ராம பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசன் ஆன வீரபாண்டியன் செப்பறையில் புதியதோர் விக்கிரஹம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதை அறிகின்றான். தரிசனத்துக்கு வந்த அவன் கண்களிலே நடராஜர் சிலையின் அழகு கவர்கின்றது. மீண்டும், மீண்டும் எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத தித்திக்கும் பேரழகுச் சிற்பம். ஆஹா, இதை வடிவமைத்தவர் யாரோ? கேட்ட வீரபாண்டியனுக்குச் சிற்பியின் அறிமுகம் கிடைத்தது. தன்னுடைய சிற்றரசுக்கு உட்பட்ட கட்டாரி மங்கலம்" என்னும் ஊரிலும், "கரிசூழ்ந்த மங்கலம்" ஊரிலும் உள்ள கோயிலில் இது போன்ற அதி அற்புத ஆடும் கூத்தனைப் பிரதிஷ்டை செய்ய எண்ணினான் வீரபாண்டியன். சிற்பியை அவ்வாறே இரு சிலைகள் செய்யுமாறு ஆணை இட்டான் வீரபாண்டியன். சிற்பியும் அதே போல் இரு அழகிய நடராஜர் சிலைகளை வடிவமைத்தார்.
அவற்றின் அழகில் மெய்ம்மறந்த வீரபாண்டியன், இனி மற்ற எந்தக் கோயில்களிலும் இது போன்ற சிலைகள் பிரதிஷ்டை செய்யக் கூடாது என எண்ணினான். இந்தச் சிற்பி செதுக்கினால் தானே சிலை? சிற்பியின் கைகளைத் துண்டிக்க ஆணை இட்டான் வீரபாண்டியன்.
பின்னர் சிற்பியையே கொன்றுவிடும்படியும் ஆணை இட்டான். ஆனால் காவலர்களோ இரக்கம் மீதூறச் சிற்பியின் ஒரு கையை மட்டுமே துண்டித்துவிட்டு உயிரோடு விட்டு விட்டார்கள்.
ராமபாண்டியனுக்கு விஷயம் தெரியவர, வீரபாண்டியன் மேல் கோபம் கொண்ட அவன், வீரபாண்டியனின் இரு கைகளையும் வெட்டி விடுகின்றான்.
பின்னர் அந்த இரு சிலைகளையும் முறையே கட்டாரிமங்கலத்திலேயும், கரிசூழ்ந்த மங்கலத்திலேயும் பிரதிஷ்டை செய்கின்றான். சிற்பிக்கு மரக்கையையும் பொருத்தித் தர ஆணை இடுகின்றான்.
மரக்கை பொருத்தப் பட்ட சிற்பி, அந்தக் கைகளோடேயே முன்பை விட அழகான நடராஜர் சிலை ஒன்றைச் செய்கின்றார்.
இந்த அதி அற்புதச் சிலையின் அழகில் தன்னையே மறந்த அவர், அது சிலை என்பதையும் மறந்து, சிலையின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ள, என்ன ஆச்சரியம்?? அவர் கிள்ளிய வடு கன்னத்தில் பதிந்தே விட்டது.
கிள்ளிய அந்த வடுவுடனேயே அந்தச் சிலை தூத்துக்குடி அருகே உள்ள கருவேலங்குளம் என்னும் ஊரில் பிரதிஷ்டை செய்யப் பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்த செப்பறை, கட்டாரி மங்கலம், கரிசூழ்ந்த மங்கலம், கருவேலங்குளம் ஆகிய நான்கு ஊர்களிலுமே திரு ஆதிரைத் திருநாள் மிகச் சிறப்பாய்க் கொண்டாடப் பட்டு வருகின்றது.
இந்தக் கோயில்கள் அனைத்துமே சிவாகம முறைப்படி அனைத்து அம்சங்களும் பொருந்தியவையும் கூட. திருவாதிரைத் திருநாள் அன்று இந்த நான்கு கோயில்களும் விடிய விடியத் திறந்தே இருக்கும். அன்று நான்கு நடராஜர்களையும் சேர்த்து வழிபடுவதை மிகச் சிறப்பாகவும் நினக்கின்றனர். முதலில் செப்பறை, அங்கிருந்து கரிசூழ்ந்த மங்கலம், அங்கிருந்து கருவேலங்குளம், கடைசியாகக் கட்டாரிமங்கலம் என்ற முறையில் தரிசித்தால் பயண நேரமும் சரியாக இருக்கும் என்றும் சொல்கின்றனர்
நடராஜர் என்றதும் நம் நினைவில் தோன்றும் தலம் தில்லை அம்பலம் எனும் சிதம்பரம். அந்த சிதம்பரத்தில் நாம் தரிசிப்பது அங்கு வடிக்கப்பட்ட முதல் சிலை அல்ல. எப்படி, ஏன்?
தில்லைக்காக முதலில் செய்யப்பட நடராஜ உருவம் அங்கு நிறுவப் படவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதா?இப்பொழுது நாம் தரிசிப்பது முதல் சிலை அல்ல. அந்த சிலை இருப்பது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செப்பரை என்ற ஊரில்! அதற்கான இறைவனின் திருவிளையாடலைப் பார்ப்போம்.
ஆதிரைத் திருநாளுக்கு உரிய நடராஜரின் திருமேனி சிதம்பரத்துக்கு வந்த கதை.
தன் தோல் நோயைத் தீர்க்க வேண்டி ஹிரண்யவர்மன் புனித நீராடியது சிதம்பரம் சிவகங்கைக் குளத்தில் என்று ஒரு சாராரும், பிரம்மானந்த கூபம் என்னும் தீர்த்தம் என்று இன்னொரு சாராரும் கூறுகின்றனர். இந்த பிரம்மானந்த கூபம் இப்போது கிணறு வடிவில் உள்ளது.
எது எப்படியோ கெளட தேசத்தில் இருந்து வந்த மன்னன் ஹிரண்ய வர்மன், (சிம்ம வர்மன் என்றும் பெயர் உண்டு) பல்லவ வம்சத்தை இங்கே நிறுவினான் என்றொரு கூற்றும் உண்டு.
இந்த மன்னன் நடராஜர் பால் பக்தி மிகக் கொண்டு, நடராஜரைச் சிலை வடிவில் வடிக்க எண்ணம் கொண்டான்.
சிற்பிகளிடம் பத்தரை மாற்றுப் பசும்பொன்னிலே, துளிக்கூடச் செம்பு கலக்காமல் சிலை வடிக்கச் சொல்கின்றான். சிற்பிகளும் எவ்வளவோ முயன்றும் அவர்களால் முடியவில்லை. சிறிதாவது செம்பு கலவாமல் சிலை வடிக்க முடியவில்லை.
அப்போது நமசிவாய முத்து ஸ்தபதி என்றொருவரை விட்டு வடிக்கச் செய்த செப்புச் சிலையின் வடிவழகு மன்னனின் கண்ணையும் கருத்தையும் மிகக் கவர்ந்தது. எனினும் அது செப்பு என்பதால் சிதம்பரத்தில் அதைப் பிரதிஷ்டை செய்யவேண்டாம் என எண்ணிய மன்னன் தூய பொன்னால் நடராஜத் திருமேனியை வடிக்கச் சொன்னான்.
இந்த முதல் சிலையை என்ன செய்யலாம் என யோசித்த மன்னனுக்கு இரண்டாவதாய் வடித்துக் கொண்டிருக்கும் சிலையைக் காட்டுவதற்காகச் சிற்பிகள் வந்து அழைத்தனர். சிற்பிகள் முகமோ குதூகலமாய் இல்லை. ஒரே கலவரம் கூத்தாடியது அவர்கள் முகங்களில். என்றாலும் தங்கள் குருநாதர் ஆணை! மன்னனை அழைத்துவர! ஆகவே மன்னனை சிலையைக் காண வருமாறு அழைத்தனர்.
சிற்பசாலையில் சிற்பியோ குழம்பிப் போயிருந்தார். நல்ல சுத்தமான பசும்பொன்னை உருக்கி எடுத்துச் சிலை வார்க்கும்போது எங்கிருந்தோ வந்தார் ஒரு முதியவர். பேசிக் கொண்டே இருந்தார். அவர் பேச்சில் கவனமாய் இருக்கையிலே தன் கையிலிருந்த செப்புக் காசுகளை பொன்னைக் குழம்பாய் உருக்கிக் கொண்டிருந்தவற்றில் போட்டுவிட்டு, இவற்றைச் சேர்த்துச் சிலை வடியுங்கள் என்று கூறிவிட்டுப் போய் விட்டார்.
செப்பு உருகித் தங்கக் குழம்போடு கலந்து, அதை சிலையாகவும் வார்த்தாயிற்று. ஆனால் மன்னனுக்குத் தெரிந்தால்?? மன்னனிடம் சொல்லுவதா வேண்டாமா?? சிற்பி குழம்பிப் போய் இருந்தார்.
மன்னனும் வந்தான். சிலையைக் கண்டான். தூக்கிய திருவடியையும், ஊன்றிய திருவடியையும் கண்டான். கண் முன்னே அந்தக் கூத்தனே நடனம் ஆடுவதையும் உணர்ந்தான். சிலையைக் கைகளால் தொட்டுத் தடவிப் பார்த்தான். விரிந்த செஞ்சடை, அபய ஹஸ்தங்கள் என அனைத்துமே அவன் மனதில் பதிந்தன. என்றாலும் முழுக்க, முழுக்கப் பொன்னால் ஆனதா? சந்தேகம் கொப்பளிக்கச் சிற்பியை நோக்கினான்.
சிற்பி செய்வதறியாது மன்னனிடம் நடந்ததைச் சொன்னார். மன்னனுக்குக் கோபம் மூண்டது. தலைமைச் சிற்பியையும், உடனிருந்து உதவிய சிற்பிகளையும் சிறையில் இட்டான்.
சிற்பிகளைச் சிறையில் அடைக்கச் சொன்ன மன்னன் மீண்டும் ஒருமுறை சிலையைப் பார்த்தான். சுத்தச் சொக்கத் தங்கத்திலே செய்யச் சொன்ன சிலை இப்போது செம்பின் சிவந்த நிறத்திலேயே காட்சி அளித்தது.
அன்றிரவு தூக்கம் இன்றித் தவித்த மன்னன் ஒருவழியாய்க் கண்ணயரும் தருணத்திலே அவன் முன்னே தோன்றியது ஓர் பேரொளி.
கண்ணைக் கூசும் ஒளியைக் காணமுடியாமல் கண்ணை மூடித் திறந்த மன்னனின் கண்ணெதிரே நடராஜத் திருமேனி காட்சி அளிக்க, மன்னனுக்கு ஓர் அசரீரி போன்றதொரு ஒலி கேட்டது.
"மன்னா! இது எம் விருப்பம். நாம் இங்கே செப்புத் திருமேனியாகவே காட்சி அளிக்க எண்ணம் கொண்டோம். உன் கண்களுக்கு மட்டுமே நாம் பொன்மேனியாகக் காட்சி அளிப்போம்.
இந்தச் சிலையை இங்கேயே பிரதிஷ்டை செய்வாய். முன்னால் செய்த செப்புத் திருமேனியை இந்தச் செந்தமிழ் நாட்டின் தென் பாகத்துக்குக் கொண்டு போகச் சொல்! எந்த இடத்திற்கு அருகே வந்ததும், சிலையின் கனம் அதிகம் ஆகித் தூக்க முடியாமல் போகின்றதோ, அந்த இடத்தில் சிலையை இறக்கி வைக்கச் சொல்! மற்றவை எம் பொறுப்பு!" என்று ஆணை இடுகின்றார் கூத்தபிரான்.
அது போலவே மறுநாள் காலையில் சிற்பிகளை விடுதலை செய்த மன்னன், முதலில் செய்த செப்புத் திருமேனியை ஒரு அழகிய பல்லக்கில் வைத்துக் கூடவே சிற்பிகளையும் அனுப்பித் தெற்கே பயணம் ஆகச் செய்கின்றான். தெற்கே போகப் போக எதுவும் அடையாளம் தெரியவில்லையே எனக் கலங்கிய வீரர்களுக்கு தாமிரபரணியின் வடகரைக்கு வரவும் சிலையின் கனம் அதிகரித்து வந்தது தெரிய வருகின்றது. சிலையைக் கீழே வைக்கின்றனர். அசதி மிகுந்து போய்த் தூங்கிப் போகின்றனர் வீரர்களும், சிற்பிகளும். விழித்து எழுந்து பார்த்தால் சிலை அங்கே இல்லை. பதறிப் போனார்கள் அனைவரும்.
அந்தப் பகுதியின் அரசன் யார் என விசாரித்தார்கள். ராமபாண்டியன் என்பவன் ஆட்சி புரிந்து வந்ததாய்த் தெரிய வந்தது. சிவபக்தியில் சிறந்தவன் என்றும், தினமும் நெல்வேலி நெல்லையப்பரைத் தரிசனம் செய்யாமல், வழிபடாமல் உணவு உட்கொள்ள மாட்டான் எனவும் தெரிந்து கொண்டனர்.
இந்நிலையில் இச்சிலை தாமிரபரணிக் கரைக்கு வருவதற்கு முன்னர் ஓர் நாள், மன்னன் ராமபாண்டியன் கனவில் நெல்லையப்பர் தோன்றினார்.
ஏற்கெனவே பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் நெல்லையப்பரைத் தரிசிக்கச் செல்ல முடியாமல் மன்னன் மனம் நொந்து வேதனையில் ஆழ்ந்திருந்த சமயம் அது.
அப்போது தோன்றிய மன்னன் கனவில், நெல்லையப்பர் வந்து, "மன்னா வனத்துக்குப் போ. சிலம்பொலி கேட்கும். அந்தச் சிலம்பொலி கேட்கும் இடத்துக்கு எறும்புகள் சாரை, சாரையாய் ஊர்ந்து போவதும் தெரிய வரும். அந்த எறும்புகளைப் பின் தொடர்ந்து செல்வாயாக! அங்கே காணும் என் வடிவைப் பிரதிஷ்டை செய்து ஒரு கோயில் எழுப்பு!" என்று சொல்கின்றார்.
விழித்தெழுந்த மன்னனுக்குக் கனவில் கண்டது பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. யோசனையில் ஆழ்ந்திருந்த சமயம் வடக்கே இருந்து வந்த சிற்பிகளும், வீரர்களும் வந்து தாங்கள் கொண்டு வந்த அதி அற்புத நடனச் சிலையைக் காணோம் எனவும், ஈசனின் ஆனந்த நடன வடிவம் அது எனவும், சொல்லவே, மன்னன் மேலும் திகைத்தான்.
அவர்களையும் அழைத்துக் கொண்டு வனத்திற்குச் சென்றான். வனத்தினுள்ளே, உள்ளே, உள்ளே, சென்றான். திடீரென ஓர் இடத்தில் மத்தளம், கொட்டியது. பேரிகை முழங்கியது. தேவதுந்துபி முழங்கும் சப்தம் கேட்டது. தாளம் போடும் ஒலி, அத்தோடு யாரோ ஆடும் சிலம்பொலியும் கேட்டது.
மன்னனுக்கு நினைவு வந்து கீழே பார்த்தால் எறும்புகள் சாரை, சாரையாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. எறும்புகளைப் பின் தொடர்ந்தான் மன்னன். குறிப்பிட்ட ஓர் இடத்தில் நடராஜரின் திருமேனி வைக்கப் பட்டிருந்ததைக் கண்டான். மன்னன் ஆனந்தக் கூத்தாடினான்.
ஆனந்தக் கூத்தாடும் இறைவனுக்கு அங்கேயே கோயில் எழுப்பவேண்டும் என்பதை அவர் குறிப்பால் அறிவுறுத்தியதையும் நினைவு கூர்ந்தான்.
அந்த இடத்திலேயே தில்லைக் கூத்தனுக்கு ஓர் அற்புதக் கோயில் எழுப்பினான். அதுவே செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில். திருநெல்வேலிக்கு வடகிழக்கே, 9 கி.மீ தூரத்தில் உள்ள ராஜவல்லிபுரத்துக்கு இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தச் செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில்.
முழுக்க முழுக்கச் சிதம்பரம் கோயில் பாணியிலேயே கட்டப் பட்ட கருவறையோடு, கோயிலின் முகப்பில் காளிக்காகவும் ஒரு கோயில் இருக்கின்றது. சிதம்பரத்தின் எல்லையில் இருப்பது போல இங்கேயும் காளி குடி கொண்டிருப்பதாய்ச் சொல்கின்றனர்.
இது மட்டுமா?? இதே போல் இன்னும் இரண்டு நடராஜர்கள் அதே சிற்பியால் செய்யப் பட்டு, இதே திருநெல்வேலி மாவட்டத்தில் வைக்கப் பட்டுள்ளது. அதைப் பற்றி பாகம் 2 ல் காண்போமா??
No comments:
Post a Comment