உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
_________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல...................)
___________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண் :225*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*
*சிவ தல அருமைகள் பெருமைகள்:*
*திருநீலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருஎருக்கத்தம்புலியூர்:*
____________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள இத்தலம் நான்காவது தலமாகப் போற்றப் படுகிறது.
திருஎருக்கத்தம்புலியூரை தற்போது ராஜேந்தரப்பட்டினம் என்று அழைக்கிறார்கள்.
*இறைவன்:* திருநீலகண்டேஸ்வரர், திருக்குமாரசுவாமி.
*இறைவி:*
வீராமுலை அம்மன், நீலமலர்கண்ணி அம்மை.
*தல விருட்சம்:* வெள்ளை எருக்கு.
*தல தீர்த்தம்:* கந்த தீர்த்தம், செங்கழுநீர், நீலோற்பல தீர்த்தங்கள்.
*ஆகமம்:* காரணாகம முறைப்படி.
*தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர்.
*இருப்பிடம்:*
விருத்தாசலம் -ஆண்டிமடம் -ஜெயங்கொண்டான் சாலையில் விருத்தாசலத்தில் இருந்து பன்னிரண்டு கி.மி. தொலைவில் இந்தத் திரைப்படம் அமைந்து இருக்கிறது.
ஸ்ரீமுஷ்ணம் என்கிற வைணவத் தலம் அருகில் இருக்கிறது.
ஸ்ரீ முஷ்ணம் விருத்தாசலம் பாதையில் சென்றும் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்துள்ள இத்தலத்தை அடையலாம்.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில்,
ராஜேந்தரப்பட்டினம் அஞ்சல்,
விருத்தாசலம் வட்டம்,
கடலூர் மாவட்டம்,
PIN - 608 703
*ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
பஞ்ச புலியூர்த்தலங்களில் திருஎருக்கத்தம்புலியூர் தலமும் ஒன்றாகும்.
மற்ற தலங்கள்.
2) திருப்பாதிரிப்புலியூர்,
3) பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்),
4) திருப்பெரும்புலியூர்,
5) ஓமாம்புலியூர்.
புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார்.
அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்ச்சிப்பது இவரது வழக்கம். பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து பறிக்க புலியின் கண்களையும் வேண்டிப் பெற்றிருந்தார்.
இதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வடமொழியில் வியாக்ரம் என்றால் புலி) என்று பெயர் வந்தது. தமிழில் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார்.
இந்த வீயாகரபாதர் வழிபட்ட தலங்களில் திருஎருக்கத்தம்புலியூர் தலமும் ஒன்றாகும்.
எருக்கினைத் தல விருட்சமாக உடைய புலியூராதலின் திருஎருக்கத்தம்புலியூர் என்று பெயர் பெற்றது.
ராஜராஜசோழ மன்னனுக்கு புத்திர பாக்கியத்தையும், அவனுடைய மகன் ராஜேந்தர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.
இராஜேந்த சோழ மன்னன் இவ்வாலயத்திற்கு ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கிறான். ஆதலால் இத்தலத்திற்கு இராஜேந்தப் பட்டிணம் என்று இவ்வூர் மக்கள் பெயர் சூட்டியதாக வரலாறு கூறுகிறது.
*கோவில் அமைப்பு:*
இவ்வாலயத்து சென்றிருக்கும்போது முதலில் ராஜகோபுரம் நிலைகளைத் தாங்கியபடி காணப்பெற்றதும் *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்..
கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றோம் அங்கே பலிபீடத்தைக் காணப் பெற்றோம். இதனருகாக போய் நின்று, நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு, மேலும் ஆணவமலம் துளியாதிருக்கும் மனத்தையும் அருளும் படி வேண்டிக் கொண்டோம்.
அடுத்து, கொடிமரத்து முன் நெடுஞ்சான்கிடையாய் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.
பின்பு, நந்தி மண்டபத்திற்குச் சென்று நந்தியாரை வணங்கிக் கொண்டு, ஆலயத்துள் சென்று இறைவனை வணங்க அனுமதி வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.
இதற்கடுத்து, வலதுபுறத்தில் சிறிய விநாயகர் சந்நிதி இருக்கக் கண்டோம். விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.
இதனின், வெளிச்சுற்றில் இடதுபுறத்தில் நவக்கிரகமும் நால்வரும் இருக்க, நால்வரையும் நெஞ்சுக்கு நேராக கூப்பிய கைகளுடன் வணங்கியபடியே நகர்ந்தோம்.
அடுத்ததாக, 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய அவதாரத்தலம் திருஎருக்கத்தம்புலியூர் இதுவாகும்.
இவ்வாலயத்தில் இவரது திருவுருவம் மாதங்க சூளாமணியாருடன் சேர்ந்திருந்த வண்ணம் காட்சி கிடைத்தது. சகரமேற் கைகளை உயர்த்தி குவித்து தொழுது கொண்டோம்.
இதன்பிறகு மகாகணபதி, விசுவநாதர் விசாலாட்சி, முருகர், இலக்குமி ஆகிய சந்நிதிகளுக்குச் சென்று ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு திரும்பினோம்.
அடுத்து, மூலவர் திருநீலகண்டேஸ்வரர் சந்நிதிக்கு விரைந்தோம். சுவாமியின் நைவேத்யத்திற்காக திரையிடப்பட்டிருக்க, சில நிமிடங்கள் கண்களை மூடி தியாணித்து ஈசனை நினைந்துருகியபடி இருந்தோம்.
மணியொலித்து திரைவிலக்கித் தெரிந்த ஈசனின் தீபாரதனையை ஜோதியை வணங்கிக் கொண்டோம்.
அர்ச்சகர் தந்த ஆராத்திஜோதியை ஒற்றி வணங்கிக் கொண்டு, வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டு வெளிவந்தோம்.
கோஷ்டத்தில் வலம் செய்கையில், மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர்கள் இருக்க, ஒருவரையும் விடாது ஒவ்வொருத்தரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம். .
ஒவ்வொரு வருடமும், மார்ச் மாதம் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும், சூரியஒளிக் கதிர்கள் மூலவர் மீது பிரவாகப்படுவது இவ்வாலயத்தின் சிறப்புளில் ஒன்றாகும்.
கருவறைச் சுற்றில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் சந்நிதிக்குச் சென்று ஆனந்தித்து துதித்து வணங்கித் திரும்பினோம்.
அம்பாள் சந்நிதிக்குச் சென்று மனமுருகப் பிரார்த்தித்து தொழுது வணங்கிவிட்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
*தலப் பெருமை:*
கைலாயத்தில் சிவன் வேதங்களின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் போது பார்வதியின் கவனம் சிதறியது.
அதனால் அவளை பரதவர் குலத்தில் மீனவப் பெண்ணாகப் பிறக்குமாறு இறைவன் சபித்தார்.
இதனால் கோபமடைந்த முருகன், தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார்.
முருகனின் இச்செயலுக்காக இறைவன் அவரை மதுரையில் தனபதி என்பவரின் மகனாக உருத்திரசர்மர் என்ற பெயரில் ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார்.
உரிய வயது வந்த போது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டு பேசும் திறன் பெற்றார்.
குமரன் வழிபட்டதால் சிவன் திருக்குமாரசாமி என்ற் பெயரிலும் இத்தலத்தில் விளங்குகிறார்.
உருத்திரசன்மரின் உருவம் இக்கோவிலில் உள்ளது. அறிவில் சிறந்த முருகப்பெருமானுக்கு ஊமைத்தன்மை நீங்கியது போல், திறமையிருந்தும் பயம், கோபம் முதலியவற்றால் பேசத் தெரியாதவர்கள் இங்கு வந்து பூஜை செய்து நிவாரணம் பெறலாம்.
இத்தலத்தின் பெருமையை கேட்ட தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து பறவையாகவும், மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட்டு வந்தனர்.
அங்கே வந்த வேடர்கள் பறவைகளை கொல்லவும், மரங்களை வெட்டவும் முயன்றனர்.
தேவர்களும், முனிவர்களும் இறைவனிடம் முறையிட, அவர்களை யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி வழிபடும்படி கூறி மறைந்தார்.
அவ்வாறே அவர்கள் யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி, இத்தலத்தில் இறைவனை வழிபட்டனர்.
அத்தம் என்பது காடு, எனவே எருக்கத்தம் என்பது எருக்கங்காடாகும். எருக்கஞ் செடிகள் நெருக்கமாக நிறைந்திருந்த காட்டில் எழுந்த ஊர் எருக்கத்தம்புலியூர் என்று அழைக்கப் பெற்றது.
சிவபெருமானுக்கு இனிய வெள்ளெருக்கு இன்னும் அவ்வூர்க் கோவிலின் மூலஸ்தானத்தருகே தல விருட்சமாக விளங்குகின்றது.
*திருநீலகண்ட யாழ்ப்பாணர்:*,
நீலகண்ட யாழ்ப்பாணர், பாணர் மரபில் தோன்றியவர்.
இவருடைய மனைவி மாதங்க சூளாமணி ஆவார். இசையே உருவெடுத்த பாணரும், இவருடைய வாழ்க்கைத் துணைவியாரும், நீலகண்டேசுவரரின் புகழை யாழில் இனிமையுடன் இசையமைத்து உள்ளம் உருக எல்லையில்லா இன்பம் எய்தினர்.
இவர்கள் சிவத்தலங்கள் தோறும் சென்று யாழ் இசைத்து எம்பெருமானைப் பாடி அருள் பெற்றுப் பெருமையுற்றனர்.
சோழவள நாட்டிலுள்ள எல்லா சிவன் கோவில்களையும் கண்டுகளித்துப் பேரின்பம் பூண்ட பாணரும் இவருடைய மனைவியாரும் மதுரையம்பதிக்குச் சென்றனர்.
பாணர் தன் மனைவியோடு திரு ஆலவாய் அண்ணலாரது ஆலயத்தின் புறத்தே நின்று எம்பெருமானின் புகழை யாழில் சுருதிகூட்டி பண்ணமைத்துப் பாடிக் கொண்டிருந்தார்.
பண்டை நாட்களில், பாணர் மரபினோர் ஆலயத்துள் சென்று இறைவனை வழிபடுவது கிடையாது.
புறத்தே நின்று வழிபடுவதையே நியதியாகக் கொண்டிருந்தார்கள். பாணரின் யாழிலே உள்ளம் உருகிய சோமசுந்தரக் கடவுள் தமது பக்தனைக் காக்க திருவுள்ளம் கொண்டு மதுரையம்பதி சிவத்தொண்டர்கள் கனவில் எழுந்தருளினார்.
யாழ்ப்பாணரையும், அவருடைய மனைவியாரையும் கோவிலுள் அழைத்து வந்து தரிசனம் செய்வதற்கு ஆணையிட்டார். அவ்வாறே பாணர் கனவிலும் எழுந்தருளினார்.
பாணரே! உம்மை, எம்மிடம் அழைத்து வந்து தரிசனம் செய்துவைக்க ஆவன செய்துள்ளோம்" என்று அருள்வாக்கு சொல்லி மறைந்தார்.
மறுநாள் வழக்கம்போல் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மனைவியாருடன் கோவிலின் புறத்தே அமர்ந்து யாழ் இசைத்து தம்மை மறந்த நிலையில் பாடிக்கொண்டிருந்தார்.
அவ்வேளையில், தொண்டர்கள் அவர்களைக் கண்டு வணங்கி, எம்பெருமானின் ஆணையை அவரிடம் கூறி அவர்களை அகத்துள் எழுந்தருளுமாறு பணிவோடு கேட்டுக் கொண்டனர்.
பாணரும் அவருடைய மனைவியும் தொண்டர் களின் வேண்டுகோளுக்கு இணங்கி கோவிலுக்குள் சென்று மண்டபத்தில் அமர்ந்தனர்.
பக்தி வெள்ளத்தில் மூழ்கிய அன்பர் இருவரும் தரை ஈரமாக இருப்பதனைக்கூடப் பொருட்படுத்தாமல், ஈரத்தரையில் அமர்ந்து மெய்மறந்து யாழை மீட்டி பாடத் தொடங்கினர்.
இவருடைய இன்ப இசையில் மயங்கிய மதுரையம்பதி ஈசன் தரையின் குளிர்ச்சி பட்டு யாழின் சுருதி கெட்டுவிடுமே என்று திருவுள்ளம் பற்றினார்.
அசரீரி வாயிலாகப் பெருமான், *"நிலத்திலிருந்து பாடினால் ஈரத்தால் யாழ் கெட்டுவிடும். எனவே அவர்கட்கு அமர்ந்து பாடப் பலகை ஒன்று இடுங்கள்"* என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
அப்பொழுது அத்தொண்டர்கள் அவர்களுக்கு அழகிய பீடம் ஒன்றை எடுத்துவந்து அதன் மீது அமர்ந்து பாடுமாறு செய்தனர்.
பீடத்தில் அமர்ந்த யாழ்ப்பாணரும், மதங்கசூளாமணியும் அழகிய இனிய தெய்வ சக்திமிக்கப் பக்திப் பாடல்கள் பலவற்றைப் பாடி அனைவரையும் மெய் மறக்கச் செய்தனர்.
அதன் பிறகு இருவரும் மதுரையம்பதியில் நெடுநாள் தங்கியிருந்து விட்டு தங்கள் யாத்திரையைத் தொடர்ந்தனர்.
அடுத்தடுத்துள்ள பல சிவத்தலங்களையும் தரிசித்தவாறு திருவாரூரை அடைந்தனர்.
திருவாரூர் தியாகேசப்பெருமானும், பிராட்டியாரும் பாணர் இசையில் மயங்கினர். அன்றிரவு, ஈசன் மெய்யன்பர்கள் கனவிலே எழுந்தருளி, *"எமது அன்பன் பாணனுக்குத் திருக்கோவிலுள் வேறு வாயில் அமைத்து அதன் வழியாகக் கோவிலுக்குள் அழைத்து வந்து இசை பாடத் துணைபுரிவீர்களாக"* என்று கட்டளையிட்டருளினார்.
மறுநாள் தொண்டர்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணர் எழுந்தருளும் பொருட்டு வடதிசையில் வாயில் ஒன்றை நிர்மாணித்தனர். அதன் வழியாக, அவரையும், அவருடைய மனைவியாரையும் எம்பெருமான் திருமுன் எழுந்தருளச் செய்தனர்.
யாழ்ப்பாணர் வீதிவிடங்கப் பெருமானைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்து பக்திப் பாடல்கள் பாடினார்.
சில நாட்களில் அங்கிருந்து புறப்பட்டார். சிவத்தலங்கள் பலவற்றைத் தரிசித்துக்கொண்டே, சீர்காழியை வந்தடைந்து சம்பந்தரை வணங்கினார்.
பாணரின் யாழிசையில் எல்லையில்லா இன்பம் எய்திய திருஞான சம்பந்தப் பெருமான் அவரையும், அவர் தம் மனைவியாரையும் தம்முடனேயே இருந்து தேவாரப் பதிகங்களை யாழில் இட்டு இசைத்துப் பாடும் வண்ணம் அருள்புரிந்தார்.
இறுதியில் திருபெருமண நல்லூரில் ஞானசம்பந்தர் திருமணத்தில் தோன்றிய சிவஜோதியில், பாணரும், அவர்தம் மனைவியாரும் கலந்து சிவபதவியை அடைந்தனர் சிவ சிவ..
*பஞ்சப் புலியூர்கள்:*
1. *ஓமாம்புலியூர்:* அம்பிகை பூசித்த தலம்.
2. *கானாட்டாம் புலியூர்:* பதஞ்சலி பூசித்த தலம்.
3. *திருப்புலிச் சரம்:*
வியாக்கிரபாதர் பூசித்த தலம்.
4. *எருக்கத்தம் புலியூர்:*
சூரியன் பூசித்த தலம்.
5. *திருப்பாதிரிப் புலியூர்:*
முருகன் பூசித்த தலம்.
திருஎருக்கத்தம்புலியூர் எருக்கங்காடு, புலி பூசித்தது, இதனால் எருக்கத்தம்பூர் என்ற பெயர் வந்தது. இப்போது இராஜேந்திரப் பட்டணம் என விங்குகிறது.
நரேந்திரன் என்ற பாண்டியன் இறைவனை வழிபட்டு இராசேந்திரன் என்னும் பிள்ளையைப் பெற்றதனால் இப்பெயர் வந்தது.
அருணகிரிநாதர் "பூத்தார் சூடும்" என்ற திருப்புகழில் யாழ்ப்பாணாயன் பட்டினம் என்று இவ்வூரைக் குறிப்பிடுகிறார்.
திருநீலகண்ட யாழ்ப்பாணர் பிறந்த தலம். இவர் விருப்பப்படி சம்பந்தர் இங்கு வந்து வழிபட்டார்.
தேவகணங்கள் வழிபட்டமையால் *கணேசுவரம்* என்ற பெயரும் உண்டு.
வேதங்களைக் கடலில் எறிந்த குமாரக் கடவுள் ஊமையாகி இங்கு வந்து பூசித்து ஊமைத்தன்மை நீங்கப் பெற்றார்.
இதனால் சுவாமிக்கு *குமாரசுவாமி* என்ற பெயர் வந்தது.
தவம் செய்துகொண்டிருந்த பிராமணனைக் கொல்ல வந்த புலியைக் கொன்ற வேடன் அப்புண்ணிய விசேடத்தால் புலிக்கால் முனிவராகப் பிறந்து இங்கே பூசித்தமையால் புலியூராயிற்று.
பிறர் வெட்டாத மரமாகிய வெள்ளெருக்கு மரமாகத் தேவர்கள் நின்று பூசிக்கும் கரணத்தால் எருக்கத்தம் புலியூர் என்றும் ஆயிற்று.
திருப்பாதிரிப்புலியூர் சம்பந்தரும் அப்பரும் பாடிய தலம்.
நாவுக்கரசர், கருங்கல்லே தெப்பமாக மிதந்து கரையேறிய தலம்.
அவ்விடம், *கரையேறவிட்ட குப்பம்* எனவாகும்.
முடங்கு கால் முயலுக்கு அருள் செய்த இடம். வியாக்கிரபாதர் பூசித்த தலம்.
இதற்குத் தொல்காப்பியர் இயற்றிய கலம்பகம் ஒன்று உண்டு.
*சம்பந்தர் தேவாரம்:*
பண்: குறிஞ்சி.
1.🔔படையார் தருபூதப் பகடா ருரிபோர்வை
உடையா னுமையோடு முடனா யிடுகங்கைச்
சடையா னெருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்
விடையா னடியேத்த மேவா வினைதானே.
🙏🏾படைகளாக அமைந்த பூதகணங்களை உடையவனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், உமையம்மையோடு உடனாய் விளங்குபவனும், வந்து பொருந்திய கங்கையை ஏற்ற சடையை உடையவனும் ஆகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் தகுதிவாய்ந்த கோயிலில் எழுந்தருளிய விடை ஏற்றை உடைய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை, வினைகள் வந்து சாரா.
2.🔔இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்
நிலையார் மதின்மூன்று நீறாய் விழவெய்த
சிலையா னெருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயில்
கலையா னடியேத்தக் கருதா வினைதானே.
🙏🏾இலை வடிவமாக அமைந்த சூலப்படையை உடையவனும், எம்பெருமானும், நிலைபெற்ற முப்புரங்களையும் நீறாய்ப் பொடிபடுமாறு கணை எய்த வில்லை உடையவனும், எருக்கத்தம்புலியூரில் விளங்கும் கோயிலில் மேவியிருப்பவனும் ஆகிய கலைகளின் வடிவான சிவபிரானின் திருவடிகளை ஏத்தி வாழ்த்துவோரை, வினைகள் கருதா.
3.🔔விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ணா ணலியாகும் பித்தா பிறைசூடீ
எண்ணா ரெருக்கத்தம் புலியூ ருறைகின்ற
அண்ணா வெனவல்லார்க் கடையா வினைதானே.
🙏🏾விண்ணவர் தலைவனே, வேறுபட்ட வடிவும் பண்பும் உடையவனே, விடைமீது ஏறிவருபவனே! பெண், ஆண், அலி என்னும் திணை பால் பாகுபாடுகளைக் கடந்துள்ளவனே, பித்தனே, பிறை சூடியவனே, எல்லோராலும் எண்ணத்தகும் எருக்கத்தம்புலியூரில் உறைகின்ற தலைவனே என்றுரைத்துப் போற்ற வல்லவரை, வினைகள் அடையா.
4.🔔அரையார் தருநாக மணிவா னலர்மாலை
விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி
வரையா னெருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
திரையார் சடையானைச் சேரத் திருவாமே.
🙏🏾இடையிலே பாம்பைப் பொருந்துமாறு அணிந்துள்ளவனும், மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்துள்ளவனும், விடைமீது ஏறி வருபவனும், கயிலை மலையைத் தனக்குரிய இடமாகக் கொண்டவனும், எருக்கத்தம்புலியூரில் மகிழ்ந்து உறைபவனும் ஆகிய அலைகள் வீசும் கங்கை நதியை, சடைமிசைத்தரித்த சிவபிரானைச் சேர்வோர்க்குச் செல்வங்கள் வந்து சேரும்.
5.🔔வீறார் முலையாளைப் பாக மிகவைத்துச்
சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்
ஏறா னெருக்கத்தம் புலியூ ரிறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே.
🙏🏾வேறொன்றற்கில்லா அழகினை உடைய தனங்களைக் கொண்ட உமையம்மையை, இடப் பாகமாகச் சிறப்புடன் வைத்துக் கொண்டருளியவனும், சீறி வந்த காலனின் சினம் அடங்கச் செய்தவனும், இடப ஊர்தியை உடையவனும், எருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள இறைவனும் ஆகிய சிவபிரானைத் தனித்திருந்து தியானிப்பவரை வினைகள் விரும்பா.
6.🔔நகுவெண் டலையேந்தி நானாவிதம் பாடிப்
புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்
தகுவா னெருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே
தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே.
🙏🏾சிரிக்கும் வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்திப் பலவிதமாகப் பாடிக்கொண்டு மகளிர் இடும் பிச்சையை ஏற்கப் புகுபவனாய்ப் புலித்தோலைத் தோளில் இட்டுக்கொண்டு தகுதி வாய்ந்தவனாய் எருக்கத்தம்புலியூரில் தங்கி அங்கே நிலைத்திருப்பவனாகிய இறைவன் கழல்களை ஏத்த வினைகள் தொடரா.
7.🔔***********
🙏🏾*************
(இப்பதிவு காணக் கிடைக்கவில்லை.)
8.🔔ஆவா வெனவரக்க னலற வடர்த்திட்டுத்
தேவா வெனவருளார் செல்வங் கொடுத்திட்ட
கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயில்
தேவே யெனவல்லல் தீர்தல் திடமாமே.
🙏🏾ஆ ஆ என்ற இரக்கக் குறிப்போடு இராவணன் அலறுமாறு அவனை அடர்த்து, பின் தேவா என அவன் வேண்ட அருள் நிறைந்த செல்வங்கள் பலவற்றை வழங்கியருளிய தலைவனே, எருக்கத்தம்புலியூரில் விளங்கும் சிறப்புமிக்க கோயிலில் எழுந்தருளும் தேவனே என்று போற்ற, நம் அல்லல்கள் தீர்தல் உறுதியாகும்.
9.🔔மறையா னெடுமால்காண் பரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
இறையா னெருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.
🙏🏾வேதங்களை ஓதும் நான்முகனும், நெடுமாலும் காணுதற்கு அரியவனே, மழுவைக் கையில் ஏந்தியவனே, கலை நிறையாத பிறை மதியைச் சூடியவனே, முத்துக்களின் கொத்துப் போன்ற இறையோனே என்று போற்றி, எருக்கத்தம்புலியூரை இடமாகக் கொண்ட கறைமிடற்று அண்ணலை நினைந்தால், வினை கெடும்.
10.🔔புத்த ரருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்
நித்த னெருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
அத்த னறவன்றன் னடியே யடைவோமே.
🙏🏾புத்தர் சமணர் ஆகியோர்தம் பொய்யுரைகளை விலக்கித் தூய்மையைத் தழுவி விளங்கும் ஒளி வடிவினனாய், உமையம்மையாருடன் நித்தம் மணாளனாக விளங்குவோனாய், எருக்கத்தம்புலியூரில் விளங்கிக் கொண்டிருக்கும் அறவடிவினனாகிய தலைவன் அடிகளை, நாம் அடைவோம்.
11.🔔ஏரா ரெருக்கத்தம் புலியூ ருறைவானைச்
சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்
ஆரா வருந்தமிழ் மாலையிவை வல்லார்
பாரா ரவரேத்தப் பதிவா னுறைவாரே.
🙏🏾அழகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் இறைவனை, சீர்மிகு காழிப்பதியில் தோன்றிய திருவார்சம்பந்தன் அருளிய சுவைகுன்றாத அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதுபவர்கள் உலகவர் ஏத்த வானகம் எய்துவர்.
திருச்சிற்றம்பலம்.
*திருவிழாக்கள்:*
பங்குனி உத்திர நட்சத்திரம் துவங்கி பத்து நாட்கள் விழா சிறப்பு.
*தொடர்புக்கு:*
கணேஷ் குருக்கள்.
04143- 243533
93606 37784
94440 63806
*அருகிலுள்ள பாடல் பெற்ற தலங்கள்:*
எருக்கத்தம்புலியூரிலிருந்து செல்லும் தொலைவுகள்.......
விருத்தாசலம்............15.கி.மி.
கூடலையாற்றூர்......22.கி.மி.
திருநாரையூர்............60.கி.மி.
திருவரத்துறை..........23.கி.மி.
பெண்ணாடம்............16.கி.மி.
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருத்தினை நகர். (தீர்த்தனகிரி)*
__________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment