திரு மென்மலர்ப் பாதங்கள்!
சுகப்பிரம்மரிஷி அவர்களின் மேனமையினை நாம் கேட்டு அறிந்திருக்கிறோம். ஆனால் மேன்மையுடன் கூடிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாள் எனும் சாட்சாத் ஈஸ்வரரின் மகிமைகளை நாம் எல்லோரும் நேரே கண்டு அனுபவிக்கும் ஆனந்தத்தை பெற்றிருப்பதை என்னென்பது!
அப்படி ஒரு ஆனந்த அனுபவத்தைப் பெற்ற ஸ்ரீபெரியவாளின் பக்தையான ஸ்ரீமதி கனகம்மா ராமசுவாமி அந்த அரிய சம்பவத்தை திரு. ரா. கணபதி அவர்களின் மூலம் நமெக்கெல்லாம் பகிர்ந்தளிக்கிறார்.
ஸ்ரீமதி கனகம்மாவிற்கு உஷ்ணமாகிப்போன உலகின் தாபத்தை தாங்குகின்ற பரமேஸ்வரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளுக்கு (அந்த கொதிப்பை ஏற்று நிற்கும் பாதகமலங்களுக்கு) குளுமையான சந்தனத்தாலான பாதுகையை சமர்பிக்க வேண்டுமென்ற ஆவல் பிறந்தது.
அப்படியொரு சந்தனக் கலவையில் பதித்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஸ்ரீபாத சுவடுகள் தங்களது குடும்பத்திற்கு க்ஷேமநிதியா கிடைக்க வேண்டுமென்றும், அந்த திருபாத சுவடிற்கு, தினந்தோறும் பூஜை செய்வித்து மகிழ வேண்டுமென்பதே பக்தையின் உயர்நோக்கம்.
நறுமணம் கமழும் சந்தனக் கலவையை தயாரித்து ஸ்ரீபெரியவாளைத் தரிசிக்க சென்றார். அந்த கலவையின் மேல் ஸ்ரீ பெரியவா பாதங்களை பதித்துத் தந்து அருளுமாறு வேண்டி நின்றார்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் குரு, பரமகுரு ஆகிய இருவரும் பரம்பொருளிடம் ஒன்றிக் கலந்த இடமாக கலவையில் சம்பவம் நடந்ததாக ஸ்ரீ ரா. கணபதி நயமுடன் விளக்குகிறார்.
அந்த அம்மாவின் பக்திக்கும், அவர் தம் பிறந்த வீட்டாரும், புகுந்த வீட்டாரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளிடம் பக்தி கொண்டிருந்ததாலோ, பக்தர்களின் எந்த கோரிக்கையையும் அது நியாயமாக இருக்கும் பட்சத்தில் அந்தப் பெருங்கருணை நிறைவேற்றியருளும் என்பதாலும் ஸ்ரீ பெரியவா தன் கமல மலர் போன்றத் திருபாதங்களை சந்தனக் கலவையின் மேல் வைத்து அழுத்தி அமரலானார்.
ஸ்ரீ பெரியவாளுக்கு குளிர்ச்சி பாதித்து சீதம் கொண்டுவிடுமோ என சூழ்ந்திருந்த பக்தர்கள் கவலைக் கொள்ளும் அளவு நெடு நேரமாக தன் கமலக்கழல்களைப் பதித்தவாறு ஸ்ரீ பெரியவா அருளினார்.
இத்தகு சீரடிச் சுவடுகளை ஸ்ரீ பெரியவா சந்தனமாகக் குழைந்து வரும் தனது அருளின் வடிவமாக சந்தனக்குழம்பில் அளித்த பெருநாள் சுக்லவருஷம், புரட்டாசி, கிருஷ்ணபட்ச சஷ்டியும் புதன்கிழமையும் சேர்ந்த நன்னாள்.
இந்தத் திருப்பாதப்படிவை அந்த அம்மையார் சென்னையில் தன் வீட்டிற்கு மிக ஆனந்தத்தோடு கொண்டு சென்றார். மூன்று மாதங்கள் சென்றன. ஸ்ரீமதி கனகம்மாவிற்கு ஒரு கவலை ஏற்படலானது.
சந்தனம் மெல்ல காய்ந்து காய்ந்து வந்ததில் அந்த திருபாதப்படிவம் எங்கும் வெடிப்புகள் தோன்றலாயின. பக்தையின் மனம் பதைபதைத்தது. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் திருப்பாதங்களே இவை என்ற உணர்வோடும் பக்தியோடும் இருந்த அவர் மனநிலைக்கு, இதை சந்தனம் காய்ந்த இயல்பான வெடிப்புகளாகக் கருத மனம் இடமளிக்கவில்லை. மிகவும் வேதனையுற்றார்.
தன வேதனைக்கு வேறு யாரிடம் வேண்டுவதென்று தெரியாமல் ஸ்ரீ பெரியவாளிடமே ஓடினாள். அங்கோ சோதனையாக ஒரு பெரிய பக்தர் கூட்டம் ஸ்ரீ பெரியவாளை சூழ்ந்து நின்றிருந்தது. ஸ்ரீ பாத சுவடுகளில் வெடிப்பு ஏற்பட்டிருப்பதை ஸ்ரீ பெரியவாளிடம் முறையிட்டால் தன் மனக்கவலைத் தீரும் என்று ஏங்கி வந்த பக்தைக்கு அதை ஸ்ரீ பெரியவாளிடம் கூறும் வகையில் சூழ்நிலை அங்கில்லை. முக்கியப்பட்டவர்கள் வருகையினால் ஓரே பரப்பரப்பாக இருந்தது.
மெதுவாக ஸ்ரீ பெரியவாளை நெருங்கிய பக்தைக்கு புஷ்பங்களால் மூடியிருந்த சந்தனப் பாதுகைகளை அந்த மகான் முன்னே நகர்த்தத்தான் முடிந்த்தேயன்றி அதன் கோரிக்கையைக் கேட்க இயலவில்லை.
ஆனால் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளே பக்தையின் மனதிற்கு கொஞ்சம் இதமளிக்கும் வகையில் தன் சிரஸில் அணிந்திருந்த வன்னி பத்திர மாலையை எடுத்து அந்தப் பாத பதிவுகளின் மேல் போட்டு அனுக்ரஹித்தார்.
"தை மாதம் வசந்த பஞ்சமியில் மாயவரம் சீதாப்ப்பாட்டி பாடசாலையில் ஆசார்யாள் சந்நிதியில் பிரதிஷ்டை பண்ணிடு" என்று வேறு ஸ்ரீ பெரியவா இந்த பக்தைக்கு அருட்கட்டளையிட்டார்.
ஸ்ரீ பெரியவா இப்படிக் கூறிவிட்டு மற்ற பக்தர்களிடம் தன் அருட்ப்பார்வையை நகர்த்திக் கொண்டதால் கனகம்மாவிற்கு வெடிப்புகளைப் பற்றி முறையிடவே முடியாமல் போனது. இப்படி வன்னிமாலையை பாதசுவடுகளின் மேலே போட்டு அதை பிரதிஷ்டை செய்யும் பாக்யத்தையும் ஸ்ரீ பெரியவா அருளியிருந்தும் பக்தையின் மனம் திருப்தி கொள்ளவில்லை. தான் வந்ததன் நோக்கம் நிறைவேறவில்லையே என்று ஏக்கம் தான் மிகுந்திருந்தது.
சென்னைக்குத் திரும்பும் வழியெல்லாம் அம்மையாருக்கு இதே கவலைதான். வேறு யாரிடமாவது கட்டாயம் இதைப்பற்றிக் கேட்டறிந்து அந்த சந்தனச் சுவடு விரிசல்களை சரிசெய்தாலன்றி அவர் மனம் சமாதானமாகாது போலிருந்தது.
'சரி எதுவும் பெரியவா விட்டவழி' என்று வீடு திரும்பினாள்
உடனே யாரிடமோ கேட்ட உபாயத்தை மேற்கொண்டு சந்தனவெடிப்புகளை ஒட்டுப்பார்க்கலாமென்ற ஆவல் மிகுதியோடு அந்த பாத சுவடுகளின் மேலிருந்த புஷ்பங்கள் மற்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அருளியிருந்த வன்னி பத்திர மாலையையும் சற்றே விலக்கினாள்.
விலக்கிப் பார்த்த பக்தை விக்கித்து நின்றாள். அதில் பக்தை கண்ட அதிசயத்தை என்னென்பது?
கொண்டு சென்ற போது முழு பரப்பளவிலும் வெடிப்புகளாக காணப்பட்ட சந்தனப்பாதவடிவங்களா இவை என்ற ஆச்சர்யமும், அதிசயமுமாக அதைப் பார்த்து பரவசமுற்றாள். ஆம் அப்படி ஒரு வியப்பு! வெடித்த சுவடு துளியும் தெரியாமல் பாதச்சுவடுகள் முழுமையாக சீர்மையாகக் காட்சி அளித்தன.
அவை எப்படி சீராயின? இத்தனை நாள் கவலையைக் கொடுத்து எதை செய்தாலும் ஒட்டிக் கொள்ளாத சந்தன வெடிப்புகள் எப்படி ஒரே சீராக இப்போது காட்சி அருளுகின்றன. இது சாட்சாத் ஈஸ்வரனின் திருஷ்டிபட்டதன் மகிமையா? மகாதேவனின் சிரஸில் அணிந்திருந்த வன்னிபத்ர மாலையின் மகிமையா? அந்த ஈஸ்வர சந்நிதியின் விஷேச மகிமையா?
ஸ்ரீமதி கனகம்மா ஆச்சர்யத்திலிருந்து விடுபட வெகுநேரமாயிற்று. இனி ஒருகாலும் வெடிக்காது என்று உறுதியாகக் கூறும் வகையில் சுவடுகள் கான்கீரீட்டாக கெட்டிப்பட்டிருப்பதை எப்படி நம்புவதென்றே பக்தைக்குத் தெரியவில்லை. சாட்சாத் ஈஸ்வரனின் திருப்பாதங்கள் இவை என மீண்டும் உறுதிப்பட்டநிலையில் ஸ்ரீ பெரியவா குறிப்பிட்டிருந்த தை மாதம் வஸந்த பஞ்சமி தினம் வரை அந்த பக்தை இந்த மகிமை வாய்ந்த சந்தனப்பாதுகைகளை தன் இல்லத்தில் வைத்து பூஜித்தார்.
நன்மணிகள் பதித்து அலங்காரம் செய்வித்து வனப்பு மிக்க கண்ணாடிப் பேழையில் அந்த சந்தனப்பாதங்களை வைத்தனர். அதோடு ஒரு செப்பேட்டில் ஸ்ரீகுரு சரணம் பற்றிய சுலோகமும் பதிவு செய்து பிரிதிஷ்டை செய்ய உத்தேசித்தனர்.
பிரதிஷ்டைக்காக பக்தர்கள் மயிலாடுதுறை செல்லுமுன் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளைத் தரிசிக்க மீண்டும் காஞ்சி வந்தனர்.
அந்த பாதுகைகளைக் கொண்டு சென்று சமர்ப்பித்தபோது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஸ்ரீ பெரியவா அந்த சந்தன சுவடுகளில் திரும்பவும் தான் ஏறி நின்று ஏதோ பாதணியை சரிப்பார்ப்பது போல அனுக்ரஹம் பொழிந்தார். ஸ்ரீ பெரியவா காய்ந்திருந்த அந்த சந்தனப் பாதத்தில் சரியாக தனது பாதங்கள் அழுந்துமாறு மீண்டும் பொருத்த வைத்து அப்படியே ஏறி குந்தியமர்ந்து காட்சியருளினார்.
அப்படி அமர்ந்த நிலையில் ஆசமனம் செய்துவிட்டு சொம்பிலிருந்த தீர்த்தத்தை இடது பாத சுவட்டின்மேல் படும்படியாக விட்டார்.
குஞ்சிதபாதம் என்று தனியானதொரு தெய்வம் போல வழிபடப் பெறுவது இடப் பாதம் தானே? யமனை உதைத்து அமர நிலையை அடைவிப்பது அதுதானே? அதனால்தானோ ஸ்ரீ பெரியவா அந்த இடதுபாதத்திற்கு கும்பாபிஷேகமாகவே செய்வித்துள்ளார்!
இதைப் பார்த்துக் கொண்டிருந்த கனகம்மாளுக்கு ஆனந்தம் ஒருபுறமிருந்தாலும் கலக்கமும் மேலோங்கியது. இது என்ன சோதனை! அன்று வெடிப்புக்களை மாயமாக போக்கிய ஈசன் இன்று அதில் ஏறி அமர்ந்ததோடல்லாமல் நீரை வார்த்து சந்தனத்தை சொத சொதப்பாகும்படி செய்து விட்டரே? அதனால் திரும்பவும் சந்தன பதிவு கட்டாயம் உருமாறிவிடுமே என்று அஞ்சி நின்றாள். மனமுருக அப்படி ஆகலாகாது அருளும்படி வேண்டினார்.
திரும்பவும் ஒரு அதிசயமாக அத்தனை அழுத்தத்திற்கும், சொத சொதப்பிற்கும் மீறி ஸ்ரீ பெரியவாளின் பூப்போன்ற திருமேனியின் மேன்மை அந்த சந்தனப் பதிவுகளைத் துளியும் அசைக்கவில்லை. இது எப்பேற்பட்ட அனுபவம்? கண்ணுற்ற கனகம்மாவும் மற்ற பக்தர்களும் கண்ணில் ஆனந்த நீர் பெருக ஆனந்த தாண்டவம் புரியும் ஸ்ரீ பெரியவாளெனும் தெய்வத்தை உணர்ந்து கொண்ட பாக்யத்தில் விழுந்து வணங்கினர். 30-1-1990 அன்று மயிலாடுதுறையில் மஹா வைபவமாக இந்த சந்தனத் திருபாதுகை பிரதிஷ்டை நடந்தேறி இன்றளவும் நித்திய பூஜைகள் தொடர்கின்றன
No comments:
Post a Comment