Thursday, February 8, 2018

Nartanavallabeswar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்புசாமி.*
___________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்.*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல......................)
_____________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண் : 224*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர்:*
___________________________________
*இறைவன்:* நர்த்தன வல்லபேஸ்வரர், நெறிகாட்டுநாயகர்.

*இறைவி:* பராசக்தி, ஞானசக்தி, புரிகுழலாம்பிகை.

*தல விருட்சம்:* கல்லால மரம்.

*தல தீர்த்தம்:* பிரம்ம தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், கார்த்தியாயனர் தீர்த்தம், வெள்ளாறு மணிமுத்தாறு.

*ஆகமம்:* காரணமாகப் முறைப்படி.

*தேவாரம் பாடியவர்கள்:*
சுந்தரர்.-ஏழாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.

*இருப்பிடம்:*
விருத்தாசலத்தில் இருந்து ஶ்ரீமுஷ்ணம் என்ற வைணவத் தலம் வழியாக சுமார் முப்பத்தோர் கி.மி. தொலைவில் இருக்கிறது.

சிதம்பரத்திலிருந்து இருந்து சுமார் இருபத்தைந்து கி.மி. தொலைவில் உள்ள இத்தலத்திற்கு காவாலக்குடி செல்லும் பேருந்தில் ஏறிச் சென்று, அதை அடுத்துள்ள இத்தலத்தை அடையலாம்.

சிதம்பரம் - காவாலக்குடி நகரப் பேருந்து வசதியும் உள்ளது.

கும்பகோணம் - சேத்தியாதோப்பு சாலையில் குமாரகுடி என்ற இடத்தை அடைந்து, அங்கிருந்து ஸ்ரீ முஷ்ணம் போகும் பாதையில் பிரிந்து இரண்டு கி.மீ. சென்று, பின் காவாலகுடி செல்லும் சாலையில் திரும்பி, இரண்டு கி.மீ. சென்று காவாலகுடியை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம். கோயில் வரை வாகனங்கள், பேருந்து செல்லும்.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோயில்,
திருக்கூடலையாற்றூர்,
காவலாகுடி அஞ்சல்,
காட்டுமன்னார் கோவில்  வட்டம்,
கடலூர் மாவட்டம்,
PIN - 608 702

*ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*கோவில் அமைப்பு:*
வெள்ளாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு நதிகள் கூடும் இடத்தில் அமைந்திருக்கிறது இந்தத் தலம்.

எனவே திருக்கூடலையாற்றூர் எனப் பெயர் பெற்றது. இத்தலத்தை தட்சிணப் பிரயாகை என்றும் கூறுவர்.

இவ்வாலயத்து நாம் செல்லுகையில், இவ்வாலயத்தின் பழமையான ராஜகோபுரம் காணக்கிடைத்து மூன்று நிலைகளைத் தாங்கியபடி காணப்பெற்றதும், *சிவ சிவ, சிவ சிவ*  என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தபோது, முதலில் நந்திதேவர் மட்டும் காட்சி தந்தார்.

இவரை வணங்கிக் கொண்டு, ஆலயத்துள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

இங்கு கொடிமரமும் பலிபீடமும் காணக் கிடைக்கவில்லை. வெளிப்புற சுற்றில் பக்கவாயில் ஒன்று இருந்தது.

தொடர்ந்து செல்ல, அங்கு அமுத விநாயகரைக் கண்டு விட்டோம். விடுவோமா?, சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

அடுத்து, விசுவநாத லிங்கம், ஆறுமுகர், ஞானசக்தி, அம்பாள் முதலிய சந்நிதிகளும் இருக்க ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு தொடர்ந்தோம்.

மூலவர் விமானம் இரு தள அமைப்புகளுடன் அழகாக காட்சியளித்தன. அங்கிருந்த படிகளேறி மேலே சென்றோம். அழகிய மண்டபம் இருந்தது.

இங்கும் துவார கணபதியை கண்டோம். கைதொழுது வணங்கிக் கொண்டோம்.

வணங்கி விட்டு, மேலும் உட்சென்றபோது, மூலவர் சந்நிதிக்கு வந்து சேர்ந்தோம்.

மூலவர் கம்பீரமான அழகுடன் காட்சி தந்தார். கண்குளிர கண்டு தரிசித்து மனங்குளிர அவரருளை பெற்று, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம். 

கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை முதலானோர்கள் இருந்தனர். 

ஒவ்வொருத்தரையும் தொடர்ச்சியாக வணங்கி துதித்தோம்.

அடுத்து, சண்டேசுவரர் சந்நிதிக்குச் சென்று இவரை வணங்கும் நெறிமுறையுடன் வணங்கிக் கொண்டு திரும்பினோம்.

சுவாமிக்கு வலதுபுறமாக பராசக்தி அம்பாள் சந்நிதி இருந்தது. இங்கு அம்பாள் நின்ற திருக்கோலத்துடன் அழகுற அருளாட்சி தந்து கொண்டிருந்தாள்.

மனமுருகி பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

பின்பு நடராச சபைக்கு வந்து சேர்ந்தோம். நடராஜப் பெருமானுடன் சிவகாமி மூர்த்தமும் உடன் இருந்து அருளியவண்ணமிருந்தனர்.

இவன் ஆடற்கலையை ரசித்து மகிழ்ந்தோம். சிரசுமேல் கைகள் உயர்த்தி குவித்து நடராஜப் பெருமானையும் சிவகாமியம்மையாரையும் வணங்கித் திரும்பினோம்.

சித்திரை மாதம் முதல் மூன்று தேதியில் மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறாள்.

அந்த சமயத்தில் சூரிய பூஜை நடத்தப்படுவதாக அங்கிருந்தோர் கூறினார்கள்.

எமதர்மராஜாவின் உதவியாளரான சித்திரகுப்தருக்கு சந்நிதி இருப்பது ஒரு சில கோயில்களில் மட்டுமே.

அந்த சிறப்பை இக்கோயில் பெற்றுக் கொண்டுள்ளது. இங்குள்ள சித்ரகுப்தர் உற்சவ மூர்த்தியாக ஒரு கையில் எழுத்தாணியும், மறு கையில் ஏடும் கொண்டு காட்சி தருகிறார்.

இக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில்லை. மூலவரைத் தரிசித்து விட்டு வரும்போது வலதுபுறம் சனிபகவான் சந்நிதி மட்டுமே உள்ளது.

பொதுவாக சிவன் கோயில்களில் சிவனுடன் ஒரு அம்மன் சந்நிதி இருப்பது வழக்கம். ஆனால் திருக்கூடலையாற்றூரில் உள்ள நர்த்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சந்நிதிகள் இருக்கின்றன.

ஞானசக்தி, பராசக்தி என்ற இரு பெயர்களுடன் இரண்டு சந்நிதிகளில் அம்மன் இருவரும் அருள் பாலிக்கின்றார்கள்.

ஞானசக்தி அம்மன் சந்நிதியில் குங்குமமும், பராசக்தி அம்மன் சந்நிதியில் விபூதியும் பிரசாதமாக தரப்படுகிறது.

இவர்களை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு விருத்தியாகின்றது என்றும் இதனால் ஆற்றல் பெருகுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

*தல அருமை:*
மகரிஷி அகத்தியர் இத்தலத்தில் தான் கற்ற வித்தைகள் மறக்காமல் இருக்க இறைவனை பிரார்த்தித்தார்.

எனவே, இங்கு குழந்தைகளை அழைத்து வந்து, படித்த பாடங்கள், கற்ற கலைகள் மறக்காமல் இருக்க இறைவனை வேண்டிக் கொள்கின்றனர்.

கார்த்தியாயண மகரிஷி ஒரு புத்திரனைப் பெற்றுக் கொண்டபின், மீண்டும் ஒரு புத்திரி வேண்டுமென இறைவனை நினைந்து வணங்கினாள்.

இறைவன் திருவருளால், லஷ்மி, மணிமுத்தாநதியில், தாமரை மலரின் மேல், ஒரு குழந்தையாக விளையாடின.

அக்குழந்தையை கண்டு வீட்டிற்கு எடுத்து வந்து, அம்புஜவல்லி என பெயரிட்டு வளர்த்து வந்தார்.

பின்பு, விஷ்ணுமூர்த்தி வராஹ அவதாரமெடுத்தபோது, தம் பத்தினியைக் காணாது தேடி சென்றபோது, இங்குள்ள இத்தல தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து சிவபெருமானை வழிபட்டு லஷ்மி வேண்டும் என பிரார்த்தித்தார்.

அதற்கு ஈசன், தமக்கு வடபாக இடத்தில், வாசஞ் செய்தால், லஷ்மி கிடைப்பாள் என்றருளினார். இப்படிப்பட்ட புண்ணியத்தலம் இது.

சோழமன்னனான தினகரமகாராஜன் என்பவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியைக் கொன்று விட்டார்.

இதனால் மன்னனுக்கு பிரம்மஹத்தி பீடித்தது. இதனால் நாடு நகரங்களை இழந்தான். காடுகளில் சுற்றித் திரிந்தான்.

அந்தச் சமயத்தில், மிகவும் அருவறுத்தக்க வகையான உடலுடன் நாய் ஒன்று, மன்னனை பின்தொடர்ந்து வந்ததது.

இடையில் குறிக்கிட்ட நதியின் நதியோரமாய் அவன் அமர்ந்தான். இவனுக்குப் பின்தொடர்ந்து வந்த அருவறுப்பான நாய், மன்னனின் கண் முன்பாகவே அந்த நதியில் மூழ்கி நீந்தி, பின் வெளியேறி வந்தது.

அருவறுப்பான நாய் நதியில் இறங்கி நீராடிய பின்பு, அந்நாய்க்கு அருவறுப்பு மேனி நீங்கப் பெற்றிருப்பதைக் கண்டு வியந்து போனான்.

உடனே அவனும் அந்நதியில் இறங்கி மூழ்கி நீராடினான். தனது உடலிலும், உள்ளத்திலும் சில மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தான்.

எனவே, சில காலங்களாக அந்த நதியில் மூழ்கி நீராடினான். பின்பு, இழந்த எல்லாவித சம்பத்துக்களையும் பெற்றான்.

தனது தோஷங்களை நீக்கிய அந்த நதியின் பெருமையை உலகுக்கு உணர்த்த, நதிக்கரையில் அருகில் சிவாலயம் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்தினான்.

மன்னன் எழுப்பிய ஆலயத்தை, தொட்டவண்ணம் நதியில், திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

அப்போது, புரிகுழல்நாயகி அம்மன், பொன்னப்ப குருக்கள்  கனவில் தோன்றி, நான் ஆற்று வெள்ளத்தில் போகிறேன் என கூறினார்.

விடிந்ததும், கனவில் அம்மன் கூறியதை நினைத்து, பொன்னப்பர் ஊர்மக்களை திரட்டிப்போய், ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த மூலவர் முதலான விக்கிரங்களை மீட்டெடுத்தார்.

மேலும் பிரம்மாவும் சரஸ்வதியும் விஜயம் செய்த தலம் இது.

எனவே கல்வி தொடர்பான பிரார்த்தனைகளைச் செய்ய ஏற்ற தலமாக இத்தலத்தைக் கருதுகின்றார்கள்.

சிதம்பரத்தில் வியாக்ரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தனது நடனக் காட்சியை காட்டி அருளினார் சிவபெருமான்.

அந்த நடனக் காட்சியைத் தானும் காண விரும்பி பிரம்மா இத்தலத்தில் இறைவனை வழிபட்டு வேண்டினார்.

அவர் வேண்டுதலை ஏற்று பிரம்மாவிற்கும் சரஸ்வதிக்கும் நர்த்தனம் ஆடி அருள் செய்தார். எனவேதான் இத்தல இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

*திருப்புகழ் தலம்:*
இத்தலத்திலுள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியிருக்கிறார்.

திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது. இங்கு முருகர் பன்னிரு திருக்கரங்களுடன் தனது இரு தேவியர் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

*தல சிறப்பு:*
சுந்தரர் திருமுதுகுன்றம் தலத்தை தரிசிக்க சென்றபோது, இத்தலத்தை வணங்காமல் சென்றார்.

இறைவன் அந்தணராக உருவெடுத்து வந்து சுந்தரர் முன்சென்றார்.

சுந்தரர் அவரிடம், திருமுதுகுன்றம் செல்வதற்கு வழி எது எனக் கேட்டார்.

அதற்கு, அந்தணராக வந்த இறைவனோ கூடலையாற்றுருக்கு வழி இது என்று கூறி மறைந்தார்.

திருமுதுகுன்றத்துக்கு வழி கேட்டால், கூடலையாற்றூருக்கு வழியை கூறிவிட்டு மறைந்து போகிறாரே? என்று திடுக்கிட்டார்.

இதனால் சுந்தரர் கூடலையாற்றூருக்கு வந்து வழிபட்டார் என்பது வரலாறு.

சுந்தரமூர்த்தி நாயனார், முன் சென்ற அந்தணர் சிவபெருமான்தான் என்று சுந்தரர் அறிந்து, இறைவனின் திருவருளை எண்ணி வியந்து பாடியருளினார்.

*சுந்தரர் தேவாரம்:*
பண்: புறநீர்மை.

1.🔔வடியுடை மழுவேந்தி
மதகரியுரி போர்த்துப்
பொடியணி திருமேனிப்
புரிகுழ லுமையோடும்
கொடியணி நெடுமாடக்
கூடலை யாற்றூரில்
அடிகள்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

🙏🏾கூர்மையையுடைய மழுப்படையை ஏந்தி , மதத்தை யுடைய யானையினது தோலைப் போர்த்துக்கொண்டு , பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடும் , கொடிகள் நாட்டிய உயர்ந்த மாடங்களையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற , திருநீற்றை யணிந்த பெருமான் , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

2.🔔வையக முழுதுண்ட
மாலொடு நான்முகனும்
பையிள அரவல்குற்
பாவையொ டும்முடனே
கொய்யணி மலர்ச்சோலைக்
கூடலை யாற்றூரில்
ஐயன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

🙏🏾உலகம் முழுதையும் உண்ட திருமாலோடும் . பிரம தேவனோடும் , அரவப் படம்போலும் அல்குலையுடைய , இளைய , பாவைபோலும் உமாதேவியோடும் உடனாகி , கொய்யப்படுகின்ற அழகிய பூக்களையுடைய சோலைகளையுடைய திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவன் , இவ்வழியிடை என் முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

3.🔔ஊர்தொறும் வெண்டலைகொண்
டுண்பலி யிடும்என்று
வார்தரு மென்முலையாள்
மங்கையொ டும்முடனே
கூர்நுனை மழுவேந்திக்
கூடலை யாற்றூரில்
ஆர்வன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

🙏🏾ஊர்தோறும் சென்று , வெள்ளிய தலையோட்டை ஏந்தி , ` பிச்சை இடுமின் ` என்று இரந்துண்டு . கச்சணிந்த , மெல்லிய தனங்களையுடையவளாகிய உமாதேவியோடும் உடனாய் , கூரிய முனையையுடைய மழுவை ஏந்திக் கொண்டு , திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற , பேரன்புடையனாகிய பெருமான் , இவ்வழி யிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

4.🔔சந்தண வும்புனலுந்
தாங்கிய தாழ்சடையன்
பந்தண வும்விரலாள்
பாவையொ டும்முடனே
கொந்தண வும்பொழில்சூழ்
கூடலை யாற்றூரில்
அந்தணன் வழிபோந்த
அதிசயம் அறியேனே

🙏🏾பிறை முதலிய பிறவற்றோடு அழகு பொருந்திய நீரையும் தாங்கியிருக்கின்ற , நீண்ட சடைமுடியையுடையவனாய் , பந்தின்கண் பொருந்திய விரலை யுடையாளாகிய , பாவைபோலும் உமையோடும் உடனாகி , பூங்கொத்துக்கள் பொருந்திய சோலை சூழ்ந்த திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற , அழகிய கருணையை யுடையவனாகிய பெருமான் , இவ்வழியிடை என்முன் போந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

5.🔔வேதியர் விண்ணவரும்
மண்ணவ ரும்தொழநற்
சோதிய துருவாகிச்
சுரிகுழ லுமையோடும்
கோதிய வண்டறையுங்
கூடலை யாற்றூரில்
ஆதிஇவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

🙏🏾அந்தணரும் , தேவரும் , மக்களும் வணங்கி நிற்க , நல்ல ஒளியுருவமாய் , சுரிந்த கூந்தலையுடைய உமாதேவியோடும் , பூக்களில் மகரந்தத்தைக்கிண்டிய வண்டுகள் ஓசையைச் செய்கின்ற திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வன் , இவ்வழி யிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

6.🔔வித்தக வீணையொடும்
வெண்புரி நூல்பூண்டு
முத்தன வெண்முறுவல்
மங்கையொ டும்முடனே
கொத்தல ரும்பொழில்சூழ்
கூடலை யாற்றூரில்
அத்தன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

🙏🏾தான் வல்லதாகிய வீணையோடும் , வெள்ளிய முப்புரி நூலை அணிந்து , முத்துப்போலும் வெள்ளிய நகையினை யுடைய உமாதேவியோடும் உடனாகி , பூக்கள் கொத்தின்கண் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளி யிருக்கின்ற எந்தை , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்த வாறு !

7.🔔மழைநுழை மதியமொடு
வாளர வுஞ்சடைமேல்
இழைநுழை துகிலல்குல்
ஏந்திழை யாளோடும்
குழையணி திகழ்சோலைக்
கூடலை யாற்றூரில்
அழகன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

🙏🏾மேகத்தில் நுழைகின்ற சந்திரனையும் , கொடிய பாம்பையும் சடைக்கண்வைத்து , நுண்ணிய இழைபொருந்திய உயர்ந்த உடையை அணிந்த அல்குலையும் , தாங்கிய அணிகலங் களையும் உடைய உமாதேவியோடும் உடனாகி , தளிர்களது அழகு விளங்குகின்ற சோலைகளையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந் தருளியிருக்கின்ற அழகன் , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

8.🔔மறைமுதல் வானவரும்
மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும்
பேய்க்கண முஞ்சூழக்
குறள்படை யதனோடுங்
கூடலை யாற்றூரில்
அறவன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

🙏🏾வேதத்திற் சொல்லப்பட்ட தலைமைகளையுடைய பலராகிய தேவரும் , அத்தேவர்க்கெல்லாம் தலைவனாகிய இந்திரனும் , பேய்க்கூட்டமும் சூழ்ந்திருக்க , பிறைபோலும் நெற்றியை யுடைய உமாதேவியோடும் , பூதப் படையோடும் , திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற புண்ணியனாகிய பெருமான் , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் அறியாமை இருந்தவாறு !

9.🔔வேலையின் நஞ்சுண்டு
விடையது தான்ஏறிப்
பாலன மென்மொழியாள்
பாவையொ டும்முடனே
கோலம துருவாகிக்
கூடலை யாற்றூரில்
ஆலன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

🙏🏾கடலின்கண் எழுந்த நஞ்சினை உண்டு விடையை ஊர்ந்து , பால்போலும் இனிய மொழியை உடையவளாகிய உமா தேவியோடும் உடனாய கோலமே தனது உருவமாகக் கொண்டு , திருக் கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆல்நிழற்பெருமான் , இவ் வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் அறியாமை இருந்தவாறு !

10.🔔கூடலை யாற்றூரிற்
கொடியிடை யவளோடும்
ஆட லுகந்தானை
அதிசயம் இதுவென்று
நாடிய இன்றமிழால்
நாவல வூரன்சொல்
பாடல்கள் பத்தும்வல்லார்
தம்வினை பற்றறுமே

🙏🏾திருக்கூடலையாற்றூரில், கொடிபோலும் இடையினையுடையவளாகிய உமாதேவியோடும் , அருள் விளை யாட்டை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , ` அவன் செய்த இச்செயல் அதிசயம் ` என்று சொல்லி , ஆராய்ந்த இனிய தமிழால் , திருநாவலூரனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்களது வினை , பற்றறக் கெடுதல் திண்ணம் .

          திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*
சித்திரை முதல் தேதி முதல் மூன்று தேதிகள் வரை, இத்தலத்தில் சூரிய பூஜை நடத்தப் பெறுகின்றன.
மாசி மாதத்தில் பிரமோற்சவம் பதின்மூன்று நாட்களுக்கு நடைபெறுகின்றன.
மாசிமகம் அன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது.
கிருத்திகை, பிரதோஷம் முதலியன சிறப்பாக நடைபெறுகிறது.

*தொடர்புக்கு:*
கீர்த்திவாச குருக்கள்.
97867 34652
மெய்க்காவல் சுப்பிரமணியம்.
04144- 208704

*அருகிலுள்ள ஆலயங்கள்:*
திருக்கூடலையாற்றூர் தலத்திலிருந்து இருக்கும் தொலைவுகள்................
சிதம்பரம்...................31.கி.மி.
கானாட்டம்புலியூர்..49.கி.மி.
ஓமாம் புலியூர்.........45.கி.மி.
கங்கைகொண்ட 
             சோழபுரம்.....33.கி.மி.
பெண்ணாடம்...........53.கி.மி.
எருக்கத்தம்புலியூர்.22.கி.மி.
விருத்தாசலம்..........37.கி.மி.

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில், திருஎருக்கத்தம்புலியூர்.(இராஜேந்திரப்பட்டிணம்)*

___________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment