எவ்வளவு சத்யமா சொல்லிட்டா மஹாபெரியவா
தெய்வத்தின் குரல்
குழந்தை மண்ணைத் தின்கிறது. அம்மாக்காரி அதன் கைகளைத் துணி போட்டுக் கட்டுகிறாள். அதற்கு மகா கோபம் வருகிறது. 'அம்மாவாம், அம்மா! கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவள். இவள்தான் நமக்குப் பரம துரோகி' என்று நினைக்கிறது. காரணம் இல்லாமலா அம்மா கட்டிப் போட்டாள்? குழந்தையைப்பற்றி அவளுக்கு இல்லாத அக்கறையா? குழந்தை தனக்குத் தானே சத்ருவாக இருந்துகொண்டு, அம்மாவை சத்துரு என்று நினைக்கிறது.
நாம் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும் என்னென்ன புரட்டுக்கள் புரட்டினாலும், வாஸ்தவத்தில் இந்தக் குழந்தை மாதிரிதான் இருக்கிறோம். நம்முடைய பழைய தப்புக்கு அவள் தண்டனை தருவது நமக்குக் கஷ்டமாக இருக்கிறது. அதிலிருந்து விடுபட முடியவில்லை. நமக்கு அந்த சக்தி இல்லை. கட்டிப் போட்டுவிட்டாள் என்று குற்றம் சாற்றுகிறோம். குழந்தை மண்ணைத் தின்னப் போகிற மாதிரி நம் அதே பழைய தப்புகளைப் பண்ணாமலிருப்பதற்காகத்தான் கஷ்டம் என்கிற கட்டை ஜகன்மாதா போட்டிருக்கிறாள். கஷ்டம் வந்தால், 'நாம் பூர்வத்தில் பண்ணின பாவத்தாலேயே இது வந்தது; ஆனபடியால் இந்த ஜன்மத்தில் தப்பு பண்ணினாலும் இதுமாதிரியே கஷ்டங்கள் இனியும் வந்து கொண்டேயிருக்கும்; அப்படித் தப்புப் பண்ணாமலிருக்க புத்தி தர வேண்டும் என்று அம்பாளைப் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பதுதான் நமக்கு விமோசனம் என்று தெளிய வேண்டும்.
No comments:
Post a Comment