ஒரு அற்புத ஞானி - J.K. SIVAN
''தேஹாத்ம புத்தி, தேஹ ஸ்மரணை வேண்டாம்''
அது ஒரு பெரிய பச்சை பசேலென காய்த்து குலுங்கும் கனிகளும், காய்களும் பொங்கி வழியும் தோட்டம். கம்மென்று எங்கும் நறுமண மலர்களின் வாசனை. ஒரு சிறு ஓடை தெளிவான பளிங்கு நீரை தாங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. மரங்களின் நிழலில் வெயிலே தெரியவில்லை. பக்ஷி மிருகங்களின் சப்த ஜாலங்கள். வாழைத் தோட்டங்கள் குலை தள்ளிக் கொண்டு காட்சியளித் தன. சில்லென்ற மெல்லிய சுகமான காற்றில் கம்மென்று புஷ்பங்கள் நறுமணம்.
யாரங்கே வருவது என்று உங்களுக்கு தெரிகிறதா? ஸாக்ஷாத் சேஷாத்ரி ஸ்வாமிகள் தான். தூக்க முடியாமல் ஒரு பெரிய குலை வாழைக் காய் தாரை சுமந்து வருகிறார். நிச்சயம் வாழைக்குலையில் அரைப்பழங்கள் ஐநூறுக்கு குறையாது.
''இந்தாடா நாராயணா, இது இன்னும் பழுக்கணும் '' ரெண்டு தரம் சொல்லிட்டு ''அதோ பார். என்று வானத்தில் கையைக் காட்டி ரெண்டு தடவை ''ராம ராம ராம'' என்று சொல்லிக்கொண்டே வந்தால் ஜோரா போகலாம், ஆமா, ஜோரா போகலாம்''. சொல்லிக்கொண்டிருந்தவர் மறைந்தார்.
குழுமணி நாராயணஸ்வாமி சாஸ்திரி படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தார். என்ன நடந்தது இப்போது? இது எல்லாமே கனவா? பக்கத்தில் ஸ்வாமியைக் காணோம்.
'' ஒரு ஏழு நாள் என்னோடு படுத்துக்கோ'' என்று சொல்லி இளையனார் கோவில் மண்டபத்தில் ஸ்வாமிகளோடு படுத்துக்கொண்டிருந்த போது ஒரு இரவு கனவில் கண்டது மேற் சொன்ன காட்சி.
வாழைக்காய் எப்படி பாதி பச்சை பாதி பழமாகும் நிலையில் இருந்ததோ அதுபோல் மனதைப் பக்குவப் படுத்த, பழுக்க வைக்க ஸ்ரீ ராம நாம ஜெபம் அவசியம். ராம நாம ஜபம் தாரக மந்திரம். மோக்ஷ சாதனம் என்று இந்த கனவில் மகானின் உபதேசமா?
ஆறாம் நாள் படுத்தபோதும் ஒரு கனவு. அதில் சாஸ்திரி ஒரு மரத்தடி நிழலில் ஓரமாக உட்கார்ந்து ராம ராம என்று ஜபம் பண்ணுகிறார். சுவாமி பின் பக்கமாக வந்து கையில் ஒரு பெரிய வாளை எடுத்துக்கொண்டு ஓங்கி சாஸ்திரியை வெட்ட முயல்கிறார். சாஸ்திரி எழுந்திருக்காமல் தலையை மட்டும் அப்படியும் இப்படியும் அசைத்து வாள் வெட்டாமல் தடுக்கிறார். ஸ்வாமியும் விடவில்லை. கத்தியை தலையை நோக்கி இன்னும் விடாமல் வேகமாக அசைக்கிறார். சாஸ்திரி முன்னிலும் வேகமாக தலையை காப்பாற்றிக்கொள்ள முயல சில நிமிஷங்கள் இந்த யுத்தம் நடக்கிறது. கலகல வென்று சிரித்துக்கொண்டு ஸ்வாமிகள் கத்தியை தூர வீசி எறிகிறார்.
''நீ என்னடா ஜபம் பண்றே. தேகத்தின் மீது நினைவு வரலாமா? சீ சீ சீ, இது பிரயோஜனம் இல்லாதது'' என சொல்லி சுவாமி மறைகிறார். கனவு துண்டானது.
விடிந்ததும் ஸ்நானம் செயதுவிட்டு ஸ்வாமிகளை வணங்கி இரவு கண்ட கனவின் தாக்கத்தில் விம்மி விம்மி சாஸ்திரிகள் அழுதார். ஸ்வாமிகளிடம் ஒன்றும் சொல்லவில்லை. இருந்தாலும் ஸ்வாமிகள் ''எதுக்கும் ஒண்ணுமே கவலை இல்லை.அதுக்கெல்லாம் ஈஸ்வரன் இருக்கானே'' என ஒரு உபதேசம் சொன்னார். அவ்வளவு தான். அடுத்த க்ஷணம் ஸ்வாமிகள் அங்கிருந்து எழுந்து சிட்டாக எங்கேயோ போய்விட்டார்.
எவ்வளவு ஆபத்தான சந்தர்ப்பத்திலும் தேஹ ஸ்மரணை அற்ற ராம நாம ஜபம் எவ்வளவு அவசியம் என்று எப்படி ஒரு வினோத அனுபவ உபதேசம் பார்த்தீர்களா. இதுபோல் எங்காவது கேட்டதுண்டா?
No comments:
Post a Comment