Monday, December 30, 2024

12th thiruppavai tamil explanation

திருப்பாவை 12 – கனைத்து
.
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
.
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தானெ ழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தே லோரெம்பாவாய்!
.
கர்ம யோகியாகவும் அனுஷ்டானத்தில் சிறந்தவராகவும் இருந்த கோபாலர் ஒருவர் பெற்ற பாகவத பெண்பிள்ளையை ஆண்டாள் எழுப்பிய பாசுரத்தை இதற்கு முந்தைய 'கற்று கறவை…' பாசுரத்தில் பார்த்தோம். இன்றைய பாசுரத்தில், அத்தகைய அனுஷ்டானத்தை எல்லாம் விட்டு விட்டு கண்ணனையே அண்டியிருந்த கோபாலன் ஒருவனை குறிப்பிட்டு சொல்கிறாள் ஆண்டாள். இந்த கோபாலன் கண்ணனுக்கு தொண்டு செய்வதில் – கைங்கர்யம் செய்வதில் மிகவும் ஆவல் கொண்டு அதிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறான். இவன் தன்னுடைய சொத்தான பசுக்களை மேய்ப்பது, பால் கறப்பது போன்ற காரியங்களை சரிவர செய்வதில்லை. ஸ்வதர்மத்தை சாமான்யமாக கொண்டு அதை விட்டு, கிருஷ்ணனுக்கு தொண்டு செய்வதை விசேஷ தர்மமாக பிடித்துக்கொண்டிருக்கிறான்.
.
இவன் நிரவதிகமான செல்வம் உடையவன். அதோடு அந்த செல்வத்துக்கெல்லாம் தலையாய செல்வமாக கைங்கர்யஸ்ரீ என்னும் தனத்தை தன்னிடத்தே கொண்டிருப்பவன். தனக்கு விதிக்கப்பட்ட அனுஷ்டானத்தை – ஸ்வதர்மத்தை கடைபிடிக்க வில்லையானால் பாவம் சேரும். ஆனால் அப்படி அனுஷ்டிக்க முடியாமல் போனதற்கு பகவத் கைங்கர்யம் என்னும் விசேஷ காரணம் இருக்கும் படியால், பாவம் சேராது என்பது உட்பொருளாக ஆண்டாள் குறிப்பிடுகிறாள். அதனால் அப்படிப்பட்ட கைங்கர்யஸ்ரீ எனும் செல்வத்தைப்பெற்ற நற்செல்வன் தங்காய்! என்று அவனுடைய தங்கையை எழுப்புகிறாள் ஆண்டாள்.
.
தசரதன் சத்யத்தை காக்கவேண்டும் என்கிற சாமான்ய தர்மத்தை பிடித்துக் கொண்டு, ராமனை காட்டுக்கு அனுப்பினான். அவனால் மோக்ஷம் அடைய முடியவில்லை. அதுவே விபீஷணன் செய்நன்றி பாராட்டுதல் என்னும் சாமான்ய தர்மத்தை விட்டு, விசேஷ தர்மமாக ராமனையும், ராமனுடைய தர்மத்தையும் உணர்ந்து சரணாகதி செய்தான். அவன் ஆசைப்பட்டபடி  சிரஞ்சீவியாக வாழ்ந்தான். இதனால் தர்மத்தின் பாதை சூக்ஷ்மமானது – சில நேரங்களில் சாமான்ய தர்மத்தை விட்டு விசேஷ தர்மத்தை கடைப்பிடிப்பது தவறில்லை – என்பது தேறும்.
.
இந்த வீட்டினுள் நுழையும் போதே மிக அழகான காட்சி உருவகத்தை ஆண்டாள் நம் கண்முன் நிறுத்துகிறாள். இந்த வீட்டு தலைவனான நற்செல்வன் கண்ணனுக்காக 'சென்று செருச்செய்ய' – போரிட போயிருக்கிறான். இங்கே வீட்டில் கன்றுடன் கூடிய எருமை மாடுகள் நிறைய இருக்கின்றன. அவன் கண்ணனுக்காக போரிடப் போய்விட்டதால் அவற்றின் பாலைக் கறக்கவும், கன்றை ஊட்ட விடவும் ஆளில்லை. அதனால் மாடுகள் கன்றுகளுக்கு ஊட்ட முடியவில்லையே என்று தவித்து கத்துகின்றன. அவற்றை யாரும் கறக்காமலும், கன்றும் வந்து பால் அருந்தாமல் இருந்தபோதும் தமது வாத்சல்ய குணத்தினாலே, தானே பாலை தம் மடிவழியே சொரிகின்றன. ம்ருக ஜாதியாய் இருந்தாலும்
அவற்றுக்கும் உள்ள தாய் சேய் பாசத்தினால் மடியிலிருந்து பால் தானாகவே பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனால் இவர்கள் வீட்டு வாசற்புறமெங்கும் சேறாகி விட்டது.
.
இப்படி இருக்கையில் ஆண்டாளும் கோபிகைகளும், வருகிறார்கள். மார்கழி மாதத்துக்கே உரிய பனி பெய்கிறது. மேலே பனி – கீழே சேறு இதன் நடுவில் வாசலில் வந்து வழுக்காமல் இருப்பதற்காக நிலைப்படியையும், உத்தரத்தையும், தண்டியத்தையும் என ஆளுக்கு கிடைத்ததை பற்றிக்கொண்டு நின்று கொண்டிருக்கிறோம். நீ நற்செல்வன் தங்கையாயிற்றே! இதென்ன ஒரே பெருந்தூக்கத்தில் ஈடுபட்டிருக்கிறாய்? என்று அழகான காட்சி உருவகத்துடன் இந்த பாசுரத்தை ஆண்டாள் பாடியிருக்கிறாள்.
.
ஒருவேளை இவள் க்ருஷ்ணனுடன் ஊடல் கொண்டு எழுந்து வர மறுக்கிறாளோ என்று நினைத்த ஆண்டாள், சரி ராமனைச் சொல்லுவோம் என்று சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியான் என்கிறாள். ஆண்டாள் இங்கே ராமனைப் பாடியதற்கு சிறப்பான அர்த்தங்களை பூர்வாசார்யர்கள் அருளியிருக்கிறார்கள். கண்ணன் அவன் மீது ப்ரேமை கொண்ட கோபிகைகளை காக்க வைத்து, நிர்தாட்சண்யமாக ஏங்க வைத்து இரக்கமின்றி அலைக்கழிக்கிறான். ஆனால் ராமனோ, அவன் தாய் கெளசல்யை ஆகட்டும், சீதை ஆகட்டும், கைகேயி, சூர்ப்பனகை என்று எல்லோரிடமும் கருணை காட்டினான். அவர்களனைவரையும் மதித்தான். கண்ணனைப்போல், ஆஸ்ரித விரோதிகளை வதம் பண்ணுவதில் ராமனும் மிகுந்த வேகம் கொண்டவன் – அதனால் சினத்தினால் – என்று அவனும் சினங்கொண்டு அழிக்கக்கூடியவன் – சக்தியும் உண்டு – கருணையும் உண்டு – ஆகவே அவனைப்பாடுவோம் என்றார்களாம்.
.
இலங்கைக் கோமான் என்று சொல்லும்போது, ராவணன் சக்தியை நினைத்துப்பார்க்கிறாள். ராவணன் மூன்றரைக்கோடி ஆண்டுகள் வாழ்ந்ததாக இதிகாசம் சொல்லும். அதிலும் அவன் தவமியற்றி சிவபெருமானை தரிசிக்கும் அளவுக்கு சிறந்த சிவபக்தன். நவக்கிரகங்களையும் காலில் போட்டு மிதித்தவன். குபேரனின் ஐஸ்வர்யத்தை கொள்ளை அடித்து அவனை துரத்தியவன். இப்படி தன் பலத்தால் பல பெருமைகள் கொண்டும், அகந்தையால் அழிந்தான். சிவபெருமானையே அசைத்துப்பார்க்க நினைத்து சிவபெருமானின் கால் விரலுக்கு ஈடாகமாட்டோம் நாம் என்பதை அவன் அறிந்தும் அகந்தையை குறைத்துக்கொள்ளவில்லை.
.
ராமன் வந்து அவன் ஐஸ்வர்யங்கள், நாடு, மக்கள், சேனை என்று ஒவ்வொன்றாக நொறுக்கி, இறுதியில் நிராயுதபாணியாக நிறுத்தி உயிர்ப்பிச்சை கொடுத்தும் அவனுக்கு அகந்தை போகவில்லை. ராமன் ஏன் அவனை ஒரே பாணத்தில் கொல்லவில்லை?, அவனுக்கென்ன கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதில் ஒரு க்ரூர திருப்தியா? என்றால், அப்படியல்ல… இப்போதாவது திருந்துவானா என்று ஒவ்வொரு சண்டையிலும் அவனுக்கு சந்தர்ப்பம் கொடுத்து சரணாகதி செய்ய நேரம் கொடுத்துப்பார்க்கிறான் ராமன். அப்படியும் திருந்தாமல் வணங்காமுடியாகவே அழிந்ததால் கோமான் என்று குறிப்பிடுகிறாள்.
.
இப்படி நாங்கள் பாடிக்கொண்டே இருக்க நீ துங்கிக்கொண்டே இருக்கிறாயே! இனியாவது எழுந்திரு – இனித்தான் எழுந்திராய்! மற்ற வீட்டுக்காரர்கள், நீ இன்னும் எழுந்திருக்கவில்லை, பாகவதர்களைக் காக்க வைத்தாய் என தெரிந்து உனக்கு அவமானமாகப் போய்விடபோகிறது என்று சொல்கிறாள். இதன் பிறகு அந்த வீட்டுப்பெண்ணும் வந்து இவர்களுடன் சேர்ந்து கொள்கிறாள்.
.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே ஸரண்ம.
.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

No comments:

Post a Comment