உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு .கருப்பசாமி.*
________________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்:182.*
*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
*🍁.திருகோடீஸ்வரர் திருக்கோவில், திருகோடிக்கா.🍁*
________________________________________
நேரில் சென்று தரிசித்ததைப் போல................
_________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து நான்கு தலங்களில் இத்தலம் முப்பத்து ஏழாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*இறைவன்:* திருகோடீஸ்வரர், கோடிகாநாதர்.
*இறைவி:* வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி.
*தல விருட்சம்:* பிரம்பு.
*தல தீர்த்தம்:* சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரி நதி.
*ஆகமம்:* காமீக முறை.
*தேவாரம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசர் - நான்காம் திருமுறையில் ஒரு பதிகமும், ஐந்தாம் திருமுறையில் ஒரு பதிகமும், ஆறாம் திருமுறையில் ஒரு பதிகமும்.
திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறையில் ஒரு பதிகமும், ஆக மொத்தம் இத்தலத்திற்கு நான்கு பதிகங்கள்.
*இருப்பிடம்:*
மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம், கதிராமங்கலம் வழியாகவும், கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை வந்தும் இத்தலத்தை அடையலாம்.
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள திருவாவடுதுறை என்ற இடத்திலிருந்தும் இத்தலத்தை அடையலாம்.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோவில்,
திருக்கோடிகாவல்,
திருக்கோடிகாவல் அஞ்சல்,
வழி நரசிங்கன்பேட்டை,
திருவிடை மருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்,
PIN - 609 802
*ஆலயப் பூஜை காலம்:*
நாள்தோறும் காலை 7.00 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*கோவில் அமைப்பு:*
இத்தலத்திற்கு செல்லலாம் என்று எண்ணிய சிலநாளிலேயே எமக்கு அந்தத் தரிசிக்கும் வாய்ப்பை ஈசன் அருளி வரவழைத்தான். *சிவ சிவ*
முதலில் ஐந்து நிலைகளைத் தாங்கிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கிக் காட்சி கிடைக்கவும் *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.
கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் எதிரில் கவசமிட்ட கொடிமரத்தைக் காணவும், நெடுஞ்சான்கிடையாய் கொடிமரத்து முன் விழுந்து, சிரம் செவிகள் கரங்கள் புஜங்கள் பூமியில் புரள வணங்கிப் பணிந்தெழுந்து கொண்டோம்.
அடுத்திருந்த கொடிமரத்து விநாயகரைப் பார்க்கவும், விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிக் தொடர்ந்தோம்.
திரும்பப் பலிபீடத்தருகாக வந்து நின்று, வணங்கிவிட்டு, ஆணவமலம் ஏற்படாமலிருக்க வேண்டிக் கொண்டோம்.
அடுத்து, நந்தியும் காட்சி தர, வணங்கிவிட்டு, ஆலயத்தொழுகை பூரனமாகவும், ஈசனைத் தரிசிக்கச் செல்லும்போது அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.
முன்மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது.
வடிவாம்பிகை நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள்.
உட்பிரகார வலத்தில் செல்லும் போது, கரையேற்றும் விநாயகர், மயில்வாகனர், சிவலிங்கமூர்த்தங்கள், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, காலபைரவர், சூரியன், சந்திரன், சனிபகவான், துர்வாசர் சந்நிதிகள் இருக்க, ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தனவிநாயகரைக் கண்டு கைதொழுது கொண்டோம்.
நடராசர், மூர்தியைக் காணப்பெற்றதும் சிரமேற் கைகள் உயர்த்தி குவித்து தொழுது கொண்டோம்.
தட்சிணாமூர்த்தியின் முன் வந்து நின்று, பவ்யபயத்துடன் வணங்கி நகர்ந்தோம்.
மேலும், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் முன் வணங்கிப் பணிந்துத் தொடர்ந்தோம்.
வலம் முடித்ததும் உள்மண்டபத்துள் சென்று துவார விநாயகரையும் பாலசுப்பிரமணியரையும் தரிசித்து வாயில் கடந்தால் நேரே மூலவர் சந்நிதிக்கு வந்தோம்.
மூலவர் கருவறை செல்லும் வாயில் வழியில் இருபுறத்தில் ஒரு புறம் சித்தரகுப்தர் இருக்க வணங்கிக் கொண்டோம்.
மறுபுறத்திலிருந்த எமதர்மன் ராஜனையும் இங்கிருந்தபடியே தடுப்புக்கம்பிகளினா இடையே ஊடுருவிப் பார்த்து வணங்கிவிட்டு, அகழ்ந்து சென்று ஈசனின் முன் நின்றோம்.
தீபாராதனை ஆகிக் கொண்டிருந்த சமயம், மனநிறைவான ஈசனைக் கானும் பேறு நன்கு அமைந்தது.
ஈசன், திருகோடீஸ்வரர் சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்க உருவில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். மிக மிக அழகு.
தீபாரதனையை வணங்கிப் பின் அர்ச்சகர் தந்த வெள்ளியவிபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
கருவறை மேற்கு சுற்றில் முதலில் உள்ள அறையை நோக்கியபோது, நாகலிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் மனோன்மணி அம்பாள் விக்ரகங்கள் காணக் கிடைத்தது. சிரந்தாழ்ந்து பணிந்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
அடுத்துள்ள சந்நிதியில் ஆறுமுகர், பன்னிரண்டு கைகள். கைகளில் நாககனி, வில், பாணம் மற்றும் பிற படைக்கலங்களோடு வள்ளி, தெய்வானையுடன் அசுரமயில் வாகனத்தில் முருகர் காட்சியளிக்கிறார். இக்கோலம் பிரமிப்பாகவும் அழகாகவும் இருந்தது.
இதை அடுத்து ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேத சிவலிங்கங்கள் இருந்தன.
இல்லிங்கங்களை பயம் கொண்ட பாச வணக்கத்துடன் வணங்கிக் கொண்டோம்.
இதையடுத்து கஜலட்சுமி விக்ரகம் இரு கால்களையும் தொங்கவிட்டுக் கொண்ட நிலையில் காணவும் வழக்கம்போல வணங்கிக் கொண்டோம்.
இறுதியில் சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டாதேவி, மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை இருந்தது.
மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாயும், இம்மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளித்தது.
வடக்குச் சுற்றில் கோயிலின் தல விருட்சமான பிரம்பு மரமிருக்க மெல்ல தன் தீண்டி வணங்கிக் கொண்டோம்.
அடுத்து அஷ்டபுஜ துர்க்கை சந்நிதிக்குச் சென்று வணங்கி துதித்தோம்.
இதையடுத்து சண்டிகேஸ்வரர் தனிச்சந்நிதி முன்நின்று கூனக்குறுக குனிந்து, இருப்பன நீ தெரிந்தனவையே! எம்மிடம் மறைப்பதெற்கென ஏதுமிலை, என உள்ளங்கைகள் விரித்துக்காட்டி வணங்கித் திரும்பினோம்.
அருகில் புஷ்கரணியும் (கிணறு) இருந்தது. எட்டிப் பார்த்தோம். பரிபமரிப்பதற்காக மேல்மடடத்தை மூடியிருக்கக் கண்டோம்.
இதைக்கடந்து சென்றால் பிரம்மாவுக்கு என்று ஒரு சிறு தனிச்சந்நிதி இருந்தது. இவரையும் வணங்கிக் கொண்டோம்.
எங்கு நோக்கினும், ஆலயத்தில் சிற்பங்களுக்கு குறைவில்லை. பரவி பெருகி வியாபித்து இருந்தன.
சிவபெருமானின் புரிந்த அறுபத்துநான்கு லீலைகளில் பெரும்பான்மையானவைகளை, மிக நுட்பமாக பல்லவர்கால சிற்ப அமைப்பில் திருச்சுற்றிலும் ஏனைய பல இடங்களிலும் இருப்பதை காணப் பெற்றோம்.
சிற்பங்கள் யாவும் வெகு அற்புதமாகவும், கண்ணைக்கவரும் விதத்தில் அமைத்திருந்தார்கள்.
இராஜகோபுர வாயிலில் காமதேனு, கற்பக விருட்சம், குதிரை மற்றும் யானை வீரர்களின் போர்க்காட்சிகள் காணக் கிடைத்தது.
மனுநீதி சோழன் நீதிவரலாற்றையும் பதித்திருந்தார்கள்.
மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட இரூபத்திரண்டு விதவிதமான வாத்தியங்களை இசைக்கும் மாந்தர்கள் யாவும் கண்ணிற்கு விருந்தாய் அமைந்தன.
இதே போன்று திருக்கோடீஸ்வரரின் கருவறை வெளிச்சுவற்றிலும் அழகிய சிற்பகோலங்கள் பொதிந்து கிடந்தது.
தெற்குச் சுவரில் நடராஜர் சிற்பம் ஒன்றும் இருந்தது.
இதில், இடதுபுறம் சிவகாமியும், வலதுபுறம் காரைக்கால் அம்மையார் பேய் உருவில் தலைவிரி கோலமாய் தாளமிட்டப்படி சிவனது கூற்றினைக் கண்டு ஆனந்தித்தபடி இருந்தது.
இதைக் காணப் பெற்றதும், பக்தியின் நாக்கால், தேகத்தின் உரோமக்கால்கள் சில்லிட்டன. *சிவ சிவ.*
திருவடியின் கீழ் இசைபாடுவோர். மத்தளம் அடிப்போர், தாளமிடுவோர் என மூன்று கணங்கள் இருந்தனர்.
அடுத்து வரிசையாக பிட்சாடனரும்,
விஷ்ணுவின் மோகினி அவதாரமும்,
ஒரு குள்ளபூதம், அமர்ந்த நிலையிலும்,
மஹா கணபதி, அகத்திய முனிவர், தட்சிணாமூர்த்தி, அத்ரி முனிவர், பிருகு முனிவர் ஆகியோர்களை இருக்கக் கண்டு வணங்கி நகர்ந்தோம்.
விமானத்தில் பிட்சாடனர் உருவம் எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தியாய் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன.
சுவாமியின் கருவறை மேற்குச் சுவற்றில் லிங்கோத்பவர், மகாவிஷ்ணு நின்ற கோலம் அவருக்கு இருபுறமும் குத்ச முனிவரும் வசிஷ்டமுனிவரும் இருந்தனர்.
நெஞ்சுக்கு நேராக கைகளை கூப்பி வணங்கிக் கொண்டபடியே நகர்ந்தோம்.
விமானத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் காணப்பட்டார்.
வடக்குத் கருவறை சுவற்றில் முதலில் கௌதம மகரிஷியும் அடுத்து பிரம்மாவும், தொடர்ந்து காஸ்யப ரிஷி, அஷ்டபுஷ துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர் இருக்க, கூப்பிய கைகளை விலக்காது வணங்கியபடியே நகர்ந்தோம்.
கிழக்குபுற விமானத்தில் சுவாமி மற்றும் அம்பாள் சிற்பம் அமைந்திருந்தன.
அடுத்து, அம்மையை வணங்கிக் கொள்ள அவளாலயம் சென்றோம்.
அம்மை வடிவாம்பிகை நின்ற கோலழகுடன் தரிசனம் அருளினார்கள்.
மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு, கண்குளிர தரிசித்து, மனம் நிறைய அவளருளை நெஞ்சில் நிறைத்து, அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
*எமபயம் நீக்கும் தலம்:*
சிவபுராணத்தில் பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படும் ஒரு நிகழ்ச்சி இத்தலத்தின் மகிமைக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது.
தன் கணவனைக் கொன்றுவிட்டு, நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்த லோக காந்தா என்ற பெண்மணி, வாழ்க்கையின் இறுதிகாலத்தில் திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது.
அவள் மரணமடைந்ததும் யமதூதர்கள் அவளைத் தண்டிக்க நரகலோகம் அழைத்துச் செல்லுகின்றனர்.
சிவ தூதர்கள் இதை வன்மையாக கண்டிக்கின்றனர்.
யமதர்மராஜன் சிவபெருமானிடம் வந்து முறையிடுகிறார்.
தமது தலமான திருக்கோடிக்காவோடு சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும், காலதேச வர்த்தமானங்களால் இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்றும், திருகோடிக்கா என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிடுகிறார்.
லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டுவிட்டதால், விடுபட்டு, பின் முக்தி அடைகிறாள்.
காசியைப்
யமனிடமிருந்து காப்பதுபோல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது.
இந்த நம்பிக்கையை உறுதி செய்வது போல, இவ்வூரில் மயானம் தனியாக இல்லை.
இவ்வூரில் மறிப்பவர்களை, காவிரி நதியின் மறுகரைக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இன்று வரை தொடர்ந்து வருகிறது.
*தல அருமை:*
சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்ற தலம்.
அதேபோல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ள தலம்.
தலத்தின் தீர்த்தமான் காவேரி நதி உத்திரவாஹினியாக தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது.
கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் இத்தலத்தில் காவிரியில் நீராடினால், எல்லா பாவங்களும் தொலைந்துவிடும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் உள்ள சனிபகவான் பாலசனி என்று அழைக்கப்படுகிறார்.
இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது.
கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன்மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கற்றளியாக திரும்பக் கட்டப்பட்ட சிறப்பையுடைய தலம்.
மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக மந்தரங்களை உச்சரித்து சாப விமோசனம் பெற்ற தலம்.
அதேபோல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டு ஞானமுக்தி அடைந்த தலம்.
ஒரு சமயம் கைலாசத்தையும், திருகோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய்விட்டது.
என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட தலம் இது என்று சிவபெருமானால் சிலாகித்து கூறப்பட்ட தலம்.
இத்தலத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கின்ற பெருமையுடைய தலம்.
*திருஞானசம்பந்தர் தேவாரம்:*
1.🔔இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற விச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.
🙏🏾இன்றையநாள் நல்லது . நாளைய நாள் நல்லது என்று இச்சையால் காலங் கடத்திப் பெருமானை வழிபடாது அழிந் தொழியும் வாழ்க்கையைப் போக்கி மெய் வாழ்வினை அடைய வாருங்கள் . மின்னல் போன்ற ஒளியினனும் , வெண்மதி , கங்கை , கொன்றை ஆகியவற்றை முடியில் சூடியவனுமாகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சென்றடைவீர்களாக .
2.🔔அல்லன்மிக்க வாழ்க்கையை யாதரித் திராதுநீர்
நல்லதோர் நெறியினை நாடுதுந் நடம்மினோ
வில்லையன்ன வாணுதல் வெள்வளையொர் பாகமாங்
கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே.
🙏🏾அல்லல் மயமான வாழ்க்கையை விரும்பியிராது நீர் நற்கதியை அடையும் நெறியை நாடுதற்குப் புறப்படுவீர்களாக . வில் போன்ற ஒளி பொருந்திய நுதலை உடையவளும் , வெண்மையான வளையல்களை அணிந்தவளுமாகிய உமையம்மையை ஒரு பாக மாகக் கொண்டு , முல்லை நிலத்து வெள்ளை ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானுடைய திருக்கோடிகாவை அடைவீர்களாக .
3.🔔துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்
தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்
அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல்
கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே
🙏🏾துக்கம்மிகுந்த வாழ்க்கையினால் வரும் இளைப்பை நீக்கி , நீர் தக்கதொரு நெறியை அடைய வாருங்கள் . அரை மிசை என்பு மாலையை அணிந்தவனாய் , கங்கை சூடிய சடைமுடியில் கொக்கிறகு அணிந்துள்ள சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சேருங்கள் .
4.🔔பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை
உண்டுமக் குரைப்பனா னொல்லை நீ ரெழுமினோ
மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதொர் பாகமாக்
கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே.
🙏🏾முற்பிறவிகளில் செய்த வலிய வினைகள் முழுவதும் அழிந்தொழிதற்குரிய வழி ஒன்றுண்டு . அதனை உங்கட்குக் கூறுகிறேன் . விரைந்து நீங்கள் புறப்படுவீர்களாக . செஞ்சடையில் கங்கையைச் சூடி உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டுள்ள மார்பினனாய சிவபிரானது திருக்கோடிகாவை அடைவீர்களாக .
5.🔔முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா
தின்னநீரி டும்பையின் மூழ்கிறீ ரெழும்மினோ
பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட வாடலான்
கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே.
🙏🏾முற்பிறவியில் நீர் , செய்த பாவத்தால் சிவமூர்த்தி யின் திருவடிகளை நினையாது இன்னமும் நீங்கள் துன்பங்களில் மூழ்கித் துயருறுகின்றீர்களே , புறப்படுவீர்களாக . பொன்னையும் வென்ற அழகிய கொன்றை சூடியவனாய்ப் பூதங்கள் பாட ஆடும் இயல்பின னும் , கொல்லும் தன்மை வாய்ந்த வேலினை உடையவனும் ஆகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவை அடைவீர்களாக .
6.🔔ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப்
பாவமெத் தனையுநீர் செய்தொரு பயனிலைக்
காவன்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக்
கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே.
🙏🏾பெருமையற்ற உலகவாழ்க்கையை இன்பம் உடையது என்று நினைத்திருந்து நீர் மாண்பு அற்ற மூப்பினால் வருந்துதற்கு முன்னரே வருவீர்களாக . வெண்மையான என்பு மாலையை அணிகலனாகப் பூண்டு , பொன் போலத் திகழும் சடைமுடியில் வளைந்த வெண் பிறையைச் சூடிய சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக .
7.🔔ஏணழிந்த வாழ்க்கையை யின்பமென் றிருந்துநீர்
மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ
பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக்
கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே.
🙏🏾பெருமையற்ற உலக வாழ்க்கையை இன்பம் உடையது என்று நினைத்திருந்து நீர் மாண்பு அற்ற மூப்பினால் வருந்துதற்கு முன்னரே வருவீர்களாக . வெண்மையான என்புமாலையை அணி கலனாகப் பூண்டு , பொன்போலத் திகழும் சடைமுடியில் வளைந்த வெண்பிறையைச் சூடிய சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக .
8.🔔மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர்
பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ
வெற்றிகொள் தசமுகன் விறல்கெட விருந்ததோர்
குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே.
🙏🏾இவ்வாழ்க்கையை மெய்யென்று கருதும் எண்ணத்தை விடுத்துச் சிவபிரான் திருவடிகளைப் பணிந்து பற்றி வாழ்வீர்களாக . வெற்றியையே பெற்று வந்த இராவணனின் வலிமையை அழித்த குற்றமற்ற கயிலை மலைக்கு உரியவனாகிய அச்சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக .
9.🔔மங்குநோ யுறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன்
செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா
வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர்
கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே.
🙏🏾வாழ்வை மங்கச் செய்யும் நோய்க்குக் காரணமான வினைகள் அழிதற்குரிய உபாயம் ஒன்றைச் சொல்லுவேன் : கேளுங்கள் . செங்கண் மாலும் நான்முகனும் சென்று அளந்தும் காணுதற் கியலாத பெருமையனும் , வெவ்விய கண்களைக் கொண்ட பெரிய விடையூர்தியை உடைய வேதியனுமாகிய சிவபிரான் விரும்பும் தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவை அடைவீர்களாக .
10.🔔தட்டொடு தழைமயிற் பீலிகொள் சமணரும்
பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை
விட்டபுன் சடையினான் மேதகும் முழவொடும்
கொட்டமைந்த வாடலான் கோடிகாவு சேர்மினே.
🙏🏾தட்டோடு , தழைத்த மயிற் பீலியை ஏந்தித்திரியும் சமணர்களும் , பட்டால் ஆகிய விரிந்த ஆடையைப் போர்த்த புத்தர்களும் சொல்வன பயனற்ற சொற்களாகும் . தொங்க விட்ட சடையினனாய் மேதகு முழவு கொட்ட ஆடுபவனாய் விளங்கும் சிவ பிரானின் கோடிகாவை அடைவீர்களாக .
11.🔔கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய
செந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை
அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்
பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே.
🙏🏾பூங்கொத்துக்களை உடைய குளிர்ந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவில் எழுந்தருளிய செந்தழல் உருவனை , சிறப்புமிக்க திறனுடைய அந்தணர்கள் வாழும் புகலியுள் தோன்றிய வேதங்களில் வல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தமிழை வல்லவர்களின் பாவங்கள் நீங்கும் .
திருச்சிற்றம்பலம்.
*தொடர்புக்கு:*
சண்முகசுந்தர குருக்கள்.
94866 70043
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *பிராணவரதேஸ்வரர் திருக்கோயில், திருமங்கலக்குடி.*
_________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment