கல்லிடைக் குறிச்சி
தமிழகத்தின் தென்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் , தென்பொதிகையின் அடிவாரத்தில் உள்ள ஒரு அழகான கிராமம் கல்லிடைக்குறிச்சி.
அது வற்றாத ஜீவ நதி தாமிர பரணியின் செல்லக் குழந்தை .
பசுமையான வயல் வெளிகளும், தோட்டங்களும் , தென்னந் தோப்புகளுமானச் செழிப்பான பூமி.
பதினெட்டு அக்ரஹாரங்கள். அந்தக் காலத்தில் , அதுதான் 1950களில் அக்ரஹாரம் முழுவதும் பிராமணர்களே குடியிருந்தார்கள்.
தவிர செட்டிப் பிள்ளைமார் தெரு, முதலிமார் தெரு, பள்ளிவாசல் தெரு, மாதாகோவில் தெரு என்று அனைத்து மக்களும் அன்போடு இன்றும் வாழ்கின்ற ஊர்.
ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கோவிலும் உண்டு.
ஸ்ரீ ஆதிவராஹப் பெருமாள் கோவில்தான் மிகப் பழமையானதும் , குபேரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான புகழ் மிக்க ஒன்று.
தவிர டுண்டிவினயகர், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ வாழ உகந்த அம்மன், ஸ்ரீ வடக்கு பார்த்த செல்வி, ஸ்ரீ அகஸ்தியர், ஸ்ரீ குமாரன், ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி, ஸ்ரீ தர்மசாஸ்தா, ஸ்ரீ காமாக்ஷி, ஸ்ரீ வடிவாம்பிகை உடனுறை ஸ்ரீ மானேந்தியப்பர் , ஸ்ரீ காந்தாரி அம்மன் இவை தவிர சிறு சிறு பிள்ளையார் கோவில்களும் உண்டு.
சித்திரை மாத ஸ்ரீ ஆதிவராகர் தேரோட்டம் மிகப் பிரபலம்.
எந்த ஊரில் இருந்தாலும் இந்தத் தேரோட்டம் பார்ப்பதற்காகவே விடுமுறையில் வந்துவிடுகின்ற ஊர்ப் பைத்தியங்கள் இன்றும் இருக்கிறார்கள்.
வேதம் நிறைந்த ஊர்
ஒவ்வொரு அக்ரஹாரத்திலும் குறைந்தது இரண்டு தீஷிதர்கள், நான்கு கனபாடிகள், மற்றும் வேதம் கற்ற பண்டிதர்கள் என்று இருந்ததால் இந்த ஊரை வேதக் கல்லிடைக்குறிச்சி என்றும் அழைத்தனர்.
கார்த்திகை மாத முதல் தேதியில் இருந்து முப்பதாம் தேதி வரையில் கந்தப்பபுரம் தெருவில் உள்ள "ஸ்ரீ முருகன்" கோவிலிலும், ஸ்ரீ வராகபுரம் தெருவின் கடேசியில் உள்ள ஸ்ரீ சாஸ்தா கோவிலில் மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து பதினொன்றாம் தேதி வரை பதினோரு தினங்களும் "வாரம்" என்று அழைக்கக் கூடிய வேத பாராயணம் நடக்கும்.
அதில் வேதத்தில் மிகுந்த பாண்டித்தியம் உள்ள தீஷிதர்கள், கனபாடிகள் மற்றும் பண்டிதர்களும் (சாஸ்திரிகள்) கலந்துகொண்டு தாங்கள் கற்ற வித்தையை மற்றவர்களோடு சுவாமியின் சன்னதியில் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கக் கண்கள் கோடி போதாது.
தவறு இல்லாமல் சொன்ன வேத பண்டிதருக்கு சன்மானமும், கௌர்வமும் கிடைக்கும்.
இரவில் வந்திருந்த அனைவருக்கும் அன்னதானமும் உண்டு.
பொதுவாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வேதியர்கள் தங்களது வேதக் கல்வியறிவை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புவர்.
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு சமஸ்கிருத கல்லூரியும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வந்திருக்கிறது.
பின்னாளில் அங்கு காசி விசுவநாதர், விசாலாக்ஷி பூஜையும் , வருடா வருடம் ஐந்து தினங்கள் ஸ்ரீ சங்கர ஜயந்தி உற்சவமும் நடைபெற்று வந்தது.
கரந்தையார் பாளைய பிராமண சமூகத்துக்குச் சொந்தமான இந்த இடம் இப்பொழுது பாழ்பட்டுக் கிடக்கிறது.
இதன் மேற்குப் புறத்தில், நதிக்குச் செல்லும் பாதையில் நிறைய அதிஷ்டானங்கள் இருப்பதை இப்போதும் காணலாம்.
சங்கீதத்திலும் மிகச் சிறந்த வித்வான்கள் இந்த ஊரில் இருந்தார்கள். அதில் சங்கீத கலாநிதி வேதாந்த பாகவதர் (இவர் ஒரு தேவி உபசகரும் கூட) அவருடைய சகோதரர் இராமலிங்க பாகவதர் மிக முக்கியமானவர்கள்.
இவர்களைத் தவிர வி. ராமலிங்க பாகவதர் என்று இன்னொருவரும் வடக்கு ரத வீதியில் வசித்து வந்தார்.
வேதாந்த பாகவதரின் சீடர்கள்தான் மகாதேவ பாகவதர், கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்.
இவர்களுக்கு சென்னையில் உள்ள மியூசிக் அகாதமி "சங்கீத கலா ஆசார்யா" என்ற விருது கொடுத்துச் சிறப்பித்தது.
இவர்களைப் போல ஹரிஹர பாகவதர், எம்.ஆர்.ஆதிவராகன் போன்ற சங்கீத வித்வான்களும் இருந்தனர்.
எம். சங்கரநாராயணன் (அம்பிச்சா..என்று அழைக்கப் படுபவர்) GNB அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்.
தஞ்சாவூர் கல்யாணராமன் அவர்களிடமும், TMT அவர்களிடமும் சங்கீதம் கற்றவர். இன்றும் தியாகராஜர் ஆராதனை உற்சவத்தை ஊரில் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார்.
அதேபோல சிலேடைப்புலி சுப்பையா பாகவதரும் தெற்கு மாடத் தெருவின் முதல் வீட்டில் குடியிருந்தார்.
கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, கல்கத்தா குருமூர்த்தி ஆகியோர்களிடம் சங்கீதம் கற்ற கல்கத்தா கலா, சித்ரா சகோதரிகளுக்கும் இவ்வூர்தான்.
முதலியப்பபுரம் தெருவில் வசித்து வந்த ஸ்ரீ ஐயாஸ்வாமிகள் பக்தி பஜனையின் மூலமாக ஆன்மிகச் சிந்தனையை மக்களிடம் பரப்பி வந்தார்.
துவாதசி தோறும் உஞ்சவிருத்தி பஜனை செய்வார்.
ஒவ்வொரு வருடமும் மாசி மாத சிவராத்திரி அன்று "முருகன்" அகண்ட நாம உத்சவம் நடத்துவார். அதில் பிரபல வித்வான்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டு பாடுவார்கள்.
பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் ஸ்ரீ ஐயாஸ்வாமிகளின் முருகன் அகண்ட நாம நிகழ்ச்சிகளில் விரும்பிக் கலந்துகொண்டு பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.
ஸ்ரீ ஐயாஸ்வாமிகள் ஆடி அம்மாவசை அன்று பாபநாசத்துக்கு மேல் இருக்கக் கூடிய பாணதீர்த்தத்தில் மிகப் பெரிய அளவில் அன்னதானம் செய்வதைக் கடமையாகவே கொண்டிருந்தார்.
வடக்கு மாடத்தெருவில் இருக்கிற பஜனை மடத்தில் நடைபெறும் கோகுலாஷ்டமி உற்சவத்தின் போது மிகப் பிரபலமான தமிழகத்தின் சங்கீத வித்வான்கள் பலர் கச்சேரிகளும், உபந்யாசங் களும் செய்திருக்கிறார்கள்.
வெங்கட்ராமையர் , பண்ணை சுந்தரம் ஐயர் இருவரும் காலாருமினியம் வாசிப்பதில் சிறந்து விளங்கினர்.
இருவருமே மிராசுதார்களாக இருந்தவர்கள். சங்கீத பிரியர்கள். பஜனை பாடுவதில் சஞ்ஜீவி பாகவதரைப் போலவே நம்பி ஐயங்கார், எம்.ஆர். ராமநாராயணன் போன்றவர்கள் செவிக்கு விருந்து வைத்த செம்மல்கள்.
பொதுவாகவே இந்த கிராமத்து ஜனங்களுக்கு சங்கீதத்தில் நல்ல ரசனை உண்டு.
மாடுகளை மேய்த்துக் கொண்டு போகும் பொன்னன் ," எலே அங்கன தெக்கநீக்கி மாட்டப் பத்திக்கிட்டு போலே" என்று இழுத்துச் சொல்வதிலும்,
"கத்தரி, வெண்டை, கரணை, பாவக்காய்" என்று வியாபாரக் குரல் கொடுக்கும் மூக்கனின் குரலிலும் சங்கீதம் இருக்கத்தான் செய்கிறது.
செய்யும் தொழிலே தெய்வம்
அப்பளத் தொழிலில் இருந்து சிமின்ட் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் வரை இந்த கிராமம் திறமைசாலிகளைப் பெற்றிருந்தது.
இந்தியா சிமின்ட் நிறுவனர் எஸ்.என்.என். சங்கரலிங்க ஐயர், ஈசன் நிறுவனத்தின் ஈஸ்வர கிருஷ்ண ஐயர், ராயால் என்பீல்ட் கே.எஸ். சுந்தரம் ஐயர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
பிற்காலத்தில் அவர்களது தலைமுறையில் வந்த இந்தியா சிமின்ட் கே.எஸ்.நாராயணன் (இவர்தான் பின்னாளில் "கெம்பிளாஸ்ட்" நிறுவனத்தை உருவாக்கினார்), என்பீல்ட் எஸ். விஸ்வநாதன், ஈஸ்வர கிருஷ்ண ஐயரின் மகன் ஹரி ஈஸ்வரன், கிருஷ்ணா மைன்ஸ் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (கிட்டா மணி ஐயர்) என்று தொடர்ந்தது.
"உண்டியல் கடை" என்று வைத்து வட்டிக்குப் பணம் கொடுத்து வந்த செல்வந்தர்களால் சிறப்புப் பெற்றதும் இந்த ஊர்தான்.
அப்பளத் தொழிலில் கொடி கட்டிப் பறந்த அம்மாமி அப்பளம் டெப்போ , கணபதிலிங்கம் அப்பளம் டெப்போ, சந்திரா அப்பளம் டெப்போ,
சக்தி அப்பளம் டெப்போ, செல்லவிலாஸ் அப்பளம் டெப்போ, ஆதிவராஹா அப்பளம் டெப்போ, லக்ஷ்மிவிலஸ் அப்பளம் டெப்போ,
ஸ்ரீ சீதாராமன் அப்பளம் டெப்போ, காந்திமதி அப்பளம் டெப்போ
என்று எங்கு திரும்பினாலும் அப்பளக் கம்பெனிகளே கிராமத்தில் குடிசைத் தொழிலாக நிரம்பி இருந்தது .
சுவைக்கும், தரத்திற்கும் பெயர் பெற்று விளங்கியது. "வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும்" நினைத்தாலே சுவைக்க வைக்கும் அனுபவத்தை இந்த ஊர் தந்தது.
போகப் போக இந்தத் தொழில் நலிவடையத் தொடங்கியது. இப்பொழுது சங்கர் அப்பளம், ஸ்ரீ சீதாராமன் அப்பளம், ஸ்ரீ ஆஞ்சநேயா அப்பளம் என்று ஒரு சில அப்பள டெப்போக்கள்தான் இருக்கின்றன.
ஆனாலும் இப்பொழுதும் அரிசி அப்பளம், புழுங்கல் அரிசி முறுக்கு, தட்டை, மாலாடு, முனகரம், சீடை மற்றும் இனிப்பு வகைகளின் தயாரிப்பில் இந்த ஊர் பேர்சொல்லும் பிள்ளையாகவே இருக்கிறது.
சரித்திர ஆராச்சியாளர் நீலகண்ட சாஸ்திரி, சிறுகதை, நாவல் என்று முத்திரை பதித்த "ஆதவன்", பாரதிக்கு தொண்டு செய்துவரும் பாரதி காவலர் கு. ராமமூர்த்தி, திரைபடத் துறையில் குறிப்பாக "டப்பிங்" தொழிலில் சிறந்து விளங்கி , இராமாயணம், கிருஷ்ணா போன்ற சின்னத்திரை நீண்ட தொடர்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்த கவிமாமணி கு. தேவநாராயணன் போன்ற இலக்கிய வாதிகளையும் இந்த உலகத்துக்குத் தந்து மகிழ்தது இவ்வூர்.
சிவராத்திரி காலத்தில் தெருவுக்குத் தெரு நாடகம் போடும் குழந்தைகளை ஊக்குவிப்பார்கள் இந்த ஊர் மக்கள்.
வெங்கடாசலம் ஐயர் கதை, வசனம் , இயக்கத்தில் நடைபெற்ற "ஜெய் பவானி" என்ற நாடகத்தை என் சிறுவயதில் ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோவிலில் உள்ள தெற்குப் பிராகாரத்தில் வைத்துப் பார்த்தது இன்றும் நினைவில் உள்ளது.
அதில் பாரத மாதாவாக நடித்த சி. சங்கரசுப்ரமணினும்(சி.எஸ்.), அவ்ரங்கசீப்பாக நடித்த சங்கரராம சுப்பிரமணியனும் (இன்றும் அவரை அவ்ரங்கசீப் மாமா என்றல்தான் தெரியும்.), கையில் தடியுடன் போலீஸ் காரனாக நடித்த பேப்பர் ராமலிங்கம், H.கிருஷ்ணன் அவர்களையும் இன்றும் என் இதயம் நினைத்துக் கொண்டிருக்கிறது.
இன்று நாடகத் துறையில் பிரபலமாக விளங்குகின்ற "நாணு" (ச. லெஷ்மி நாராயணன்) வுக்குப் பூர்வீகம் இந்த ஊர்தான்.
சுகந்திரப் போராட்ட காலத்தில் தேச விடுதலைக்குப் பாடுபட்ட கோமதி சங்கர தீட்ஷிதர், லக்ஷ்மி அம்மாள், சங்கர ஐயர், ய்க்யேஸ்வர சர்மா , தியாகி சுப்ரமணிய ஐயர் போன்ற தீரர்களையும் பெற்றது இவ்வூர்.
அவர் களின் முயற்சியாலும் , தர்மசிந்தனையுள்ள ஆர்.எஸ்.ஏ. லக்ஷ்மண ஐயர், எஸ்.எஸ். சங்கர ஐயர், ஏ.விஸ்வநாத ஐயர் போன்றவர்களின் ஆதரவாலும் ஜார்ஜ் நடு நிலைப் பள்ளியைத் துவக்கினர்.
இந்தப் பள்ளியில்தான் ஏ.என்.சிவராமன் எட்டாண்டு காலம் ஆசிரியர் பணிசெய்ததாக அவரே தன் கைப்பட அப்பள்ளிக்கு எழுதிய கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் "வித்யா சங்கம்" என்ற அமைப்பையும் துவக்கினர்.
அதன் பலன் இன்று "திலகர் வித்யாலய உயர் நிலைப் பள்ளி" என்ற பெயருடன் ஏழை எளிய குழந்தைகளுக்கு வரப் பிரசாதமாக இருக்கக் கூடிய மிகப் பெரிய கல்விச் சாலையாக விளங்குகிறது.
இந்த ஸ்தாபனம் கே.எஸ். ராமனைத் தலைவராகவும், கே.எஸ்.சங்கரசுப்ரமனியனைச் செயலாளராகவும் கொண்டு சிறப்பாக நடந்து வருகிறது.
மகாகவி பாரதியின் வாக்குப்படி தெருவுக்கு ஒரு பள்ளியாக ஸ்ரீ லக்ஷ்மீபதி ஆரம்பப் பள்ளி, மகாத்மா காந்திப் பள்ளி, லலிதா ஆரம்பப்பள்ளி என்று விரிந்து இன்றும் கல்விப் பணியில் சிறந்து நிற்கிறது கல்லிடைகுறிச்சி
இப்படி எத்தனையோ சிறப்புகளைக் கொண்டதால்தான் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 33வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் ஆனந்தஸ்ரீ சச்சிதானந்தா சிவாபினவ ந்ருசிம்ஹ பாரதீ மகாஸ்வாமிகள் இந்த ஊரைக் கல்யாணபுரி என்று வாழ்த்தி அழைத்தார்கள்.