*பஞ்ச கிருஷ்ண* *க்ஷேத்திரங்கள்*
*புதிய தொடர் பதிவு*!
சப்த ரங்க ஆலயங்களை போலவே மார்கழியில் கூடுதலாக வழிபட வேண்டிய ஆலயங்கள் பஞ்ச கிருஷ்ண
தலங்கள் என அழைக்கப்படுகின்றன.
ஐந்து தலங்களில் பகவான் கண்ணன் எப்போதும் தங்கியிருந்து அருள்வழங்குவார் என்பது அன்றே ரிஷிகளுக்கும் மகான்களுக்கும் அவர் கொடுத்த வாக்கு
அதாவது ஏதோ ஒரு காரணத்தை வைத்து அவர் எக்காலமும் எந்நேரமும் அருள் வழங்கும் முக்கியமான கிருஷ்ணன் ஆலயங்கள் இவை.
1)திருகோவிலூர். 2)திருகண்ணங்குடி. 3)திருக்கண்ணமங்கை. 4)திருகண்ணபுரம்.
5மற்றும் கபிஸ்தலம்.
வரும் நாட்களில் இந்த ஐந்து ஆலயங்களையும் ஒரு சுற்று பார்க்கலாம். மார்கழியில் பகவான் கண்ணனை வழிபட்ட பலன் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
நன்றி:https://stanleyrajan.com இணையதள முகவரியில் படித்த கட்டுரையின் நகல் பதிவு!.
*பஞ்ச கிருஷ்ண* *ஷேத்திரங்கள்-01* *திருக்கோவிலூர்*.
"மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்,
எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேல் ஓர் இளந்தளிரில் கண் வளர்த்த ஈசன் தன்னை,
துஞ்சா நீர்வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே"
என்பது திருமங்கை ஆழ்வார் இந்த ஆலயம் பற்றி பாடிய வரிகள்.
பஞ்ச கிருஷ்ண தலங்களில் முதன்மையான இத்தலம் தென்பெண்ணை ஆற்றின் பக்கமாய் அமைந்துள்ளது.
இன்று கள்ளக்குறிச்சி பக்கம் திருக்கோவிலூர் என அழைக்கப்படும் இந்த இடத்தின் அன்றைய பெயர் கிருஷ்ண புரி.
தென் பெண்ணை ஆற்றின் அன்றைய பெயர் "கிருஷ்ண பத்ரா"
இந்த ஆலயத்தின் வரலாறு மிருகண்ட முனிவர் காலத்தில் இருந்து துவங்குகின்றது
மிருகண்ட முனிவர்தான் சிவனருளால் எமனை வென்ற மார்கண்டேயரின் தந்தையார்.
அந்த மிருகண்ட முனிவருக்கு பெரும் ஆசை ஒன்று ஏற்பட்டது. அதன்படி, அவர் பகவானின் வாமன அவதாரத்தினையும், அதன் முடிவில் பகவான் மகாபலிக்கு காட்டிய விஸ்வரூப தரிசனத்தை தானும் காண விருப்பம் கொண்டார்.
மாபெரும் தவசியான அவர் தன் தவத்தினால் பிரம்மதேவனிடம் இதுபற்றி கேட்க அவரோ கிருஷ்ண பத்ர நதியோரம் இந்த இடத்தில் தவமிருந்தால் நினைத்ததை அடையலாம் என வழிகாடினார்.
கிருத யுகத்திலே பகவான் சுயம்புவாக எழும்பிய கோவில் அங்கு இருந்தது, அங்குதான் அவரை செல்லச் சொன்னார் பிரம்மா.
மிருகண்டு முனிவர் தன் மனைவி மித்ராவதியுடன் அப்பக்கம் வந்து ஆசிரமம் அமைத்து தங்கி பகவானின் வாமன கோலம் மற்றும் அவர் மூன்று அடிகளால் உலகளந்த கோலம் என இரண்டையும் காணத் தவம் இயற்றினார்.
வாமன அவதாரம் எல்லோரும் அறிந்த ஒன்று, மகாபலி சக்கரவர்ததி அசுர குலத்தவன் என்றாலும் பகவானின் பக்தன், அவன் எல்லா உலகங்களையும் கைப்பற்றி தனக்கு ஈடு இணை யாருமில்லை எனும் வரத்தைப் பெற பெரும் யாகம் நடத்தினான்.
அந்த யாகம் நல்லபடியாக முடிந்தால் அவன் பெரும் பலம் பெற்றுவிடுவான், பின் எல்லா உலகமும் அவனுக்கு அடிமை என அஞ்சிய தேவர்கள் விஷ்ணுவிடம் சரணடைந்தார்கள்.
பகவான் அவர்களைக் காக்க திருவுளம் கொண்டு ஒரு குள்ளனாக வாமன அந்தணனாக அவன் யாகசாலை நோக்கிச் சென்றார்.
ஒரு யாகம் நல்லபடியாக முடிய அந்தணர்களுக்கு அவர்கள் வேண்டுவன கொடுத்தல் வேண்டும் என்பது விதி.
அப்படி இந்த வாமனர் கடைசியாக வந்தார், அவர் வருவதற்குள் தானம் செய்ய வைக்கப்பட்ட பொருட்கள் காலியாகியிருந்தன, வாமனர் வரும்போது மன்னன் மகாபலி அவருக்கு என்ன வேண்டும் எனக் கேட்டான்.
அதே நேரம் மகாபலியின் குருவான சுக்கிராசாரியாருக்கு வந்தது பகவான் எனத் தெரிந்தது, அதற்குள் எனக்கு என் கால் அளக்குமளவு மூன்று அடி மண் வேண்டும் எனக் கேட்டார் வாமனர்.
தவம் செய்ய ஒரு இடம் என அவர் கேட்டார் என மன்னனும் இசைந்தான், வாமனர் தன் கமண்டல நீரால் அதை தாரைவார்த்து தரச் சொன்னார்.
ஆனால், அசுரகுரு சுக்கிராச்சாரியார் ஒரு வண்டாக மாறி அந்தக் கமண்டலத்தை அடைத்தபோதும்,
வந்தது பகவான் என எச்சரித்தபோதும் மகாபலி தர்ப்பைப் புல்லால் வண்டை குத்தி விரட்டி வாமனனுக்கு தான நீர் வார்த்தான்.
அவன் மூன்றடி மண் எனக் கொடுத்ததும் வாமனன் வளர்ந்தார்.
பகவான் தன் விஸ்வரூபத்தை காட்டி விண்ணுக்கும் மண்ணுக்குமாய் நின்று ஒரு அடியால் மண்ணையும் ஒரு அடியால் விண்ணையும் அளந்து மூன்றாம் அடி எங்கே எனக் கேட்டார்.
மகாபலி பகவானை வணங்கி தன் ஆணவம் நீங்கிய அறிகுறியாக தன் தலையினை மூன்றாம் அடியாக வைக்கக் கொடுத்தான்.
பகவான் அவனை வாழ்த்தி கால் வைத்தார்.
"மகாபலி மன்னா, முன்பு சிவன்கோவிலில் அணையும் நிலையில் இருந்த திரியினை உன்னை அறியாமல் தூண்டிய எலியாக நீ இருந்தாய் அதன் புண்ணிய பலனால் இந்த நிலை எய்தினாய்.
உன் யாகம் பெரும் ஆசை கொண்டது என்றாலும் உன் பக்தி நிஜமானது, உன்னை பாதாளத்துக்கு அழுத்துமுன் என்ன வரம் வேண்டும் எனக் கேள்" என்றார்.
பகவானை கண்டபின் எனக்கு என்ன வேண்டும்? நான் இந்நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழ விரும்பியவன். அதனால், ஆண்டுக்கொருமுறை வந்து அவர்களை கண்டுவிட்டு செல்ல வரம் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டான்.
பகவான் அப்படியே வரமருளி அவனைப் பாதாளத்துக்கு அனுப்பினார்.
வருடம் ஒருமுறை ஆவணித் திருவோணம் அன்று அவன் அப்படி வருவான். அதுதான் ஓணம் பண்டிகை.
இப்படி அந்த மகாபலிக்கு பகவான் அருளிய காட்சியினைத்தான் காண தவமிருந்தார் மிருகண்ட முனிவர்.
ஆனால், இவரும் மகாபலி வழியிலே தேவலோகம் அடைய விரும்புவதாக பகவானிடம் முறையிட்டனர் தேவர்கள்.
பகவான் முனிவரின் உள்ளம் அறிந்தவர் அதனால் அவர் தேவர்களுக்கு அவரின் மனதை காட்ட விரும்பினார்.
முனிவர் கடும் தவத்தில் இருக்கும் நேரம் அவர் ஆசிரமத்துக்கு ஒரு அந்தணர் வேடத்தில் சென்று யாசகம் கேட்டார்.
ஆனால், அவருக்கு இட மித்திரையிடம் ஏதுமில்லை, முனிவரோ தவத்தில் இருந்தார்.
தன் கடமை தவறாத மித்திரை "நான் உத்தமி என்றால் பகவான் நாராயணன் இந்த பாத்திரம் அன்னத்தால் நிரம்ப அருள் செய்யட்டும்" என வேண்டினாள்.
அவள் வேண்டியபடியே அன்னம் நிறைந்தது,
அதனை அந்தணர்க்கு அவள் படைக்கமுயன்ற போது தன் விஸ்வரூபதரிசனத்தை காட்டினார் பகவான்.
தவத்தில் இருந்த மிருகண்ட முனிவர் அதைக் கண்டு கண்விழித்து வீழ்ந்து வணங்கினார்.
அவர் கண்ணுக்கு வாமனனாக முதலிலும் உலகளந்த பெருமாள் என இரு கோலத்திலும் தெரிந்தார்.
எப்படி மகாபலியினை அடக்க மண்ணுக்கும் விண்ணுக்கும் நின்றாரோ அதே கோலத்தில் நின்று "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்றார்.
மிருகண்ட முனிவர் சொன்னார் "எனக்கென எதுவும் வேண்டாம், இந்த ஆலயத்தில் நீ குடிகொண்டு எப்போதும் குடியிருந்து இங்கு வரும் மக்களுக்கெல்லாம் அருள் புரியவேண்டும்"
அப்படியே ஆகட்டும் என பகவான் அருள, மிருகண்ட முனியின் பெரும் மனம் கண்டு தேவர்கள் தலைகுனிந்தனர்.
திரி என்றால் மூன்று, விக்ரம என்றால் வெற்றியாளன் (விக்டரி எனும் ஆங்கிலச்சொல் இதிலிருந்துதான் வந்தது) மூவுலகிலும் ஈடு இணையற்ற பெருமான் என்பதால் இங்குபகவான் "திரிவிக்ரம" கோலம் கொண்டிருக்கின்றார்.
இப்படி மிருகண்ட முனிவரின் பெரும் தவத்தால் அவருக்கு கொடுத்த வரத்தின்படி பகவான் குடியேறி பெரும் வரம் அருளும் ஆலயம் இந்த திருக்கோவிலூர் ஆலயம்.
பரசுராமர் இங்கு தவமிருந்தார்.
பகவான் இப்படி தேர்ந்து கொண்ட தலம்தான் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஏற்படவும் காரணமாயிற்று.
முதல் ஆழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்து ஆழ்வார், பேயாழ்வார் என மூவரும் தனி தனியாகச் சுற்றி கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் மூவரும் தனி தனியாகப் பகவானை திருக்கோவிலூரில் சேவித்துவிட்டு அவரவர் பாதைக்கு திரும்பும் போது பெரும் மழை கொட்டிற்று.
பொய்கை ஆழ்வார் அருகிருந்த மிருகண்ட முனிவரின் குடிலுக்கு விரைந்தார், முனிவர் அவருக்கு ஒரு அறையினைக் காட்டி இங்கே ஒருவர் படுத்துக் கொள்ளலாம் எனச் சொல்லி சிறிய அறையில் இடம் கொடுத்தார்.
சற்று நேரத்தில் பூதத்து ஆழ்வார் வந்தார், அதே அறையில் இருவர் அமரலாம் என இருவர் அமர்ந்து கொண்டார்கள்.
அடுத்து பேயாழ்வார் வந்தார், அந்த சிறிய அறையில் மூவர் நிற்கலாம் என நின்று கொண்டார்கள்.
அந்நேரம் அந்த இருளில் யாரோ நான்காம் நபர் ஒருவர் நெருக்குவதாக மூவரும் உணர்ந்தார்கள். ஆனால், புதிதாக யாரும் வந்ததாகத் தெரியவில்லை, அதனால் மிகுந்த குழப்பத்துக்கு உள்ளானார்கள்.
விளக்கேற்றினால்தான் நான்காம் நபரை காணமுடியும். ஆனால், விளக்கேற்ற வழியில்லை என்பதால் பாடினார்கள்.
முதலில் பொய்கை ஆழ்வார் பாடினார்.
"வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடராழி யான்அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீக்குகவே என்று"
மிக நுணுக்கமான பொருளைக் கொண்ட பாடல் இது.
"மனதை விளக்காகவும், கடலை நெய்யாகவும், கதிரவனைத் திரியாகவும் கொண்டு ஒரு விளக்கை ஏற்றி நிற்கின்றேன் பகவானே. இந்தப் பெரிய இருளின் இக்கட்டில் இருந்து என்னை மீட்டெடுப்பாய்" என்பது பொருள்.
அடுத்து பூதத்தாழ்வார் பாடினார்,
"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்"
அன்பைத் தகளியாகவும், ஆர்வத்தை நெய்யாகவும், என் சிந்தனையினைத் திரியாகவும் கொண்டு தமிழ் கவிஞனாகிய நான் ஞான விளக்கை ஏற்றுகின்றேன் எனப் பாடினார்.
இந்த இருவரும் உளமுருக இப்படி பாடியதைக் கேட்டு, ஒருவர் உலகையே விளக்காகவும், இன்னொருவர் அன்பையே விளக்காகவும் பாடியதைக் கேட்டு பகவான் அங்கே எழுந்தருளினார்.
பகவானை தரிசித்த ஆனந்தத்தில் பேயாழ்வார் பாடினார்.
"திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று"
இப்படி அந்தக் குடிசையில் மூவரையும் ஒருசேர சந்திக்க வைத்து, அவர்களைப் பாட வைத்து, தன்னைக் காட்டி அருள்பாலித்தார் பகவான்.
இந்த இடத்தில் வெறும் மூன்று பாடல்கள் மட்டும் பாடப் படவில்லை, அதன் பின் உள்ளம் உருகி ஆளுக்கு நூறு பாடல்கள் பாடினார்கள்.
பகவானைத் தரிசித்த பரவசத்தில் பாடினார்கள். அதுதான் "இயற்பா" எனத் தொகுக்கப்பட்டு, இன்று முதல் மூன்று திருவந்தாதிகளாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதல் பாடல் இதுதான்.
இந்த முதல் மூன்று பாடல்களும் சாதாரணமாகக் கடந்து செல்பவை அல்ல, இவை மூன்றும் இருபெரும் ஞான போதனையினைச் சொல்பவை.
முதல் பாடலில், பொய்கை ஆழ்வார் உலகை விளக்காக்கி, கடலை நெய்யாக்கி, சூரியனை திரியாக்கி பாடுவது புற இருளை அகற்றுவது.
இரண்டாம் பாடலில், பூதத்தாழ்வார் பாடுவது அன்பை விளக்காக்கி, மனதை நெய்யாக்கி, சிந்தையினைத் திரியாக்கி எரியவைப்பது என்பது அக இருளை போக்குவது.
இந்த இரு விஷயங்களும் நடந்தால் இரு விளக்கையும் ஏற்றினால் பகவான் தெரிவார், கடவுளைக் காணலாம் என்பது மூன்றாம் ஆழ்வார் பாடியது.
ஆம். புற இருள், அக இருள் இரண்டும் நீங்கினால் பகவானை அடையலாம் என போதித்த பாடல்கள் அவை.
இன்னொரு ஆழமான மறைபொருளும் உண்டு. அதுதான் இங்கே ஆணிவேரும் அற்புதமுமான பொருளுமாய் அமைந்தது.
முதல் பாடல், உலகையும் விண்ணையும் சொல்வது. அதாவது படைப்பினைச் சொல்வது. அவ்வகையில் அது பிரம்மனைக் குறிப்பது.
இரண்டாம் பாடல், மனதையும் அன்பையும் ஆர்வத்தையும் குறிப்பது. இது சிவபெருமானைக் குறிப்பது.
மூன்றாம் பாடல், பகவான் விஷ்ணுவினைக் குறிப்பது.
மும்மூர்த்திகளும் ஒன்றே, ஒரே ஞானப் பேரோளியில் இருக்கும் சக்திகள் இந்த மும்மூர்த்திகளே, மூவரும் ஒன்றே, அங்கு பேதம் ஏதுமில்லை என மிக நுணுக்கமாகப் பாடுகின்றார்கள் இந்த முதல் மூத்த ஆழ்வார்கள்.
இந்தத் திருவந்தாதி எனும் இயற்பா மிக மிக உருக்கமானது.
அந்தாதி வகையில் பாடப்பட்ட பாடல் இது, பின்னாளைய எல்லா அந்தாதிகளுக்கும் இதுதான் தொடக்கம்.
இப்படி நாலாயிர திவ்ய பிரபந்தமே இந்த ஆலயத்தில் இருந்துதான் தொடங்கிற்று, அப்படியான மகா முக்கியமான ஆலயம் இது.
பகவான் கிருஷ்ணன் எக்காலமும் குடியிருக்கும் இந்த ஆலயம் ஒவ்வொருவரும் தரிசித்து அருள் பெற்று செல்லவேண்டிய மகா முக்கியமான ஆலயம்.
கிருஷ்ணன் கோவில் என அழைக்கப்பட்ட ஆலயமே பின்னர் திருக்கோவிலூர் என மாறிற்று, 108 ஆம் திவ்ய தேசத்தில் 42வது கோவில் இது.
இக்கோவில் 11 நிலை கோபுரங்களைக் கொண்டது. இதன் இராஜகோபுரம் 192 அடி உயரம் கொண்டது. மூலவர் உலகளந்த பெருமாள் மரத்தால் ஆன திருமேனியுடன் ஒரு காலை தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவர்தான் ஆதியில் உருவான சுயம்பு .
பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் கருடன் தூண் ஒன்று உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்தத் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோவில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இந்தத் தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.
மூலவரின் பின்புறம் வாமன ரூபமும் அமைந்துள்ளது.
லட்சுமி நாராயணர், லட்சுமி நரசிம்மர், வரதராஜன், ராமர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், விஸ்வசேனா, மணவாளமாமுனி, இராமானுஜர் ஆகியோர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர்.
முதல் பிரகாரத்தில் வேணுகோபாலர், லட்சுமி நாராயணர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ராகவா, ராமர், வீர ஆஞ்சநேயர், ஆண்டாள், சுக்கிராச்சாரியார் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.
ஸ்ரீசக்ர தீர்த்தம் கோவிலின் வெளிப்புறம் அமைந்துள்ளது. ஸ்ரீசக்ர தீர்த்தம் தவிர ஆகாச கங்கை, வராக தீர்த்தம், கலவ தீர்த்தம் உள்ளிட்ட 16 தீர்த்தங்கள் இக்கோவிலில் உள்ளன.
வேறு எங்கும் இல்லாத வகையில் இக்கோவில் பெருமாள் வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் தாங்கி உள்ளார்.
மூலஸ்தானத்தில் மகாலட்சுமி, பிரஹலாதன், மாபலி ஆகியோர் பெருமாளுக்கு வலது புறத்திலும், சுக்கிராச்சாரியார், மிருகண்ட முனிவர், முதல் மூன்று ஆழ்வார்களான பேயாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பொய்கை ஆழ்வார் ஆகியோர் இடது புறத்திலும் காட்சி தருகின்றனர்.
சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் துர்க்கை சந்நிதி, மிக அரிதாக பெருமாள் சந்நிதி அருகே அமைந்துள்ளது. சாளகிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சந்நிதியில் அருள் தருகிறார்.
ஆம். இந்தத் தலத்தில் விஷ்ணு துர்க்கையும் சுயம்புவாக அருள் பாலிக்கிறாள். இந்த விஷ்ணு துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளிகளில் ராகு காலத்தில் பூஜை செய்தால் நவக்கிரக தோஷம் விலகும் என்பதும், சகோதர சகோதரிகள் உறவு பலப்படும்.
திருமங்கையாழ்வார், இத்தலத்தில் விஷ்ணு துர்க்கையையும் (மாயை) சேர்த்து "விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்" எனப் பாடுகின்றார்.
கண்ணன் அவதரிக்கும் போது அவனுக்கு முன்னதாக காளி அவதாரம் செய்து கம்சனை எச்சரித்த அந்த புராணத் தத்துவபடி இங்கு துர்க்கை எழுந்திருக்கின்றாள்.
சோழர்கள் பாண்டியர்கள் இந்த ஆலயத்தினை பெரிதாக கட்டினார்கள், முற்கால சோழன் வீரராஜேந்திர சோழன் காலத்திலேயே இது உயர்தர கல்லால் கட்டப்பட்டது.
பின்னாளில் நரசிம்ம வர்மன் எல்லா சந்நிதியினையும் அப்படி மாற்றினான், இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன், விக்ரமபாண்டியன், ஜடாவர்ம சுந்தரபாண்டியன் என எல்லோரும் திருப்பணி செய்த ஆலயம் இது.
இங்கே பகவான் இடது கையில் சக்கரமும், வலது கையில் சங்கும் வைத்து நிற்பது வேறு எங்கும் காணாத நிலை. அதற்கு அர்த்தமும் உண்டு.
பகவான் வலது கையில் சக்கரம் வைத்திருப்பது இயல்பு, அதன் பொருள் எதிரிகளை அழிக்க அவர் தயாரான நிலையில் இருக்கின்றார் எனப் பொருள்.
ஆனால், இங்கே மகாபலியினை ஒடுக்கி மூவுலகுக்கும் தனக்கு ஈடு இல்லை எனக் காட்டிய நிலையில் நிற்பதால், எதிரிகள் இல்லாததால் சக்கரம் அங்கே அவசியமில்லை அதனை இடது கைக்கு மாற்றிக் கொள்கின்றார்.
சங்கு என்பது அபயம் தருவதன் அடையாளம் என்பதால் எல்லா உயிர்க்கும் தானே அடைக்கலம் என்பதை அங்கே சொல்கின்றார் பகவான்.
இந்த ஆலயம் எல்லா நலன்களையும் தரும் குறிப்பாக குழந்தை இல்லா குறையினைத் தீர்க்கும், நீங்கள் வழிபட்டு வந்தபின் உங்களை அடுத்த படிநிலைக்கு உயர்த்தும்.
ஆம். இப்போது இருக்கும் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு எழ தடைகள் இருந்தால் முன்னேற இடர்கள் இருந்தால் சரியான வழியில் அதனை முறித்து உங்களை உயர்த்தும் ஆலயம் இது.
வாழ்வின் எல்லா ஆபத்துக்களையும் கடந்து உங்களை வாழவைக்கும் ஆலயம் இது, உங்கள் கர்மாவினை உணர்ந்து அதற்கேற்ப உங்களை நல்வழியில் அழைத்துச் செல்லும் அற்புதமான தலம் இது.
இந்தக் கோவில் ஆழ்ந்த தத்துவத்தைச் சொல்கின்றது.
மகாபலி மேல் பகவான் கால் வைத்தார் என்பது என்றோ ஒரு தனி அசுரன் தலைமேல் பகவான் கால் வைத்தார் என்பது அல்ல
அவன் பூமியில் எல்லா உயிர்க்கும் ஒரே பிரதிநிதியாய் இருந்தான் எனும் வகையில் அது எல்லா உயிரும் பகவானின் காலை தங்கள் தலைமேல் தாங்கிய நிகழ்வு.
அந்தப் பகவான் அந்த மகாபலியின் அகங்காரம் மட்டும் அகற்றவில்லை, பூமியின் ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு எல்லை உண்டு, எல்லாமே பகவானின் காலுக்கு கீழ் என்பதை சொன்னார்.
மூவுலகை அவர் அளந்தார் என்பது மூவகை ஆசைளை ஒழித்து, மும்மலங்களை ஒழித்து, ஒவ்வொருவருக்கும் ஞானம், பக்தி, வைராக்கியம் எனும் முக்குணங்களை தந்து அந்த முக்குணங்களின் கலவையால் ஒவ்வொருவரும் பகவானை அடைவதை சொல்லும் தத்துவம் இது.
இங்கு பகவான் வாமன வடிவிலும் விஸ்வரூப வடிவிலும் தரிசனம் தருகின்றார், சாளகிராம கல்லில் கிருஷ்ணனாகவும் அருள் பாலிக்கின்றார்.
அங்கே பகவானை வழிபடும் போது நம்மிடம் இருக்கக் கூடாத குணங்களான அகம்பாவம், பேராசை, ஆணவம் என எல்லாமும் அகற்றி ஞானமும், பக்தியும், வைராக்கியமுமாகத் தருவார் அந்த உலகளந்த பெருமாள்.
இந்த ஆலயத்தில் வழிபட்டுத்தான் மிருகண்ட முனிவருக்கு மார்கண்டேயன் எனும் மிகக் கீர்த்தியான மகன் கிடைத்தான், அவ்வகையில் இங்கு வழிபட்டால் நல்ல புத்திர பாக்கியம் கிடைக்கும்.
பகவானும் துர்க்கையும் அக்கா தம்பியாக அருள்வழங்கும் இவ்வாலயம் குடும்பத்தில் பிணைப்பினைத் தரும்.
நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடக் காரணமான இந்த ஆலயம் உங்களுக்கும் பெரும் பாக்கியமெல்லாம் தரும்.
அங்குச் சென்று வணங்குங்கள், தலையினைப் பணிந்து பகவான் உங்களைத் தன் பாதத்தால் தொட்டு ஆசீர்வதிக்கும்படி தலையால் வணங்குங்கள்.
பகவான் முன் குனிந்த தலை வேறேங்கும் குனியாதவாறு கம்பீரமாக நீங்கள் வாழ எல்லா வளமும் அருளும் பலமும் தெளிவும் ஞானமும் அந்த உலகளந்த பெருமான் உங்களுக்கு தருவார்.
நின்ற கோலத்தில் நிற்கும் பெருமாள் வடிவில் இந்த ஆலயத்தின் பெருமாள்தான் மிக பெரிதானவர், அவர் அளவு பெரிய பெருமாள் வேறு எந்த ஆலயத்திலுமில்லை, அப்படி சிறப்பு கொண்ட தலம் இது.
உலகையே அளந்த அந்த பரம்பொருள், உங்கள் உள்ளத்தை அளந்து அதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை கண்டிப்பாக தருவார்.
No comments:
Post a Comment