Friday, February 2, 2018

Teertapureeswarar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
_____________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.................)
___________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 222*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருநெல்வாயில் அரத்துறை:*
___________________________________
தேவாரம் பாடல் பெற்ற நடு நாட்டில் அமைந்துள்ள இருபத்து இரண்டு தலங்களில் முதலாவது தலமாகப் போற்றப் படுகிறது.

திருநெல்வாயில் அரத்துறை என்றும் இத்தலத்தை இன்றைய நாளில் திருவட்டுறை,  திருவட்டத்துறை என்ற பெயர்களில் ஆழைத்து வருகிறார்கள்.

 *இறைவன்:* தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர்.

*இறைவி:* ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி.

*தல விருட்சம்:* ஆலமரம்.

*தல தீர்த்தம்:* நீலமலர்ப்பொய்கை, வெள்ளாறு நதி, நிவாநதி.

*ஆகமம்:* காரணாகம முறைப்படி.

*தேவாரம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசர்- ஐந்தாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.
திருஞானசம்பந்தர்- இரண்டாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.
சுந்தரர்- ஏழாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும். ஆக மொத்தம் இத்தலத்திற்கு மூன்று பதிகங்கள்.

*பெயர்க் காரணம்:*
இத்தலம் கோயிலின் பெயரைக் கொண்டு திருவரத்துறை என்று வழங்கப்படுகிறது. ஊர்ப்பெயர்- நெல்வாயில்.

*இருப்பிடம்:*
விருத்தாசலம் தொழுதூர் சாலையில் விருத்தாசலத்தில் இருந்து தென்மேற்கே இருபத்தாறு கி.மி. தொலைவில் கொடிகளம் என்ற இடத்தில் பிரியும் மண் சாலையில் மேலும்  ஒரு கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம்.

மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான பெண்ணாகடத்தில் இருந்து சுமார் ஐந்து கி.மி. தொலைவில் திருநெல்வாயில் அரத்துறை தலம் உள்ளது.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர், (அரத்துறைநாதர்) திருக்கோவில்,
திருவட்டுறை அஞ்சல்,
திட்டக்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம்,
PIN - 606 111

*ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 800 மணி வரையிலும் திறந்திருக்கும்

*கோவில் அமைப்பு:*
தீர்த்தபுரீஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன் அமைந்திருந்தது. *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து வணங்கிக் கொண்டு உள் சென்றோம்.

முகப்பு வாயில் கடந்து உட்சென்றால் வெளிப் பிரகாரத்தில் விநாயகரைக் கண்டு கொண்டோம்.

விடுவோமா?, சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

அடுத்து, சமயக்குரவர்கள் நால்வர்களையும் கண்டு வணங்கிக் கொண்டோம்.

வான்மீகிமுனிவர், சப்த கன்னியர்கள், பூத, பவிஷ்ய, வர்த்தமான லிங்கங்கள், மகாவிஷ்ணு, ஜோதிலிங்கம் முதலிய சந்நிதிகள் இருக்க ஒவ்வொருத்தரையும் தொடர்ச்சியாக வணங்கி துதித்தோம். 

அடுத்து அண்ணாமலை, ஆதிசேஷன், வள்ளி தெய்வயானை சமேத முருகன், தண்டாயுதபாணி சந்நிதிகளுக்கும் சென்று கைதொழுது கொண்டோம்.

சேர சோழ பாண்டிய மன்னர்கள் பெயரில் உள்ள மூன்று இலிங்க மூர்த்திகளையும் கண்டு வணங்கிக் கொண்டோம்.

காசி விசுவநாதர் விசாலாட்சியுடன் காட்சி தர சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

கஜலட்சுமி, சந்தான குரவர்கள், பைரவர், சூரியசந்திரர் சந்நிதிகளும் இருக்க தொடர்ந்து வணங்கிக் கொண்டோம்.

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர்களையும் கண்டு வணங்கிக் கொண்டோம்.

நடராசர் சிவகாமி ஆகியோர் தரிசனம் தந்தனர். ஆனந்தித்து வணங்கித் திரும்பினோம்.

துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர் ஆகியோரின் மூர்த்தங்களயும் தரிசித்துப் பின் உள்ளே செல்ல, மூலவர் சந்நிதிக்கு வந்து சேர்ந்தோம்.

சந்நிதிக்கு முன் கொடிமரம் இருக்க, முன் வந்து நெடுஞ்சான்கிடையாய் பூமியில் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.

அடுத்து, பலிபீடத்தருகாக நின்று நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

பின்பு, நந்தி பெருமானை வணங்கி விட்டு, ஆலயத்துள் சென்று இறைவனை வணங்க அனுமதி வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

தீர்த்தபுரீஸ்வரரை மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

அடுத்ததாக, அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிக்குச் செல்ல, இங்கேயும் அம்பாள் சந்நிதிக்கு முன்பாக கொடிமரம் பலிபீடம் நந்தி இருக்க, அனைத்தையும் வணங்கிக் கொண்டு உள் புகுந்தோம்.

அம்பாளை மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

இங்கிருக்கும் நந்தியார் திரும்பிப் பார்த்த வண்ணம் இருக்கிறார்.

வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கு வந்த போது, அதனால் சேதம் உண்டாகாதிருக்க அப்போது நந்தி தலையை திருப்பி பார்த்தாராம்.

இந்த பார்வையினால் வெள்ளம் வடிந்தது என்றும், இதனால் இத்தலத்தில் நந்தியின் தலை சற்று திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இத்தலத்து இறைவனை, மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், சனகர், சேர, சோழ, பாண்டியர்கள் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

வெள்ளாற்றின் கரையிலுள்ள புண்ணியத்துறைகளில் இத்தலமும் ஒன்றாகும்.

இத்தலம் நிவாநதியின் கரையின்மேல் இருப்பதாக ஞானசம்பந்தர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது பதிகத்தில் *'கடும்புனல் நிவாமல்கு கரைமேல் அந்தண்சோலை நெல்வாயிலரத்துறை அடிகள் தம் அருளே!"* என்று குறிப்பிடுகிறார்.

சம்பந்தர் குறிப்பிடும் நிவா நதி இன்றைய நாளில் *வடவெள்ளாறு* என்று அழைக்கப்படுகிறது.

மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள் பாலிப்பதாகக் கூறப்படுகிறது.

செவ்வாயும், சனியும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் சிவ பூஜை செய்து வழிபட்டதால், சனி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதிகம்.

இத்தல விருட்சமான ஆலமரம் மக நட்சத்திரத்திற்குரிய மரமாகும். ஆகவே மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.

*திருப்புகழ் தலம்:*
அருணகிரிநாதர் இத்தலத்திலுள்ள முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருப்புகழில் இத்தல முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தல முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு, இருதேவியருடன் தின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். மயில் பின்புறம் இருக்கிறது.

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப்பெற்ற சிவதலங்கள் நாற்பத்து நான்கில் இத்தலமும் ஒன்றாகும்.

*தல அருமை:*
இத்தலம் திருவரத்துறை என்றும் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தருக்கு அரத்துறைநாதர் முத்துச் சிவிகையும், முத்துக் குடையும், முத்துச்
சின்னங்களையும்
வழங்கி அருளிய தலம் இதுவாகும்.

திருஞானசம்பந்தர் சீர்காழியில் உமையம்மை கையால் ஞானப்பால் பெற்று பதிகம் பாடி சைவ சமயத்தை சிறப்பிக்க சிவபெருமான் குடி கொண்டிருக்கும் தலங்களுக்கெல்லாம் திருயாத்திரை தொடங்கினார்.

சம்பந்தர் சிறு பாலகனாக இருந்ததால் அவருடைய தந்தையார் சம்பந்தரைத் தூக்கிக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது.

திருதூங்காணைமாடம் சிவஸ்தலத்தை தரிசித்து திருநெல்வாயில் அரத்துறை நோக்கி செல்லும் போது தந்தை தோள்மீது எழுந்தருள்வதை விட்டு நடந்தே சென்றார்.

சம்பந்தர் தன் சிற்றடிகள் நோக நடந்து செல்வதைக் கண்டு யாவரும் வருந்தினர். திருநெல்வாயில் அரத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற இடத்தில் இரவு தன் அடியார்களுடன் சம்பந்தர் தங்கினார்.

அன்றிரவு திருநெல்வாயிலிலுள்ள அடியார்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் கனவில் இறைவன் தோன்றி சம்பந்தர் கால்கள் நோகாமல் இருக்க தான் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும் அவற்றை சம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் ஆணையிட்டு அருளினார்.

இதே போன்று சம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விபரங்களைக் கூறி முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டர்.

மறுநாள் காலை திருநெல்வாயில் அரத்துறை அடியார்கள், கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக் கண்டு இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர்.

பின்னர் அவற்றை எடுத்துக் கொண்டு மாறன்பாடி சென்று சம்பந்தரிடம் கொடுத்து, அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து, முத்துக்குடை நிழலில் அரத்துறைநாதர் ஆலயம் அழைத்து வந்தனர்.

சம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது பதிகம் பாடி வணங்கினார்.

*தல சிறப்பு:*
பாலகாசி, விருத்தகாசி, ஊழிகாசி என்னும் மூன்று காசித் தலங்கள் உள்ளன.

இதில், இத்தலம் ஊழிக்காசியாக விளங்குகின்றது.

*தல பெருமை:*
வெள்ளாற்றின் கரையில் உள்ள ஆழித்துறை (காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவதிட்டத்துறை (திட்டக்குடி) திருநெல்வாயில் அரத்துறை, திருக்கைத்துறை என்று ஏழு துறைத்தலங்களுள் இது முக்கியமான துறைத்தலம் இதுவாகும்.

இந்த ஏழு புண்ணியத் துறைத்  தலங்களில், மக்களின் பாவங்களை நீக்க, இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலித்ததாக கூறப்படுகிறது.

இந்த ஏழு துறைத் தலங்களையும் சப்தரிஷிகள் பூஜை செய்ய வேண்டி, நீவா  என அழைத்ததாக ஐதீகம்.

இந்த,  நீவா-வே வடவெள்ளாறு நதியாக மாறியது எனவும் கூறுவர்.

*சம்பந்தர் தேவாரம்:*
பண்: பியந்தைக்காந்தாரம்.

1.🔔எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கந்த மாமல ருந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

🙏🏾மணம் பொருந்திய மலர்களை உந்திக்கொண்டு பெருகிவரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் அழகிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருநெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருள் , எம் தந்தை , ஈசன் , பெரியோன் , ஆனேற்றை ஏறிவருவோன் என்று அவன் பெயர்களைப் பலமுறை சொல்லி ஏத்தி மனம் பொருந்தி வழிபடவல்லவர்கட்கு அல்லால் , ஏனையோர்க்குக் கைகூடாதது .

2.🔔ஈர வார்சடை தன்மேல் இளம்பிறை யணிந்தவெம் பெருமான்
சீருஞ் செல்வமு மேத்தாச் சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்
வாரி மாமல ருந்தி வருபுன னிவாமல்கு கரைமேல்
ஆருஞ் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

🙏🏾சிறந்த மலர்களை வாரிக்கொண்டு உந்திவரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் பொருந்திய சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறையில் விளங்கும் அடிகளின் திருவருள் , குளிர்ந்த நீண்ட சடைமேல் இளம்பிறை அணிந்த எம்பெருமானே என்று கூறி அவன் சீரையும் செல்வத்தையும் ஏத்தாத பேதையர்கள் தொழுது பெறுதற்கு இயலாதது .

3.🔔பிணி கலந்தபுன் சடைமேற் பிறையணி சிவனெனப் பேணிப்
பணி கலந்துசெய் யாத பாவிகள் தொழச்செல்வ தன்றால்
மணி கலந்துபொன் னுந்தி வருபுன னிவாமல்கு கரைமேல்
அணி கலந்தநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

🙏🏾மணிகளையும் பொன்னையும் உந்திக் கொண்டு வரும் நீரை உடைய நிவாநதிக் கரைமேல் அழகுற அமைந்த நெல் வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள் பிணிப்போடு அமைந்த மென்மையான சடைமீது பிறையணிந்துள்ள சிவனே எனப் பக்தி செய்து அவன் திருத்தொண்டுகளை அன்போடு செய்யாத பாவிகள் தொழுது பெறுதற்கு இயலாதது .

4.🔔துன்னவாடையொன் றுடுத்துத் தூயவெண் ணீற்றின ராகி
உன்னி நைபவர்க் கல்லா ல் ஒன்றுங்கை கூடுவ தன்றால்
பொன்னு மாமணி யுந்திப் பொருபுன னிவாமல்கு கரைமேல்
அன்ன மாருநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே

🙏🏾பொன்னையும் சிறந்த மணிகளையும் உந்திக் கொண்டு வரும் நீரைஉடைய நிவா நதிக்கரைமேல் அன்னங்கள் தங்கி மகிழும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள் , தைத்த கோவண ஆடை ஒன்றைக் கட்டிக் கொண்டு தூய வெண்ணீறணிந்து திகழும் அவன் பெருமைகளை எண்ணி நைந்துருகுபவர்கட்கு அல்லால் ஏனையோருக்குக் கைகூடுவதன்று .

5.🔔வெருகு ரிஞ்சுவெங் காட்டில் ஆடிய விமலனென் றுள்கி
உருகி நைபவர்க் கல்லால் ஒன்றுங்கை கூடுவ தன்றால்
முருகு ரிஞ்சுபூஞ் சோலை மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்
தருகு ரிஞ்சுநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

🙏🏾மணம் தவழும் பூஞ்சோலைகளில் பூத்த மணம் மொய்க்கும் மலர்களைச் சுமந்து ஓடிவரும் நிவா நதி அருகில் வந்து பொருந்திச் செல்லும் நெல்வாயில் அரத்துறையில் விளங்கும் அடிகளின் திருவருள் , காட்டுப்பூனைகள்வாழும் கொடிய சுடுகாட்டில் ஆடும் விமலனே ! என்று அழைத்து அவன் பெருமைகளை எண்ணி மனம் உருகுபவர்கட்கு அல்லால் ஏனையோர்க்கு ஒரு சிறிதும் கைகூடாதது .

6.🔔உரவு நீர்சடைக் கரந்த வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப்
பரவி நைபவர்க் கல்லாற் பரிந்துகை கூடுவ தன்றால்
குரவ நீடுயர் சோலைக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவ மாருநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

🙏🏾குராமரங்கள் நீண்டுயர்ந்த சோலைகளில் ஓடிவரும் குளிர்ந்த நீரை உடைய நிவா நதிக்கரைமேல் விளங்கும் நீர்ப்பாம்புகள் இளைப்பாறி மகிழ்வதான நெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருள் , வலிமை பொருந்திய கங்கை வெள்ளத்தைத் தன் சடைமிசை ஒளித்த ஒப்பற்றவனே என்று மனம் குளிர்ந்து ஏத்தி வணங்கி மனம் உருகுபவர்க்கு அல்லால் ஏனையோரிடத்து அவன் அன்புகாட்டுவ தில்லை ஆதலின் கை கூடாதது .

7.🔔நீல மாமணி மிடற்று நீறணி சிவனெனப் பேணும்
சீல மாந்தர்கட் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கோல மாமல ருந்திக் குளிர்புன னிவாமல்கு கரைமேல்
ஆலுஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

🙏🏾அழகிய மலர்களை உந்திக் கொண்டு ஓடிவரும் குளிர்ந்த நீரை உடைய நிவாநதிக் கரைமேல் ஆரவாரிக்கும் சோலை கள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திரு அருள் , நீல மணி போன்ற கண்டத்தினன் , நீறணிந்த சிவன் , என விரும்பி வழிபடும் சிவஞானியர்க்கு அல்லால் ஏனையோர்க்குக் கைகூடுவது அரிது .

8.🔔செழுந்தண் மால்வரை யெடுத்த செருவலி யிராவண னலற
அழுந்த வூன்றிய விரலான் போற்றியென் பார்க்கல்ல தருளான்
கொழுங்க னிசுமந் துந்திக் குளிர்புன னிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

🙏🏾கொழுமையான கனிகளைச் சுமந்து உந்திவரும் குளிர்ந்த நீரைஉடைய நிவாநதிக்கரைமேல் அழுந்திய சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் திருவருளை , செழுமையான குளிர்ந்த பெரிய கயிலைமலையைப் பெயர்த்த போர் வலிமிக்க இராவணன் அலறுமாறு அழுந்த ஊன்றிய விரலை உடையவர் என்று போற்ற வல்லார்க்கு அல்லாமல் ஏனையோர்க்குத் தாரார் .

9.🔔நுணங்கு நூலயன் மாலும் இருவரும் நோக்கரி யானை
வணங்கி நைபவர்க் கல்லால் வந்துகை கூடுவ தன்றால்
மணங்க மழ்ந்துபொன் னுந்தி வருபுன னிவாமல்கு கரைமேல்
அணங்குஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

🙏🏾மணம் கமழ்ந்து பொன்னுந்தி வரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் அழகு செய்யும் சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள் , நுட்பமான நூல்களை அறிந் துணர்ந்த பிரமன் மால் ஆகிய இருவராலும் காணுதற்கு அரிய பொருளாய் இருப்பவனை வணங்கி நைந்து வழிபடுவார்க்கு வாய்க்குமே யன்றி ஏனையோர்க்குக் கைகூடாதது .

10.🔔சாக்கி யப்படு வாருஞ் சமண்படு வார்களும் மற்றும்
பாக்கி யப்பட கில்லாப் பாவிகள் தொழச்செல்வ தன்றால்
பூக்க மழ்ந்துபொன் னுந்திப் பொருபுன னிவாமல்கு கரைமேல்
ஆர்க்குஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

🙏🏾மலர்களின் மணம் கமழ்ந்து பொன்னுந்திக் கரையை பொருது வரும் நீரை உடைய நிவா நதிக் கரைமேல் ஒலிக் கின்ற சோலைகளால் சூழப்பெற்று விளங்கும் நெல் வாயில் அரத்துறை அடிகள்தம் , திருவருள் சாக்கிய மதத்தில் விழுபவர்களும் சமண சமயத்தைச் சார்பவரும் மற்றும் புறப்புறச் சமயங்களைத் தழுவுவார் களும் ஆகிய , சைவ நெறி சாரும் பாக்கியம் இல்லாத பாவிகளால் , தொழுது பெறுவதற்கு இயலாதது .

11.🔔கறையி னார்பொழில் சூழ்ந்த காழியுண் ஞானசம் பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த அரத்துறை அடிகள்தம் அருளை
முறைமை யாற்சொன்ன பாடல் மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
பறையு மையுற வில்லை பாட்டிவை பத்தும்வல் லார்க்கே.

🙏🏾கருமை நிறம் அமைந்த பொழில்கள் சூழ்ந்துள்ள சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் , ஒலிக்கின்ற அழகிய புனல் பரவிய நெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருளைப் பெறுதற்குரிய நெறிகளை முறையோடு தெரிவித்துள்ள இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கட்கு ஐயுறவின்றி வினைகள் நீங்கும்.

             திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*
மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் பிரமோற்சவம் பதினோரு நாட்களாக கொண்டாடப்படுகிறது.

இரண்டாம் நாள் திருவிழாவில் இறையூர் மாறன்பாடியிலிருந்து திருஞானசம்பந்தர் எழுந்தருளி ஞானப்பால் ஐதீகம் நடத்தப்படுகிறது.

எட்டாவது நாளில் பரிவேட்டை விழா.

பத்தாம் நாள் விழாவில், மாசிமக தீர்த்தவாரியும், பஞ்ச மூர்த்தி உலாவும் நடத்தப் படுகிறது.

*அருகில் உள்ள பாடல் பெற்ற தலங்கள்:*
திருநெல்வாயில் அரத்துறையிலிருந்து.............

திருநெல் வெண்ணெய்............44. கி.மி.
திருமுதுகுன்றம்........21.கி.மி.
திருத்தூங்கானை மாடம்............................06.கி.மி.
திருஎக்கத்தம் புலியூர்.........................18.கி.மி.
திருக்கூடலையாற்றூர்...............................................32.கி.மி.

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள இருபத்து இரண்டு தலங்களில் நாளைய தலப்பதிவு *பிரளயகாலேசுவரர் திருக்கோயில், திருத்தூங்கானை மாடம்.(பெண்ணாடம்)*
___________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment