ராமாயண ரத்தினங்கள் : ரத்தினம் : 1
ஓம் கம் கணபதியாய நமஹ
வால்மீகி : (Re-Post)
திரேதா யுகம் :
"அயோத்யாவை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதியில் "ரத்னாகர்" என்னும் கொள்ளையன் வாழ்ந்து வந்தான்... வனத்தின் வழியாக செல்லும் யாத்ரீகர்களை கொன்று அவர்களின் செல்வங்களை கொள்ளையிட்டு வாழ்ந்து வந்தான்...
நாரத மகரிஷி அவ்வழியே பயனித்த போது, அவரைத் தடுத்தான் ரத்னாகர்,
ரத்னாகர் : ஏய் உன்கிட்ட இருக்கிறத எல்லாம் என்கிட்ட கொடுத்துடு, உன்ன உயிரோடு விட்டுரேன்"
நாரதர் : "ஏனப்பா, நானோ ஒரு முனிவன், உன்னிடம் கொடுக்க, என்னிடம் என்ன இருக்கிறது? என்னை விட்டு விடு...
ரத்னாகர் : அதெல்லாம் விட முடியாது, என் அப்பா, அம்மா, பொண்டாட்டி, பிள்ளைங்க, எல்லாம் சாப்பிட்டு 3 நாளாச்சி, உன்கிட்ட இருந்து எதாச்சும் கொண்டு போனாதான் இன்னைக்கு எங்களுக்கு சாப்பாடு, அதனால மரியாதையா உன்கிட்ட இருக்கிறத குடுத்துடு, இல்ல உன்ன கொன்னுடுவேன்...
"உன்னிடம் இருப்பதை கொடு, உன்னிடம் இருப்பதைகொடு , என்று கேட்கும், கொள்ளையன் ரத்னாகரை பார்க்கும் போது ஏனோ பரிதாபம் தோன்றியது நாரதருக்கு... எனவே, தன்னிடம் இருக்கும் ஞானத்தை அவனுக்கு தர முடிவெடுத்தார், "ரத்னாகரா, நீ வேண்டியபடி என்னிடம் இருக்கும் மிக உயர்ந்த ஒன்றை உனக்கு தருகிறேன், ஆனால் அதற்கு முன் என் கேள்விகளுக்கு பதிலளி...
ரத்னாகர் : என்ன கேள்வி? சீக்கிரம் கேளும்...
நாரதர் : கொள்ளை அடிக்கும் பொருளை என்ன செய்வாய்?
ரத்னாகர் : என் குடும்பத்தினரோடு பங்கிட்டு உண்பேன்...
நாரதர் : அப்படியா? சரி கொள்ளையடித்த பொருளை பங்கிட்டு கொள்ளும் உன் குடும்பத்தார், கொலை, கொள்ளையால், உன் தலையில் நீ சுமந்திருக்கும் பாவ மூட்டையையும் பங்கிட்டு கொள்வார்களா?
ரத்னாகர் : யோவ் முனிவரே, என்ன கேள்வி இது? செல்வத்தை, சுகத்தை பங்கிட்டு, பெற்றுக் கொள்பவர்கள், பாவத்தை பெற்று கொள்ள மறுப்பார்களா? நிச்சயம் நான் செய்கின்ற பாவங்களின் பங்கையும் பெற்றுக் கொள்வார்கள்...
நாரதர் : நிச்சயமாகத்தான் சொல்கிறாயா?
ரத்னாகர் : ஆம், கண்டிப்பாக பெற்றுக் கொள்வார்கள், அதிலென்ன சந்தேகம்? முதலில் உன்னிடம் இருப்பதை கொடு...
நாரதர் : இல்லை ரத்னாகரா, எதற்கும் அவர்களிடம் கேட்டுவிடேன், நீ சென்று கேட்டு வா, நான் இங்கேயே காத்திருக்கிறேன்...
ரத்னாகர் : ஓஹோ! நான் அந்த பக்கம் சென்றதும் இந்தப் பக்கம் ஓட திட்டமிடுகின்றாயா?
நாரதர் : நிச்சயமாக இல்லை, நான் இங்கேயே உனக்காக காத்திருப்பேன்...
ரத்னாகர் : யோவ்! உம்மை நம்ப முடியாதய்யா, நீர் ஒடிவிட்டால்?
நாரதர் : ரத்னாகரா! நான் ஒரு முனிவன், கொடுத்த வாக்கை மீற மாட்டேன், அதோடு இன்று, இங்கு எனக்கு நிறைய வேலையிருக்கிறது, எனவே சென்று வா...
ஒரு முடிவோடு கூறினார் நாரத மகரிஷி...
ரத்னாகரன் சென்று குடும்பத்தாரிடம் கேட்டான் , "நான் உங்களுக்காக கொள்ளையடிக்கிறேன், வழிப்பறி செய்கிறேன், அதனால் ஏற்படும் பாவத்தை பங்கிட்டு கொள்வீர்களா?
பெற்றோர் : மகனே, உன்னை பெற்று, சிறு வயதில் இருந்து வளர்த்து இருக்கிறோம், அதற்கு பிரதி உபகாரமாகவே, நீ இப்போது எங்களை காப்பாற்றுகிறாய், இது உன் கடமை, எனவே நீ உன் கடமையை செய்வதனால் ஏற்படும் பாபத்தை நாங்கள் பங்கிட மாட்டோம்...
மனைவி :
என்னை காப்பதாக வாக்களித்து மணம் புரிந்தீர், எனவே தமது பாவங்களில் எனக்கு பங்கில்லை.
பிள்ளைகள் :
இன்று எம்மை நீர் ஆதரித்தால், நாளை உமக்கு முதுமை வரும் காலத்தில், உம்மை நாங்கள் ஆதரிப்போம், எனவே நீர் செய்யும் பாவங்களில் நாங்கள் பங்கேற்கமாட்டோம்...
அனைத்தையும் கேட்டு அதிர்ந்தான் ரத்னாகர், பூமியே பாதத்திலிருந்து நழுவுவது போல இருந்தது... எந்த குடும்பத்தின் நலனுக்காக ஊரை கொள்ளையடித்தானோ, அதர்மங்களை புரிந்தானோ, அக்குடும்ப உறுப்பினர்கள், அவன் செய்த பாவங்களில் பங்கேற்க மறுத்துவிட்டனர்... இதுவே நிதர்சனம்...
ரத்னாகர் கண்ணீருடன் திரும்பி வருவதை கண்ட நாரத மகரிஷிக்கு எல்லாம் தெளிவாக விளங்கியது... ரத்னாகர், மனமொடிந்து, "சாமி! நீங்க சொன்னது நெசந்தான்னு எனக்கு இப்பதான் புரியுது, என்னை காப்பாத்துங்க" என்று நெடுஞ்சான்கிடையாக மகிரிஷி நாரதர் காலில் விழுந்தான், பாதம் பணிந்தவனுக்கு, முன்னர் கூறியபடி, தன்னிடமிருந்த ஞானத்தை வழங்கிட எண்ணினார், ஆம் கிடைத்தற்கரிய, மோட்சம் தரவல்ல மந்திரமான "ராமா " நாமத்தை உபதேசித்தார், ஆனால் ரத்னாகர் அதுவரை செய்த பாபாங்களின் விளைவால், அவனால் புனிதமான "ராம" நாமத்தை மனத்தில் இருத்தவோ, உச்சரிக்கவோ இயலவில்லை...
எனவே, நாரத மகரிஷி, ரத்னாகரனுக்கு, "மரா மரா" என்று தொடர்ந்து உச்சரிக்குமாறு அறிவுறுத்தினார்... ஆம், ரத்னாகரனின் கர்ம வினையை, தன் புத்தியால் வென்றார்... "மரா மரா" என்று சொல்லும் போது நாளடைவில் அது "ராம ராம" என்று மாறிவிடும்...
நாரதர் சென்ற பின், மரத்தடியில் அமர்ந்து, தொடர்ந்து ஜபித்தார், பல நூறு ஆண்டுகள் கழிந்தது, ரத்னாகரரை சுற்றி புற்று வளர்ந்தது, தவம் தொடர்ந்தது...
இறுதியில், பிரம்மதேவர் தோன்றினார், ரத்னாகர், புற்றை பிளந்து கொண்டு எழுந்த போது, "வால்மீகி " என்றார் பிரம்மதேவர், (சமஸ்கிருதத்தில், எறும்பு புற்றுக்கு, வால்மீகம் என்று அர்த்தம், புற்றை பிளந்து, பூமியின் மைந்தனாக மறுபிறப்பு போல தோன்றியமையால் வால்மீகி என்றழைக்கப்படுகிறார்...)
பின், பிரம்மதேவர் வால்மீகி மகரிஷிக்கு, முக்காலமும் உணரும் வரத்தோடு, இராமாயணத்தை இயற்றும் வாய்ப்பையும் வழங்கினார்...
இராமன் அவதரிப்பதற்க்கு பல காலம் முன்பே, இராமயணத்தை இயற்ற துவங்கினார், மகரிஷி வால்மீகி...
ஜெய் ஸ்ரீ ராம்...
எழுத்து : பாலமுருகன் ராமமூர்த்தி...😍
No comments:
Post a Comment