Tuesday, April 16, 2019

Kanniga Dhanam -periyavaa

இன்றும் நாளையும் அனுஷம்

ரொம்ப நாளா எழுத வேண்டும் என்று நினைத்த இரு சம்பவங்கள்.

எனது சிறு வயதில் நான் நேரே கண்ட காட்சிகள்.

காட்சி 1: 

நான் எனது பெற்றொருடன் காஞ்சி சங்கர மடத்துக்குச் சென்றிருந்தேன். மஹா பெரியவா பக்தர்களுக்கு காட்சிக் கொடுக்க வேண்டிய நேரம். அங்கு ஒரு பெரியவர் பக்தர்களை 'அங்கு செல்லுங்கள், இங்கே அமர வேண்டாம்' என்று அனைத்தையும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார். 

மஹா பெரியவா வந்தாயிற்று. அந்தப் பெரியவரைப் பார்த்ததும், "ஷண்முகா… அங்க என்ன பண்றே? இங்க வா" என்று அழைத்தார். அவர் பெயர் ஷண்முக சுந்தரம். வெகு நாட்களாக மடத்துக்கு அவ்வப்போது வந்து  கைங்கர்யம் செய்து கொண்டிருப்பவர். பெரியவா அழைத்ததும் அருகில் வந்தார். பவ்யமாக குனிந்து, வலது கையால் வாயை மூடிக் கொண்டு, "என்ன பெரியவா?" என்றார். உடனே, "நீ இங்க என்ன பண்றே… உடனே திருச்சிக்குப் போ. நீ அங்க தேவைப் படறே. எல்லாரும் உனக்காகக் காத்துண்டிருக்கா! ஒரு ஷணம் கூட இங்க நீ இருக்கப் பிடாது" என்று அவசரம் அவசரமாக அவரை திருச்சிக்கு அனுப்பினார்.

காட்சி 2: 

பெரியவாளைப் பார்ப்பதற்காக காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமத்தில் இருந்து ஒரு மிராசுதார் வந்திருப்பதாக ஒருவர் வந்து பெரியவாளிடம் கூறினார். "அவரை வரச்சொல்" என்றதும் மிராசுதார் பெரியவாளிடம் வந்து, "கும்பிடறேன் சுவாமி. நல்லபடியாக எனது தொழில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. எல்லாம் உங்க ஆசிகள் தான். அதற்கு கைமாறாக நான் எதாவது இந்த மடத்துக்குச் செய்ய வேண்டும். இந்த மடத்துக்கு நான் என்ன செய்யட்டும் சுவாமி?" என்றார். 

பெரியவா உடனே, "நான் என்ன சொன்னாலும் செய்வியா? என்றார். "ஆமாம் சுவாமி" என்று அவரிடம் இருந்து பதில் வந்தது. பெரியவா, "நாளைக்கு இங்க ஒரு பன்னண்டு மணிக்கு வா. வரும்போது ஒரு பெண் கல்யாணத்துக்கு வேண்டிய புடவை, மஞ்சள், குங்குமம், உன்னால முடிஞ்சா தங்கத்துல திருமாங்கல்யம், அப்புறம் உன்னால முடிஞ்ச அளவுக்கு கொஞ்சம் பாத்திரம், மாப்பிளைக்கு வேட்டி வாங்கிண்டு வருவியா? 
என்றார். 

மிராசுதார். "என் பாக்கியம் சுவாமி. நீங்க கேட்டு நா மறுக்க முடியுமா?" என்று கூறிச் சென்றார். 

பெரியவா அருகில் உள்ள ஒருவரை அழைத்து, "நீ பரந்தாமனை நாளைக்கு ஒரு பன்னண்டு மணிக்கு மடத்துக்கு வரச்சொல். முடிஞ்சா அவனை ஆத்துலயும் அழைச்சுண்டு வரச்சொல்" என்றார்.

பெரியவா அங்க எல்லோரிடமும் பேசிவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்றார். 

மறுநாள் எனது அத்தை எங்களோடு காஞ்சிபுரத்தில் சேர்ந்து கொள்வதாக இருந்ததால். நாங்கள் அன்று காஞ்சிபுரத்தில் தங்கினோம். மறுநாள் காலை எனது அத்தையும் காஞ்சிபுரம் வந்தார். எல்லோருமாக பெரியவாளை தரிசிக்க காத்திருந்தோம். 

பெரியவா வந்திருந்து அனைத்து பக்தர்களோடும் பேசி, சிலருக்கு ஆறுதலும் அளித்தார். 

மிராசுதார், ஒரு மூங்கில் தட்டில், பெரியவா கேட்ட மங்கலப் பொருட்களை வைத்து நின்றுக் கொண்டிருந்தார். அவர் அருகே ஒரு பெட்டியில் ஒரு குடும்பத்துக்கு தேவையான அளவு பாத்திரங்கள்.  அவர் முதல் நாள் குறிப்பிட்ட பரந்தாமனும் தனது இல்லாளுடன் வந்திருந்தார். பெரியவா மிராசுதார், பரந்தாமன் தம்பதியை அழைத்தார். பெரியவா அந்த மிராசுதாரை பார்த்து, 'தட்டை இந்த பரந்தாமன் தம்பதியிடம் கொடு' என்றார். 

பரந்தாமன் தம்பதியின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். மிராசுதாரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 

எங்களுக்கும் சரி, அருகில் உள்ள மற்றவருக்கும் சரி எதுவுமே புரியவில்லை. பெரியவாளும் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டார்.

என் அப்பா தனக்கு பரிச்சயமான மடத்து நிர்வாகியிடம் இதுகுறித்து கேட்டபோது, "ஓ… அதுவா… ரொம்ப நாள் முன்னாடி மிராசுதார் தனக்கு இரண்டும் பிள்ளைகள். அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. தகுந்த வரன் அமைய அருள் புரியுங்கள். பெண் வீட்டாருக்கு எந்த செலவும் வேண்டாம். நானே எல்லா செலவையும் பார்த்துக் கொள்கிறேன் என்றார். சிறிது காலம் கழித்து அவர் மகன்கள் இருவருக்கும் சிறந்த முறையில் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவருக்கு அமைந்த இரண்டு மருமகளும் செல்வத்தில் கொழித்தவர்கள் என்பதால், இவருக்கு செலவு செய்ய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அந்தக் குறையை பெரியவாளிடம் ஒருநாள் கூறினார். பெரியவாளும் ஒருநாள் இதுகுறித்து பேசுவதாகக் கூறினார். 

இந்த பரந்தாமனுக்கு ஆறு பெண்கள். ஐந்து பெண்களுக்கு திருமணம் நடந்து முடிந்துவிட்டது. இருக்கும் நிலபுலம், சொத்து எல்லாவற்றையும் கொண்டு ஐந்து பெண்களுக்கு திருமணம் முடித்த பரந்தாமனுக்கு ஆறாவது பெண்ணுக்கு திருமணம் செய்ய வசதி இல்லை. 

இப்போது ஒரு புரோஹிதர் வரன் ஒன்று அமைந்துள்ளது. அவர்கள் ஒன்றும் வேண்டாம் என்று கூறிவிட்டாலும், பெண்ணை வெறும் கையோடு அனுப்ப முடியுமா? அவர் வந்து பெரியவாளிடம் இதுபற்றி கூறும்போது, இந்த மிராசுதாரை வைத்து அந்தப் பிரச்சினையை பெரியவா தீர்த்து வைத்து விட்டார்' என்றார். (இருவருக்கும் கன்னிகா தானம் செய்த புண்ணியம்)

அந்த நிமிடம்….. என்ன ஒரு அனுபவம்….

என் அப்பா அவரிடம், "நேற்று ஒருவரை அவசரம் அவசரமாக  திருச்சிக்கு அனுப்பினாரே… எதற்கு…?" என்று கேட்டார். 

மடத்து நிர்வாகி, "அதுவா… அவருக்கு ஊர் திருச்சி. அப்பப்போ மடத்துக்கு வருவார். வந்தா ஒரு வாரம் போல இருப்பார். அவர் ஒரு ஆடிட்டர். ஆடிட்டிங் விஷயமா சென்னைக்கு வருவார். சென்னைக்கு வரும்போது காஞ்சிபுரம் வருவார். பெரியவாளை தரிசனம் செய்துவிட்டு, காஞ்சிபுரத்திலும் சில ஆடிட்டிங் வேலைகளை முடித்துவிட்டு திருச்சி செல்வார். அப்படித்தான் நேற்று அவர் இங்கு வந்தார். 

அவர் குழந்தைக்கு திருச்சியில் உடம்பு சரியில்லை. பெரிய பிரச்சினை. மூச்சு விடுவதில் சிரமம். இது அந்த ஷண்முகனுக்குத் தெரியாது. அவர் ஊரை விட்டு கிளம்பி 4 நாள் ஆகிறது. 

ஆடிட்டிங் விஷயமா சென்னை, வாலாஜா, காஞ்சிபுரம் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார். பெரியவாளுக்கு மனசுல தோணிடுத்து. அங்க அவர் மனைவி குழந்தையை வைத்துக் கொண்டு தனியாக தவித்துக் கொண்டிருக்கிறாள் என்று. குழந்தைக்கு உடம்பு என்றால், மனுஷன் பதறிப்போய் விடுவார் என்பதால், நீ அங்க தேவைப் படற என்று அனுப்பி வைத்தார்" என்றார். 

தீர்க்கதரிசி……..

(போன் வசதியெல்லாம் ரொம்ப இல்லாத காலம் – 1988 என்று நினைக்கிறேன்)

No comments:

Post a Comment