Monday, December 30, 2024

Power of Periyanambi's words

பெரிய நம்பியின் திருவாக்கு

ஆசாரியன் திருவாக்கிற்கு என்றும் ஓர் ஏற்றம் உண்டு. 1000 வருடங்களுக்கு முன் சொன்ன ஒரு வார்த்தை ஒருவரின் வாழ்க்கையே மாற்றிவிடும். ஏன் என்றால் அந்த வார்த்தை சத்தியம். இந்த உண்மைச் சம்பவத்தைப் படித்துப் பாருங்கள்.

மா. செல்லப் பெருமாள் கோனார் ஒரு தீவிர தி.க தொண்டர். மதுரை வாசி. 'தந்தை பெரியார்' மதுரை வந்தால் இவர் வீட்டில் தான் தங்குவார்.

1962 ஆம் வருஷம் ஒரு மார்கழி மாதம் மதுரை கள்ளழகர் கோயிலில் திருப்பாவை உபன்யாசம் நடந்துகொண்டு இருக்க அன்று மார்கழி கேட்டை – பெரிய நம்பிகள் திருநட்சத்திரம் ( ஸ்ரீராமானுஜருக்கு சமாஸ்ரயணம் செய்தவர் பெரியநம்பிகள்).

உபன்யாசகர் பெரிய நம்பிகள் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

"தாழ்ந்த குலத்தில் பிறந்த மாறநேர் நம்பி ஆசாரியன் திருவடிகளை அடைந்த போது (காலமான போது) மாறநேர் நம்பிக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார் பெரிய நம்பிகள். இந்தச் செயலைப் பல ஸ்ரீ வைஷ்ணவர்களை முகம் சுளிக்கச் செய்திருக்க வேண்டும். அவர்கள் ஸ்ரீராமானுஜரிடம் போய் முறையிட ஸ்ரீராமானுஜரும் தன் ஆசாரியனிடம் "இது தகுமோ?" என்று கேட்க அதற்கு நம்பிகள்

"பறவையான ஜடாயுவுக்கு ராமர் இறுதிச் சடங்குகளைச் செய்தார் அவரைக் காட்டிலும் நான் பெரியவனோ ? அல்லது அந்தப் பட்சியைக் காட்டிலும் நம் மாறனோர் நம்பித் தாழ்ந்தவனா ? மேலும் உயர்ந்த குலத்தில் பிறந்த யுதிஷ்டிரர் (தருமர்) தாழ்ந்த குலத்தில் பிறந்தவளின் மகனாகப் பிறந்த விதுரருக்கு இதைச் செய்யவில்லையா? தருமபுத்திரரைக் காட்டிலும் நான் பெரியவனோ? அல்லது விதுரரைக் காட்டிலும் இவர் சிறியவரோ? நம்மாழ்வார்  "பயிலும் சுடரொளி" என்ற பாசுரத்தில் "நெடுமாற்கடிமை" என்ற பாசுரத்திலும் பாகவதர்களின் சிறப்பைக் கூறி, "எம்மையாலும் பரமர்" என்றும், "எம் தொழுகுலம் தாங்களே" என்றும் கூறியவை எல்லாம் வெறும் கடல் அலை போல ஓசையா ? அவைகளைக் கடைப்பிடிக்கத் தக்கவை அன்றோ?'' என்று கூறினார்.

இவற்றைக் கேட்ட உடையவர் "தாம் அறிந்திருந்தாலும், உங்களைப் போலப் பெரியவர்களின் மூலமாகப் பகவர்களின் உயர்வை உணர்த்தவேண்டும் என்பதற்காகவே கேட்டேன்" என்றாராம்.

மேற்கூறிய பகுதி செல்லப் பெருமாள் கோனார் அவர்களின் செவிகளில் விழ அவர் உள்ளம் உருகியது. அந்தச் சமயம் கேட்டுக்கொண்டு இருந்த பாகவதக் கோஷ்டிக்குத் திருமண், ஸ்ரீ சூர்ணம் பொட்டலம் வினியோகம் செய்துகொண்டு இருந்தார்கள். திகைத்துப் போய் நின்றுகொண்டு இருந்த செல்லப் பெருமாளுக்கும் ஒரு பொட்டலம் கையில் கிடைத்தது.

இவ்வளவு காலம் நாத்திகவாதம், பகுத்தறிவு என்று காலத்தை வீண் செய்துவிட்டேனே என்று மனம் வருந்தி, மறுநாள் காலை கள்ளழகர் கோயில் குளத்தில் குளித்துவிட்டு, தன்னுடைய கருப்பு துணிகளை வீசி எறிந்துவிட்டு திருமண், ஸ்ரீ சூர்ணம் இட்டுக்கொண்டு உபன்யாசம் செய்தவர் முன் வந்து நின்றார்.
முன் தினம் அவர் நிகழ்த்திய உபன்யாசம் பற்றியும், பெரிய நம்பிகள் பற்றியும் கூறித் தான் ஒரு தீவிர ஸ்ரீ வைஷ்ணவன் ஆக வேண்டும் "எனக்கு சமாஸ்ரயணம் செய்துவைக்க உதவ வேண்டும்" என்று கேட்க. பெரிய நம்பிகள் பற்றி காதில் விழுந்து ஓர் இரவில் மாறிய உங்களுக்கு ஸ்ரீரங்கத்தில் பெரிய நம்பிகள் திருமாளிகையில் அவர்கள் வம்சத்தவர்கள் செய்து வைப்பது தான் நன்றாக இருக்கும் என்று கூற செல்லப் பெருமாள் கோனார் ஸ்ரீரங்கம் விரைந்தார். இரவு போய்ச் சேர்ந்த அவர் பெரிய நம்பிகள் வீட்டு வாசலில் படுத்துக்கொண்டார். காலை பெரிய நம்பிகள் வீட்டில் இருந்தவர்கள் விசாரிக்க இவர் வந்த காரணத்தைச் சொல்லி அவர்களிடம் சமாஸ்ரயணம் செய்துகொண்டு உண்மையான ஸ்ரீ வைஷ்ணவனாக மாறினார்.

அதன் பின் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகளிடம் இருந்துகொண்டு அவருக்குப் பல  கைங்கரியம் செய்துகொண்டு இருந்தார். அண்ணங்கராசாரியார் செய்த சொற்பொழிவுகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து 1976ஆம் வருஷம் ஒரு சின்ன புத்தகத்தை அச்சடித்து பலருக்குக் கொடுத்தார்.
உபன்யாசம் செய்தவர் வேறு யாரும் இல்லை. நமக்கு நன்கு அறிமுகம் ஆன மதுரை இரா.அரங்கராஜன் ஸ்வாமிகள் தான்!.

 மா. செல்லப் பெருமாள் கோனார் தொகுத்த புத்தகத்தில் அவர் எழுதிய முன்னுரையில் சில பகுதிகளை இங்கே தருகிறேன்.

".... அறிந்தோ அறியாமலோ அசுத்தப்பொருளின் மீது காலோ கையோ பட்டுவிட்டால், மனிதன் அதை உணர்ந்தவுடன் அவன் உள்ளம் அருவருப்பின்பாற்பட்டுத் துடிதுடித்துப் போகிறது. உடன் அவன் முதற்காரியமாக தூய நீர்நிலைக்குச் சென்று தன் உள்ளம் போதும் போதும் எனக் கருதும் வரை கால்களைத் தேய்த்துத்தேய்த்துக் கழுவுகிறான். இதனினும் தீவிரமாகவுள்ளவன் நீரில் தான் உடுத்தியுள்ள உடைகளுடன் மூழ்கிக் குளித்து எழுகிறான். அதன் பிறகுதான் அவர்கள் உள்ளம் அமைதி பெறுகிறது. இது மனிதனின் இயல்பாகும் .

இங்ஙனே, 1930 ஆம் ஆண்டினின்று 1962 ஆம் ஆண்டு வரை அடியேன், பகுத்தறிவுவாதி எனக் கூறிக் கொள்ளும் நாஸ்தீகவாதியாக அப்படுகுழியில் மூழ்கிக் கிடந்தவனவேன். பெரியபெருமாளான அழகிய மணவாளனின் திருவருளால் 1962ஆம் ஆண்டினின்று ஸ்ரீவைணவன் எனும் உணர்வு வரப்பெற்று பெருமாள் பக்தனாகினேன் அடியேன் பூர்வத்தில் பெரிதும் விரும்பி ஞானசாகரத்தைத் தேடினேன். அது ஸ்ரீகாஞ்சிபுரத்திலிருக்கிறது; அதில் உம்முடைய விருப்பப்படி மூழ்கிக் குடைந்து குடைந்து நீராடிப் புனிதனாகப் பெறலாம் என்க்கூறி ஞானசாகரமாகிய ஸ்ரீ உ.வே P.B.அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகளுடன் ஈடுபாடு கொள்ளும் அளவுக்கு அடியேனை ஆட்படுத்தியருளிய மஹான் மதுரை ஸ்ரீமான் R.அரங்கராஜன் ஸ்வாமிகளாவார் ஆட்படுத்தியருளியதுடன் நின்றுவிடவில்லை, அந்த ஸ்வாமிகளின் வெளியீட்டு நூல்களில் ஒவ்வொன்றாக கொடுத்துப் படித்து வருமாறு செய்து, அடியேனை அதன் சுவையறிந்து மேலும் மேலும் ஸ்வாமிகளின் வெளியீட்டு நூல்களையெல்லாம் வாங்கி வாங்கிப் படிக்கும் சுவைமிக்குடையோனாக்கி, மேலும் ஸ்ரீஸ்வாமிகளின் வெளியீடுகள் முழுவதையும் ஒன்று விடாமல் படித்து முடித்துவிட வேண்டும் என்னும் பெரும் பசிக்காரனாகவும் ஆக்கிவிட்டார்...."

-சுஜாதா தேசிகன்
29.12.2024
பெரிய நம்பிகள் திருநட்சத்திரம்

No comments:

Post a Comment