமமாக அமைந்துள்ளது.
"விச்வாய நம:" என்று அந்தத் திருநாமத்தை நாம் தினமும் சொன்னால், நமக்கும் அனைத்துச் செல்வங்களையும்
பரிபூர்ணமாக அந்த எம்பெருமான் அருள்வான்.
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்
No comments:
Post a Comment