Friday, April 18, 2025

Glory of chittirai

சித்திரை மாத சிறப்புகள்

சித்திரை, தமிழ் புத்தாண்டின் ஆரம்ப மாதம். "சித்திரா" என்னும் சொல் பிரகாசத் தையும் வெளிச்சத்தையும் குறிக்கும் சொல்லாகும்.உயிரினம் வளர்வதற்குக் காரணமான பல முக்கிய அவதாரங்களும் சித்திரை யில் தான் நடந்தன என்பது சித்திரையின் சிறப்பை மேலும் உறுதி செய்கிறது. ஒவ்வொரு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது ஒரு மாதம் தொடங்கும். அந்த வகையில் சூரிய பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலம் தான் சித்திரை மாதமாகும். சித்திரை மாதத் தின் தொடக்கத்தில் சூரியனை வழிபடக்கூடிய சிறப்புமிக்க நாளாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டின் ஆரம்பத்தையும் ஒளிர வைக்கும் பிரகாசமான மாதமே சித்திரை. தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தை வைத்தே வருடம் கணக்கிடப்பட்டது. அப்படி உள்ள ஆன்மீகத்தில் சித்திரையை முதல் மாதமாகவும், பங்குனியை கடை மாதம் என்றும் கூறுவார் கள்.. பனி குறைந்து வெயில் வரத் தொடங்கும் பொழுது வசந்தத்தின் ஆரம்ப மாக மல்லிகை மணக்கும். மாமரம் பலன்களைக் கொடுக்கும். வெள்ளரிக்காய் தாகம் தீர்க்கும். கிரினி, தர்பூசணி போன்ற பல கனிகள் நமமைக் குளிர வைக்கும். நோய் தீர்க்கும் வேப்பம் பூக்கள் இம்மாதத்தில் மட்டுமே கிடைக்கும்.

சித்திரை மாதத்தில் பல முக்கியமான சிறப்பு நாட்கள் உள்ளன. இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள், பூஜைகள் ஆகியன செல்வவளத்தை பெருகச செய்யும். மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான வழிபாடாக சித்திரை வழிபாடு பார்க்கப்படுகிறது.

.தெய்வீக மாதம் சித்திரை:-*

சித்திரை மாதத்தின் முதல் நாள்தான் பிரம்மன் உலகத்தைப் படைத்தான் என்று புராணம் கூறுகிறது. சித்திரை மாத திருதியை திதி அன்று மகாவிஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார்.சித்திரை மாதத்தில் சுக்கில பஞ்சமியில் லட்சுமி சத்திய லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக கூறப்படுவதால் அன்று லட்சுமி பூஜை செய்வது நன்மை தரும்.சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. சித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன. ளசித்திரையின் வளர்பிறை துவிதியையில் கிருத யுகம் பிறந்தது.‌‌ஹசித்திரையின் வளர்பிறை சப்தமியில் கங்கை நதி பிறந்தது. சித்திரையின் வளர்பிறை திரயோதசியில் மத்ஸ்ய அவதாரம் நடந்தது.
சித்திரையின் தேய்பிறைப் பஞ்சமியில் வராஹ அவதாரம் நடந்தது.

வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்துவது போல நம்முடைய முன்னோர்கள் இந்த தமிழ் வருடப்பிறப்பு நன்னாளில் வேப்பம் பூ பச்சடி செய்வது வழக்கம். இந்த வேப்பம்பூவுடன் வெல்லம், புளி போன்றவை சேர்த்து செய்யப்படும் இது இனிப்பு, கசப்பு, புளிப்புடன் இருக்கும்.

வடநாட்டில் சித்திரை வருடப்பிறப்பை வைசாகி என்றும், மேஷ சங்கராந்தி என்றும் குறிப்பிடுவர். சித்திரை மாதத்தை மேஷ மாதம் என்றும் சொல்வார்கள். சித்திரை மாதப் பிறப்பை பித்ரு தினம் என்றும் சொல்வர். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள். இந்த பித்ரு தினத்தில் தர்ப்பணம் செய்வது மிகவும் விஷேசம் மற்றும் சிறப்பு ஆகும்.

சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி சித்திரா பௌர்ணமி எனப்படும், இது ரொம்ப விஷேசமான நாள் ஆகும். இந்த சமயத்தில் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த சித்திரை திருவிழா காண்பதற்கு அறிய கண் கொள்ளாக் காட்சியாகும்.

சித்திரை மாதத்தை 'வசந்த ராகம்' என்றும் கூறுவார். சித்திரை மாதத்தில் வளர் பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அட்சயதிருதி என்று அழைக்கப்படுகிறது. அந்நாள் பொன், வெள்ளி போன்றவைகள் வாங்க ஏற்ற தினமாகக் கருதப்படுகிறது. அந்நாளில் தொட்டது அனைத்தும் துலங்கும் மேலும் மேலும் செல்வங்கள் சேரும் என்பது நம்பிக்கை. இந்த தினத்தில் உணவு தானியங்கள், அரிசி, கோதுமை, தானியங்கள். பழங்கள். தயிர், மோர், ஆடைகள் உள்ளிட்டவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வதால் நமக்கு மன அமைதியும், செல்வமும் பெருகும்.

சித்திரை மாதத்தில் வரும் திருதியை தினம் விஷ்ணுபகவான் மீனாக அவதாரம் எடுத்த தினமாகும். சித்திரை மாத சுக்கில பஞ்சமி தினம் லட்சுமி தேவி பூமிக்கு வந்த தினமாகும். எனவே அன்று லட்சுமி பூஜை செய்தால் வளமான வாழ்வு கிடைக்கும்.

விண்ணுலக கணக்கரான சித்திரகுப்தன் பிறந்தது சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம் பௌர்ணமியுடன் கூடிய நாள். அன்றைய தினம் 'சித்திர குப்தம் மகா ப்ரக்கியம் லேகினி பத்ர தரிசனம்! சித்திரா ரத்னாம் பரதாரம் மத்யஸ்தம் சௌர்வ தேஹினாம்!!' என்ற சுலோகத்தை கூறி வழிபட்டால் நம்முடைய பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீராமானுஜர், பிறந்ததும் இந்த சித்திரை மாதத்தில் தான். எந்த மாதத்திற்கும் இல்லாத சிறப்புகள் சித்திரை மாதத்துக்கு மட்டுமே இருக்கிறது.

1. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும்.
2. சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது.
3. சித்ராபவுர்ணமி தினத்தன்று உப்பு இல்லாத உணவை ஒரு நேரம் சாப்பிட்டு விரதம் இருந்தால் ஆயுள் பலன் கூடும்.
4. சித்திரை மாத மூல நட்சத்திர தினத்தன்று லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.
5. சித்திரை முதல் நாளன்று கேரளாவில் கோவில்களில் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணம் வழங்குவார்கள். இதற்கு கை நீட்டம் என்று பெயர்.
6.ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச விழா சித்திரை மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
7.சித்திரை மாதத்தில் தாகத்தில் இருப்பவர்களுக்கு மோர் குடிக்கக் கொடுத்தால் ஜென்மாந்திர பாவங்கள் விலகும். சர்க்கரை கலந்து பானகம் குடிக்கக் கொடுத்தால் வைகுண்ட வாசம் கிடைக்கும் என்று புராணம் சொல்கிறது

சித்திரை மாதத்தின் முக்கிய நாட்களும், அவற்றின் சிறப்புகளும்

 சித்திரை மாதம் சிவ பெருமான், அம்பிகை மற்றும் பெருமாளின் அருளை பெறுவதற்கான வழிபாடுகளாக சித்திரை மாத வழிபாடு கருதப்படுகிறது.

தமிழ் வருடப்பிறப்பு :

தமிழ் வருடங்களின் முதல் மாதம் சித்திரை. சூரிய பயணம் சித்திரை மாதத்தில் முதல் ராசியான மேஷத்திலிருந்து தொடங்கி ஒவ்வொரு ராசியாக சஞ்சரித்து பன்னிரண்டாவது ராசியான மீனத்தில் சஞ்சரிப்பார் இந்த சுழற்சியே ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். எனவே சூரியனின் பயணம் தொடங்கும் முதல் ராசியான மேஷத்தில் சஞ்சரிப்பதையே தமிழ் வருடப்பிறப்பு என மக்கள் கொண்டாடுகின்றனர். கேரள மாநிலத்தில் சித்திரை முதல் நாளானது சித்திரை விசு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதக் கடைசி நாள் இரவில் தங்க, வெள்ளி பொருட்கள், நவரத்தினங்கள், பழ வகைகள், காய்கனிகள், புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர். மறுநாள் அதிகாலையில் எழுந்ததும் அந்த மங்கலப் பொருட்களைத் தான் முதலில் பார்ப்பார்கள். இதனால் அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்ற‌ நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

சித்ரா பௌர்ணமி :

சித்திரை மாத, சித்திரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன் தோன்றினாராம். அன்றைய நாளில் மக்கள் சித்திர குப்தனுக்காக விரதம் இருந்து, "எங்கள் பாவ கணக்கை குறைத்து, மேற்கொண்டு பாவம் செய்யாமல் இருக்க வழித் துணை யாக இருப்பா" என்று வேண்டிக்கொள்வார்கள். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில், சித்ரகுப்தருக்கு தனி ஆலயம் உண்டு. சித்ரா பௌர்ணமியன்று இவருக்கும், இவரது மனைவி கர்ணிகாவுக்கும் அபிஷேக, ஆராதனைகளுடன், திருமண விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த மாதத்தில் வரக்கூடிய "சித்ரா பெளர்ணமி"மிக விசேஷமானது. இந்த சித்ரா பௌர்ணமி அன்று நிலவின் முழு வெளிச்சத்தால் பூமியின் சில பகுதியில் ஒரு வகை உப்பு வெளி வரும், அது பூமி நாதம் என சித்தர்கள் அழைப்பார்கள். இது மருத்துவ துறையில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா 

சித்திரை மாதம் என்றாலே மதுரை மக்களுக்கு கொண்டாட்டம் . இந்த மாதம் முழுவதும், மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குவது எனப் பல விசேஷங்கள் உண்டு. மீனாட்சி திருகல்யாணத்தைக் காண, அண்ணன் அழகர் சகலவிதமான ஏற்பாடுகளுடன் புறப்படுவார். தான் செல்வதற்கு முன்பே மீனாட்சி- சொக்கநாதர் திருமணம் நடந்துவிட்டது என்னும் தகவல் வைகைக் கரையை அடையும் போது, அவருக்கு வந்து சேரும். கோபத்துடன் ஆற்றில் இறங்கிய அவர், அப்படியே வண்டியூர் போய்விடுவார். அழகர் ஆற்றில் இறங்குவதைக் காண வெளியூரில் இருந்து மக்கள் அலை அலையாக வருவார்கள்.

அட்சய திருதியை :

அட்சய திருதியை என்பது சித்திரை மாதத்தின் வளர்பிறையின் மூன்றாவது நாளான திருதியையில் கடைப்பிடிக்கப்படுகிறது. அட்சய என்றால் எப்போதும் அள்ள அள்ள குறையாத எனப் பொருள்படும். அதாவது இந்நாளில் செய்யப் படும் நல்ல செயல்களான தான தர்மங்கள் அள்ள அள்ள குறையாத அதிக பலன்களைத் தரும். பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் இந்நாளில் தான். அட்சய திருதியை அன்று தயிர்சாதம் தானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் செய்தால் திருமணத் தடை அகலும். உணவு தானியங்கள் தானம் செய்தால் விபத்துக்கள், அகால மரணம் போன்றவை ஏற்படாது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.

அட்சய திருதியையில் செய்ய வேண்டியவை :

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் இல்லத்தில் செல்வம் குவியும் என்ற ஐதீகமும் உண்டு. சித்திரையில் வரும் அட்சய திரிதியை அன்று வசதி படைத்தவர்கள் தங்கம் வாங்குவார்கள். தங்கம் வாங்க முடியாதவர்கள் அன்று ஏதாவது ஒரு மங்கல பொருளை வாங்கினாலும் (மஞ்சள், உப்பு) குடும்பம் செல்வச் செழிப்புடன் திகழும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் சுக்கிர பகவானுக்குரிய வெள்ளை நிறத்தினால் ஆன பச்சரிசி, மல்லிகைப் பூ போன்ற பொருட்களையும் வாங்கலாம். மகாலட்சுமிக்கு பால் பாயசம் படைத்து வழிபடுவதால் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

லட்சுமி பூஜை :

சித்திரை மாத வளர்பிறை பஞ்சமியில் திருமகள் பூலோகத்திற்கு வந்ததாகக் கருதப்படுகிறது. எனவே இந்நாளில் லட்சுமி பூஜை செய்து வழிபட செல்வம் பெருகும். சித்திரை மாத வளர்பிறை அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாகக் கருதப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாகக்‌கருதப்படுகிறது.

 
💥💥💥💥💥💥

No comments:

Post a Comment