Thursday, November 26, 2020

Kulam tarum selvam tantidum- Parasuram in tamil

ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத்வரவர முநயே நம:
.
பெற்ற தாயினும் ஆயின செய்யும்.... (மீள் பதிவு)
.
ஒரு அறிவிப்புகூட இல்லாமல் பதிவுகளை நிறுத்தியதற்காக முதலில் அனைவரும் அடியேனை மன்னிக்க ப்ரார்த்திக்கிறேன்.. அடியேனுக்கு ஒரு வார காலமாக அதிக காய்ச்சல். காய்ச்சலின் ஆரம்பநாட்களில் எழுந்துகூட அமரமுடியாமல் தவித்துவிட்டேன். இப்போது தேவலாம் போல் இருப்பதால் எழுதுகிறேன். சரி இனி விஷயத்திற்க்கு வருகிறேன்...
.
அடியேனின் கல்லூரி நாட்களில் மாடியில் உள்ள ஒரு அறையில்தான் என்னுடைய நித்தியவாசம். அது தெருவை ஒட்டிய ஒரு அறை என்பதால் ஜன்னல்கள் எப்போதும் திறந்தே இருக்கும். ஒரு சமயம் ஒரு சிட்டுக்குருவி அறையின் ஜன்னலில் அமர்வதும் போவதுமாய் இருந்தது. இது சில நாட்கள் நடந்தது. பிறகு அதே சிட்டுகுருவியியுடன் ஒரு ஆண்சிட்டுகுருவியும் அறைக்கு வந்துசென்றது.. சரி கூடுகட்டத்தான் இடம் தேடுகின்றன என அனுமானித்து ஒரு அட்டைபெட்டியை பரன்போல் அமைத்து வைத்தேன். அக்குருவிகளும் தினமும் அந்த அட்டைபெட்டியில் எதேதோ வைத்து கூடுகட்டி வசிக்கலாயின. அடியேனுக்கு ஒரே சந்தோஷம். நாட்கள் செல்ல அட்டைபெட்டியில் இருந்து கீச்சு கீச்சு என்று சத்தம் வர ஆரம்பித்தன, குஞ்சுகள் புதுவரவுகளாக வந்திருந்ததை உணர்ந்தேன். ஆண் குருவியும் தாய் குருவியும் சேர்ந்தே உணவு எடுத்துவரும். என்னை பார்த்து இரண்டு குருவிக்கும் பயமே இல்லைபோலும். நான் இருக்கும் போதே மிக சரலமாக வந்து சென்றன.
.
இப்படி சில நாட்கள் சென்றன. திடீர் என்று ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். இரவு முழுக்க குஞ்சுகள் அதிகமாக சத்தமிட ஆரம்பித்தன. கைக்குழந்தையின் அழுகை எப்படி விவரிக்க முடியாத ஒரு சோக உணர்வை நமக்கு கொடுக்குமோ அதேபோல்தான் அந்த சிட்டுகுருவியின் குஞ்சுகளின் கீச்சு கீச்சு சத்தம் என்னை என்னவோ செய்தது. இருந்தாலும் என்ன செய்ய முடியும்?. அடியேனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மறுநாள் காலை ஆண் சிட்டுகுருவி மட்டும் வாயில் ஏதோ உணவுடன் வந்தது. உணவு கொடுத்துவிட்டு சென்றுவிட்டது. கல்லூரியிலும் எனக்கு இதே சிந்தனையாகத்தான் இருந்தது. மாலை வந்து அறைக்கு சென்று பார்த்தேன் அப்போதும் கீச்சு கீச்சு சத்தம் ஓயவே இல்லை. வீட்டில் இருந்தவர்களும் நாள் முழுக்க சத்தம் வருவதாக சொன்னார்கள். எனக்கு இனம்காண முடியாத சோக உணர்வு. இரவு முழுக்க அக்குஞ்சுகளின் அலறல் சத்தம் என்னை கொன்றது. பிறகுதான் யோசித்தேன் கொஞ்சம் நாட்களாக தாய்க்குருவி ஏன் வரவேயில்லை?. ஆண்குருவி ஒருநாள் மட்டும் உணவுகொடுத்து சென்றது, பின் அதுவும் வரவில்லை… என்ன ஆனது அந்த தாய் குருவிக்கு?. கண்டிப்பாக அதற்கு ஏதோ ஆபத்து நேர்ந்திருக்க வேண்டும். இல்லை என்றால் அது கண்டிப்பாக தன் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்க வந்திருக்கும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது எனக்கு…. மூன்றாவது நாளாக இரவும் தாயை காணாத குஞ்சுகளின் பசி அலறலுடன் தூக்கமே வரவில்லை விடியற் காலை 3 மணியளவில் தூங்கிபோனேன். கண்விழித்து பார்த்தேன் மணி காலை 8.30. மேலிருக்கும் அட்டைபெட்டியை பார்த்தேன்! அதிலிருந்து சத்தம் வருவது நின்றிருந்தது. சந்தோஷபட்டேன்! ஒருவேளை தாய்குருவி வந்திருக்குமோ?.. குஞ்சுகளுக்கு உணவு கொடுத்திருக்குமோ? தாயை பார்த்த சந்தோஷத்தில் குஞ்சுகள் இருக்கிறதோ என்று சந்தோஷப்பட்டு போய் குளித்து கல்லூரி சென்றேன்.
.
இரண்டு நாட்கள் கழித்து அறையில் துர்நாற்றம் வந்தது… என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போதே மண்டையில் ஆணி இறங்கியது போல் ஒரு மின்னல் வெட்ட பரன் மேல் ஏறி அந்த சிட்டுகுருவியின் அட்டைபெட்டியை எடுத்தேன். எடுத்து கீழே வைத்து திறந்து பார்த்தேன் உள்ளே 4 குஞ்சுகளும் முடிக்கூட முளைக்காத நிலையில் சிறிது பஞ்சு கொண்ட அந்த மஞ்சத்தில் இறந்து கிடந்தன. தாய் குருவி அவைகளுக்கு அமைத்து கொடுத்த அந்த கூடு பஞ்சுகளால் மெத்தென்று இருந்தது… எனக்கு அழுகையை அடக்க முடியவில்லை. வெடித்து அழுதேன்… ஏதேதோ பிதற்றினேன். வீட்டிலிருந்தவர்கள் ஓடிவந்தனர். நிலைமையை உணர்ந்தனர். என் சித்தி அந்த அட்டை பெட்டியை எடுத்து கொண்டுபோய்விட்டார். படுக்கையில் கிடந்து நாள் முழுக்க அழுதேன். அன்று கல்லூரிக்கும் போக மனமில்லை… அந்த தாய்குருவிக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டது அதனால் தான் அதுவரவே இல்லை என்று நினைத்து நினைத்து அழுதேன். ஆண் குருவியோ ஒரு நாள் மட்டும் உணவு கொடுத்து அதன் கடமையை முடித்துகொண்டது.. பின் அதுவும் வரவேயில்லை. தாய் குருவிக்கு என்ன தான் நேர்ந்திருக்கும். இன்றுவரை எனக்கு அந்த தாய்குருவிக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாது. ஆனால் அது உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக அதன் குட்டிகளை ரக்ஷித்திருக்கும் என்பது மட்டும் சத்தியம். சிறிது நாட்கள் கழித்து மனம் தெளிந்தது… மறுபடியும் இயல்பு மனநிலைக்கு திரும்பினேன்.. சரி இப்போது ஏன் இதை எழுதுகிறாய் என்று கேட்கிறீர்களா?.... அடுத்த பத்திகளையும் படித்துவிட்டு வாருங்கள் சொல்கிறேன்….
.
சிறுவயதில் எப்போது எனக்கு காய்ச்சல் வந்தாலும் எனக்கு என் அம்மாவின் அரவனைப்பு தேவையாக இருந்தது. எல்லோருக்கும் அப்படித்தான்! வேளாவேளைக்கும் நமக்கு மருந்து கொடுத்து போர்த்தி விட்டு வெண்ணீர் கொடுத்து, உணவு கொடுத்து, வேலைகளையும் பார்த்துகொண்டே நம் மீது ஒரு கண்வைத்திருப்பாளே நம் அம்மா… அதுதான் தாய்மையின் தனித்தன்மை. இரவோ பகலோ நாம் காய்ச்சலில் போர்த்திகொண்டு படுத்திருக்கும் போது சில்லென்ற கை, வலையல் ஓசையுடன் நம் கண்ணத்தை காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுபார்க்குமே அதைவிடவா உலகில் காய்ச்சலுக்கான வேறு மருந்திருக்கிறது?. என் அம்மாவின் அந்த ஸ்பர்சத்திற்காகவே நான் காய்ச்சல் இல்லையென்றாலும் கூட சும்மானாச்சும் போர்த்திகொண்டு படுத்திருக்கிறேன். என்னடா ஆச்சு என்று அம்மா கண்ணத்தில் கைவைத்து பார்க்கும் போது வரும் அந்த இனம்காணமுடியாத உணர்வை இந்த உலகில் யாரால் கொடுத்துவிட முடியும்? அந்த ஒற்றை கை தொடுதலால் உலகின் ஒட்டுமொத்த அன்பையும் நம் கண்ணத்தில் குவிப்பாளே அம்மா அதை இந்த உலகில் யாரால் கொடுத்துவிடமுடியும்?
.
கடந்த சில நாட்களாக எனக்கு காய்ச்சல் வந்த போதும் என் அம்மா அதே தொடுதலை கொடுத்தே என்னை குணப்படுத்தினார் என்றால் மிகையல்ல. இரவு 2 மணிக்கு கூட எழுந்து வந்து எனக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டு பார்த்துவிட்டு போவார். நான் தூங்கிவிட்டேன் என்று நினைத்து வந்துதான் என்னை தொட்டு பார்ப்பார் போலும். ஆனால் நம் அம்மாவின் கை ஸ்பர்சத்தை நம்மால் உணரமுடியாதா என்ன?
.
என்னதான், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மனைவி, மக்கள் என்று உறவுகள் இருந்தாலும் யாராலும் அம்மாவின் இடத்தை நிரப்பவே முடியாது… சரி அம்மாவின் அன்பிற்கு இணையான ஒரு அன்பு இவ்வுலகில் இருக்கிறதா என்ற கேள்வி எழுமாயின் பதில் என்னவாக இருக்கும்? அம்மாவை விடவா நமக்கு வேறு ஒருத்தரால் நன்மை செய்துவிட முடியும்?... கண்டிப்பாக முடியாதுதான் தாயின் தாய்மையை வேறு யாரிடமும் பார்க்க முடியாது. ஆனால் ஸ்வாமி திருமங்கையாழ்வார் தாயைவிட மேலான நன்மையை நமக்கு ஒருவரால் மட்டுமே தரமுடியும் என்கிறார். ஆம் நீங்கள் யூகிக்கும் அதே பாசுரம்தான்….
.
குலம்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயராயினவெல்லாம்*
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்*
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்*
நலம்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்*
.
இங்கே ஆழ்வார் "பெற்ற தாயினும்" என்று சொல்வதன் மூலமே நமக்கு தாயின் உறவு எப்படிப்பட்டது என்று தெரிந்துவிடும். அதாவது பெற்ற தாயை விட வேறு யாராலும் நமக்கு நன்மை செய்துவிட முடியாது…. அப்படி தாயைவிடவும் மேலான ஒரு அன்பை கொடுக்க முடியுமென்றால் அது பகவான் ஒருவராலே மட்டுமே நமக்கு கொடுக்க முடியும் என்கிறார். அதனால் இந்த ஜடவுலகில் பகவான் தன் எண்ணிறந்த கல்யாணகுணங்களில் தாய்மை என்ற ஒரு குணத்தை பெண்களுக்கு மட்டுமே கொடுத்து அழகுபார்த்தான். தாய்மையும் ஒரு வகையில் நிலையற்றதுதான். அடியேன் முதலில் சொன்ன சிட்டுக்குருவி நிகழ்வே அதற்கு சான்று… தாய்குருவிக்கு ஏதே நிகழ்ந்துவிட அதன் குஞ்சுகள் பட்ட வேதனையே நிலையற்ற தன்மைக்கு சான்று! அக்குஞ்சுகளின் துக்கத்தை துடைக்க பகவான் அவைகளை தன் திருவடிகளில் சேர்த்துகொண்டதாகவே அடியேன் கருதுகிறேன். இதுவே பகவானின் தாய்மையை காட்டிலும் மேம்பட்ட நிர்ஹேதுக க்ருபைக்கு சான்று… மீண்டும் ஒரு முறை சிட்டுகுருவி நிகழ்வை படியுங்கள்… இப்போது புரியும் தாய்மையின் இயலாமையும் பகவானின் நிலைத்து நின்று அருள்புரியும் தன்மையும்…. ஆம் பெற்ற தாயினும் ஆயினச்செய்வான் நம் கண்ணன.
.
காய்ச்சலில் படுத்துகிடந்த அத்தனை நாட்களும் இந்த பாசுரமே அனுசந்தானமாக இருந்தது எனக்கு…
.
இதை எழுதி முடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன் எதிரில் என் அம்மா கட்டிலில் படுத்திருந்தார்... ரங்கா ரங்கா ரங்கா….

No comments:

Post a Comment