Monday, March 1, 2021

Lakshmi kataksham

ஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷம்:

லோகே வநஸ்பதி ப்ருஹஸ்பதி தாரதம்யம்
யஸ்யா: ப்ரஸாத பரிணாமம் உதாஹரந்தி
ஸா பாரதீ பகவதீ து யதீயதாஸி
தாம் தேவ தேவ மஹிஷீம் ச்ரியம் ஆச்ரயாம:

"இந்த உலகில் ஒருவன் 'மரம்' போன்ற ஜடப்பொருளாகப் பிறப்பதும் தேவகுருவான 'ப்ருஹஸ்பதி' போன்ற அறிவாளியாகப் பிறப்பதும் ஆகிய ஏற்றதாழ்வுகளை ஸரஸ்வதியினுடைய கடாக்ஷத்தின் பலனாகவே கூறுகின்றனர். பூஜிக்கத்தகுந்த அந்த ஸரஸ்வதி எந்த ஸ்ரீரங்க நாச்சியாரின் அடியாராக இருக்கிறாளோ, அனைத்து தேவர்களின் அதிபதியான ஸ்ரீரங்கநாதனின் அந்த ஸ்ரீரங்கநாச்சியாரை நாம் சரண் அடைவோமாக" என்று அருளிச்செய்கிறார் ஸ்வாமி கூரத்தாழ்வான்.

யஸ்யா: கடாக்ஷ விக்ஷா க்ஷண லக்ஷம் லக்ஷிதா: மஹேசா: ஸ்யு:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ ஸா மாம் அபி வீக்ஷதாம் லக்ஷ்மீ:

"எந்த ஒரு பிராட்டியின் கடைக்கண் பார்வைக்கு ஒரு நொடிப்பொழுது இலக்கானாலும் மிகுந்த கைங்கர்யச் செல்வம் பெற்றவர்கள் ஆவார்களோ அப்படிப்பட்ட, ஸ்ரீரங்கராஜனின் பட்டமஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் என்னையும் தனது கடைக்கண் கொண்டு பார்க்கவேண்டும்" என்று மற்ற செல்வங்களை வேண்டாது கைங்கர்ய செல்வத்தையே ஸ்வாமி கூரத்தாழ்வான் வேண்டுகிறார்.

((ஸ்ரீ காஞ்சி மஹாவித்வான் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமி எழுதிய "ஸ்ரீ ஸ்தவம்" விளக்க உரையிலிருந்து..)

ஸ்ரீராமாயணத்தில், ஸ்ரீ சுக்ரீவ மஹாராஜனும், ஸ்ரீ விபீஷணாழ்வானும் பிராட்டியின் கடாஷத்தாலே ஸ்ரீ ராம கைங்கர்யம் பெற்றனர்.

ராமாவதாரத்தில் இளையபெருமாளும், அர்ச்சாவதாரத்தில்  எம்பெருமானாரும், பிராட்டியை, புருஷகாராமாக கொண்டே, இருவருமாக சேர்த்தியிலே கைங்கர்யத்தை ப்ரார்த்தித்து பெற்றார்கள்.

நாமும் ஸ்ரீ கூரத்தாழ்வான் காட்டிய வழியிலே, பிராட்டியிடம் மஹாநவமி நன்னாளில், கைங்கர்ய ஸ்ரீயை ( கைங்கர்யம் என்கிற உயர்ந்த செல்வத்தை) பிரார்த்திப்போமாக!

அனைவருக்கும் மஹாநவமி நல்வாழ்த்துக்கள்!!!

No comments:

Post a Comment