Sunday, January 21, 2018

Vedagireeswarar temple, thirukazhukundram

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
கோவை கு. கருப்பசாமி.
"""""""'""""""""""""""""""""''""'""""""""""""""""""""""""""""
தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:
(நேரில் சென்று தரிசித்ததைப் போல......................)
"""""""""""""""""""""""""'"''""'""""""""""""""""""""""""""""""''
தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 217

பாடல் பெற்ற சிவ தல தொடர்:

சிவ தல அருமைகள் பெருமைகள்:

வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுகுன்றம்:
"""""""""""""'"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம், இருபத்து ஏழாவது தலமாகப் போற்றப் படுகிறது.

இறைவன்: வேதபுரீஸ்வரர்.
(மலைமேல் இருப்பவர்)

பக்தவத்சலேஸ்வரர். (தாழக்கோயிலில் இருப்பவர்)

இறைவி: சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை. (மலைமேல் இருப்பவர்)

திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்)

தல விருட்சம்: கதலி வாழை மரம்.

தல தீர்த்தம்: சங்கு தீர்த்தம் உள்பட பன்னிரண்டு தீர்த்தங்கள்.

ஆகமம்: சிவாகம முறைப்படி.

தேவாரம் பாடியவர்கள்:
திருநாவுக்கரசர்.-ஆறாம் திருமுறையில் ஒரு பதிகம்.
திருஞானசம்பந்தர்.-முதலாம் திருமுறையில்​ ஒரு பதிகம்.
சுந்தரர். -ஏழாம் திருமுறையில் ஒரு பதிகம்.
மாணிக்கவாசகர்.- ஏழு பாடல்கள்.

இருப்பிடம்:
செங்கல்பட்டு - மகாபலிபுரம் சாலை வழியில் செங்கல்பட்டிலிருந்து பதினான்கு கி.மி. தொலைவிலும், கடற்கரை சுற்றுலா தலமான மகாபலிபுரத்தில் இருந்து சுமார் பத்து கி.மி. தொலைவிலும் இந்த தலம் அமைந்திருக்கிறது.

செங்கற்பட்டிலிருந்து மாமல்லபுரம், கல்பாக்கம் முதலிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இத்தலத்தின் வழியே செல்கின்றன. கோவில் அருகிலேயே இறங்கிக் கொள்ள முடியும்.

அஞ்சல்  முகவரி:
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில்,
திருக்கழுகுன்றம்,
காஞ்சீபுரம் மாவட்டம்,
PIN - 603 109

ஆலயப் பூஜை காலம்:
தாழக் கோவில்:
தினமும் காலை 6.00  மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும்,  மாலையில் 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயப் பூஜை காலம்:
மலைக்கோவில்: தினமும் காலை 9. 00 மணி முதல் பகல் 1.00  மணி வரையிலும், மாலையில் 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

வேதமே மலையாய் இருப்பதால் இத்தலம் வேதகிரி எனப் பெயர் பெற்றது.

வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.

மலைமேல் ஒரு கோயிலும், ஊருக்குள் ஒரு கோயிலும் இருக்கிறது.

மலைக்கோவிலில் இறைவன் வேதபுரீஸ்வரர் என்ற பெயரிலும், தாழக்கோவிலில் இறைவன் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயரிலும்  அருள்புரிகின்றனர்.

ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் நான்கு  பெரிய பாறைகளாக இருப்பதாகவும், அவற்றுள் அதர்வணவேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார் என்றும் தலபுராணம் விவரிக்கிறது.

மலைக்கோவில்:
மலைக்கோவில் சுமார் நான்கு  கி.மி. சுற்றளவும், ஐநூறு அடி உயரமும் கொண்டுள்ளன.

மலைமேல் இராஜகோபுரம், ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. மலைமீது ஏறிச்செல்ல நல்ல முறையில் படிகள் உள்ளன.

மூலவர் வாழைப் பூக்குருத்துப் போன்று சுயம்புலிங்க மூர்த்தியாக வேதகிரீஸ்வரர் என்ற பெயருடனும், அம்மன் சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை என்ற பெயரிலும் எழுந்தருளி இருக்கின்றனர்.

நான்கு யுக கழுகுகள்:
கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது.

முதல் யுகத்த்தில் சாபம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், இரண்டாம் யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன.

மலையில் நாள்தோறும் உச்சிப் பொழுதில் இரண்டு கழுகுகள் வந்து சில ஆண்டுகள் முன்பு வரை உணவு பெற்றுச் சென்றுள்ளன.
(இப்போது அவைகள் வருவதில்லை.)

மலைக்கோவிலுக்கு ஏறிச் செல்லும் படிகள் வழியாகவே கீழே இறங்கி வரலாம். ஆயினும் கீழே இறங்குவதற்கு மற்றொரு பாதையும் உள்ளது.

அவ்வழியே இறங்கி வந்தால் பல்லவர் மகேந்திரவர்மன் காலத்திய (கி. பி. 610 - கி.பி. 640) குடைவரைக் கோவில் ஒன்றுள்ளதைப் பார்த்து வரலாம்.

கோவில் அமைப்பு:
தாழக்கோவில்:
இக்கோவில் சுமார் பன்னிரண்டு ஏக்கர் நிலப்பரளவில் நான்கு புறமும் கோபுரங்களுடன் அமைந்திருந்தது.

இவற்றில் ஏழு நிலையுள்ள கிழக்கிலுள்ள கோபுரமே இராஜகோபுரம் பிரதானமாக தெரிய, சிவ சிவ, சிவ சிவ என மொழிந்து கோபுரத்தை தரிசித்துக் வணங்கிக் கொண்டோம்.

ஆலயத்துள் மூன்று பிராகாரங்கள்  அமைந்திருக்கிறதாய் சொன்னார்கள்.

இராஜகோபுபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தோம். நேர் எதிரே ஒரு நான்கு கால் மண்டபம் காணக் கிடைத்தது.

அலுவலக மண்டபக் கற்சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் இருந்தது. இது மிக மிக நேர்த்தியான அழகுடன் காட்சியாகத் தெரிந்தன.

இடதுபுறம் பதினாறு கால் மண்டபம் இருந்தது.  இதிலுள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் அமையப் பெற்றிருந்தன.

நான்கு கால் மண்டபத்தையடுத்து இரண்டாவது கோபுரம் இருந்தது.

கோபுரத்தின் இருபுறத்தின் ஒரு புறத்தில் விநாயகர் இருந்தார். விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிக் கொண்டோம்.

அடுத்த புறத்திலிருந்த சுப்பிரமணியரையும் பார்த்து கைதொழுது கொண்டோம்.

வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குச் சுற்றில் நந்தி தீர்த்தத்தைக் காணப்பெற்றோம். 

அவ்விடம் அகழ்ந்து செல்லவும், கரையில் நந்தியார் இருந்தார். கைகூப்பி வணங்கிக் கொண்டு, தீர்தத்தை அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டு தொடர்ந்தோம் .

இரண்டாவது கோபுர வாயில் இருக்க, உள் நுழைந்து பிராகாரம் வலம் வரும்போது சோமாஸ்கந்தர் சந்நிதி இருக்க கைதொழுது வணங்கிக் கொண்டோம்.

இப்பிராகாரத்தில் பீடம் மட்டுமே கொண்ட ஆத்மநாதர் சந்நிதி இருந்தது. பாணப்பகுதி இல்லை. வியந்து, வணங்கி நகர்ந்தோம்.

இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர், தலவிநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர் முதலிய சந்நிதிகள் தனித் தனிக் கோயில்களாக அமைந்திருக்க, ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

ஆறுமுகப்பெருமான் சந்நிதிக்கும் சென்று வணங்கினோம். 

அழகான முன் மண்டபத்துடன் உள்ள அம்பாள் சந்நிதியும் இப்பிராகாரத்தில் அமைந்திருந்தது.
அம்பாள் சந்நிதியைச் சுற்றி வலம்வர வசதி இருந்தது.

அம்பாளின் சந்நிதிக்கு எதிர்திசையில், பிரத்யட்ச வேதபுரீஸ்வரர் சந்நிதி இருக்க உள் நுழைந்தோம்.

ஈசனின் முன்பு நின்று, மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டு வெளிவந்தோம்.

அடுத்து அம்பாள் சந்நிதிக்கு ச்சீ சென்றோம். கருவறையில் அம்பாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி  திரிபுரசுந்தரி அருட்காட்சி தந்தாள்.

இங்கேயும் மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

அம்பிகைக்கு தினமும் பாதத்தில் தான் அபிஷேகம் நடைபெறுகிறதாம்.

ஓராண்டில் மூன்று நாட்கள் மட்டும் (ஆடிப்பூரம் பதினோறாம் நாளன்றும், நவராத்திரி ஒன்பதாம் நாளன்றும், பங்குனி உத்திரம் இரவு அன்றும்) திருவுருவம் முழுவதும் அபிஷேகம் செய்யப்படுகிறது என குருக்கள் கூறினார்.

அதையடுத்து நடராச சபை இருந்தது. ஆடல்வல்லானின் ஆடற்கலை நளினக் கோலத்தைக் கண்டு ரசித்தோம், வணங்கித் திரும்பினோம்.

பிராகாரம் வலம் செய்யும்போது, மரத்தாலான கொடிமரமிருக்க, நெடுஞ்சான்கிடையாய் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.

அடுத்து, இதனின்  வலதுபுறத்தில் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது கொண்டோம்.

உள்சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதி இருந்தது. வணங்கி நகர்ந்தோம்.

இதையடுத்து விநாயகரும், 63 மூவர் மூலத்திருமேனிகளும், இருப்பதைப் பார்த்து, நெஞ்சுக்கு நேராக கூப்பிய கைகளுடன் வணங்கியபடியே நகர்ந்தோம்.

அடுத்திருந்த ஏழு சிவலிங்கங்கள் காட்சியாக தெரிய சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டு திரும்பினோம்.

இங்குள்ள பைரவர் வாகனமின்றி காட்சி தர பவ்யபயத்துடன் வணங்கிக் கொண்டோம்.

கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரையும் கண்டு தொழுது கொண்டோம்.

சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் இருந்தார். இவரை வணங்கும் நெறிமுறையுடன் வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

உட்பிராகாரத்திலுள்ள சுமார்  ஏழு  அடி உயரமுள்ள அகோரவீரபத்திரரைக் கண்டு வணங்கினோம். இத்திருவுருவத்தைப் பார்த்து மகிழ வேண்டிய ஒன்று.

சங்கு தீர்த்தம்:
கிழக்கிலுள்ள இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள தெருவின் மறு கோடியில் மிக்க புகழுடைய "சங்கு தீர்த்தம்" உள்ளது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது.

அப்படிக் கிடைக்கப் பெறும் சங்குகளை ஆலயத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவித்த போது, இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அதுமுதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.

2011-ம் ஆண்டு இக்குளத்தில் சங்கு கிடைக்கப் பெற்றது. நீராழி மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் இங்கு இருக்கின்றன.

சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, மலையை கிரிவலம் வருபவர்களின் நோய்கள் யாவும் நீங்கும் என்பது பக்தகோடிகளின் நம்பிக்கை.

தல அருமை:
திருக்கழுக்குன்றம்' என்ற பெயர் வருவதற்கு பல்வேறு வரலாற்று சிறப்பு அம்சங்கள் உண்டு.

குறிப்பாக உலக ஆன்மிக வரலாற்றில் புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக் கோயில் இருப்பது தனிச்சிறப்பு எனலாம்.

கலியுக தோற்றம் முதல் பூடா, விருத்தா என்கிற இரு முனிவர்கள் நெடுங்காலம் தவம் செய்தார்கள்.

இந்த இரு முனிவர்களும் அரிய தவம் செய்த அளவில் சிவபெருமான் நேரில் தோன்றி உங்களுக்கு நம்முடைய திருமேனி அருள் செய்தோம் என அருளி,
ஒரு கற்ப காலம் அந்த பதவியில் இருந்தால் பிறகு உங்களுக்கு முக்தியை அளிக்கிறோம் என்று சிவபெருமான் அருளினார்.

ஆனால் பூடா, விருத்தா என்ற இரண்டு முனிவர்கள் அது வரைக்கும் ஐம்பொறிகள் நன்மார்க்கத்தில் இருப்போமா? என தெரியவில்லை.

எனவே எங்களுக்கு முக்தி பேற்றினை உடனே அளித்தருள வேண்டும் என்றார்கள் இரு முனிவர்களும்.

உடனே சிவபெருமான் நான் எனது திருமேனியோடு நேரில் தோன்றியும், உரைத்த ஏவலையும் ஏற்றக்கொள்ளாமல் நிராகரித்து விட்டீர்கள்.

அதனால் நீங்கள் இருவரும் கழுகு உருவமாக பிறந்து கடல் சூழ்ந்த உலகில் திரியுங்கள் என்று சிவபெருமான் சாபமிட்டார்.

இதற்கு, இரு முனிவர்களும் பயந்து போய்,..... உங்கள் வார்த்தையை மதிக்காமல் போனதுக்கு பொறுத்தருள வேண்டும் என்று மன்றாடினர்.

அதற்கு சிவபெருமான், நீங்கள் இருவரும் காசிப முனிவர் இடத்தில் கழுகுகளாக பிறந்து உங்களுடைய மூக்குகளால், இந்த மலையினை கீறினால் அதில் ஆகாய கங்கை அலைவீச உண்டாகும்.

அந்த தீர்த்தத்தில் மூழ்கி தினமும் விருப்பத்துடன் எம்மை பூஜை செய்யுங்கள். அவ்வாறு பூஜித்து வந்தால் கலியுக முடிவில் கழுகு உருவத்தில் இருந்து விமோட்சனம் கிடைக்கும் என்று திருவாய்மலர்ந்து அருளினார். 

இவ்வாறு அருளியவுடன் இவ்விருவரும் காசிப முனிவரிடத்தில் சென்று சம்பு, ஆதி என்னும் பெயருடன் இரு கழுகுகளாக பிறந்து திருக்கழுக்குன்றம் வேதகிரீயில் தங்களின் மூக்குகளால் கீறினர்.

உடனே அங்கு ஒரு தடாகம்(குளம்) உண்டாகியது. அதில் மூழ்கி மலையை வலம் வந்து இறைவனை பூஜித்தனர்.

தினமும் மதிய வேளையில் மலை உச்சியில் வைக்கப்படும் உணவை உண்டு, கழுகுகள் இறைவனை பூஜித்துக் கொண்டு வந்ததால் இந்த ஊருக்கு திரு+ கழுகு+ குன்றம் = திருக்கழுக்குன்றம் என்னும் பெயர் உண்டாகியது. 

குரு கன்னி ராசியில் பிரேவேசிக்கும் நாளில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தீர்த்த புஸ்கர மேள விழா முறையே நடைபெற்று வருகிறது. 

சிறப்புக்கள்:
இத்தலத்திற்கு வரும் வடநாட்டு யாத்ரிகர்களுக்குப் 'பட்சி தீர்த்தம் ' என்று சொன்னால்தான் தெரிகிறது.

மலைமீது ஏறிச் செல்வதற்கு நல்லவிதமாக அமைக்கப்பட்ட செம்மையான படிகள் இருக்கிறது.

இம்மலையை வலம் வருதல் மிகவும் சிறப்புடையன என்கின்றனர் இங்கிருக்கும் யாவரும்.

தாழக்கோயில், கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்ட மிகப் பழமையான கோயிலாகும்.

கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடன் காட்சி தருகிறது. கோயிலுக்கு வெளியே ஐந்து தேர்கள் நிற்கிறது.

சந்நிதிக்கு எதிரில் உள்ள மிக்க புகழுடைய 'சங்கு தீர்த்த'த்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 'சங்கு' பிறக்கின்றது.

இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, இம்மலையை வலம் வருவோரின் உடற்பிணி நீங்குகிறது.

(இதைச்சில மருத்துவர்களே மேற்கொண்டு அனுபவத்து உணர்ந்து தெரிவித்துள்ளனர்.)

அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டிருக்கிறது.

மணிவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் காட்சி தந்தருளிய தலம் இது.

அப்பெருமான் வாக்கிலும், திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது. இத்தலத்திற்கு அந்தக்கவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.

ஆலயத் தொன்மை:
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் ஆயிரத்து நானூறு  ஆண்டுகால தொன்மை வாய்ந்தது.

தீர்த்தங்கள்:
திருமலையைச் சுற்றி பன்னிரு தீர்த்தங்கள் உள்ளன.
1. இந்திர தீர்த்தம்,
2. சங்கு தீர்த்தம் (மார்க்கண்டேய தீர்த்தம்), 
3. சம்பு தீர்த்தம்,
4. நந்தி தீர்த்தம்,
5. ருத்ர தீர்த்தம்,
6. வஷிஷ்ட தீர்த்தம்,
7. அகத்திய தீர்த்தம்,
8. மெய்ஞ்ஞான தீர்த்தம்,
9. கௌசிக தீர்த்தம்,
10. வருண தீர்த்தம்,
11. அகலிகை தீர்த்தம்,
12. பக்ஷி தீர்த்தம்.

இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் ஒரு மண்டலத்திற்கு (48 நாட்கள்) விடியற்காலையில் நீராடி திருமலையை வலம் வருவோருக்கு மனநோய்கள் அகலும் என்பது இங்குள்ள நம்பிக்கை.

தேர்த்திருவிழா:
வருடந்தோறும் இங்கு நடைபெறும் சித்திரை மாத தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த திருவிழா, திருமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

இதில் ஏழாம் நாள் தேர்த்திருவிழாவில் பல ஊர்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் வந்திருந்து வடம் பிடித்து இழுக்கும்போது தேர் அசைந்து வரும் அழகைக் காணக் கண்கோடி வேண்டும்.

பத்து நாட்கள் திருவிழாவிற்கு பிறகு, பதினோராம் நாள் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த வணிகர்கள் அனைவரும் என சித்திரை திருவிழாவை சிறப்புடன் நிறைவு செய்விக்கின்றனர்.

சங்காபிஷேகம்:
திருக்கழுக்குன்றம் திருமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் (நவம்பர்-டிசம்பர்) ஒரு திங்கள் கிழமையில் ஆயிரத்தெட்டு சங்குகளால் வேதகிரீசுவரருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

இங்குள்ள சங்குகளில், இதற்கு முந்தய காலங்களில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தீர்த்தக் குளத்தில் தோன்றிய அதிசய சங்குகளும் இடம் பெறச் செய்வர்.

சங்கு தீர்த்தக்குளத்திலிருந்து கொண்டுவரப்படும் புனித நீரைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் நடத்திவிக்கின்றனர்.

இந்திர வழிபாடு:
புராணங்களின் படி, தேவர்களின் தலைவனான இந்திரன் இடி மின்னல் வடிவில் வந்து இங்குள்ள இறைவனை வழிபாடு செய்வதாக நம்பப்படுகிறது.

இதற்கு ஆதாரமாக, 1930ம் ஆண்டு நவம்பர் பத்தாம் நாள் மிகப்பெரிய இடி ஒன்று திருமலைக் கோயில் கலசத்தை தாக்கி அந்த துளை வழியாக கருவறையில் நுழைந்து சிவனை அடைந்ததெனச் சொல்வர்.

இதனால் உருவான தாங்கமுடியாத வெப்பம் மற்றும் அதிர்வுகளை மறுநாள் கோயில் கதவை திறந்ததும் உணர்ந்ததாகவும் குருக்களும் மற்றோரும் கூறுகின்றனர்.

லட்ச தீபம்:
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாளன்று லட்சதீபத்திருவிழாவை இங்கு அதிவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் இங்கிருக்கும் வீடுகளிலும், கோயில்களிலும், சங்குதீர்த்த குளக்கரையிலும் லடசக் கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் ஒளிர்கின்றன.

இந்த திருவிழாவைக் காண்போர், வட இந்தியாவில் கொண்டாடப்படும் புஷ்கரமேளா, கும்பமேளாவிற்கு இணையானது என்பர். சிவ சிவ.

சம்பந்தர் தேவாரம்:
பண் :குறிஞ்சி

1.🔔தோடுடையானொரு காதிற்றூய குழைதாழ
ஏடுடையான் றலைகலனாக விரந்துண்ணும்
நாடுடையா னள்ளிருளேம நடமாடும்
காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

🙏🏾ஒரு காதில் தோடும் பிறிதொரு காதில் தூய குழையும் தாழ்ந்து தொங்கத், தாமரை மலரில் தங்கும் பிரமனின் தலையோட்டை உண் கலனாகக் கொண்டு இரந்துண்ணும் நாடுகளை உடையவன். நள்ளிருள் யாமத்தில் மகிழ்வோடு சுடுகாட்டில் நடனம் ஆடுபவன். அத்தகையோன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றமாகும்.

2.🔔கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை
பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகம்
காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

🙏🏾திருமாலாகிய பன்றியினது வெண்மையான கொம்பை அகழ்ந்து அணியவல்லவன். வாமனனாக அவதரித்த திருமாலின் கூர்மாவதார ஆமையோட்டினை அணிகலனாகக் கோத்துப் பூணவல்லவன். முறுக்கிய சடைமுடிமேல் ஒப்பற்ற கங்கை, கொன்றை மாலை ஆகியவற்றை விரும்பி அணிபவன். பெண்ணின் நல்லவளான உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் காணுமாறு செய்தருளியவன். அத்தகையோன் காதல் செய்யும் கோயில் திருக்கழுக்குன்றமாகும்.

3.🔔தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்தும்
கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

🙏🏾தேனை அகத்தே இருந்து வண்டுகள் உண்ட, விளங்கிய கொன்றை மாலையைச் சூடிய தலையில் மதியைச் சூடி, வானகத்தவரும், வையகத்தவரும் தொழுதேத்தும் வண்ணம் சுடுகாட்டைத் தனக்கு இடமாகக் கொண்ட இறைவன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றம்.

4.🔔துணையல்செய்தான் றூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணினல்லாளை யொருபாகம்
இணையல்செய்யா விலங்கெயின்மூன்று மெரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

🙏🏾வண்டுகள் யாழ்போல் ஒலித்து மொய்க்கும் தூய ஒளி நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனும், பெண்ணின் நல்லவளான உமையம்மையைக்கூடி அவளைத்தன் உடலில் ஒரு பாகமாகப் பிணைத்திருப்பவனும், தன்னோடு இணைந்து வாராத புரங்கள் மூன்றையும் எரி உண்ணுமாறு கணையை விடுத்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில், கழுக்குன்றம் ஆகும்.

5.🔔பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற்றண்ணன் மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

🙏🏾நச்சுப் பையையுடைய பாம்போடு திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும், வெண்பிறையையும், விரிந்த கொன்றையையும் முடியில் சூடியவனும், விடம் பொருந்தியமிடற்றினை உடைய தலைமையாளனும், மானேந்திய கையை உடையவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

6.🔔வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர்
உள்ளமெல்லா முள்கிநின்றாங்கே யுடனாடும்
கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

🙏🏾விரிந்த சடைமுடியின்மேல் வெள்ளமாகப் பெருகி வந்த கங்கையின் அனைத்து நீரையும் விரிந்த கொன்றை மாலையோடு சூடியிருப்பவனும், தனது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளை ஏத்தித் துதிக்கும் சிறிய தொண்டர்களின் உள்ளமெல்லாம் நிறைந்து, அவர்கள் தியானித்து நின்று ஆடத்தானும் உடன் ஆடும் கள்ளம் வல்லவனுமாகிய, சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

7.🔔""""""""""""""
காணக் கிடைக்க வில்லை.
🙏🏾"""""""""""""""""

8.🔔ஆதல்செய்தா னரக்கர்தங்கோனை யருவரையின்
நோதல்செய்தா னொடிவரையின்கண் விரலூன்றிப்
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகம்
காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

🙏🏾அரக்கர் கோனை அரிய கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி, நொடிப்பொழுதில் கால் விரலை ஊன்றி, அவனை நோதல் செய்தவனும், பிறகு அவனுக்கு ஆக்கம் வழங்கியவனும், பெண்மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காதல் செய்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

9.🔔இடந்தபெம்மா னேனமதாயு மனமாயும்
தொடர்ந்தபெம்மான் றூமதிசூடி வரையார்தம்
மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக்
கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

🙏🏾அடிமுடி காணப் பன்றி உருவோடு நிலத்தை அகழ்ந்து சென்ற திருமாலும், அன்னமாய்ப் பறந்து சென்ற நான்முகனும், தொடர்ந்த பெருமானாய், தூய மதியை முடியிற் சூடியவன், மலைமகளின் தலைவன், வார்கழலணிந்த திருவடியை உயர்த்திக் காலனைக் காய்ந்தவன் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

10.🔔தேயநின்றான் றிரிபுரங்கங்கை சடைமேலே
பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாம்
சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கீயர்
காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

🙏🏾முப்புரங்களை அழியுமாறு செய்தவனும், பெருகிவந்த கங்கை தன் சடை மேல் பாய நின்றவனும், பலரும் புகழ்ந்து போற்ற உலகனைத்தும் ஊழி இறுதியில் அழியுமாறு நின்றவனும், வலிய சமண் குண்டர்களும், புத்தர்களும் கெடுமாறு நின்றவனும் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றமாகும்.

11.🔔கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம்பந்தன் றமிழ்மாலை
பண்ணியல்பாற் பாடியபத்து மிவைவல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.

🙏🏾நெற்றியில் கண்ணுடையவனாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயிலாகிய திருக்கழுக்குன்றத்தைப் புகழ் பொருந்திய ஞானசம்பந்தன் பண் அமைதியோடு பாடிய தமிழ் மாலையாகிய பத்துப் பாடல்களையும் பாடிப் போற்றுபவர் புண்ணியராய்த் தேவர்களோடு வானுலகம் புகுவர்.

           திருச்சிற்றம்பலம்.

திருவிழாக்கள்:
சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழா.

வேதகிரீசர் இத்தலத்திலிருந்து ஒரு முறை சென்று பார்வதி தேவியை மணந்ததாக புராணம் கூறும். ஆதலால் இங்கு திருக்கல்யான உற்சவம் நடைபெறுகிறது.

கார்த்திகை மாதத்தின் கடைசி சோமவாரத்தில் திருமலைக்கு பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்காபிஷேக விழா.

தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் நடைபெறும் சங்கு தீர்த்தத்திலும், மறுநாள் நந்தி தீர்த்தத்திலும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

தொடர்புக்கு:
044- 2744 7139
94428 11149

அருகிலிருக்கும் பாடல் பெற்ற தலங்கள்:
திருக்கழுக்குன்றத்திலிருந்து.... 
காஞ்சிபுரம்..48 கி.மி.
கச்சூர்....21 கி.மி.
திருவடிசூலம்.....11.கி.மி.
திருவான்மியூர்.48 கி. மி.

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோயில், அச்சிறுபாக்கம்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""'""""
அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.

No comments:

Post a Comment