Tuesday, January 9, 2024

Mahabharatam in tamil 303

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-303
துரோண பர்வம்
….
பீமனிடம் தோற்ற கர்ணன்
..
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "மேகங்கள், அல்லது இடியின் முழக்கத்தைப் போல, வலிமைமிக்கப் பீமசேனன் ஆழமாக முழங்கியபோது, (நமது தரப்பில்) எந்த வீரர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்? போரில் சீற்றமுள்ள பீமசேனனின் முன்பு நிற்கவல்ல எந்தப் போர்வீரனையும் மூவுலகங்களிலும் நான் காணவில்லை. ஓ! மகனே {சஞ்சயா}, காலனுக்கு ஒப்பாகக் கதாயுதத்தைத் தரித்து நிற்கும் பீமசேனனுக்கு எதிரில் போர்க்களத்தில் நிலைக்கவல்ல எவனையும் நான் காணவில்லை. தேரைத் தேராலும், யானையை யானையாலும் [1] அழிக்கும் அந்தப் பீமனை எதிர்த்துச் சக்ரனை {இந்திரனைத்} தவிர வேறு எவனால் நிற்க முடியும்? சினத்தால் தூண்டப்பட்டு, என் மகன்களைக் கொல்வதில் ஈடுபடும் பீமசேனனை எதிர்த்துத் துரியோதனனின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளோரில் எவனால் போரில் நிற்க முடியும்? உலர்ந்த இலைகளையும், வைக்கோலையும் எரிக்கும் காட்டுத்தீயைப் போல என் மகன்களை எரிப்பதில் ஈடுபடும் பீமசேனனின் முன்பு நின்ற மனிதர்கள் யாவர்? அனைத்து உயிரினங்களையும் வெட்டி வீழ்த்தும் மற்றொரு காலனைப் போலப் பீமன் என் மகன்களை ஒருவர் பின் ஒருவராகக் கொல்வதைக் கண்டு அவனைப் போரில் சூழ்ந்து கொண்டவர் யாவர்? நான் பீமனிடம் கொள்ளும் அச்சத்தைப் போல அர்ஜுனனிடமோ, கிருஷ்ணனிடமோ, சாத்யகியிடமோ, அல்லது வேள்வி நெருப்பில் பிறந்தவனிடமோ (திருஷ்டத்யும்னனிடமோ) பெரும் அச்சத்தைக் கொள்ளவில்லை. ஓ! சஞ்சயா, என் மகன்களை எரிக்கும் பீமனெனும் சுடர்மிகும் நெருப்பை எதிர்த்து விரைந்த அந்த வீரர்கள் யாவர் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.


[1] தேர்களையும், யானைகளையும் கூடப் போர்க்கருவிகளாகப் பீமசேனன் பயன்படுத்தினான் என்று பொருள் கொள்ள வேண்டுமெனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "வலிமைமிக்கத் தேர்வீரனான பீமசேனன் இப்படி முழக்கங்களை வெளியிட்டபோது, அவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாத வலிமைமிக்கக் கர்ணன், தன் வில்லைப் பெரும் பலத்துடன் வளைத்து, பெருங்கூச்சலிட்டபடி அவனை {பீமனை} நோக்கி விரைந்தான். உண்மையில், போரை விரும்பிய வலிமைமிக்கக் கர்ணன், தன் பலத்தை வெளிப்படுத்திச் சூறாவளியைத் தாக்குப்பிடிக்கும் நெடிய மரமொன்றைப் போலப் பீமனின் வழியைத் தடை செய்தான். வீரப் பீமனும், தன் முன்னிலையில் விகர்த்தனன் மகனை {கர்ணனைக்} கண்டு திடீரெனக் கோபத்தில் சுடர்விட்டு, கல்லில் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றைப் பெரும்பலத்துடன் அவன் {கர்ணன்} மீது ஏவினான். அந்தக் கணைகள் அனைத்தையும் ஏற்ற கர்ணன் பதிலுக்குப் பலவற்றையும் ஏவினான். பீமனுக்கும், கர்ணனுக்கும் இடையிலான அம்மோதலில், அவர்களது உள்ளங்கைகளின் தட்டல் ஒலிகளைக் கேட்ட போராளிகள், தேர்வீரர்கள், குதிரைவீரர்கள் ஆகியோர் அனைவரின் அங்கங்களும் நடுங்கத் தொடங்கின. உண்மையில், அந்தப் போர்க்களத்தில் பீமசேனனின் பயங்கர முழக்கங்களைக் கேட்டு, அவ்வொலிகள் மொத்த பூமியையும், ஆகாயத்தையும் நிறைப்பதாக க்ஷத்திரியர்களில் முதன்மையான அனைவரும் கருதினர்.

உயர் ஆன்ம பாண்டு மகனால் {பீமனால்} வெளியிடப்பட்ட கடுமுழக்கங்களால், அந்தப் போரில் போர்வீரர்கள் அனைவரின் விற்களும் பூமியில் விழுந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துணிச்சலையிழந்த குதிரைகளும், யானைகளும் சிறுநீரும், மலமும் கழித்தன [2]. அச்சம்நிறைந்த பல்வேறு தீய சகுனங்கள் அப்போது தோன்றின. பீமனுக்கும், கர்ணனுக்கும் இடையிலான அந்தப் பயங்கர மோதலின் போது, கழுகுகள் மற்றும் கங்கங்களின் {பருந்துகளின்} கூட்டங்களால் ஆகாயம் மறைக்கப்பட்டது. கர்ணன் இருபது கணைகளால் பீமனைத் தாக்கி, ஐந்தால் பின்னவனின் தேரோட்டியை {விசோகனை} வேகமாகத் துளைத்தான். வலிமைமிக்கவனும், சுறுசுறுப்பானவனுமான பீமன் அந்தப் போரில் புன்னகைத்தபடியே, கர்ணனின் மீது அறுபத்துநான்கு {64} கணைகளை ஏவினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு கர்ணன் அவன் மீது நான்கு கணைகளை ஏவினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமன் அவற்றைத் தன் நேரான கணைகளால் பல துண்டுகளாக வெட்டித் தன் கரநளினத்தை வெளிக்காட்டினான். பிறகு கர்ணன் அடர்த்தியான கணைகளின் மாரியால் அவனை {பீமனை} மறைத்தான். எனினும், இப்படிக் கர்ணனால் மறைக்கப்பட்ட வலிமைமிக்கப் பாண்டு மகன் {பீமன்}, கர்ணனின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, பிறகு பத்து நேரான கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.

[2] வேறொரு பதிப்பில் இவ்விடத்தில், "ரதிகர்கள், குதிரைவீரர்கள் இவர்களுடைய சப்தத்தையும், பீமன், கர்ணன் இவ்விருவர்களுடைய தலத்வனியையும் யுத்தரங்கத்தில் பயங்கரமான பீமனுடைய சப்தத்தையுங்கேட்டு க்ஷத்திரிய சிரேஷ்டர்கள் ஆகாயத்தையும், பூமியையும் நன்கு நிறைக்கப்பட்டவனாக எண்ணினார்கள். மறுபடியும், மகாத்மாவான பாண்டவனுடைய கோரமான சப்தத்தினாலே யுத்தகளத்தில் எல்லா வீரர்களுடைய விற்களும் பூமியில் நழுவி விழுந்தன. சில வீரர்களுடைய கைகளிலிருந்து சஸ்திரங்கள் கீழே விழுந்தன. சில வீரர்களுக்கு உயிர்களும் போயின. எல்லாம் பயந்து கொண்டு ஜலமலங்களைப் பெருக்கின. எல்லா வாகனங்களும் மனவருத்தத்தை அடைந்தவையாயின" என்று இருக்கிறது. கங்குலியின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இந்த இடத்தில் இவ்விவரங்கள் இல்லை.

பயங்கரச் செய்கைகளைச் செய்யும் வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சூத மகன் {கர்ணன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு அதில் விரைவாக நாணேற்றி அந்தப் போரில் பீமனை (பல கணைகளால்) துளைத்தான். அப்போது சினத்தால் தூண்டப்பட்ட பீமன், மூன்று நேரான கணைகளால் சூத மகனின் {கர்ணனின்} மார்பை பெரும்பலத்துடன் தாக்கினான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மூன்று நெடிய சிகரங்களைக் கொண்ட ஒரு மலையைப் போலக் கர்ணன், தன் மார்பில் ஒட்டிய அந்தக் கணைகளுடன் அழகாகத் தெரிந்தான். வலிமைமிக்கக் கணைகளால் இப்படித் துளைக்கப்பட்டதும், மலையின் சாரலில் வழியும் செஞ்சுண்ணாம்பின் நீர்த்தாரைகளைப் போல அவனது {கர்ணனது} காயங்களில் இருந்து குருதி பாயத் தொடங்கியது. பெரும்பலத்துடன் ஏவப்பட்ட அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்ட கர்ணன் சற்றே கலக்கமடைந்தான். தன் வில்லில் ஒரு கணையைப் பொருத்திய அவன் {கர்ணன்}, ஓ! ஐயா, மீண்டும் பீமனைத் துளைத்தான். பிறகு மீண்டும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கணைகளையும் அவன் ஏவத் தொடங்கினான்.

அந்த உறுதிமிக்க வில்லாளியான கர்ணனின் கணைகளால் திடீரென மறைக்கப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, சிரித்துக் கொண்டே கர்ணனுடைய வில்லின் நாணை அறுத்தான். பிறகு அவன் {பீமன்}, ஒரு பல்லத்தால், கர்ணனின் தேரோட்டியை யமனுலகு அனுப்பினான். வலிமைமிக்கத் தேர்வீரனான பீமன், கர்ணனின் நான்கு குதிரைகளையும் உயிரிழக்கச் செய்தான். பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகளற்ற தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்து, விருஷசேனனின் தேரில் ஏறிக் கொண்டான்.

அப்போது, வீரப் பீமசேனன், போரில் கர்ணனை வென்ற பிறகு, மேகங்களின் முழக்கத்தைப் போன்ற ஆழமான பெருங்கூச்சலையிட்டான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அம்முழக்கத்தைக் கேட்ட யுதிஷ்டிரன், பீமசேனனால் கர்ணன் வெல்லப்பட்டதை அறிந்து மிகவும் மனம் நிறைந்தான். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பாண்டவப் படையின் போராளிகள் தங்கள் சங்குகளை ஊதினர். அவர்களது எதிரிகளான உமது போர்வீரர்கள் அவ்வொலியைக் கேட்டு உரக்க முழங்கினர். அர்ஜுனன் காண்டீவத்தை வளைத்தான், கிருஷ்ணன் பாஞ்சஜன்யத்தை ஊதினான். எனினும் இவ்வொலிகள் அனைத்தையும் மூழ்கடித்த பீமனின் முழக்கம், ஓ! மன்னா, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போராளிகள் அனைவராலும் கேட்கப்பட்டது. பிறகு, கர்ணன் மற்றும் பீமன் ஆகிய அந்தப் போர்வீரர்கள் இருவரும் நேரான கணைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். எனினும் ராதையின் மகன் {கர்ணன்} மென்மையாகக் கணைகளை ஏவினான், பாண்டுவின் மகனோ {பீமனோ}, பெரும்பலத்துடன் ஏவினான்" {என்றான் சஞ்சயன்

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "(இப்படி) அந்தப் படை முறியடிக்கப்பட்டு, அர்ஜுனன், பீமசேனன் ஆகிய அனைவரும் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நோக்கிச் சென்ற பிறகு, உமது மகன் (துரியோதனன்) துரோணரை நோக்கிச் சென்றான். தனி ஒருவனாகத் தன் தேரில் ஆசானிடம் {துரோணரிடம்} சென்ற துரியோதனன், வழியெங்கும் பல்வேறு கடமைகளைக் குறித்துச் சிந்தித்தபடியே சென்றான். காற்று அல்லது மனோ வேகம் கொண்ட உமது மகனின் {துரியோதனனின்} தேரானது, துரோணரை நோக்கிப் பெரும் வேகத்தோடு சென்றது.


கோபத்தால் சிவந்த கண்களுடன் கூடிய உமது மகன் {துரியோதனன்}, ஆசானிடம் {துரோணரிடம்}, "ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவரே {துரோணரே}, அர்ஜுனன், பீமசேனன் மற்றும் வெல்லப்படாத சாத்யகி ஆகியோரும், வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரும், நமது துருப்புகள் அனைத்தையும் வீழ்த்தி, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அணுகுவதில் வென்றுவிட்டனர். உண்மையில், வெல்லப்படாதவர்களாகவே இருக்கும் வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் துருப்புகள் அனைத்தையும் வென்ற பிறகு அங்கேயும் போரிடுகின்றனர். ஓ! கௌரவங்களை அளிப்பவரே {துரோணரே}, சாத்யகி மற்றும் பீமன் ஆகிய இருவராலும் உம்மை எப்படிக் கடக்க முடிந்தது? ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே {துரோணரே}, சாத்வதன் {சாத்யகி}, அர்ஜுனன் மற்றும் பீமசேனனிடம் நீர் அடைந்த தோல்வியானது இவ்வுலகில் கடல் வறண்டு போவதைப் போல மிக ஆச்சரியமானதாகும். மக்கள், "ஆயுத அறிவியலில் கரைகண்டவரான துரோணர் உண்மையில் எவ்வாறு வெல்லப்பட முடியும்?" என்று உரக்கக் கேட்கின்றனர். இவ்வாறே வீரர்கள் அனைவரும் உம்மை மதிப்பு குறைவாகப் பேசுகின்றனர்.

ஓ! மனிதர்களில் புலியே {துரோணரே}, தொடர்ச்சியாக மூன்று வீரர்கள் உம்மைக் கடந்து சென்றனர் என்றால், நல்லூழற்ற எனக்குப் போரில் அழிவு நிச்சயமே. எனினும், இவையாவும் நடந்தும், இக்காரியத்தில் எங்களுக்குக் காத்திருப்பது என்ன என்பதில் நீர் சொல்லவேண்டியதை எங்களுக்குச் சொல்வீராக. எது நடந்ததோ அது கடந்து போனதாகும் {கடந்த காலமாகும்}. ஓ! கௌரவங்களை அளிப்பவரே, எஞ்சியிருப்பது {இனி செய்ய வேண்டியது} என்ன என்பதை இப்போது சிந்திப்பீராக. அடுத்ததாக, சிந்துக்களின் ஆட்சியாளனுக்காக {ஜெயத்ரதனுக்காகத்} தற்சமயம் என்ன செய்ய வேண்டும் என்பதை விரைவாகச் சொல்வீராக, நீர் எதைச் சொல்வீரோ, அது வேகமாகவும், முறையாகவும் செய்யப்படும்" என்றான் {துரியோதனன்}.

துரோணர் {துரியோதனனிடம்}, "ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, இப்போது எது செய்யப்பட வேண்டும் என்பதை மிகவும் சிந்தித்து, நான் உன்னிடம் சொல்வதைக் கேட்பாயாக. இப்போது வரை பாண்டவர்களின் பெரும் தேர்வீரர்களில் மூவர் மட்டுமே நம்மைக் கடந்து சென்றிருக்கின்றனர். அந்த மூவருக்கு முன்னால் நமக்கு எவ்வளவு அச்சமிருந்ததோ, அவர்களுக்குப் பின்னாலும் நாம் அவ்வளவு அஞ்சவேண்டியிருக்கிறது [1]. எனினும், எங்கே கிருஷ்ணனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} இருக்கின்றனரோ, அங்கே நமது அச்சம் பெரிதாக இருக்க வேண்டும். பாரதப் படையானது முன்னாலும், பின்னாலும் என இருபுறமும் தாக்கப்படுகிறது. இந்நேரத்தில் சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} பாதுகாப்பே நமது முதல் கடமை என நான் நினைக்கிறேன். தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} அஞ்சுபவனான ஜெயத்ரதன் நம்மால் பாதுகாக்கப்படுவதே அனைத்தையும் விடத் தகுந்ததாகும்.

[1] அவர்களுக்குப் பின்னால் இருந்த அச்சம் என்பது பாண்டவப் படையினராவர். அவர்களுக்கு முன்னால் இருந்த அச்சம் என்பது குரு படைக்குள் ஊடுருவுவதில் வென்ற தேர்வீரர்களாவர் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வீர யுயுதானன் {சாத்யகி} மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} எதிர்த்துச் சென்றிருக்கின்றனர். இவையாவும் சகுனியின் புத்தியில் தோன்றிய பகடையாட்டத்தாலேயே வந்திருக்கின்றன. (சூதாட்ட) சபையில் வெற்றியோ, தோல்வியோ ஏற்படவில்லை. இப்போது நாம் ஈடுபடும் இவ்விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் ஏற்படும். சகுனி, குற்றமில்லாத எந்தப் பொருட்களைக் கொண்டு குருக்களின் சபையில் முன்பு விளையாடினானோ, எதை அவன் {சகுனி} பகடையே என்று கருதினானோ, அவையே உண்மையில் வெல்லப்பட முடியாதவையான கணைகளாக இருக்கின்றன. உண்மையில், ஓ! ஐயா {துரியோதனா}, கௌரவர்கள் கூடியிருந்த அந்த இடத்தில் இருந்தது பகடையல்ல, ஆனால் அஃது உங்கள் உடல்களைச் சிதைக்கவல்ல பயங்கரமான கணைகளாகும்.

எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, தற்போது இந்தப் போர் விளையாட்டில், போராளிகளே சூதாடிகள் என்றும், இந்தக் கணைகளே பகடையென்றும், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, சிந்துக்களின் ஆட்சியாளனே பணயம் என்றும் ஐயமில்லாமல் அறிவாயாக. உண்மையில் எதிரியுடனான நமது இன்றைய விளையாட்டில், ஜெயத்ரதனே பெரும்பணயமாவான். எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில், நாம் அனைவரும் நம் உயிரையே துச்சமாக மதித்து, போரில் சிந்துக்களின் ஆட்சியாளனுடைய பாதுகாப்புக்கான முறையான ஏற்பாடுகளைச் செய்வோமாக. தற்போது நாம் ஈடுபடும் விளையாட்டில், எங்குச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} பெரும் வில்லாளிகளால் பாதுகாக்கப்படுகிறானோ, அங்கேயே நாம் வெற்றியையோ, தோல்வியையோ அடைவோம். எனவே, வேகமாக அங்கே சென்று (ஜெயத்ரதனின்) பாதுகாவலர்களைக் காப்பாயாக. என்னைப் பொறுத்தவரை, பிறரை (ஜெயத்ரதனின் முன்னிலைக்கு) அனுப்பவும், ஒன்றுகூடியிருக்கும் பாஞ்சாலர்கள், பாண்டுக்கள், சிருஞ்சயர்கள் ஆகியோரைத் தடுக்கவும் நான் இங்கேயே நிற்பேன்" என்றார் {துரோணர்}.

ஆசானால் {துரோணரால்} இப்படி ஆணையிடப்பட்ட துரியோதனன், கடும் பணிக்கான (சாதனைக்காக) உறுதியான தீர்மானத்தை எடுத்து, தன்னைப் பின்தொடர்பவர்களுடன் ({துரோணரால்} சுட்டிக்காட்டப்பட்ட இடத்திற்கு) வேகமாகச் சென்றான். அர்ஜுனனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பவர்களும், பாஞ்சால இளவரசர்களுமான யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இருவரும், அந்நேரத்தில் சவ்யசச்சினை {அர்ஜுனனை} நோக்கி குரு அணிவகுப்பின் ஓரங்களில் முன்னேறிச் சென்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முன்பு போரிடும் விருப்பத்தால் அர்ஜுனன் உமது படைக்குள் ஊடுருவிய போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இளவரசர்களான அந்த இருவரின் முன்னேற்றத்தைக் கிருதவர்மன் தடுத்தான் என்பதை நீர் நினைவில் கொண்டிருக்கலாம். இப்போதோ குரு மன்னன் {துரியோதனன்} தன் படையின் ஓரங்களில் செல்லும் அவர்களைக் கண்டான். பாரதக் குலத்தின் வலிமைமிக்கத் துரியோதனன், இப்படி மூர்க்கமாக விரைந்து வரும் அவ்விரு சகோதரர்களுடனும் கடும்போரில் ஈடுபடச் சற்றும் தாமதிக்கவில்லை.

க்ஷத்திரியர்களில் முதன்மையானோரும், புகழ்பெற்றவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவ்விருவரும், வளைக்கப்பட்ட தங்கள் விற்களுடன் அந்தப் போரில் துரியோதனனை எதிர்த்து விரைந்தனர். யுதாமன்யு இருபது {20} கணைகளால் துரியோதனனையும், நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் துளைத்தான். எனினும், துரியோதனன் ஒரே கணையால் யுதாமன்யுவின் கொடிமரத்தை அறுத்தான். பிறகு உமது மகன் {துரியோதனன்} மற்றொரு கணையால் முன்னவனின் {யுதாமன்யுவின்} வில்லையும் அறுத்தான். அதன் பிறகும் அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, ஒரு பல்லத்தைக் கொண்டு யுதாமன்யுவின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான். பிறகும் அவன் நான்கு கணைகளால் பின்னவனின் {யுதாமன்யுவின்} நான்கு குதிரைகளைத் துளைத்தான். அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட யுதாமன்யு, அந்தப் போரில் உமது மகனின் {துரியோதனனின்} நடு மார்பில் முப்பது {30} கணைகளை வேகமாக ஏவினான்.

கோபத்தால் தூண்டப்பட்ட உத்தமௌஜஸும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகளைக் கொண்டு துரியோதனனின் தேரோட்டியைத் துளைத்து, அவனை {தேரோட்டியை} யமனுலகு அனுப்பி வைத்தான். பிறகு துரியோதனனும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களின் இளவரசனான உத்தமௌஜஸின் நான்கு குதிரைகளையும், இரண்டு பார்ஷினி தேரோட்டிகளையும் கொன்றான். அப்போது அந்தப் போரில் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும் ஆன உத்தமௌஜஸ் தன் சகோதரனான யுதாமன்யுவின் தேரில் வேகமாக ஏறினான். தன் சகோதரனின் தேரில் ஏறிய அவன் {உத்தமௌஜஸ்}, கணைகள் பலவற்றால் துரியோதனனின் குதிரைகளைத் தாக்கினான். இதனால் கொல்லப்பட்ட அக்குதிரைகள் கீழே பூமியில் விழுந்தன. அவனது {துரியோதனனின்} குதிரைகள் விழுந்ததும், வீர யுதாமன்யு ஒரு வலிமைமிக்க ஆயுதத்தால் துரியோதனனின் வில்லை விரைவாக அறுத்து, மேலும் (மற்றொரு கணையால்) தோலாலான அவனது கையுறைகளையும் அறுத்தான்.

மனிதர்களில் காளையான உமது மகன் {துரியோதனன்}, குதிரைகளற்ற, சாரதியற்ற தேரில் இருந்து கீழே குதித்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு பாஞ்சால இளவரசர்கள் இருவரையும் எதிர்த்துச் சென்றான். இப்படிக் கோபத்தில் முன்னேறி வரும் பகை நகரங்களை அழிப்பவனை {துரியோதனனைக்} கண்டு, யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இருவரும் தங்கள் தேர்த்தட்டில் இருந்து கீழே குதித்தனர். அப்போது கதாயுதம் தரித்த துரியோதனன், தங்கத்தால் அலங்கரிக்கபட்டதும், குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரத்துடன் கூடியதுமான அந்தத் தேரை அக்கதாயுதத்தால் பூமிக்குள் அழுத்தினான். எதிரிகளை எரிப்பவனான உமது மகன் {துரியோதனன்}, அந்தத் தேரை நொறுக்கிய பிறகு, குதிரைகளும், சாரதியுமற்ற அவன், மத்ரர்களின் மன்னனுடைய {சல்லியனின்} தேரில் விரைவாக ஏறினான். அதே வேளையில், வலிமைமிக்க இரு தேர்வீரர்களான, அந்தப் பாஞ்சால இளவசர்களில் முதன்மையான இருவரும் வேறு இரு தேர்களில் ஏறிக் கொண்டு அர்ஜுனனை நோக்கிச் சென்றனர்" {என்றான் சஞ்சயன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதான அந்தப் போரில் போராளிகள் அனைவரும் கவலையில் நிறைந்து, பெரிதும் பீடிக்கப்பட்டிருந்த போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த ராதையின் மகன் {கர்ணன்}, காட்டில் மதங்கொண்ட யானையை எதிர்த்துச் செல்லும் மற்றொரு யானையைப் போலப் பீமனை எதிர்த்துச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}.


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "பெரும்பலம் கொண்டவர்களான பீமன் மற்றும் கர்ணன் ஆகிய வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவருக்கிடையில் அர்ஜுனனின் தேருக்கு அருகில் நடந்த அந்தப் போர் எவ்வாறு நடந்தது? இதற்கு முன்பு ஒரு முறை கர்ணன் போரில் பீமசேனனால் வெல்லப்பட்டான். எனவே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனால் மீண்டும் பீமனை எதிர்த்து எவ்வாறு செல்ல முடிந்தது? பூமியின் தேர்வீரர்களில் மிகப் பெரியவனாக அறியப்படும் வலிமைமிக்கப் போர் வீரனான சூதனின் மகனை {கர்ணனை} எதிர்த்து பீமனாலும் எவ்வாறு செல்ல முடியும்? தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பீஷ்மரையும், துரோணரையும் வெற்றிகொண்ட நிலையில், வில்லாளியான கர்ணனிடம் கொண்ட அச்சத்தினளவிற்கு வேறு எவரிடமும் அச்சம்கொள்ளவில்லை. உண்மையில், அவன் {யுதிஷ்டிரன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனை நினைத்துக் கொண்டே, அச்சத்தால் தன் இரவுகளை உறக்கமில்லாமல் கழிக்கிறான். பிறகு, போரில் அந்தச் சூதனின் மகனிடம் {கர்ணனிடம்} பீமனால் எவ்வாறு மோத முடியும்? உண்மையில், ஓ! சஞ்சயா, போரில் பின்வாங்காதவனும், சக்தியுடன் கூடிய பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ள வீரனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்தக் கர்ணனோடு பீமனால் எவ்வாறு போரிட முடியும்?

உண்மையில், அர்ஜுனனின் தேரருகே நடந்த அம்மோதலில் சூதனின் மகன் {கர்ணன்} மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய அவ்விரு வீரர்களும், எவ்வாறு ஒருவரோடொருவர் போரிட்டனர்? மேலும், (பாண்டவர்களுடனான) தன் சகோதரநிலை குறித்து முன்பே தெரிவிக்கப்பட்ட அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} கருணையுள்ளவனுமாவான். குந்தியிடம் தான் சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்ந்தால் [1], அவனால் {கர்ணனால்} எவ்வாறு பீமனுடன் போரிட முடியும்? பீமனைப் பொறுத்தவரையும் கூட, முன்பு சூதனின் மகனால் {கர்ணனால்} தன் மீது திணிக்கப்பட்ட தீங்குகள் அனைத்தையும் நினைவுகூர்ந்த அந்த வீரன் {பீமன்}, போரில் கர்ணனுடன் எவ்வாறு போரிட்டான்? ஓ! சூதா {சஞ்சயா}, என் மகன் துரியோதனன், கர்ணன் பாண்டவர்கள் அனைவரையும் போரில் வென்று விடுவான் என நம்புகிறான். இழிந்தவனான என் மகன் போரில் எவனிடம் வெற்றி இருக்கிறது என நம்புகிறானோ அவன் {கர்ணன்}, பயங்கரச் செயல்களைச் செய்யும் பீமசேனனுடன் எவ்வாறு போரிட்டான்? என் மகன்கள் எவனை நம்பி அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் (பாண்டுவின் மகன்களுடன் {பாண்டவர்களுடன்}) பகைமை கொண்டனரோ, அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} பீமன் எவ்வாறு போரிட்டான்? உண்மையில் அவனால் {கர்ணனால்} செய்யப்பட்ட பல்வேறு தீங்குகள் மற்றும் காயங்களை நினைவுகூர்ந்த பீமன் அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} எவ்வாறு போரிட்டான்? உண்மையில், முன்னர் ஒரே தேரில் தனியாகச் சென்று மொத்த உலகை அடக்கியவனும், பெரும் வீரம் கொண்டவனுமான அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} பீமனால் எவ்வாறு போரிட முடிந்தது? (இயற்கையான) இரு காதுகுண்டலங்களுடன் பிறந்தவனான அந்தச் சூதனின் மகனுடன் பீமன் எவ்வாறு போரிட்டான்? ஓ! சஞ்சயா, விவரிப்பதில் நீ திறனுள்ளவனாக இருக்கிறாய். எனவே, அவ்விருவருக்கும் இடையில் நடைபெற்ற போரையும், அவர்களில் வெற்றி அடைந்தவர் யார் என்பதையும் எனக்கு விரிவாகச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.

[1] உத்தியோக பர்வம் பகுதி 146ஐ பார்க்கவும்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பீமசேனன், ராதையின் மகனை {கர்ணனை} விட்டுவிட்டு, கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களும் எங்குள்ளனரோ அங்கே செல்ல விரும்பினான். எனினும், ராதையின் மகன் {கர்ணன்}, அவனை {பீமனை} நோக்கி விரைந்து சென்ற போதே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல அடர்த்தியான கணைமாரியால் அவனை {பீமனை} மறைத்தான்.

முழுதும் மலர்ந்த முளரியை {தாமரையைப்} போல அழகிய முகமுடையவனும், முறுவலால் மிளிர்ந்தவனுமான {சிரிப்பால் பிரகாசித்தவனுமான} வலிமைமிக்க அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, பீமசேனன் சென்றபோது பின்னவனை {பீமனை} அறைகூவி அழைத்தான். கர்ணன், "ஓ! பீமா, போரிடுவது எவ்வாறு என்பதை நீ அறிவாய் என நான் கனவிலும் நினைக்கவில்லை. பிறகு, அர்ஜுனனைச் சந்திக்கும் விருப்பத்தால் ஏன் எனக்கு நீ முதுகைக் காட்டுகிறாய்? ஓ! பாண்டவர்களை மகிழ்விப்பவனே, குந்தியின் மகன் ஒருவனுக்கு இது சற்றும் பொருந்தாது. எனவே, நீ எங்கிருக்கிறாயோ அங்கேயே நின்று உன் கணைகளால் என்னை மறைப்பாயாக" என்றான் {கர்ணன்}.

கர்ணனின் அந்த அறைகூவலைக் கேட்ட பீமசேனன் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தன் தேரை சற்றே நகர்த்தி, அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} {மீண்டும்} போரிடத் தொடங்கினான். சிறப்புமிக்கப் பீமசேனன் நேரான கணைமேகங்களைப் பொழிந்தான். கர்ணனைக் கொல்வதால் அந்தப் பகைமைகளுக்கு முடிவைக் கொண்டு வர விரும்பிய பீமன், கவசம் பூண்டவனும், அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனும், தனக்கு எதிரில் நின்று தனிப்போரில் ஈடுபடுபவனுமான அந்த வீரனை {கர்ணனை} பலவீனமடையச் செய்யத் தொடங்கினான். எண்ணற்ற கௌரவர்களைக் கொன்ற பிறகு, ஓ! ஐயா, எதிரிகளை எரிப்பவனும், பாண்டுவின் கோபக்கார மகனும், வலிமைமிக்கவனுமான பீமன், கர்ணனின் மீது பல்வேறு கடும் கணைமாரிகளைப் பொழிந்தான். பெரும்பலம் கொண்ட அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, மதயானையின் நடையைக் கொண்ட அந்ந வீரனால் {பீமனால்} தொடுக்கப்பட்ட கணைமாரிகள் அனைத்தையும் தன் ஆயுதங்களின் சக்தியால் விழுங்கினான்.

அறிவின் உதவியைக் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான அந்தக் கர்ணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (படை அறிவியலின்) ஆசானைப் போல அந்தப் போரில் திரியத் தொடங்கினான். ராதையின் கோபக்கார மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே இருந்தது, பெரும் சீற்றத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த பீமசேனனுக்குத் தன்னைக் கேலி செய்வதைப் போலத் தெரிந்தது. தங்களுக்கிடையிலான அந்தப் போரை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பார்த்துக் கொண்டிருந்த துணிச்சல்மிக்க வீரர்கள் பலருக்கு மத்தியில் குந்தியின் மகனால் {பீமனால்} கர்ணனின் சிரிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பெரும் யானையை அங்குசத்தால் தாக்கும் பாகனைப் போலச் சினத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்கப் பீமன், அடையும் தொலைவுக்குள் தன்னால் கொண்டுவரப்பட்ட கர்ணனின் நடுமார்பை வத்சதந்தங்கள் {கன்றின் பற்களைப் போன்ற தலை கொண்ட கணைகள்} பலவற்றால் துளைத்தான்.

மீண்டும் பீமசேனன், தங்கமயமானவையும், அழகிய சிறகுகளுடையவையும், கூர்முனை கொண்டவையும், நன்கு ஏவப்பட்டவையுமான எழுபத்துமூன்று [?] கணைகளால் சூத மகனின் வண்ணமயமான கவசத்தைத் துளைத்தான். {பிறகு அந்த வீரக் கர்ணன், தங்க விரிப்புகளுடன் கூடியவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான பீமனின் குதிரைகள்} ஒவ்வொன்றையும் ஐந்து கணைகளால் {துளைத்தான்} [2]. விரைவில் கண்ணிமைப்பதற்குள் கர்ணனால் உண்டாக்கப்பட்ட கணைகளின் வலை பீமனின் தேரில் காணப்பட்டது. உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகளானவை, கொடிமரம், தேரோட்டி மற்றும் அந்தப் பாண்டவனுடன் {பீமனுடன்} கூடிய அந்தத் தேரை முழுமையாக மறைத்தது. பிறகு கர்ணன், பீமனின் ஊடுருவமுடியாத கவசத்தை அறுபத்துநான்கு கணைகளால் துளைத்தான். சினத்தால் தூண்டப்பட்ட அவன் {கர்ணன்}, உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல நேரான கணைகள் பலவற்றால் பார்த்தனையே {பீமனையே} துளைத்தான்.

[2] இங்கே கங்குலியில் each with five shafts என்று வாக்கியம் முழுமை பெறாமலேயே இருக்கிறது. [?] கணைகளின் எண்ணிக்கையும் தவறாக இருப்பதாகவே தெரிகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "பீமசேனன், சிறகுகளுடன் கூடியவையும், முறையாக ஏவப்பட்டவையுமான இருபத்தோரு கூரிய கணைகளால் சூதன் மகனுடைய வண்ணமயமான கவசத்தைத் துளைத்தான். பிறகு அந்த வீரக் கர்ணன், தங்க விரிப்புகளுடன் கூடியவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான பீமனின் குதிரைகள் ஒவ்வொன்றையும் ஐந்து {ஐந்து ஐந்து} கணைகளால் துளைத்தான்" என்றிருக்கிறது. வேறொரு பதிப்பிலும் மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

எனினும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட விருகோதரன் {பீமன்}, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகளை அலட்சியம் செய்தபடியே அச்சமில்லாமல் அந்தச் சூதனின் மகனை {கர்ணனை} தாக்கினான். கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான கணைகளால் துளைக்கப்பட்ட பீமன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் எந்த வலியையும் உணரவில்லை. பிறகு அந்த வீரப் பீமன், அம்மோதலில் கடும் சக்தி கொண்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான முப்பத்திரண்டு பல்லங்களால் கர்ணனைத் துளைத்தான். எனினும், கர்ணன், ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பியவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனனைத் தன் கணைகளால் பதிலுக்குப் பெரும் அலட்சியத்துடனேயே மறைத்தான். உண்மையில் அம்மோதலில், ராதையின் மகன் {கர்ணன்}, பீமனுடன் மென்மையாகவே போரிட்டான், அதே வேளையில் பீமனோ, அவனது {கர்ணனின்} முந்தைய தீங்குகளை நினைவுகூர்ந்து அவனுடன் மூர்க்கமாகப் போரிட்டான்.

கோபக்கார பீமனால் கர்ணனின் அலட்சியத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உண்மையில் அந்த எதிரிகளைக் கொல்பவன் {பீமன்}, ராதையின் மகன் மீது கணை மாரிகளை விரைவாக ஏவினான். அம்மோதலில் பீமசேனனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள், கொஞ்சும் பறவைகளைப் போலக் கர்ணனின் அங்கங்கள் யாவிலும் பாய்ந்தன. பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கூர்முனை மற்றும் தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அக்கணைகள், சுடர்மிக்க நெருப்பை மறைக்கும் பூச்சிகளின் கூட்டத்தைப் போல ராதையின் மகனை {கர்ணனை} மறைத்தன. எனினும் கர்ணன், ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பதிலுக்குக் கடுங்கணைகளின் மாரியைப் பொழிந்தான். அப்போது விருகோதரன் {பீமன்}, அந்தப் போர்க்கள ரத்தினத்தால் {கர்ணனால்} ஏவப்பட்டவையும், வஜ்ரத்திற்கு ஒப்பானவையுமான அந்தக் கணைகள் தன்னை அடைவதற்கு முன்பே பல்லங்கள் பலவற்றால் அவற்றை வெட்டினான். எதிரிகளைத் தண்டிப்பவனும், விகர்த்தனன் {சூரியன்} மகனுமான கர்ணன், ஓ! பாரதரே, மீண்டும் பீமசேனனைத் தன் கணைமாரியால் மறைத்தான்.

அப்போது ஓ! பாரதரே, அம்மோதலில் கணைகளால் துளைக்கப்பட்ட பீமனை, தன் உடலில் நிமிர்ந்து நிற்கும் முட்களுடன் கூடிய முள்ளம்பன்றிக்கு ஒப்பாக நாங்கள் கண்டோம். தன் கதிர்களைப் பிடித்திருக்கும் சூரியனைப் போலவே அந்தப் போரில் வீரப் பீமன், கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அக்கணைகளைப் பிடித்திருந்தான். குருதியில் குளித்த அனைத்து அங்கங்களுடன் கூடிய பீமசேனன், வசந்தகாலத்தில் மலர்களின் சுமையால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அசோக மரத்தைப் போலப் பிரகாசத்துடன் தெரிந்தான். அந்தப் போரில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணனின் அந்த நடத்தையை வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

கோபத்தில் சுழன்ற கண்களுடன் கூடிய அவன் {பீமன்} இருபத்தைந்து நாராசங்களால் கர்ணனைத் துளைத்தான். அதன்பேரில் கர்ணன், (தன் பக்கங்களில் தொங்கும்) கடும் நஞ்சுமிக்கப் பாம்புகள் பலவற்றுடன் கூடிய ஒரு வெண்மலையைப் போலத் தெரிந்தான். தெய்வீக ஆற்றலைக் கொண்ட பீமசேனன், அப்போரில் தன் உயிரையும் விடத் தயாராக இருந்த சூதனின் மகனை {கர்ணனை} ஆறு கணைகளாலும், பிறகு எட்டு கணைகளாலும் துளைத்தான். பிறகு வீரப் பீமசேனன் சிரித்துக் கொண்டே மற்றொரு கணையால் கர்ணனின் வில்லை மீண்டும் விரைவாக அறுத்தான். மேலும் அவன் {பீமன்} தன் கணைகளால் கர்ணனின் நான்கு குதிரைகளையும், பிறகு அவனது தேரோட்டியையும் கொன்று, அதன் பிறகு, சூரியப்பிரகாசம் கொண்ட எண்ணற்ற நாராசங்களால் கர்ணனின் மார்பையும் துளைத்தான். சிறகுகள் படைத்த அக்கணைகள் கர்ணனின் உடலினூடாக ஊடுருவி, மேகங்களின் ஊடாகத் துளைத்துச் செல்லும் சூரியனின் கதிர்களைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. தன் ஆண்மையில் செருக்குக் கொண்டிருந்தாலும், கணைகளால் பீடிக்கப்பட்டு, தன் வில்லும் அறுபட்ட கர்ணன் பெரும் வலியை உணர்ந்து மற்றொரு தேருக்குச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, என் மகன்கள் எவனிடம் வெற்றிக்கான தங்கள் நம்பிக்கைகள் அனைத்தையும் கொண்டுள்ளனரோ அந்தக் கர்ணன் களத்தில் இருந்து புறங்காட்டிச் செல்வதைக் கண்டு, உண்மையில் துரியோதனன் என்ன சொன்னான்?உண்மையில், தன் சக்தியில் பெருமை கொண்ட பீமன் எவ்வாறு போரிட்டான்? கர்ணனும் இதன் பிறகு, ஓ! மகனே {சஞ்சயா}, அந்தப் போரில் சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பான பீமசேனனைக் கண்டு என்ன செய்தான்?" என்றான் {திருதராஷ்டிரன்}.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "முறையாக அமைக்கப்பட்ட மற்றொரு தேரில் ஏறிய கர்ணன், சூறாவளியால் கொந்தளிக்கும் கடலின் சீற்றத்துடன் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்து மீண்டும் விரைந்தான்.சினத்தால் தூண்டப்பட்ட அந்த அதிரதன் மகனை {கர்ணனைக்} கண்ட உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (கர்ண) நெருப்பில் ஏற்கனவே ஊற்றப்பட்ட காணிக்கையாகவே {ஆகுதியாகவே) பீமசேனனைக் கருதினர். வில்நாண் கயிற்றின் சீற்றமிக்க நாணொலி மற்றும் தன் உள்ளங்கைகளின் பயங்கர ஒலிகள் ஆகியவற்றுடன் கூடிய ராதையின் மகன் {கர்ணன்}, பீமசேனனின் தேரை நோக்கி அடர்த்தியான கணைமாரியை ஏவினான்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வீரக் கர்ணனுக்கும், உயர் ஆன்ம பீமனுக்கும் இடையில் மீண்டும் ஒரு பயங்கரமான மோதல் நடந்தது.( கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான அவ்விரு போர் வீரர்களும், (கோபம்நிறைந்த) தங்கள் பார்வையாலேயே ஒருவரையொருவர் எரித்துவிடத் தீர்மானித்தவர்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.கோபத்தால் சிவந்திருந்த கண்களுடன் கூடிய அவ்விருவரும், இரண்டு பாம்புகளைப் போலச் சீற்றத்துடன் மூச்சுவிட்டனர். எதிரிகளைத் தண்டிப்பவர்களும், பெரும் வீரம் கொண்டவர்களுமான அவ்விருவரும் ஒருவரையொருவர் அணுகி சிதைத்தனர். உண்மையில் அவர்கள், பெரும் சுறுசுறுப்புக் கொண்ட இரு பருந்துகளைப் போல, அல்லது கோபத்தால் தூண்டப்பட்ட இரு சரபங்களைப் போல ஒருவரோடொருவர் போரிட்டனர்.

அப்போது எதிரிகளைத் தண்டிப்பவனான பீமன், பகடையாட்டத்தின் போதும், நாடுகடத்தப்பட்டுக் காட்டில் இருந்தபோதும், விராடனின் நகரத்தில் வசித்த போதும் தான் பட்ட துன்பங்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தும்,செழிப்பிலும், ரத்தினங்களிலும் பெருகியிருந்த தங்கள் அரசு உமது மகன்களால் களவாடப்பட்டது, உம்மாலும், சூதனின் மகனாலும் {கர்ணனாலும்} பாண்டவர்களுக்கு எண்ணற்ற தீங்குகள் இழைக்கப்பட்டது ஆகியவற்றை மனதில் கொண்டும்,(அப்பாவியான குந்தியை நீர் அவளது மகன்களுடன் சேர்த்து எரிக்கச் சதி செய்த உண்மையை நினைத்தும், சபைக்கு மத்தியில் அந்த இழிந்தவர்களின் {திருதராஷ்டிரன், திருதராஷ்டிரன் மகன்கள் மற்றும் கர்ணன் ஆகியோரின்} கைகளில் கிருஷ்ணை {திரௌபதி} அடைந்த இன்னல்கள்,(12) துச்சாசனனால் அவளது குழல்கள் பற்றப்பட்டது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கர்ணன், "உன் கணவர்கள் இறந்துவிட்டதால் {கணவனற்றவளானதால்}, நீ மற்றொரு கணவனைக் கொள்வாயாக; நரகத்தில் மூழ்கிவிட்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள் எள்ளுப்பதர்களைப் போன்றவர்களாவர்" என்ற அளவுக்குப் பேசிய பேச்சு ஆகியவற்றை நினைவுப்படுத்திக் கொண்டும்,(13, 14) ஓ! குருவின் மகனே {திருதராஷ்டிரரே}, உமது முன்னிலையில் கௌரவர்கள் உதிர்த்த பிற வார்த்தைகள், உமது மகன்கள் கிருஷ்ணையைத் {திரௌபதியைத்} தங்கள் அடிமையாய் அடைந்து அனுபவிக்க விரும்பிய உண்மை,(15) பாண்டுவின் மகன்கள் மான் தோலுடுத்தி காட்டுக்குச் செல்ல முற்படுகையில், கர்ணன் அவர்களிடம் பேசிய கடுஞ்சொற்கள்,(16) கோபம் நிறைந்தவனும், செழிப்பாக இருந்தவனும், மூடனுமான உமது மகன் {துரியோதனன்}, வருந்திக்கொண்டிருந்த பிருதையின் {குந்தியின்} மகன்களை வெறும் புற்களாக நினைத்து மகிழ்ச்சியோடு தற்புகழ்ச்சியில் ஈடுபட்டது ஆகியவற்றை நினைவுகூர்ந்தும்,(17) உண்மையில் அறம்சார்ந்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்தப் பீமன் இவற்றையும், குழந்தை பருவத்தில் இருந்து தானடைந்த இன்னல்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்து, தன் உயிரையே துச்சமாக மதித்தான்.(18)

பாரதக் குலத்தின் புலியான அந்த விருகோதரன் {பீமன்}, தங்கமயமான கைப்பிடி கொண்டதும், வெல்லமுடியாததும், வல்லமைமிக்கதுமான தனது வில்லை வளைத்து, தன் உயிரை முற்றிலும் துச்சமாக மதித்து, கர்ணனை எதிர்த்து விரைந்தான்.(19) அந்தப் பீமன், கல்லில் கூராக்கப்பட்ட பிரகாசமான கணைமாரியை ஏவி சூரியனின் ஒளியையே மறைத்தான்.(20) எனினும் அந்த அதிரதன் மகன் {கர்ணன்} சிரித்துக் கொண்டே, கல்லில் கூராக்கப்பட்டவையும், சிறகுபடைத்தவையுமான தன் கணைகளால், பீமசேனனின் அந்தக் கணைமாரியை விரைவாகக் கலங்கடித்தான்.(21) பிறகு, பெரும் பலமும், வலிமைமிக்கக் கரங்களும் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான அதிரதன் மகன் {கர்ணன்}, ஒன்பது கூரிய கணைகளால் பீமனைத் துளைத்தான்.(22) அங்குசத்தால் தாக்கப்பட்ட யானையைப் போல அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட விருகோதரன் {பீமன்}, அச்சமற்ற வகையில் அந்தச் சூதனின் மகனை {கர்ணனை} எதிர்த்து விரைந்தான்.(23) எனினும் கோபத்துடன் கூடிய கர்ணன், மதம் கொண்ட யானையை எதிர்த்து விரையும் மற்றொரு மதங்கொண்ட யானையைப் போல, வேகமாகவும், சக்தியுடனும் தன்னை நோக்கி இப்படி விரைந்துவரும் அந்தப் பாண்டவக் காளையை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(24)

நூறு பேரிகைகளின் ஒலிக்கு ஒப்பான வெடிப்பொலி கொண்ட தன் சங்கை முழங்கிய கர்ணன், ஆர்ப்பரிக்கும் கடலைப் போலப் பீமனை ஆதரித்து வந்த படையை மகிழ்ச்சியாகக் கலங்கடித்தான்.(25) யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படை வீரர்களைக் கொண்ட தனது படை கர்ணனால் இப்படிக் கலங்கடிக்கப்படுவதைக் கண்ட பீமன், முன்னவனை {கர்ணனை} அணுகி தன் கணைகளால் அவனை மறைத்தான்.(26) பிறகு கர்ணன் அன்னங்களின் நிறங்கொண்ட தன் குதிரைகளை, கரடிகளின் நிறங்கொண்ட பீமனுடையவையுடன் {பீமனின் குதிரைகளுடன்} கலக்கச் செய்து, தன் கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனை} மறைத்தான்.(27) கரடிகளின் நிறத்தையும், காற்றின் வேகத்தையும் கொண்ட அக்குதிரைகள், அன்னங்களின் நிறத்தைக் கொண்ட கர்ணனுடையவையுடன் {கர்ணனின் குதிரைகளுடன்} கலந்ததைக் கண்டு உமது துருப்புகளுக்கு மத்தியில் "ஓ" என்றும், "ஐயோ" என்றும் கூச்சல்கள் எழுந்தன.(28) காற்றின் வேகத்தைக் கொண்ட அக்குதிரைகள் இப்படி ஒன்றாகக் கலந்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் ஒன்று கலந்திருக்கும் வெள்ளை மற்றும் கருப்பு மேகங்களைப் போல மிக அழகாகத் தெரிந்தன.(29)

கர்ணன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் கோபத்தால் தூண்டப்பட்டிருப்பதைக் கண்ட உமது படையின் பெரும் தேர்வீரர்கள் அச்சத்தால் நடுங்கத் தொடங்கினர்.(30) அவர்கள் போரிட்ட போர்க்களமானது விரைவில் யமனின் கொற்றங்களைப் போலப் பயங்கரமாக மாறியது. உண்மையில் அஃது, ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இறந்தோரின் மன்னனுடைய {யமனின்} நகரத்தைப் போலக் காண்பதற்கு மிகப் பயங்கரமாக மாறியது.(31) உமது படையின் பெரும் தேர்வீரர்கள், ஏதோ விளையாட்டுக் களத்தின் பார்வையாளர்களைப் போல அக்காட்சியைப் பார்த்தும், அந்தப் பயங்கர மோதலில் அந்த இருவரில் எவரும் மற்றவர் மேல் ஆதிக்கம் பெறுவதைக் காணவில்லை.(32) ஓ! மன்னா, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்கள், உம்முடைய மற்றும் உமது மகன்களின் தீய கொள்கையின் விளைவால் அவ்விரு வீரர்களின் வலிமைமிக்க ஆயுதங்களின் மோதல்களையும், அந்தக் கலப்பையும் மட்டுமே கண்டனர்.(33) எதிரிகளைக் கொல்பவர்களான அவ்விருவரும் தங்கள் கூரிய கணைகளால் ஒருவரையொருவர் மறைப்பதையே தொடர்ந்தனர். அற்புத ஆற்றலைக் கொண்ட அவ்விருவரும் தங்கள் கணைமாரியால் ஆகாயத்தையே நிறைத்தனர்.(34)

வலிமைமிக்க அவ்விரு தேர்வீரர்களும் ஒருவரையொருவர் உயிரை எடுக்க விரும்பி ஒருவரின் மேல் ஒருவர் கூரிய கணைகளை ஏவிக்கொண்டு, மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகங்களைப் போலப் பார்ப்பதற்கு மிக அழகாக மாறினர்.(35) எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகளை ஏவி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க விண்கற்களைக் கொண்டுள்ளதைப் போல ஆகாயத்தைப் பிரகாசமாக்கினர்.(36) அவ்விரு வீரர்களாலும் ஏவப்பட்டவையும், கழுகின் இறகுகளைக் கொண்டவையுமான அக்கணைகள், கூதிர்காலத்து வானில் திரியும் உற்சாகமான நாரைகளின் வரிசைகளைப் போலத் தெரிந்தன.(37)

அதேவேளையில், , கிருஷ்ணனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {பீமன்}, சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} போரில் ஈடுபடுவதைக் கண்டு, அந்தச் சுமையானது பீமன் தாங்கிக் கொள்வதற்கு மிகப் பெரியது எனக் கருதினர்.(38) ஒருவரின் கணைகளை மற்றவர் கலங்கடிப்பதற்காகக் கர்ணனும், பீமனும் ஒருவர் மேல் ஒருவர் இக்கணைகளை ஏவியபோது, யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்கள் பலர் இதனால் தாக்கப்பட்டு உயிரை இழந்து கீழே விழுந்தனர்.(39) எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் அப்படி விழுந்ததன் விளைவாலும், விழுந்த உயிரினங்கள் உயிரை இழந்ததாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் படையில் ஒரு பேரழிவு ஏற்பட்டது.(40) விரைவில் அந்தப் போர்க்களமானது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவற்றின் உயிரற்ற உடல்களால் மறைக்கப்பட்டது" {என்றான் சஞ்சயன்}.(41)
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment