உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
_________________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற திருக்கோயில் தரிசனம்.*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல..............)
_________________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்:191.*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
💐 *ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், கச்சி ஏகம்பம்.* (காஞ்சிபுரம்)💐
_________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள தலங்களில் இத்தலம் முதலாவதாகப் போற்றப் படுகிறது.
*இறைவன்:* ஏகாம்பரேஸ்வரர்.
*இறைவி:* காமாட்சி.
*தல விருட்சம்:* மாமரம்.
*தல தீர்த்தம்:* சிவகங்கை, காப்பாத்தி.
*ஆகமம்:* காமிக ஆகமம்.
*தேவாரம் பாடியவர்கள்:*
சம்பந்தர் முதலாம் திருமுறையில் ஒரு பதிகமும், இரண்டாம் திருமுறையில் ஒரு பதிகமும், மூன்றாம் திருமுறையில் இரண்டு பதிகங்களும்.
அப்பர்- நான்காம் திருமுறையில் மூன்று பதிகங்களும், ஐந்தாம் திருமுறையில் இரண்டு பதிகங்களும், ஆறாம் திருமுறையில் இரண்டு பதிகங்களும்.
சுந்தரர்- ஏழாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகமும். ஆக மொத்தம் இத்தலத்திற்கு பன்னிரண்டு பதிகங்கள்.
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்திலும் காஞ்சிபுரம் இடம்பெற்றுள்ளது.
(ஏழு திருமுறைகளையும் முறையே பெற்றுள்ள திருத்தலங்களில் இதுவும் ஒன்று.)
*இருப்பிடம்:*
செங்கல்பட்டிலிருந்து அரக்கோணம் செல்லும் இருப்புப் பாதையில் ஏழாவது இரயில் நிலையம்.
ஏனைய ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
*பெயர்க்காரணம்:*
க- பிரம்மன், அஞ்சித்தல்- வழிபடல் பிரமதேவனால் பூஜிக்கப்பட்ட தலம்.
*ஆலயப் பூஜை காலம்:*
நாள்தோறும் ஆறு கால பூஜைகள்.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும்.
*அஞ்சல் முகவரி:*
நிர்வாக அதிகாரி.
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்,
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
631 502
*கருவறை:*
அம்பிகை கம்பாநதி மாமரத்தின் கீழ் மணலில் சிவலிங்கம் செய்தார்.
இந்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானத்தில் அமைந்துள்ளன.
புனுகுசட்ட கவசம் சார்த்தப்பட்டுளன.
திங்கள் தோறும் தலமகிமை தொடர்பான அம்மை தழுவும் கோலத்துடானான கவசம் அணிவிக்கப் படுகிறது.
ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் நடத்திவிக்கப்படுகிறது.
லிங்கத்துக்கு பின்புறமாக திருவேகம்பர் காமாட்சியம்மையுடன் மணக்கோலத்துடன் அருள் தருகிறார்.
*தல சிறப்பு:*
*"நகரேஷு காஞ்சி"* என்று மகாகவி காளிதாசனால் போற்றப்பட்ட திருத்தலம் காஞ்சீபுரம்.
வரலாற்றுப் பெருமையும், இலக்கியங்களில் இடம் பெற்ற பெருமையும் உடையது காஞ்சீபுரம்.
கோயில்கள் நிறைந்த நகரம் என்ற சிறப்புடைய காஞ்சீபுரம் முக்தி தரும் தலங்களாக கருதப்படும் ஏழு நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.
பஞ்சபூத தலங்களில் பூமித்தலமாக விளங்குவது காஞ்சீபுரம்.
இங்கு பிருத்வி லிங்கமாக சிவபெருமான் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார்.
மூல லிங்கம் மணலால் ஆனதால் இதற்கு அபிஷேகங்கள் செய்வது கிடையாது.
குரு, மச்சம், பரசுராமர் முதலியோர் வழிபட்ட தலம்.
பம்பை, கம்பை, மஞ்சள்நதி, வேகத்தில், பாலி, சேயாறு, புண்ணியநீர் என ஏழு நதிகளைக் கொண்ட சிறப்புத் தலம்.
சக்தி பீடங்களில் இத்தலமும் ஒன்று.
முப்பெரும் தேவியரான உமை, திருமகள், சரஸ்வதி ஆகியோர்களின் வாசஸ்தலம்.
காமாட்சி தவமிருந்த மாமரத்தின் வயது மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகள். (தாவரவியல் துறை கணிப்பு.)
*கோவில் அமைப்பு:*
ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும். இந்த ஆலயம் சுமார் இருபத்து மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
ஐந்து பிரகாரங்களை உடைய இந்த ஆலயத்தின் இராஜகோபுரம் சுமார் நூற்று தொன்னூறு அடி உயரத்துடன், ஒன்பது நிலைகளைத் தாங்கி உடையதாகவும் அமைந்துள்ளது.
நான்காம் பிரகாரத்திலுள்ள ஆயிரங்கால் மண்டபம் பல சிற்ப கலை நுணுக்கங்களைக் கொண்டது.
ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் ஈசான மூலையில் நூற்று எட்டு வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்திருக்கிறது.
*முக்தி தலங்கள் மொத்தம் ஏழு:*
1.அயோத்தி,
2.மதுரா,
3.காசி,
4.மாயா,
5.காஞ்சி,
6.அவந்திகா,
7.துவாரகா.
*தல அருமை:*
ஒருமுறை பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடிவிட்டார்.
இதன் காரணமாக எல்லா உலகங்களும் இருளில் மூழ்கின. உடனே சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து இருள் அகற்றினார்.
அம்பிகை விளையாட்டாக கண்களை மூடினாலும் அதனால் எல்லா ஜீவராசிகளுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்காக பூவுலகிற்குச் சென்று பிராயச்சித்தமாக தன்னை நோக்கி தவம் இயற்றுமாறு அம்பிகையைப் பணித்தார்.
அம்பிகையும் இந்த பூவலகிற்கு வந்து புனித தலமான இந்த காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கிப் பூஜித்து வந்தார்.
அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார்.
வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி அம்பிகை லிங்கத்தை தழுவி கட்டிக்கொண்டார்.
அவ்வாறு உமையம்மை தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார்.
இவ்வாறு இறைவி இறைவனை வழிபட்ட இந்த வரலாறு திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்திலும், காஞ்சிப் புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
இதனால் இறைவனுக்குத் *தழுவக் குழைந்த நாதர்* என்றும் பெயர்.
இவ்வாறு அம்பிகை இறைவனைக் கட்டி தழுவிக் கொண்டதை சுந்தரர் தனது பதிகத்தில் *(71வது பதிகம் - 10வது பாடலில்)* அழகாக குறிப்பிடுகிறார்.
*🔔எள்கலின்றி இமையவர் கோனை ஈச னைவழி பாடுசெய் வாள்போல் உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே* என்று.
சிவபெருமான் இங்கு மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு அருள் புரிந்தார்.
அம்பிகையை அங்கேயே திருமணம் புரிந்து கொண்ட சிவபெருமான் அம்பிகைக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்தார்.
இரண்டு நாழி நெல் கொடுத்து அதைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களைச் செய்யப் பணித்தார்.
அவ்வாறே அம்பிகை பார்வதியும் காமாட்சி என்ற பெயரில் காமக் கோட்டத்தில் அமர்ந்து அறங்களைச் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
இத்தலத்தின் தலவிருட்சமான மாமரம் மிகச் சிறந்த பிரார்த்தனைக்குரிய இடமாகும்.
வேதமே மாமரம். வேதத்தின் நான்கு வகைகளே இம்மரத்தின் நான்கு கிளைகள்.
தவம் செய்த அம்பாளுக்கு, இறைவன் இம் மாவடியின் கீழ்தான் காட்சி தந்தருளினார்.
இம்மாமரத்தை வலம் வரலாம். மாவடியைத் தொழுது பின் திரும்பி வந்து, பிரகாரத்தில் வலம் வரும்போது சஹஸ்ரலிங்க சந்நிதி பெரிய ஆவுடையாருடன் காட்சி தருகின்றது.
அடுத்து வலதுபுறம் படிகளேறிச் சென்றால் ஏலவார் குழலி என்றழைக்கப்படும் அம்பாளின் உற்சவச் சந்நிதி உள்ளது.
இதனருகில் *"மாவடிவைகும் செவ்வேள்"* சந்நிதி உள்ளது.
குமரகோட்டம் என்னும் பெயரில் முருகப் பெருமானுக்கு இத்தலத்தில் தனிக்கோயில் உள்ளது.
கந்தபுராணத்தில் வரும் *"மூவிரு முகங்கள் போற்றி"* எனும் பாடலில் வரும் *"காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி"* என்று புகழப்படும் தொடருக்குரிய பெருமான் இவரேயாவார்.
இச்சந்தியில் வள்ளி தெய்வயானையுடன் கூடிய உற்சவத் திருமேனி முன்னால் இருக்க, பின்புறம் இதே திருமேனிகள் சிலாரூபத்தில் உள்ளன.
ஷேத்திர வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத்தொண்ட நாயனார், சாக்கிய நாயனார், இவர்கள் அருள்பெற்ற தலம் இதுவாகும்.
இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன.
அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.
நூற்று எட்டு வைணவ திவ்யதேசங்களில் காஞ்சீபரத்தில் மட்டுமே பதினைந்து திவ்யதேசங்கள் அமைந்துள்ளன.
அவற்றில் ஒன்றான நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி இந்த ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ளது.
*கச்சி மயானம்* என்கிற ஒரு தேவார வைப்புத் தலமும் இக்கோவிலின் உள்ளே சுவாமி சந்நிதி கொடி மரத்தின் முன்னுள்ளது.
மேலும் பல சந்நிதிகளும், சிற்பங்களும், மண்டபங்களும் உள்ள இந்த ஆலயத்தை விவரிக்க வார்த்தைகள் வரவில்லை.
நான் இவ்வாலயத்தை நேரில் சென்று, ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் கண்டு தொழுது தரிசித்ததை, நான் உங்களுக்கு கூறிவதைவிட, நீங்கள் ஒருமுறையேனும் இவ்வாலயம் சென்று தரிசிக்க வேண்டும் என்பது என் அவா.
சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தடியில் *"உன்னைப் பிரியேன்"* என்று சத்தியம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார்.
சிவபெருமானை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டு பின் திருவாரூர் செல்வதற்காக சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து திருவொற்றியூரில் இருந்து சத்தியத்தை மீறி புறப்பட்டதால் சுந்தரர் தனது இரு கண் பார்வையும் இழக்க நேரிட்டது..
அப்படி பார்வை இழந்த கண்களில் இடக்கண் பார்வையை, சுந்தரர் காஞ்சீபுரம் தலத்தில் பதிகம் பாடி பெற்றார்.
பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் *"காணக் கண்அடி யேன்பெற்ற வாறே"* என்று உள்ளம் உருகிப் பாடியுள்ளார்.
நல்ல தமிழ்ப் பாடலாகிய இப்பதிகத்திலுள்ள பத்து பாடலகளையும் பாட வல்லவர் நன்னெறியால் பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர் என்றும் குறிப்பிடுகிறார்.
*தல பெருமை:*
திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோர்களின் அவதாரத்தலம் இது.
மேலும், சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலமும் இது.
மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர் பெற்றது.
ஆம்ரம் என்பது வடசொல், அதை தமிழில் கூறும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று.
மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று.
ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று.
இது முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது.
சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய
அளவில் இரு
கண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது.
இங்கு பிரம்மா, விஷ்ணு,
உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன.
அவைகள் முறையே *வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம்* என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.
இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன.
இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.
ஏகாம்பரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள
பழமையான கோயில்களுள் இதுவும் ஒன்று.
பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படும் இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால்
கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது எனக் கருதப்பட்டாலும், இக் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இம் மன்னன் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள், இவ்விடத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை வரலாற்று ஆய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது.
*சம்பந்தர் தேவாரம்:*
1.🔔வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக்
கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தா ரவர்போற்ற வணங்கினொ டாடல்புரி
எந்தை மேவிய வேகம்பந் தொழுதேத்த விடர்கெடுமே.
🙏🏾அனலிடை நன்றாக வெந்த வெண்மையான திருநீற்றைப் பூசியுள்ள மார்பின்கண் விரிந்த பூணூல் ஒருபால் விளங்கித் தோன்ற, மணங்கமழும் கூந்தலினையுடைய உமையம்மையோடும், விளங்கும் பொழில்களால் சூழப்பட்ட கச்சி என்னும் தலத்துள் எல்லையற்ற குணங்களையுடைய அடியவர்கள் போற்ற நடனம் செய்யும் எந்தையாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஏகம்பம் என்னும் திருக்கோயிலைத் தொழுது போற்ற நம் இடர் கெடும்.
2.🔔வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச்
சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம்
குருந்த மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவம்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.
🙏🏾வரம்பெற்ற அவுணர்களின் பெருநகராக விளங்கிய முப்புரங்களும் ஒருசேர மாய்ந்து கெடுமாறு கணை எய்து எரித்தழித்த, தாழ்ந்து தொங்கும் சடைகளையுடைய சங்கரன் எழுந்தருளிய இடமாகிய, குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்ல குரா, கடம்ப மரம் ஆகியனவற்றால் சிறந்து விளங்கும் பசுமையான பொழில் சூழ்ந்த கச்சிமாநகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ, நம் இடர் கெடும்.
3.🔔வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து
பெண்ணமர்ந் தெரியாடல் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்
விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள்
திண்ணமாம் பொழில்சூழ்ந்த வேகம்பஞ் சேர விடர்கெடுமே.
🙏🏾வெண்மைநிறம் அமைந்த திருநீறு பூசிய மார்பின்கண் உடலில் வரிகளையுடைய பாம்பை அணிந்து, உமையம்மையை விரும்பியேற்று, சுடுகாட்டில் எரியாடல் புரியும் தலைக் கோலம் உடையவனாகிய சிவபிரான் மேவிய இடமாகிய விண்ணளாவிய நீண்ட மாட வீடுகள் ஓங்கி விளங்குவதும், என்றும் நிலை பெற்ற பொழில்களால் சூழப்பட்டதுமாகிய கச்சிமாநகரில் உள்ளதுமாகிய திருஏகம்பத்தைச் சென்று வணங்க நம் இடர் கெடும்.
4.🔔தோலுநூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து
காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம்
மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள்
ஏலநாறிய சோலைசூ ழேகம்ப மேத்த விடர்கெடுமே.
🙏🏾மான்தோலும் பூணூலும் பொருந்திய மலை போன்ற மார்பின்கண் சுடலையில் எடுத்த வெண்மையான திருநீற்றை அணிந்து மார்க்கண்டேயர்க்காகக் காலன் மாயும்படி காலால் அவனை உதைத்தருளிய கடவுளாகிய சிவபிரான் விரும்புமிடமாகிய, மாலைக் காலத்தில் தோன்றும் வெண்மையான மதி தோயுமாறு உயர்ந்த பெரிய மதில்களை உடைய பெரிய காஞ்சிபுர நகரில் மணம் வீசும் சோலைகளால் சூழப்பட்ட ஏகம்பம் என்னும் திருக்கோயிலை ஏத்த, நம் இடர் கெடும்.
5.🔔தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து
பாடனான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழ
வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துட னாடல்புரி
சேடர்சேர் கலிக்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.
🙏🏾அழகிய இதழ்களோடு கூடிய கொன்றை மலர் மாலை சூடிய சடையின்மேல் தூய பிறை மதியை அணிந்து நான் மறைகளைப் பாடல்களாகக் கொண்டு பேய்க் கணங்கள் பலசூழப், புலால்வற்றிய வெண்தலையோட்டையும், அனலையும் கையிலேந்தி மகிழ்வோடு உமையம்மையுடன் ஆடல் புரிகின்ற பெரியோனாகிய சிவபிரான் எழுந்தருளிய ஆரவாரமுடைய கச்சியில் விளங்கும் திருஏகம்பத்தை நினைக்க, நம் இடர் கெடும்.
6.🔔சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய்து
ஆகம்பெண் ணொருபாக மாக வரவொடு நூலணிந்து
மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள்
ஏகம்பத் துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே.
🙏🏾மேருமலையை வில்லாகக் கொண்டு அசுரர்களின் முப்புரங்களை அழியுமாறு கணைதொடுத்துத் தன் திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மார்பில் பாம்பையும், முப்புரிநூலையும் அணிந்து விண்ணளாவிய அழகிய மாடங்களையும், பெரிய மதிலையும் உடைய கச்சிமாநகரில் விளங்கும் திருஏகம்பத்தில் உறையும் ஈசன் திருவடிகளை ஏத்த நம் இடர் கெடும்.
7.🔔
🙏🏾
8.🔔வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து
நாணிடத் தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர்ந்
தேணிலா வரக்கன்ற னீண்முடி பத்து மிறுத்தவனூர்
சேணுலாம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.
🙏🏾ஒளி விளங்கும் பிறைமதி பொருந்திய செஞ்சடையில் ஒளி பொருந்திய பாம்பினை அணிந்து இடப்பாகத்தே நாணோடு கூடியவளாகிய இல்வாழ்க்கைக்குரிய உமையம்மையை விரும்பியேற்றுச் சிரிக்கும் தலையோட்டில் பலியேற்று, மன உறுதி படைத்தவனாகிய இராவணனின் நீண்ட முடிகள் பத்தையும் நெரித்தவனாகிய சிவபிரானது, வானளாவிய பொழில்களையுடைய கச்சிமா நகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ நம் இடர் கெடும்.
9.🔔பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான்
அரவஞ் சேர்சடை யந்தண னணங்கினொ டமருமிடம்
கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள்
மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வல்வினை மாய்ந்தறுமே.
🙏🏾பிரமனும், திருமாலும் தம் கைகளால் தொழுது வணங்கப் பெரிய அனலுருவாகி நின்ற பெருமானும், பாம்பணிந்த சடையையுடைய அந்தணனும் ஆகிய சிவபிரான் தன் தேவியோடு அமரும் இடமாகிய, வஞ்சகம் இல்லாத வள்ளன்மை பொருந்திய கையினை உடையவர்கள் வாழ்கின்ற ஆரவாரமுடைய கச்சி மாநகரில் குங்கும மரங்கள் பொருந்திய சோலைகளால் சூழப்பட்டு விளங்கும் திருஏகம்பத்தைத் தொழ நம் வல்வினைகள் மாய்ந்து கெடும்.
10.🔔குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின்
விண்டவர் புரமூன்றும் வெங்கணை யொன்றினா லவியக்
கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே.
🙏🏾பருமையான உடலோடு ஆடையின்றித் திரியும் சமணர்களோடு ஆடையைத் தம் உடலில் போர்த்து வலியவராய்த் திரியும் புத்தர்களும் புனைந்து கூறும் உரைகளைப் பொருளுரையாகக் கருதி விரும்பாதீர்கள். பகைவர்களாகிய அவுணர்களின் மூன்று புரங்களையும் கொடிய கணை ஒன்றை எய்து எரித்தழித்தவனாகிய சிவபிரான் எழுந்தருளிய கச்சியின்கண் உள்ள திரு ஏகம்பத்தைச் சென்று காண, நம் இடர் கெடும்.
11.🔔ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்ப மேயவனைக்
காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள்
பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார்
சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே.
🙏🏾அழகு நிறைந்த பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம்பத்துள் விளங்கும் இறைவனை மேகங்கள் தவழும் அழகிய மாடங்கள் ஓங்கும் கழுமல நன்னகருள் தோன்றிய தமிழ்வல்ல ஞானசம்பந்தன் பரவிப் போற்றிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர் இவ்வுலகின்கண் சிறந்த புகழால் ஓங்கி விளங்கிப் பின் விண்ணவர்களோடும் சேர்ந்து வாழும் நிலையைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்.
*திருவிழாக்கள்:*
பங்குனி உத்திரம் பெருவிழா பதினான்கு நாட்கள்.
முதல நாள் காலை கொடியேற்றம்.
ஆறாவது நாளில் அறுபத்து மூவர் உற்சவம்.
இரவில் வெள்ளித் தேர் பவனி.
ஏழாம் நாள் இரதோற்சவம்.
ஒன்பதாம் நாள் மாவடிச் சேவை.
பத்தாம் நாள் திருக்கல்யாணம் உற்சவம்.
பன்னிரண்டாம் நாளில் பஞ்சமூர்த்திகள் உலா.
ஆடிப்பூரம்,
நவராத்திரி,
ஐப்பசி அன்னாபிஷேகம்,
கார்த்திகை லட்சதீபம்,
மார்கழி திருவாதிரை,
தைப்பூசம்,
மாசி மகம்,
மகாசிவராத்திரி,
சுந்தரர் இடக்கண் பெற்ற வைபவ விழா.
*தொடர்புக்கு:*
044- 27222084
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களின் நாளைய தலப்பதிவு **
___________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment