Tuesday, May 19, 2020

Auvaiyar - 3 in one

ஒளவையார் த்ரீ இன் ஒன் '' J K SIVAN 

ஒளவை யார்? மூன்று ஒளவையார்கள் இருந்ததாக தெரிகிறது. முதல் ஒளவையார் சங்ககாலத்தவர். அவர் தான் முருகனிடத்தில் ''சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா''வில் ஏமாந்தவர். 50க்கு மேல் புறநானூற்றில் பாடலாசிரியர். 

ரெண்டாம் ஒளவையார் தான் கிழவியாக நமக்கு காட்சி அளிப்பவர். கம்பர் ஒட்டக்கூத்தர் காலத்தவர். கெட்டிக்காரி. 

மூன்றாம் ஒளவையார் நல்வழி, மூதுரை ஆத்திச்சூடி கொன்றை வேந்தன் எல்லாம் எழுதியவர். நாம் மூவரையும் ஒண்ணடி மண்ணடி யாக கலந்து அனுபவிக்கிறோம்.

ஒளவையார் எழுத்துக்கள் காலத்தால் மறையாதவை. சக்தி வாய்ந்த அந்த சொற்கள், ஆழ்ந்த அனுபவம், சிறந்த எண்ணங்களின் கோர்வையாக வெளி வந்தவை. உள்ளடங்கிய உண்மை என்றும் உலக வாழ்வுக்கு இன்றியமையாதது. அவை இணையற்ற அறிவுரைகள். எளிதில் நமக்கு கிட்டியவை. படித்தாலே புரியும் தன்மை கொண்டவை. மாதிரிக்கு கொஞ்சம் கீழே கிடைக்கும்..

நாம் எத்தனைபேருக்கு எவ்வளவோ உதவி செய்கிறோம். அவர்கள் அனைவரும் நாம் செய்த உதவிகளை நினைவில் கொண்டு மனதில் அன்போடும் நன்றியோடும் நாம் எதிர்பாராமலே நடந்துகொள்கிறார்களா? அல்லது ''சரிதான் போய்யா, ரொம்ப பெரிசா செஞ்சுட்டே நீ'' என்று தூசியை தட்டிவிடுவது போல் நம்மையே உதறி விடுகிறார்களா. - ரெண்டுமே நடக்கிறதை பார்க்கிறோமே. முதல் வகையினருக்கு செய்த உதவி கல்லில் செதுக்கி வைத்த கல்வெட்டு போல் என்றும் மறையாது நிற்கும். ரெண்டாம் வகை தண்ணீர் மேல் எழுதிய கதை போல் காணாமல் போகுமாம். 

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர். 

நிறைய பேருடன் பழகுகிறோம். நண்பர்கள் என்று அவர்களை நினைக்கும்போது அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் நேர்மை, பண்பு, இனிய ஸ்வபாவம் கொண்டு நமது பெருமதிப்பைப் பெறுகிறார்கள். ஏதோ காலத்தின் கோளாறினால் நொடித்துப் போயிருந்தாலும் அவர்களது பரந்த மனப்பான்மை, நற்குணம், நம்மை மகிழ்விக்கிறது. இது எது போலவாம் தெரியுமா?

பாலை எவ்வளவு காய்ச்சி சுண்ட வைத்தாலும் அதன் சுவை கூடுமே தவிர குறையாது அல்லவா? அதுபோலவும், வெண்மையான சங்கு பார்த்திருக்கிறீர்களா. சென்னைக் கடற்கரையிலும் பொருட்காட்சி சாலையிலும் தான் பெரிய வெண் சங்கு பார்க்கலாம். அதை நெருப்பில் வாட்டி சுட்டால் கூட அதன் வெண்மை நிறம் மாறாது. அது போலவும் தான் இப்படிப்பட்ட நல்லவர்களுடன் நாம் கொண்ட நட்பு.

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 

தலைகீழே நின்றாலும் சில காரியங்கள் நமக்கு கை கூடவில்லை என்பதை கண்கூடாக காண்கிறோமே. இது எதனால்? நடக்கவேண்டிய வேளை இன்னும் வரவில்லை. நேரம் நல்ல நேரமாக மாறவில்லை .இறைவன் அருள் இன்னும் கிட்டவில்லை. தக்க நேரத்தில் தானே வரும். எடுத்த காரியம் நிறைவேறும். இது எது போலவாம் தெரியுமா?
உயரமாக வாளிப்பாக வளர்ந்தாலும், வளர்த்தாலும் ஒரு மரத்தில் பழங்கள் தோன்றிவிடாது. அது பழுக்கும் காலமும் பருவமும் வந்தால், தானே குலை குலையாக பழங்களைத் தரும். அதுவரை பொறுமை வேண்டும். 

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா. 

சிலர் உறுதியானவர்கள். தளர்வற்றவர்கள். எது வந்தாலும் தாங்கக்கூடிய திட மனம் பெற்றவர்கள். பயமா? கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள். உயிர் போகும் வரை, கடைசி வரை எதிர்த்து நிற்பவர்கள், தொய்ந்து போக மாட்டார்களே. இவர்களை எதற்கு ஒப்பிடலாம் என்று யோசித்தால் ஒரு உதாரணம் கிடைத்து விட்டதே. பெரிய கருங்கல், பாராங்கல் தூண் ஒன்று எதிரே தெரிகிறது பார்த்தாயா? அதன் மீது எத்தனை சுமை ஏற்றினாலும் தாங்கி நிற்கும். வளையாது. தாங்க முடியாத அளவுக்கு அதன் மீது சுமையேற்று. ஒரு நிலையில் பிளந்து விழுமே அன்றி வளையாது. 
அப்படிப்பட்டவர்கள் மேலே சொன்ன நபர்கள்.

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? - கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான். 

நல்ல ஆசாமி அவன் என்று ஒருவனைப் பற்றி பேசுகிறோம். அவனைப் பார்க்க விருப்ப மாகிறது. அவனோடு பேசும்போது காது இனிக்கிறது. வாய் மணக்கிறது. அவனது சிறப்பு மிக்க குணங்களை வருவோர் போவோர் போகும் இடம் எல்லாம் சொல்கிறோம். நினைவு கூறுகிறோம். எப்படி அவர்களிடம் இத்தகைய காந்த சக்தி? இந்த வியப்பு, ஒரு எளிய , அர்த்தம் தேடிப்போகத் தேவையில்லாத இதோ இந்த பாட்டில் இருக்கிறது: 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 

அதே நேரத்தில் ஒரு சில ஆசாமிகளை ஏன் தெரிந்து கொண்டோம் என்று வருத்தப்பட வேண்டியிருக்கிறது. இவ்வளவு மோசமாக கூடவா ஒருவன் இருக்க முடியும். எது எடுத்தாலும் அதில் ஒரு தகராறு, பொய், சுயநலம், அடாவடி, லஞ்ச லாவண்யம், இப்படிப்பட்டவனோடு சேருவது இருக்கட்டும். பேசுவது இருக்கட்டும். பார்த்தாலே நம்மையும் அவன் குணம் ஒட்டிக்கொள்ளும். நினைத்தாலே நாமும் அவனாக மாறிவிடுவோம் என்கிற பயம் வரும். இதை எவ்வளவு அழகாக இந்த சின்ன கவிதை விளக்குகிறது. 

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 

கண்ணுக்கெட்டியவரை பச்சைப் பசேல் என்று நெல் மணம் வீசும் வயல். (இப்போது சில இடங்களில் தான் காண்கிறோம்) ஒரு துறவு கிணற்றில் ஏற்றம் இறைத்து நீர் பாய்ச்சுவார்கள், அப்போதெல்லாம் போர் வெல் என்கிற குழாய் கிணறு கிடையாதே. ஏற்றமிறைப்பவர்கள் வாய் விட்டு உரக்க பாடுவார்கள். நாற்று நடும் பெண்களின் நாட்டுப்பாடல்களை நான் கேட்டிருக்கிறேன். இறைக்கும் நீர் சிறிய மண் கால்வாய்கள் வழியாக நிலத்தின் எல்லா பகுதிகளுக்கும் வரப்பை ஒட்டி பரவும். ஆங்காங்கே புல்லின் குடும்பம் கூட நெல்லுக்கு ஒரு பக்கமாக வாழ்ந்து வரும். அதற்கு யார் வேளா வேளைக்கு நீர் பாய்ச்சுவார்கள்? ஏதோ நெல் செய்த புண்யத்தில் தனக்கும் வாழ்க்கை நீடிக்க நீர் கிடைக்கிறதே என்று அந்த புல் கூட்டம் சந்தோஷம் கொள்கிறதைப் பார்க்கும்போது எது மனதில் தோன்றுகிறது தெரியுமா?  
ஒருவன் நல்லவன், இந்த உலகில் எங்கோ இன்னும் இருக்கிறான், இறைவன் அந்த ஒரு நல்லவன் வாழ அருளும் மழையினால் மற்ற புல் ஜென்மங்களான நமக்கும் மழை கிடைக்கிறதே. 

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

Image may contain: one or more people, people standing, sky and outdoor

No comments:

Post a Comment