மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-302
துரோண பர்வம்
….
தம்பிகள் பதினொருவரைக் கொன்ற பீமன்!
..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பாண்டவர்களின் படை இப்படி அனைத்துப் பக்கங்களிலும் கலங்கடிக்கப்பட்ட போது, பார்த்தர்களும், பாஞ்சாலர்களும் வெகு தொலைவுக்குத் திரும்பி ஓடினர். மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், யுக முடிவில் ஏற்படுவதைப் போல உலகளாவிய பேரழிவை ஏற்படுத்திய அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்த போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உண்மையில் துரோணர் மீண்டும் மீண்டும் சிங்க முழக்கங்களிட்ட போது, பாஞ்சாலர்கள் பலவீனப்படுத்தப்பட்டுப் பாண்டவர்கள் கொல்லப்பட்ட போது, அந்தப் போரில் ஏற்படும் துயருக்கு எந்தப் புகலிடத்தையும் காணத்தவறிய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காரியம் எப்படி முடியப்போகிறது எனச் சிந்திக்கத் தொடங்கினான்.
சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} காண எதிர்பார்த்துச் சுற்றிலும் கண்களைச் செலுத்தினாலும், யுதிஷ்டிரன், அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனையோ {அர்ஜுனனையோ}, மாதவனையோ {சாத்யகியையோ} காணவில்லை. மனிதர்களில் புலியும், குரங்குக் கொடியோனுமான அந்த அர்ஜுனனைக் காணாமல், காண்டீவத்தின் நாணொலியைக் கேட்காமல் அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} கவலையில் நிறைந்தான். மேலும், விருஷ்ணிகளின் தேர்வீரர்களில் முதன்மையான சாத்யகியையும் காணாமல், மன்னன் யுதிஷ்டிரன் அதே போன்ற கவலையையே அடைந்தான். உண்மையில், மனிதர்களில் முதன்மையான அவ்விருவரையும் காணாத யுதிஷ்டிரன் அமைதி எதையும் அடையவில்லை. உயர் ஆன்மாவும், வலிமைமிமிக்கக் கரங்களையும் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், உலகின் தீச்சொல்லிற்கு அஞ்சி சாத்யகியின் தேரை நினைக்கத் தொடங்கினான்.
'உண்மையான ஆற்றலைக் கொண்டவனும், நண்பர்களின் அச்சங்களை விலக்குபவனும், சிநியின் பேரனுமான சாத்யகி, என்னால் அர்ஜுனனின் பாதையில் {அவனைப் பின்தொடர்ந்து} அனுப்பப்பட்டான். முன்பு எனக்கு ஒரு கவலையே இருந்தது, இப்போது இரண்டைக் கொண்டிருக்கிறேன். சாத்யகி மற்றும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரைக் குறித்த செய்திகளையும் நான் பெற வேண்டும். அர்ஜுனனின் பாதையில் பின்தொடர்ந்து செல்ல சாத்யகியை அனுப்பிய பிறகு, இப்போது சாத்யகியின் பாதையில் யாரை அனுப்புவேன்? நான் யுயுதானனை {சாத்யகியைக்} குறித்து விசாரிக்காமல் {தேடாமல்}, என் தம்பி {அர்ஜுனன்} குறித்து மட்டுமே அனைத்து வழிகளிலும் அறிய முயன்றால் {தேடினால்} உலகத்தோர் என்னை நிந்திப்பர்.
அவர்கள், "தர்மனின் மகனான யுதிஷ்டிரன், தன் தம்பியை {அர்ஜுனனை மட்டும்} விசாரித்தான், தவறாத ஆற்றலைக் கொண்டவனும், விருஷ்ணி குலத்து வீரனுமான சாத்யகியை விதியின் வசத்தில் விட்டுவிட்டான்" என்பார்கள். எனவே, உலக்கத்தோர் நிந்தனைக்கு அஞ்சும் நான், பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரனை {பீமனை} உயர் ஆன்ம சாத்யகியின் பாதையில் அனுப்ப வேண்டும். சாத்வத குலத்தின் வெல்லப்படாத விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} மேல் நான் கொண்ட அன்பு, எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன் மேல் கொண்ட என் அன்புக்குச் சற்றும் குறைந்ததல்ல. மேலும் சிநிக்களை மகிழ்விப்பவனான அவன், பெரும் பணியில் என்னால் ஈடுபடுத்தப்பட்டான். எனினும் அந்த வலிமைமிக்க வீரன் {சாத்யகி}, ஒரு நண்பனின் வேண்டுகோளுக்காகவோ, கௌரவத்திற்காகவோ பெருங்கடலுக்குள் புகும் ஒரு மகரத்தைப் போலப் பாரதப் படைக்குள் ஊடுருவினான். பெரும் நுண்ணறிவு கொண்ட அந்த விருஷ்ணி வீரனை எதிர்த்து ஒன்றுகூடிப் போரிடும் பின்வாங்காத வீரர்களின் ஒலி பெரிதாக இருப்பதை நான் கேட்கிறேன். அவனுக்கு அவர்கள் அதிகமானவர்களே என்பதில் ஐயமில்லை. எனவே, அவனைக் காக்க நான் நினைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
வலிமைமிக்கவர்களான அவ்விரு தேர் வீரர்களும் எங்கிருக்கிறார்களோ அங்கே வில்தரித்தவனும், பாண்டுவின் மகனுமான பீமசேனன் செல்ல வேண்டும் என்றே எனக்குத் தெரிகிறது. பீமனால் தாங்கிக் கொள்ள முடியாதது என இவ்வுலகில் ஏதும் இல்லை. தீர்மானத்துடன் அவன் {பீமன்} போராடினால், உலகில் உள்ள வில்லாளிகள் அனைவருக்கும் போரில் அவன் இணையானவனாவான். தன் கரத்தின் பலத்தை நம்பியே அவனால் {பீமனால்} அனைத்து எதிரிகளையும் எதிர்த்து நிற்க முடியும். அந்த உயர்ஆன்ம போர்வீரனுடைய {பீமனுடைய} கரங்களின் பலத்தைக் கொண்டே நாம் வனவாசத்தில் இருந்து மீண்டு வந்தோம். போரில் நாம் எப்போதும் வெல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறோம். எனவே, பாண்டுவின் மகனான பீமசேனன் சாத்யகியிடம் சென்றால், சாத்யகி மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் உண்மையான உதவியைப் பெறுவார்கள். சாத்யகி மற்றும் பல்குனனைக் {அர்ஜுனனைக்} குறித்து நான் எந்தக் கவலையும் அடைய வேண்டியதில்லை என்பதிலும் ஐயமில்லை. அவ்விருவரும் ஆயுதங்களில் சாதித்தவர்களாவர், மேலும் வாசுதேவனே {கிருஷ்ணனே} அவர்களைப் பாதுகாக்கிறான். (இவ்வளவு இருந்தும், அவர்கள் குறித்து நான் கவலையையடைகிறேன்). நிச்சயம் நான் என் கவலையை விலக்க முயலவேண்டும். எனவே, சாத்யகியைப் பின்தொடர்ந்து செல்லும்படி பீமனை நான் அனுப்ப வேண்டும். இதைச் செய்த பிறகே, சாத்யகியைக் காக்கும் என் ஏற்பாடுகள் முழுமையடைந்ததாக என்னால் கருத முடியும்" என்று நினைத்தான் {யுதிஷ்டிரன்}.
மனதில் இதைத் தீர்மானித்துக் கொண்ட தர்மனின் மகனான யுதிஷ்டிரன், தன் தேரோட்டியிடம், "பீமனிடம் என்னை அழைத்துச் செல்வாயாக" என்றான். குதிரைகளின் தன்மைகள் நன்கறிந்தவனான அந்தத் தேரோட்டி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் ஆணையைக் கேட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தேரை பீமன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சென்றான். பீமனின் முன்னிலையை அடைந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அத்தருணத்தை நினைத்து துயரால் நிலையழிந்து, பல்வேறு கோரிக்கைகளால் பீமனை நெருக்கினான். உண்மையில், துயரில் நிறைந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} பீமனிடம் பேசினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குந்தியின் மகனான யுதிஷ்டிரன், இந்த வார்த்தைகளையே அவனிடம் {பீமனிடம் சொன்னான்}, "ஓ! பீமா, தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய அனைவரையும் எதிர்த்து ஒரே தேரில் சென்று வென்ற அர்ஜுனனின் கொடிமரத்தை நான் காணவில்லை" என்றான்.
அப்போது பீமசேனன், இத்தகு பரிதாப நிலையில் இருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம், "இப்படி உற்சாகமற்றதன்மையால் பீடிக்கப்பட்ட உமது வார்த்தைகளை இதற்கு முன்னர் எப்போதுமே நான் கேட்டதோ, கண்டதோ இல்லை. உண்மையில், முன்னர் நாம் துயரால் பீடிக்கப்பட்ட போது, நீரே எங்களுக்கு ஆறுதலளித்தீர். எழுவீர், ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, எழுவீராக, நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்? ஓ! கௌரவங்களை அளிப்பவரே, என்னால் செய்ய முடியாததென ஏதுமில்லை. ஓ! குருகுலத்தின் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, உமது ஆணைகள் யாவை என்பதை எனக்குச் சொல்வீராக. உமது இதயத்தைத் துயரில் நிலைக்கச் செய்யாதீர்" என்றான்.
கவலை நிறைந்த முகத்துடனும், கண்ணீரில் குளித்த கண்களுடனும் கூடிய மன்னன் {யுதிஷ்டிரன்}, கருநாகமொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டே பீமசேனனிடம், "உலகம் பரந்த புகழைக் கொண்ட வாசுதேவனால் கோபத்துடன் முழக்கப்படும் சங்கான பாஞ்சஜன்யத்தின் வெடிப்பொலிகள் கேட்கப்படுகின்றன. இதன் மூலம், உன் தம்பியான தனஞ்சயன் {அர்ஜுனன்}, களத்தில் உயிரையிழந்து கிடக்கிறான் என்றே தெரிகிறது. அர்ஜுனன் கொல்லப்பட்டதும் ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} போரிடுகிறான் என்பதில் ஐயமில்லை. எவனுடைய ஆற்றலால் பாண்டவர்கள் உயிரோடிருக்கிறார்களோ, தேவர்கள், ஆயிரங்கண்களைக் கொண்ட தங்கள் தலைவனை {இந்திரனை} நோக்கித் திரும்புவதைப் போல, நமக்கு அச்சம் நேரும் காலங்களிலெல்லாம் நாம் எவனை நோக்கித் திரும்புவோமோ அந்தப் பெரும் வலிமைமிக்க வீரன் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைத்} தேடி பாரதப் படைக்குள் ஊடுருவினான்.
அவன் {அர்ஜுனன்} சென்றான் என்பதை நான் அறிவேன், ஓ! பீமா, ஆனால் அவன் {அர்ஜுனன்} இன்னும் திரும்பவில்லை. நிறத்தால் கறுமையும், வயதால் இளமையும், சுருள் முடியும் கொண்டவனும், வலிமைமிக்க மிக அழகிய தேர்வீரனும், அகன்ற மார்பு, நீண்ட கரங்கள், மதயானைக்கு ஒப்பான நடை ஆகியவற்றைக் கொண்டவனும், சக்கரத்தைப் போன்றவையும், புடம்போட்ட தாமிரத்தின் நிறத்தாலானவையுமான கண்களைக் கொண்டவனுமான அந்த உன் தம்பி {அர்ஜுனன்} எதிரிகளின் அச்சங்களை அதிகரித்தான். நீ அருளப்பட்டிருப்பாயாக, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, இதுவே என் துயரின் காரணம். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அர்ஜுனனுக்காகவும், சாத்வதனுக்காகவும், தெளிந்த நெய் காணிக்கையால் ஊட்டப்படும் சுடர்மிக்க நெருப்பைப் போல என் துன்பம் அதிகரிக்கிறது. நான் அவனது {அர்ஜுனனது} கொடிமரத்தைக் காணவில்லை. இதனாலேயே நான் கவலையால் மலைத்துப் போகிறேன். அவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டிருப்பான் என்பதிலும், போரில் திறன்மிக்கக் கிருஷ்ணன் போரிடுகிறான் என்பதிலும் ஐயமில்லை. மனிதர்களில் புலியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சாத்வதனும் {சாத்யகியும்} கொல்லப்பட்டிருப்பான் என்பதிலும் ஐயமில்லை. ஐயோ, சாத்யகி, வலிமைமிக்கத் தேர்வீரனான உன் தம்பியைப் பின்தொடர்ந்தே சென்றான். சாத்யகியைக் காணாமலும் துயரால் நான் மலைத்துப் போகிறேன்.
எனவே, ஓ! குந்தியின் மகனே {பீமா}, உண்மையில், என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவது உன் கடமை என நீ நினைத்தால், வலிமையும், சக்தியும் கொண்ட தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, சாத்யகியும் எங்கிருக்கின்றனரோ அங்கே செல்வாயாக. நான் உன் அண்ணன் என்பதை நினைவில் கொள்வாயாக. அர்ஜுனனை விடச் சாத்யகியே உனக்கு அன்புக்குரியவன் என நீ நினைப்பாயாக. ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே பீமா}, சாத்யகி எனக்கு நன்மை செய்ய விரும்பி இழிந்தோரால் நடக்க முடியாத அர்ஜுனனின் பாதையைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறான். இரு கிருஷ்ணர்களையும் {அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இரு கருப்பர்களையும்} சாத்வத குலத்தின் சாத்யகியையும் நலமாகவும், முழுமையாகவும் கண்டதும், ஓ! பாண்டுவின் மகனே {பீமா} சிங்க முழக்கம் எழுப்பிச் செய்தியை எனக்கு அனுப்புவாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}.
பீமன் {யுதிஷ்டிரனிடம்}, "முன்னர் எந்தத் தேர் பிரம்மன், ஈசானன், இந்திரன், வருணன் ஆகியோரை (போருக்குத்) தாங்கிச்சென்றதோ, அதே தேரில் ஏறியே இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்களான, அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன்} சென்றிருக்கின்றனர். {எனவே} அவர்களுக்கு எந்த ஆபத்திலும் அச்சமேற்படாது. எனினும், உமது ஆணையை என் சிரம் மேல் கொண்டு இதோ நான் செல்கிறேன். வருந்தாதீர். அந்த மனிதர்களில் புலிகளைச் சந்தித்ததும், உமக்குத் தகவலை அனுப்புகிறேன்" என்றான் {பீமன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இந்த வார்த்தைகளைச் சொன்ன வலிமைமிக்கப் பீமன், திருஷ்டத்யும்னனிடமும், (பாண்டவக் காரியத்திற்காகப் போராடும்) இன்னும் பிற நண்பர்களிடமும் மீண்டும் மீண்டும் {சொல்லி} யுதிஷ்டிரனை {யுதிஷ்டிரனின் பாதுகாப்பை} ஒப்படைத்துவிட்டுப் புறப்படத் தொடங்கினான். உண்மையில், வலிமையும் பலமும் கொண்ட அந்தப் பீமசேனன், திருஷ்டத்யும்னனிடம், "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் எப்படி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரைப் பிடிக்க எப்போதும் விழிப்புடனே இருக்கிறார் என்பது நீ அறிந்ததே. உண்மையில், ஓ! பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, மன்னரைக் {யுதிஷ்டிரரைக்} காக்கும் என் கடமைக்கு மேலாக (அர்ஜுனன் மற்றும் சாத்யகியிடம்) நான் செல்லவே கூடாது. எனினும், மன்னர் யுதிஷ்டிரரே என்னைப் போகுமாறு உத்தரவிட்டிருக்கிறார், {எனவே} நான் அவருடன் {யுதிஷ்டிரருடன்} முரண்படத் துணிய மாட்டேன். மரணத்தின் விளிம்பில் உள்ள சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} எங்கிருக்கிறானோ அங்கே நான் செல்வேன். முழுமையான வாய்மையுடன் {மனநேர்மையுடன்} [1] என் தம்பி (அர்ஜுனன்) மற்றும் பெரும் நுண்ணறிவைக் கொண்ட சாத்யகி ஆகியோரின் வார்த்தைகளின் படியே நான் செயல்பட வேண்டும். எனவே, இன்று நீ பிருதையின் {குந்தியின்} மகனான யுதிஷ்டிரரைப் பாதுகாக்க கடுந்தீர்மானத்துடன் போரிட வேண்டும். அனைத்துப் பணிகளை விடவும் போரில் இதுவே உனது உயர்ந்த கடமையாகும்" என்றான் {பீமன்}.
[1] இங்கே என் அண்ணன் யுதிஷ்டிரன் என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். வேறொரு பதிப்பில், "தர்மராஜரின் சொற்படி சந்தேகமின்றி இருக்க வேண்டும். நான் சகோதரனான அர்ஜுனன், புத்திசாலியான சாத்வதன் இவர்களுடைய வழியிற்செல்வேன்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், "அறம்சார்ந்த மன்னரான யுதிஷ்டிரருடைய ஆணையின் ஒவ்வொரு எழுத்தையும் பின்பற்றுவது எனது கடமையாகும். என் தம்பியும் {அர்ஜுனனும்}, சாத்வத குலத்தின் நுண்ணறிவு கொண்ட வாரிசான சாத்யகியும் சென்ற பாதையில் நான் செல்லப் போகிறேன்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் வார்த்தைகளே சரியானவையாக இருக்க வேண்டும்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விருகோதரனால் {பீமனால்} இப்படிச் சொல்லப்பட்ட திருஷ்டத்யும்னன், "உமது விருப்பத்தை நான் செய்வேன். ஓ! பிருதையின் மகனே {பீமரே}, எவ்வகையிலான கவலையுமில்லாமல் செல்வீராக. போரில் திருஷ்டத்யும்னனைக் கொல்லாமல், துரோணரால் மன்னர் யுதிஷ்டிரரைப் போரில் அவமதிக்க {கீழ்ப்படுத்த} முடியாது" என்றான்.
இப்படியே பாண்டுவின் அரச மகனை {யுதிஷ்டிரனை} திருஷ்டத்யும்னனிடம் ஒப்படைத்துவிட்டு, தன் அண்ணனை வணங்கிய பீமசேனன், பல்குனன் {அர்ஜுனன்} எங்கிருந்தானோ அவ்விடத்தை நோக்கிச் சென்றான். எனினும், அவனை {பீமனை} அனுப்புவதற்கு முன்னர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பீமசேனனைக் கட்டித்தழுவி, அவனது உச்சியை முகர்ந்து, அவனுக்கு நல்லாசிகளை வழங்கினான். பிறகு அந்த வீரன் {பீமன்}, பிராமணர்கள் பலரை வலம் வந்து, வழிபாட்டாலும், தானங்களாலும் {பிராமணர்களை} மனநிறைவு செய்து, எட்டு மங்கலப் பொருட்களைத் [2] தொட்டு, கைராதகத் தேனைப் பருகியதால், போதையால் கடைக்கண்கள் சிவந்து, தன் வலிமை இரட்டிப்பானதை உணர்ந்தான் [3]. பிராமணர்கள் அவனுக்குப் {பீமனுக்குப்} பரிகாரச் சடங்குகளைச் செய்தனர். வெற்றியைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் அவனை {பீமனை} வரவேற்றன. அவற்றைக் கண்ட அவன் {பீமன்} தான் எதிர்பார்க்கும் வெற்றியால் மகிழ்ச்சியை உணர்ந்தான். அவனது வெற்றியைக் குறிக்கும்படி சாதகமான காற்றும் வீசத் தொடங்கியது.
[2] எட்டு மங்கலமான பொருட்களாவன: நெருப்பு, பசு, தங்கம், அறுகம்புல், கோரோசனை {மாட்டின் வயிற்றில் உள்ள பித்தப்பை கல்}, அமிருதம் {பசுவின் பால்}, அக்ஷதம் {அரிசி}, தயிர் ஆகியனவாகும்.
[3] வேறொரு பதிப்பில் இவ்வரி, "குந்தியினடத்தில் வாயுவினால் உண்டுபண்ணப்பட்டவனும், ரதிகர்களுள் உத்தமனும், வீரனும், மகாபாகுபலமுள்ளவனுமான பீமசேனன், தர்மராஜரால் கட்டித்தழுவி அவ்வாறே உச்சிமோந்து மங்களகரமான ஆசீர்வாதங்கள் செய்யப்பெற்று, அர்ச்சிக்கப்பட்டவர்களும் சந்தோஷமுள்ள மனத்தையுடையவர்களுமான பிராம்மணர்களைப் பிரதிக்ஷிணம் செய்து எட்டு மங்களத் திரவியங்களைத் தொட்டு கைராதமென்கிற மதுவைப் பானஞ்செய்து, மதத்தினால் கடைக்கண்கள் சிவந்து இரண்டு மடங்கு பலமுள்ளவனான்" என்றிருக்கிறது.
தேர்வீரர்களில் முதன்மையானவனும், கவசந்தரித்தவனும், காதுகுண்டலங்கள் மற்றும் அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், தோலுரைகளால் தன் கைகள் மறைக்கப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன் தன் அற்புதத் தேரில் ஏறினான். எஃகால் ஆனதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அவனது {பீமனது} விலையுயர்ந்த கவசமானது, மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகத்தைப் போலவே தெரிந்தது. மஞ்சள், சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஆடைகளால் அவனது {பீமனது} உடல் அழகாக மறைக்கப்பட்டிருந்தது. கழுத்தையும் பாதுகாத்த வண்ணமயமான மார்புக்கவத்தை {கண்டஸூத்திரத்தை} அணிந்திருந்த பீமசேனன், வானவில்லால் அலங்கரிக்கப்பட்ட மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். போரிடும் விருப்பத்தால் உமது துருப்புகளுக்கு எதிராகப் பீமசேனன் புறப்படும் சமயத்தில், {கிருஷ்ணனின் சங்கான} பாஞ்சஜன்யத்தின் கடும் வெடிப்பொலிகள் மீண்டும் கேட்கப்பட்டன.
மூவுலகங்களையும் அச்சத்தில் நிறைக்க வல்ல பயங்கரமான வெடிப்பொலிகளை உரக்கக் கேட்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் பீமசேனனிடம், "அங்கே, விருஷ்ணி வீரன் {கிருஷ்ணன்} தன் சங்கைக் கடுமையாக முழங்குகிறான். உண்மையில் அந்தச் சங்குகளின் இளவரசன் {பாஞ்சஜன்யம்} தன்னொலியால் பூமியையும் ஆகாயத்தையும் நிறைக்கிறான். சவ்யசச்சின் {அர்ஜுனன்} பெரும் துயரில் வீழ்ந்திருக்கிறான் என்பதிலும், சங்கு மற்றும் கதாயுதம் தரித்தவன் {கிருஷ்ணன்} குருக்கள் அனைவருடனும் போரிடுகிறான் என்பதிலும் ஐயமில்லை. மதிப்புக்குரிய குந்தியும், திரௌபதியும், சுபத்திரையும், தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இன்று மங்கலமற்ற சகுனங்களையே அதிகமாகக் காண்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ! பீமா, தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கிருக்கிறானோ அங்கே வேகமாகச் செல்வாயாக. தனஞ்சயனைக் காண வேண்டும் என்ற என் (நிறைவற்ற) விருப்பத்தாலும், சாத்வதனின் {சாத்யகியின்} காரணமாகவும், ஓ! பார்த்தா {பீமா}, திசைகளின் புள்ளிகள் அனைத்தும் என் கண்களுக்கு வெறுமையாகத் தெரிகின்றன" என்றான் {யுதிஷ்டிரன்}.
தனக்கு மூத்தவனால் {யுதிஷ்டிரனால்} மீண்டும் மீண்டும் தூண்டப்பட்டவனும், பாண்டுவின் வீர மகனுமான பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கைகளில் தோலுறையை அணிந்து கொண்டு தன் வில்லை எடுத்துக் கொண்டான். தன் அண்ணனின் {யுதிஷ்டிரனின்} நன்மையில் அர்ப்பணிப்புள்ளவனும், தன் அண்ணனால் தூண்டப்பட்ட தம்பியுமான பீமசேனன் துந்துபிகளை முழக்கச் செய்தான். தன் சங்கையும் பலமாக ஊதிய பீமன், சிங்க முழக்கங்களைச் செய்தபடியே தன் வில்லில் நாணொலியை எழுப்பத் தொடங்கினான். அந்தச் சிங்க முழக்கங்களால் பகை வீரர்களுடைய இதயங்களின் ஊக்கத்தைக் கெடுத்த அவன் {பீமன்}, பயங்கரமான வடிவத்தை ஏற்றுத் தன் எதிரிகளை நோக்கி விரைந்தான். வேகமானவையும், நன்கு பழக்கப்பட்டவையும், கடுமையான கனைப்பொலிகளைக் கொண்டவையும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தவையுமான குதிரைகள் அவனைச் {பீமனைச்} சுமந்து சென்றன. காற்று அல்லது மனோ வேகத்தைக் கொண்ட அவற்றின் கடிவாளங்கள் {பீமனின் தேரோட்டியான} விசோகனால் பற்றப்பட்டிருந்தன. அப்போது அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் பீமன்}, தன் வில்லின் நாணை பெரும் பலத்துடன் இழுத்து, அங்கே இருந்த போராளிகளைத் துளைத்தும், சிதைத்தும், பகைவருடைய வியூகத்தின் தலையை {முகப்பை} நசுக்கத் தொடங்கினான். அப்படி அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {பீமன்} சென்ற போது, மகவத்தை {இந்திரனைப்} பின்தொடரும் தேவர்களைப் போலத் துணிச்சல்மிக்கவர்களான பாஞ்சாலர்களும், சோமகர்களும் அவனுக்குப் {பீமனுக்குப்} பின்னால் தொடர்ந்து சென்றனர்.
அப்போது சகோதரர்களான துச்சாசனன், சித்திரசேனன், குண்டபேதி, விவிம்சதி, துர்முகன், துஸ்ஸஹன், {விகர்ணன்}, சலன், விந்தன், அனுவிந்தன், சுமுகன், தீர்க்கபாகு, சுதர்சனன், {பிருந்தாரகன் [மந்துரகஸ்]}, சுஹஸ்தன், சுஷேணன், தீர்க்கலோசனன், அபயன், ரௌத்ரகர்மன், சுவர்மன், துர்விமோசனன் ஆகியோர் {21 இருபத்தொருவரும்} [4] பீமசேனனைச் சூழ்ந்து கொண்டனர். முதன்மையான தேர்வீரர்களும், பிரகாசமாகத் தெரிந்தவர்களுமான இந்த வீரர்கள் அனைவரும், உறுதியுடன் போரிடும் தீர்மானத்துடன், தங்கள் துருப்புகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோருடன் சேர்ந்து பீமசேனனை எதிர்த்து விரைந்தனர்.
[4] கங்குலியில் விகர்ணன் மற்றும் பிருந்தாகரனின் பெயர்கள் விடுபட்டிருக்க வேண்டும். வேறொரு பதிப்பில் அவர்களது பெயரும் இடம்பெறுகின்றன. மன்மதநாத தத்தரின் பதிப்பில் விகர்ணனின் பெயர் இருக்கிறது, ஆனால் பிருந்தாரகனுக்குப் பதில் மந்துரகஸ் என்ற பெயர் இருக்கிறது.
வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனும், குந்தியின் மகனுமான அந்த வீரப் பீமசேனன் இப்படிச் சூழப்பட்டதும், அவர்கள் மீது தன் கண்களைச் செலுத்தி, சிறு விலங்குகளை எதிர்க்கும் சிங்கத்தின் வேகத்துடன் அவர்களை எதிர்த்து விரைந்தான். அவ்வீரர்கள், வலிமைமிக்க தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்தி உதயச் சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலக் கணைகளால் பீமனை மறைத்தனர். வேகத்துடன் அவ்வீரர்கள் அனைவரையும் கடந்த பீமசேனன், துரோணரின் படைப்பிரிவை எதிர்த்து விரைந்து, தன் எதிரே இருந்த யானைப் படையைக் கணைமாரியால் மறைத்தான். வாயு தேவனின் மகன் {பீமன்} தன் கணைகளால் சிதைத்ததும், அந்த யானை படைப்பிரிவு கிட்டத்தட்ட நேரமேதும் எடுத்துக் கொள்ளாமல் அனைத்துத் திசைகளிலும் சிதறியது. உண்மையில், காட்டில் சரபத்தின் முழக்கத்தைக் கேட்டு அஞ்சும் விலங்குகளைப் போல, அந்த யானைகள் அனைத்தும் பயங்கரமாகப் பிளிறிக் கொண்டே தப்பி ஓடின. அந்தக் களத்தை வேகமாகக் கடந்த அவன் {பீமன்} துரோணரின் படைப்பிரிவை அடைந்தான்.
அப்போது அந்த ஆசான் {துரோணர்}, பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போல அவனது {பீமனது} வழியைத் தடுத்தார். சிரித்துக் கொண்டே அவர் {துரோணர்}, ஒரு கணையால் பாண்டுவின் மகனுடைய முன்நெற்றியைத் தாக்கினார். அதன்பேரில், அந்தப் பாண்டுவின் மகன் மேல்நோக்குக் கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். அந்த ஆசான் {துரோணர்}, முன்னர்ப் பல்குனன் {அர்ஜுனன்} செய்ததைப் போலப் பீமனும் தன்னிடம் மரியாதை காட்டுவான் என்று நினைத்தார். விருகோதரனிடம் {பீமனிடம்} பேசிய அவர் {துரோணர்}, "ஓ! பீமசேனா, போரில் உன் எதிரியான என்னை வெல்லாமல், பகைவரின் படைக்குள் நுழைவது உன் சக்திக்கு அப்பாற்பட்டது. கிருஷ்ணனுடன் கூடிய உன் தம்பி {அர்ஜுனன்} என் அனுமதியுடன் இந்தப் படைக்குள் நுழைந்தாலும், அப்படிச் செய்வதில் உன்னால் வெல்ல முடியாது" என்றார்.
ஆசானின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அச்சமற்ற பீமன், கோபத்தால் தூண்டப்பட்டு, ரத்தம், அல்லது புடம்போட்ட தாமிரத்தைப் போன்ற சிவந்த கண்களுடன் துரோணரிடம் மறுமொழியாக, "ஓ! இழிந்த பிராமணரே {பிரம்மபந்துவே}, உமது அனுமதியுடன் இந்தப் படைக்குள் நுழையும் அவசியம் அர்ஜுனனுக்கு இல்லை. அவன் வெல்லப்பட முடியாதவனாவான். சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலான படைக்குள்ளேயே அவனால் {பீமனால்} ஊடுருவ முடியும். அவன் {அர்ஜுனன்} உம்மை மரியாதையுடன் வணங்கியிருந்தால், அஃது உம்மைக் கௌரவப் படுத்துவதற்காக மட்டுமே ஆகும். ஆனால், ஓ! துரோணரே, நான் அர்ஜுனனைப் போன்று கருணையுள்ளவன் அல்ல என நீர் என்னை அறிவீராக. மறுபுறம் நான் உமது எதிரியான பீமசேனன் ஆவேன். நாங்கள் உம்மைத் தந்தையாகவும், ஆசானாகவும், நண்பராகவும் கருதுகிறோம். எங்களை நாங்கள் உமது மகன்களாகவே காண்கிறோம். அப்படி நினைத்தே நாங்கள் உம்மிடம் எப்போதும் பணிவாக நடக்கிறோம். எனினும், இன்று இத்தகு வார்த்தைகளை நீர் எங்களிடம் பயன்படுத்தும்போது, அவை அனைத்தும் மாறிவிட்டதாகவே தெரிகிறது. நீர் உம்மை எங்களது எதிரியாகக் கருதிக் கொண்டால், நீர் நினைப்பது போல அப்படியே ஆகட்டும். பீமனைத் தவிர வேறு எவனுமாக இல்லாத நான், ஓர் எதிரியிடம் எப்படி நான் நடந்து கொள்ள வேண்டுமோ அப்படியே தற்போது உம்மிடம் நடந்து கொள்வேன்" என்றான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன பீமன், தன் கதாயுதத்தைச் சுழற்றிக் கொண்டு, மரணக்கோலைச் சுழற்றும் யமனைப் போல அதைத் துரோணரின் மீது வீசினான். எனினும், துரோணர் (தன் பாதுகாப்பை நிச்சயித்துக் கொள்ளும் வகையில்) விரைவாகத் தன் தேரில் இருந்து கீழே குதித்தார். அந்தக் கதாயுதமோ குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரத்துடன் கூடிய துரோணரின் தேரைப் பூமியில் நசுக்கித் தரைமட்டமாக்கியது. பிறகு மரங்களைப் பலத்துடன் நசுக்கும் சூறாவளியைப் போல அந்தப் பீமன் எண்ணற்ற போர்வீரர்களை நசுக்கினான். அப்போது உமது மகன்கள், அந்த முதன்மையான தேர்வீரனை {பீமனை} மீண்டும் சூழ்ந்து கொண்டனர். அதேவேளையில், தாக்குபவர்களில் முதன்மையான துரோணர் மற்றொரு தேரில் ஏறிக் கொண்டு, வியூகத்தின் வாயிலுக்குச் சென்று போரில் அங்கேயே நிலைகொண்டார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்ட கோபக்கார பீமன், தன் முன்னே இருந்த தேர்ப்படையைத் தன் கணை மாரியால் மறைத்தான். பிறகு, போரில் இப்படித் தாக்கப்பட்டவர்களும், பெரும் பலத்தைக் கொண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான உமது மகன்கள் வெற்றி மீது கொண்ட விருப்பத்தால் பீமனுடன் போரிட்டனர்.
அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட துச்சாசனன், பீமசேனனைக் கொல்ல விரும்பி, முழுக்க இரும்பாலான கூரிய ஈட்டி ஒன்றை அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} மீது வீசினான். எனினும் பீமன், உமது மகனால் {துச்சாசனனால்} ஏவப்பட்டுத் தன்னை நோக்கி வந்த அந்தக் கடும் ஈட்டியை இரண்டாக வெட்டினான். இச்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது. பிறகு அந்த வலிமைமிக்கப் பாண்டுவின் மகன் {பீமன்}, மூன்று கூரிய கணைகள் பிறவற்றால் குண்டபேதி, சுஷேணன், தீர்க்கநேத்திரன் ஆகிய மூன்று சகோதரர்களைக் கொன்றான். மேலும் அவனுடன் {பீமனுடன்} போரிட்ட உமது வீர மகன்களுக்கு மத்தியில், குருக்களின் புகழை அதிகரிப்பவனான வீரப் பிருந்தாரகனைப் பீமன் கொன்றான். பிறகு பீமன், மேலும் மூன்று கணைகள் பிறவற்றால், அபயன், ரௌத்ரகர்மன் மற்றும் துர்விமோசனன் ஆகிய உமது மூன்று மகன்களைக் கொன்றான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்க வீரனால் இப்படிக் கொல்லப்பட்ட உமது மகன்கள், எதிரிகளைத் தாக்குபவனான பீமனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். பிறகு அவர்கள், கோடையின் முடிவில் மலைச் சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போல அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர். படைகளைக் கொல்பவனான அந்தப் பாண்டுவின் வாரிசு {பீமன்}, கல்மழையை ஏற்கும் ஒரு மலையைப் போல அந்தக் கணை மாரியை ஏற்றான். உண்மையில் அந்த வீரப் பீமன் எந்த வலியையும் உணரவில்லை. பிறகு அந்தக் குந்தியின் மகன் {பீமன்} சிரித்துக் கொண்டே, உமது மகன்களான விந்தன், அனுவிந்தன், சுவர்மன் ஆகியோரைத் தன் கணைகளின் மூலம் யமலோகத்திற்கு அனுப்பி வைத்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} உமது வீர மகன் சுதர்சனை அந்தப் போரில் விரைவாகத் துளைத்தான். அதன்பேரில் பின்னவன் கீழே விழுந்து இறந்தான் [5].
[5] சேனாதிபதி, ஜலசந்தன், சுஷேணன், உக்கிரன், வீரபாகு, பீமன், பீமரதன், சுலோசனன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 64ல் நான்காம் நாள் போரிலும், சுநாபன், ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 89ல் எட்டாம் நாள் போரிலும், வியுதோரோஷ்கன், அநாதிருஷ்டி, குண்டபேதின், விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்}, ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 97ல் எட்டாம் நாள் போரிலுமாக எனப் பீமன் இதற்கு முன் துரியோதனன் தம்பிகளில் மொத்தம் 24 பேரைக் கொன்றிருக்கிறான். இப்போது துரோண பர்வம் பகுதி 126ல் குண்டபேதி, சுஷேணன், தீர்க்கநேத்திரன், பிருந்தாரகன், அபயன், ரௌத்ரகர்மன், துர்விமோசனன், விந்தன், அனுவிந்தன், சுவர்மன், சுதர்சன் ஆகிய 11 பேரைக் கொன்றிருப்பதோடு சேர்த்தால், இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 35 பேரைக் கொன்றிருக்கிறான் பீமன்.
குறுகிய காலத்திற்குள் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் பார்வைகளை அந்தத் தேர்படையின் மீது செலுத்தி, தன் கணைகளின் மூலம் அஃதை அனைத்துத் திசைகளிலும் ஓடச் செய்தான். தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியையோ, உரத்த முழக்கத்தையோ கேட்டு அஞ்சும் மான்கூட்டத்தைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகன்கள், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் திடீரெனப் பிளந்து தப்பி ஓடினர். எனினும் அந்தக் குந்தியின் மகன் {பீமன்} உமது மகன்களின் அந்தப் பெரும்படையைத் தொடர்ந்து சென்று, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் கௌரவர்களைத் துளைக்கத் தொடங்கினான்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் இப்படிக் கொல்லப்பட்ட உமது படைவீரர்கள், அந்தப் பாண்டுவின் மகனை {பீமனைத்} தவிர்த்துவிட்டுத் தங்கள் சிறந்த குதிரைகளை மிக வேகமாகத் தூண்டி போரைவிட்டுத் தப்பி ஓடினர். பிறகு, வலிமைமிக்கப் பீமசேனன், போரில் அவர்களை வென்று சிங்க முழக்கங்கள் செய்து, தன் அக்குள்களை {தோள்களைத்} தட்டி பேரொலியை உண்டாக்கினான். மேலும் வலிமைமிக்கப் பீமசேனன், தன் உள்ளங்கைகளாலும் கடும் ஒலியை உண்டாக்கி, அதனால் தேர்ப்படையையும், அதிலிருந்த முதன்மையான தேர்வீரர்களையும் அச்சுறுத்தி (அவனால் வெல்லப்பட்ட) அந்தத் தேர்ப்படையைக் கடந்து துரோணரின் படைப்பிரிவை நோக்கிச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பாண்டுவின் மகன் {பீமன்} அந்தத் தேர்ப்படையைக் கடந்ததும், அவனது வழியைத் தடுக்க விரும்பிய ஆசான் துரோணர், சிரித்துக் கொண்டே கணை மாரிகளால் அவனை {பீமனை} மறைத்தார். துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளைக் குடித்து விடுபவனைப் போலத் தன் மாய சக்திகளால் மலைக்கச் செய்த பீமசேனன், தன் தம்பியரை (உமது மகன்களை) எதிர்த்து விரைந்தான். பிறகு, உமது மகன்களால் தூண்டப்பட்ட பெரும் வில்லாளிகளான மன்னர்கள் பலர் மூர்க்கமாக விரைந்து அவனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டனர்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களால் சூழப்பட்ட பீமன் சிரித்துக் கொண்டும், சிங்க முழக்கம் செய்து கொண்டும், படையணிகளை அழிக்கவல்ல ஒரு கடும் கதாயுதத்தை எடுத்து அவர்கள் மீது வீசினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனால் வீசப்பட்ட இந்திரனின் வஜ்ரத்தை {இடியைப்} போலவே கடினமான பலத்தைக் கொண்ட அந்தக் கதாயுதமானது, போரில் உமது படைவீரர்களை நசுக்கியது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது பேரொலியால் மொத்த உலகையும் நிறைப்பதாகத் தெரிந்தது. காந்தியால் சுடர்விட்ட அந்தக் கடும் கதாயுதமானது உமது மகன்களை அச்சுறுத்தியது. மூர்க்கமாகச் செல்வதும், மின்னலின் கீற்றுகளைக் கொண்டதுமான அந்தக் கதாயுதம் தங்களை நோக்கி வருவதைக் கண்ட உமது வீரர்கள் பயங்கரமாகக் கதறியபடியே தப்பி ஓடினர். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தக் கடும் கதாயுதத்தின் பொறுத்துக் கொள்ள முடியாத ஒலியால் மனிதர்கள் பலர் தாங்கள் எங்கே நின்றனரோ அங்கேயே விழுந்தனர், தேர்வீரர்கள் பலரும் தங்கள் தேர்களில் இருந்து கீழே விழுந்தனர். கதாயுதம் தரித்த பீமசேனனால் கொல்லப்பட்ட உமது வீரர்கள், புலியால் தாக்கப்பட்ட மான்களைப் போல அச்சங்கொண்டு போரிடுவதில் இருந்து தப்பி ஓடினர்.
குந்தியின் மகன் {பீமன்}, வீரமிக்கத் தன் எதிரிகளைப் போரில் முறியடித்து, அழகிய இறகுகளைக் கொண்ட கருடனைப் போல அந்தப் படையை வேகமாகக் கடந்து சென்றான். தேர்ப்படைத் தலைவர்களின் தலைவனான அந்தப் பீமசேனன், இத்தகு பேரழிவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகன் {துரோணர்} அவனை {பீமனை} நோக்கி விரைந்தார். துரோணர் தன் கணை மாரிகளால் பீமனைத் தடுத்து, பாண்டவர்களை அச்சுறுத்தும் வகையில் திடீரெனச் சிங்க முழக்கம் செய்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருக்கும், உயர் ஆன்ம பீமனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது உக்கிரமானதாகவும், பயங்கரமானதாகவும், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த மோதலுக்கு ஒப்பானதாகவும் இருந்தது. துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கூரிய கணைகளால், அந்தப் போரில் வீரமிக்கப் போர்வீரர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்பட்டனர்.
தன் தேரில் இருந்து கீழே குதித்த அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கண்களை மூடிக் கொண்டு, துரோணரின் தேரை நோக்கிப் பெரும் வேகத்துடன் காலாளாகவே விரைந்தான். உண்மையில், ஒரு காளையானது கடும் மழைப்பொழிவை எளிதாகத் தாங்கிக் கொள்வதைப் போலவே அந்த மனிதர்களில் புலியான பீமனும், துரோணரின வில்லில் இருந்து வந்த அந்தக் கணை மழையைப் பொறுத்துக் கொண்டான் [1]. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரால் தாக்கப்பட்ட அந்த வலிமைமிக்கப் பீமன், துரோணருடைய தேரின் ஏர்க்காலைப் பிடித்துப் பெரும் பலத்துடன் கீழே வீசி எறிந்தான். ஓ! மன்னா, போரில் துரோணர் இப்படிக் கீழே தூக்கி வீசப்பட்டாலும் மற்றொரு தேரில் விரைவாக ஏறிக் கொண்டு, அந்நேரத்தில் தன் தேரோட்டியைப் பெரும் வேகத்துடன் தன் குதிரைகளைத் தூண்டச்செய்து, வியூகத்தின் வாயிலை நோக்கிச் சென்றார். ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் அடையப்பட்ட அந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது [2].
[1] வேறொரு பதிப்பில், "பலவானும், நரசிரேஷ்டனுமான பீமசேனன் தலையைத் தோளில் சாய்த்துக் கொண்டும், கைகளை ஸ்திரமாக மார்பில் வைத்துக் கொண்டும், மனம், காற்று, கருடன் இவைகளுடைய வேகத்தையடைந்து, காளையானது வர்ஷதாரையை விளையாட்டுடன் தாங்குவது போல அம்பு மழையை ஏற்றுக் கொண்டான்" என்றிருக்கிறது.
[2] இதன் பிறகு வேறொரு பதிப்பில் இன்னும் விரிவாக இருக்கிறது. அது பின்வருமாறு, "அவ்வாறு வருகின்றவரும், உத்ஸாகத்தையிழந்தவருமான அந்தத் துரோணாசாரியரைப் பீமன் அப்பொழுது பார்த்து வேகத்தோடு மறுபடியும் சென்று தேரினுடைய ஏர்க்காலைப் பிடித்து மிக்கக் கோபத்துடன் அந்தப் பெரிய ரதத்தையும் எறிந்தான். இவ்வாறே பீமசேனனால் விளையாட்டாகவே எட்டு ரதங்கள் எறியப்பட்டன. அவன் திரும்பவும், திரும்ப வரும் ஒரு கண்ணிமைப்பொழுதுக்குள் தன் ரதத்தையடைந்தவனாகக் காணப்பட்டான். ஆச்சர்யத்தினால் மலர்ந்த கண்களையுடையவர்களான உம்முடைய யுத்த வீரர்களும் (அவனைப்) பார்த்தார்கள். அந்த க்ஷணத்தில் அந்தப் பீமசேனனுடைய சாரதியானவன் குதிரைகளை விரைவாக ஓட்டினான். அஃது ஆச்சரியமாயிருந்தது" என்றிருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் மேற்படி வர்ணனை இல்லை.
பிறகு, அந்த வலிமைமிக்கப் பீமன் தன் தேரில் ஏறிக் கொண்டு, உமது மகனின் படையை நோக்கி வேகமாக விரைந்தான். வரிசையான மரங்களை நசுக்கும் சூறாவளியைப் போலவே அவன் {பீமன்} போரில் க்ஷத்திரியர்களை நசுக்கினான். உண்மையில் பீமன், பொங்கும் கடலைத் தடுக்கும் மலையைப் போலவே பகைவரின் போர்வீரர்களைத் தடுத்தான். ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} காக்கப்பட்ட போஜத் துருப்புகளிடம் வந்த பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதைப் பெரிதும் தரைமட்டமாக்கிவிட்டு அதைக் கடந்து சென்றான். பகைவரின் படைவீரர்களைத் தன் உள்ளங்கைகளின் தட்டொலிகளால் அச்சுறுத்திய பீமன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, காளைக்கூட்டத்தை வெல்லும் ஒரு புலியைப் போல அவர்கள் அனைவரையும் வென்றான். போஜப்படைப் பிரிவையும், காம்போஜர்களுடையவையையும், போரில் சாதித்தவர்களான எண்ணற்ற மிலேச்ச இனங்களையும் கடந்து சென்று, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி போரில் ஈடுபடுவதைக் கண்ட அந்தக் குந்தியின் மகனான பீமசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனஞ்சயனைக் {அர்ஜுனனைக்} காணும் விருப்பத்தால் பெரும் வேகத்துடனும், தீர்மானத்துடனும் முன்னேறிச் சென்றான்.
அந்தப் போரில் உமது வீரர்கள் அனைவரையும் மீறிச் சென்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான். மனிதர்களில் புலியான அந்த வீரப் பீமன், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்லத் தன் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அர்ஜுனனைக் கண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மழைக்காலங்களில் முழங்கும் மேகங்களைப்போல மாமுழக்கம் செய்தான். முழங்கிக் கொண்டிருந்த அந்தப் பீமசேனனின் பேரொலியானது, ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, போருக்கு மத்தியில் இருந்த அர்ஜுனன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவராலும் கேட்கப்பட்டது. வலிமைமிக்கப் பீமனின் அந்த முழக்கங்களை அடுத்தடுத்துக் கேட்ட அந்த வீரர்கள் இருவரும், விருகோதரனை {பீமனைக்} காணும் விருப்பத்தால் மீண்டும் மீண்டும் முழங்கினர். பிறகு, அர்ஜுனனும், மாதவனும் {கிருஷ்ணனும்}, முழங்கிக் கொண்டிருக்கும் இரு காளைகளைப் போலப் பெருமுழக்கம் செய்தபடியே போரில் திரிந்தனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனனின் அம்முழக்கத்தையும், வில் தரித்த பல்குனனின் {அர்ஜுனனின்} முழக்கத்தையும் கேட்ட தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பெரும் மனநிறைவை அடைந்தான். பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் இவ்வொலிகளைக் கேட்டு மன்னன் யுதிஷ்டிரன் தன் துயரத்தில் இருந்து விடுபட்டான். மேலும் அந்தத் தலைவனான யுதிஷ்டிரன், போரில் தனஞ்சயன் வெற்றியடைய மீண்டும் மீண்டும் வாழ்த்தினான். மூர்க்கமான பீமன் இப்படி முழங்கிக் கொண்டிருந்த போது, வலிய கரங்களைக் கொண்டவனும், அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், சிறிது நேரம் புன்னகைத்தபடியே சிந்தித்து, தன் இதயத்தில் எழுந்த எண்ணங்களுக்கு {பின்வரும்} இந்த வார்த்தைகளைக் கொடுத்தான், "ஓ! பீமா, நீ எனக்கு உண்மையாகவே செய்தியை அனுப்பிவிட்டாய். உனக்கு மூத்தவனின் {உன் அண்ணனின்} கட்டளைகளுக்கு உண்மையில் நீ கீழ்ப்படிருந்திருக்கிறாய். ஓ! பாண்டுவின் மகனே {பீமனே}, உன்னை எதிரியாகக் கொண்டோர் வெற்றியை அடையவே முடியாது.
இடது கையாலும் வில் ஏவவல்ல தனஞ்சயன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே உயிரோடிருக்கிறான். கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட வீரச் சாத்யகியும் நற்பேறாலேயே பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்கிறான். வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரின் இந்த முழக்கங்களை நற்பேறாலேயே நான் கேட்கிறேன். போரில் சக்ரனையே {இந்திரனையே} வென்று, வேள்விக் காணிக்கைகளைத் தாங்கிச் செல்பவனை {அக்னியை} மனம் நிறையச் செய்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்தப் பல்குனன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே இந்தப் போரில் உயிருடன் இருக்கிறான். எவனுடைய கரங்களின் வலிமையால் நாம் அனைவரும் உயிருடன் இருக்கிறோமோ, எதிரிப் படைகளைக் கொல்பவனான அந்தப் பல்குனன் நற்பேறாலேயே உயிரோடிருக்கிறான். ஒரே வில்லின் துணையைக் கொண்ட எவனால் தேவர்களாலும் வீழ்தப்பட முடியாத தானவர்களான நிவாதகவசர்கள் வெல்லப்பட்டனரோ அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே உயிருடன் இருக்கிறான். விராடனின் பசுக்களைப் பிடித்துச் செல்ல மத்ஸ்ய நகரத்தில் ஒன்று கூடிய கௌரவர்கள் அனைவரையும் எவன் வென்றோனோ அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே உயிரோடிருக்கிறான். பதினாலாயிரம் {14000} காலகேயர்களைத் தன் கரங்களின் வலிமையால் எவன் கொன்றானோ அந்தப் பார்த்தன் நற்பேறாலேயே உயிருடன் இருக்கிறான். துரியோதனனுக்காகக் கந்தர்வர்களின் வலிமைமிக்க மன்னனை {சித்திரசேனனைத்} தன் ஆயுதங்களின் சக்தியால் எவன் வென்றானோ அந்தப் பார்த்தன் நற்பேறாலேயே உயிரோடிருக்கிறான். கிரீடத்தாலும், (தங்க) மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டவனும், பெரும் பலத்தைக் கொண்டவனும், (தன் தேரில் பூட்டப்பட்ட) வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனையே தன் தேரோட்டியாகக் கொண்டவனும், எப்போதும் எனது அன்புக்குரியவனுமான அந்தப் பல்குனன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே உயிருடன் இருக்கிறான்.
தன் மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் துயரில் எரிபவனும், மிகக் கடினமான சாதனையைச் செய்து கொண்டிருப்பவனும், ஐயோ, செய்த சபதத்தால் ஜெயத்ரதனைக் கொல்ல எவன் இப்போதும் முயல்கிறானோ, அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, போரில் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வதில் வெல்வானா? வாசுதேவனால் {கிருஷ்ணனால்} பாதுகாக்கப்பட்டு, சூரியன் மறைவதற்குள் தன் சபதத்தை நிறைவேற்றப் போகும் அர்ஜுனனை நான் மீண்டும் காண்பேனா? துரியோதனனின் நன்மையில் அர்ப்பணிப்புள்ள சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பல்குனனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டுத் தன் எதிரிகளை மகிழ்விப்பானா? போரில் சிந்துக்களின் ஆட்சியாளன் கொல்லப்படுவதைக் காணும் மன்னன் துரியோதனன் நம்முடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வானா? போரில் பீமசேனனால் தன் தம்பிகள் கொல்லப்படுவதைக் காணும் தீய துரியோதனன் நம்முடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வானா? பெரும் போர் வீரர்கள் பிறர் பூமியின் பரப்பில் விழுந்து கிடப்பதைக் கண்டு தீய துரியோதனன் வருத்தத்தை அடைவானா? பீஷ்மர் ஒருவரின் தியாகத்தோடு நமது பகைமைகள் ஒழியாதா? (அவனிடமும், நம்மிடமும் இன்னும் மீந்து) எஞ்சியிருப்பவர்களைக் காப்பதற்காகச் சுயோதனன் {துரியோதனன்} நம்முடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வானா?" {என்றான் யுதிஷ்டிரன்}. கருணையால் நிறைந்திருந்த மன்னன் யுதிஷ்டிரனின் மனதை இவ்வகையான பல்வேறு எண்ணங்களே கடந்து சென்றன. அதே வேளையில், (பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும்) இடையில் கடுஞ்சீற்றத்துடனும், உக்கிரமாகவும் போர் நடந்தது" {என்றான் சஞ்சயன்}.
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment